July 24, 2011

வீரத்தாய் வேலுநாச்சியார் - நாட்டிய நாடகம்

1 comment:
சென்னை காமராஜர் அரங்கத்தில் வீரத்தாய் வேலுநாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாறு நாட்டிய நாடகமாக அரங்கேற்றியிருந்தார்கள். 


முதன்முறையாக நாரதகான சபாவில் அரங்கேற்றப்பட்டது. இது இரண்டாவது முறை. எனக்கு இது முற்றிலும் புது அனுபவமாக இருந்தது. நான் மேடை  நாடகம் பார்ப்பது இதுவே முதல் முறை. அதுவும் இசையும், நடனமும் கலந்த நாட்டிய நாடகம் பார்க்க மிக ஆவலுடன் சென்றேன். எனது ஆவலை மிகவும் நல்ல முறையில் நிறைவேற்றினார்கள் என்றே சொல்ல வேண்டும்.


60 நடனக் கலைஞர்கள், சிறந்த இசை, எளிய தமிழில் வசீகரக் குரலில் அருமையான வர்ணனை, சிறந்த ஒலி-ஒளி அமைப்பு என தேவையான அனைத்தையும் சரிவிகித்ததில் கொடுத்துள்ளார்கள்.

தயாரிப்பு: வைகோ,
இயக்கம்: ஸ்ரீராம் சர்மா,
நாட்டியம்: மணிமேகலை சர்மா மற்றும் எகுழுவினர்,
இசை: ரகுநாதன்

வர்ணனைக்கு செல்லும் முன் வேலுநாச்சியார் பற்றிய சிறு அறிமுகம்:1749-1772 சிவகங்கை சீமையை ஆண்டு வந்த முத்துவடுகநாதரின் மனைவிதான் வேலுநாச்சியார் அவர்கள். வெள்ளையன் இந்தியாவிற்கு வியாபாரம் செய்ய வந்து மெல்ல மெல்ல தனது ஆட்சியை நிறுவ ஆரம்பித்த காலக்கட்டம். ஆற்காட்டு நாவாபுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி நவாப் ஆளுகைக்கு உட்பட்ட பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்கும் உரிமையை வெள்ளையன் பெறுகின்றான். இதை அறிந்த முத்துவடுகநாதர் சினம் கொள்வதோடு, வரி கொடுக்கவும் மறுத்துவிடுகிறார். இதனால் அவமானப்பட்ட வெள்ளையன் ஒரு தந்திரம் செய்கிறான்.


குலவழக்கப்படி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் முத்துவடுகநாதர் சிவ வழிபாட்டிற்க்கு செல்வது வழக்கம். அதே நேரத்தில் வரி பற்றி பேச வெள்ளையன் வருகிறான். கணவனை கோவிலுக்கு அனுப்பிவிட்டு வேலுநாச்சியார் வெள்ளையனுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். நிராயுதபானியாக கோவிலுக்கு சென்றவரை நயவஞ்சமாக மறைந்திருந்து கொல்கிறான் வெள்ளையன். கணவன் பிரிவைத் தாங்காமல் உடன்கட்டை ஏற முடிவெடுக்கிறார் வேலுநாச்சியார். தளபதிகளான மருது சகோதரர்கள் அவரை சமாதானப்படுத்தி மக்கள் நிலையை எடுத்துக் கூறுகிறார்கள். "மன்னனை இழந்த மக்கள், சரியான தலைமை இல்லாமல் துன்பப்படுவார்கள். சிவகங்கை சீமையின் நலன் பொருட்டு தாங்கள் இருப்பது அவசியம்" என்று கூறுகிறார்கள். பின்னர் தனது கணவரைக் கொன்ற வெள்ளையனையும், அதற்கு துணை போன நவாபையும் அழித்து சிவகங்கை சீமையை மீட்க உறுதி கொள்கிறார் வேலுநாச்சியார்.


இதனிடையே வெள்ளையன் ஒரு சட்டத்திருத்தம் கொண்டு வருகிறான். அதாவது, "எந்த ஒரு நாட்டில் ஆண் வாரிசு இல்லையோ, அந்த நாட்டை இனி கிழக்கிந்திய கம்பெனியே ஏற்று நடத்தும்" என்பதுதான் அது. இந்த சட்டத்தின்படி சிவகங்கை சீமை வெள்ளையன் ஆளுகைக்குப் போகின்றது. அவர்களிடம் இருந்து வேலுநாச்சியார் தப்பித்து ஒரு காட்டு வழியே பயணமாகிறார். நீண்ட நெடும் பயணம், பசி, தாகம் அனைத்தும் ஒன்று சேர்ந்து தாக்க ஒரு இடத்தில் மயங்கி விழுகிறார். அங்கே மாடு மேய்த்துக்கொண்டிருந்த உடையாள் என்ற பெண், பதறிப்போய் அவருக்கு தண்ணீர் கொடுத்து மயக்கத்தை தெளிவிக்கிறாள். தான் காப்பாற்றியது வேலுநாச்சியார் என்று அறிந்ததும் பதறிப் போகின்றாள். உடையாளுக்கு நன்றி கூறிவிட்டு மீண்டும் தன் பயணத்தை தொடர்கிறார் வேலுநாச்சியார்.

வேலுநாச்சியாரை பின்தொடர்ந்து வந்த வெள்ளையன், உடையாள் இருக்குமிடம் வருகிறான். உடையாளிடம் வேலுநாச்சியார் பற்றி கேட்க அவள் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிடுகிறாள். ஆத்திரமடைந்த வெள்ளையன் அவளை கொன்றுவிடுகின்றான்.[பின்னாளில், வேலுநாச்சியார் தோற்றுவித்த பெண்கள் மட்டுமே கொண்ட படைக்கு "உடையாள் படை" என்று பெயரிட்டார். மேலும் உடையாள் உயிர் நீத்த அதே இடத்தில் உடையாள் நினைவாக ஒரு கோயிலையும் கட்டியுள்ளார்.]

ரகசிய இடத்தில் வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், மற்ற ஏனையோரும் சந்திக்கின்றார்கள். சிவகங்கை சீமையை மீட்பது பற்றி ஆலோசிக்கப்படுகின்றது. வேலுநாச்சியாருக்குத் துணையாக 18 பாளையக்காரர்கள் வருகிறார்கள். ஆனாலும், நவீன ஆயுதங்கள் வைத்திருக்கும் வெள்ளையனுடன் மோத நமது ஆயுதங்கள் போதாதே!! அப்போது சின்ன மருது "திண்டுக்கல்லில் இருக்கும் ஹைதர் அலியிடம் உதவி கேட்கலாம்" என்று யோசனை கூறுகிறார். வேலுநாச்சியாரின் துணிவைக் கண்ட ஹைதர் அலி, வேண்டிய மட்டும் உதவி செய்வதாகக் கூறுகிறார்.

8 ஆண்டுகள், போதிய ஆள் பலம், ஹைதை அலியின் உதவி, பாளையக்காரர்களின் துணை என்று ஒரு பெரும்படை உருவாகிறது. அனைவரும் போருக்குத் தயாராகின்றனர். ஆனால் வேலுநாச்சியாருக்கு மட்டும் ஒரு சிந்தனை ஓடியது. என்னதான் படைபலத்தை உருவாக்கினாலும், எதிரி பலவீனமடைந்தால்தான் நமக்கு வெற்றியே!! அதனால் முதலில் அவர்களது ஆயுத பலத்தை குறைக்க முடிவு செய்கிறார். வெள்ளையனின் ஆயுதக்கிடங்கு, கோட்டையினுள் இருந்த ராஜ ராஜேஸ்வரி கோவிலுக்கு பின்புறம் இருந்தது.சிவகங்கையைக் கைப்பற்றிய வெள்ளையன், மக்களிடம் நல்ல பெயர் எடுக்க ஒரு சலுகை வழங்கினான். விஜயதசமி, நவராத்திரி போன்ற சிறப்பு தினங்களில் மக்கள் அனைவரும் கோவிலுக்கு சென்று வர அனுமதித்திருந்தான். இதை வேலுநாச்சியார் சரியாக பயன்படுத்திக்கொண்டார். சரியாக நவராத்திரி அன்று பெண்கள் அனைவரும் கையில் விளக்குடன் கோவிலுக்கு சென்றனர். ஆயுதக்கிடங்கை நெருங்கியவுடன், குயிலி என்ற பெண், அனைவரின் விளக்கிலிருந்த எண்ணையை வாங்கி தன் மேல் ஊற்றிக் கொண்டாள். பின்பு தன்மீது நெருப்பு வைத்துக் கொண்டு ஆயுதக்கிடங்கினுள் குதித்தாள்[அனேகமாக, உலகின் முதல் மனித வெடிகுண்டு இவள்தான்]. ஆங்கிலேயரின் தளவாடங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டது.

பின்பு வேலுநாச்சியார், தனது படையை மூன்றாகப் பிரித்து வெள்ளையனைத் தாக்கினார். இந்த மும்முனைத் தாக்குதலை வெள்ளையனும், நவாபும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மானாமதுரை வைகையாற்றுப் பகுதியில், வேலு நாச்சியாரது படைகள், வெள்ளையனின் படைகளைத் தாக்கி அவை ஓடி ஒளியுமளவிற்குச் சண்டையிட்டு வெற்றி பெற்றன. சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. அவரது சபதம் நிறைவேறியது. எட்டு ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு, வேலு நாச்சியார் சிவகங்கை சீமையின் அரசியானார்.

----------

இந்த சிறப்புமிக்க வரலாற்றை மேடையேற்றுவது மிகவும் கடினம். அதுவும் நாட்டிய நாடகமாக அரங்கேற்ற மிகுதியான உடலுழைப்பு தேவை. அதை இந்த நாடகத்தின் இயக்குனர் மிகவும் கவனமாகவும், சரியாகவும் செய்துள்ளார். இது ஒண்ணும் சினிமா இல்லையே!! ஒண்ணு சரியில்லைன்னா இன்னொரு டேக் போலாம்ன்னு சொல்றதுக்கு. மக்கள் முன்னாடி நேரிடையாக நடிக்க வேண்டும். கதை சொல்லல் சரியான முறையில் இருக்க வேண்டும். எந்த இடத்திலும் தொய்வு இல்லாமல் இருக்க வேண்டும். முக்கியமாக நடிகர்களின் ஒத்துழைப்பு மிகச் சரியாகப் பொருந்தி வரவேண்டும். 

இந்த நாடகத்தில் எல்லாம் சரியாகவே இருந்தது. இதற்கு சாட்சி, ஒவ்வொரு காட்சிக்கும் இடைவிடாமல் கிடைத்த கைத்தட்டல்தான். மேடை நாடக நடிகர்களுக்கு கைத்தட்டல்தான் மிகப்பெரிய அங்கீகாரம். ஏனென்றால், நல்லதை உடனுக்குடன் கைத்தட்டி பாராட்டு நம் மக்கள், பிடிக்கவில்லையென்றால் கையில் கிடைத்ததையெல்லாம் மேடையில் வீசச் செய்வார்கள்.

முதலில் இந்த நாட்டிய நாடகம், வரலாற்றின் வர்ணனையுடன் தொடங்குகிறது. தெளிந்த தமிழில், வசீகரக் குரலில் வர்ணனையாளர் பார்வையாளர்கள் அனைவரையும் காலம் கடத்தி விடுகிறார் [யாருங்க அவரு? மேடையில எல்லோருடைய பேரும் சொன்னாங்க.. ஆனா இவர் பேரை விட்டுட்டாங்க..].

சிவகங்கை சீமை மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடங்குகிறது இந்த நாட்டிய நாடகம். அப்போது நமது கிராமிய இசையுடன், அவர்கள் நடனம் மிக அருமை. அவர்கள் சொல்ல வந்த அந்த குதூகலமான மனநிலை எனக்கும் வந்தது[குழுவினரின் முதல் வெற்றி]. பின்பு, வேலுநாச்சியார் அறிமுகம், வெள்ளையன் அறிமுகம் என நாட்டியமாகவே வருகிறது. வேலுநாச்சியார் பரதம் ஆடியபடி தமிழின் சிறப்பு, மண்ணின் சிறப்பு பற்றி பாடுகிறர். அடுத்து வந்த வெள்ளையன்(ரியாஸ் கான்) ஆங்கிலத்தில் பாட்டு பாடி ஆடுகிறார். இருவரின் அறிமுகமும் அவர்களின் நிலைக்கேற்ப மிகச் சரியாக கோர்வையாக வருகிறது.

முத்துவடுகநாதர் கொல்லப்படுகிறார். வெள்ளையனிடமிருந்து வேலுநாச்சியார் தப்பிக்கிறார். உடையாள் உதவி, பின்பு அவள் கொல்லப்படுவது என அனைத்தும் தெளிந்த நீரோடை போல அந்தந்த உணர்வுகளுடன் சொல்லப்படுகிறது. இதில் முக்கியப் பங்கு வர்ணனையாளருக்குத்தான் சேரும். மருது சகோதரர்கள் பகுதி வசனமாகவே வருகிறது. ஹைதர் அலி வரும் காட்சியில், முஸ்லீம்களுக்கான இசை இசைக்கப்படுகிறது. நல்ல உத்தி. ஹைதர் அலி, வேலுநாச்சியாரை சகோதரி என்று பாடும்போது அரங்கில் கைத்தட்டல் அடங்க வெகுநேரமானது. பின்னர் 18 பாளையக்காரர்களின் அறிமுகம். அனைவரையும் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து வரவழைத்தது நல்ல காட்சியமைப்பு. வேலுநாச்சியாருக்கு மக்கள் ஆதரவு எப்போதும் உண்டு என்பதை சொல்லாமல் சொன்னதுபோல் எனக்கு தோன்றியது.

அடுத்ததாக குயிலியின் தற்கொலைத் தாக்குதல். குயிலியாக நடிகை பிரியதர்ஷினி நடித்திருந்தார். இசையும், நடனப் பெண்கள் கையில் விளக்குடன் ஆடிய நடனமும் அனைவரையும் ஒரு பரவச நிலைக்குக் கொண்டு சென்றது. இந்த இடத்தில் முக்கியமாக சொல்ல வேண்டியது இசையைதான். இவர்கள் நாடு மீட்புப் போராட்டத்தில் முக்கிய கட்டம் வகிப்பது குயிலியின் தற்கொலைத் தாக்குதல். அந்த சம்பவத்தின் வீரியத்தை ரகுநாதனின் இசை இம்மியும் குறையாமல் கொடுத்தது. இசைக்கு அதிக கைத்தட்டல் வாங்கியது இந்த இடத்தில்தான். மிகச் சிறப்பான இசை. கூடவே பிரியதர்ஷினியின் ஆவேசம் கலந்த நடனம், உடன் ஆடிய பெண்களின் கலவையான உணர்வுகொண்ட நடனமும் அந்த சம்பவத்தை நன்றாக உணர்ந்துக் கொள்ள முடிந்தது.

அடுத்து வந்த போர்க்களக் காட்சி. இங்கும் இசையே பெரும்பங்கு வகித்தது. இரண்டு பீரங்கிகளையும் மேடைக்குக் கொண்டு வந்து போர்க் காட்சியின் நம்பகத்தன்மையைக் கொண்டுவர முயன்றிருந்தார்கள். வாழ்த்துகள்!!இந்த வரலாற்றின் மூலம் நாம் அறிவது:

இந்தியாவின் முதல் பெண் சுதந்திரப் போராளி ஜான்சி ராணி அல்ல, வேலுநாச்சியார்தான். ஜான்சி ராணிக்கு 77 ஆண்டுகள் முன்பே வெள்ளையருக்கு எதிராகப் போராடி அதில் வெற்றியும் பெற்றவர்.

-------

இந்த நாடகத்தின் மூலமாக ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்தது. நம் மக்கள் ஏதோ ஒரு தேடலில் இருக்கிறார்கள். நமது வேர்களைப் பற்றி அறிய ஆவலாக இருக்கிறார்கள். அதற்கு இந்த நாட்டிய நாடகமே சாட்சி. அனைத்து இருக்கைகளும் நிறைந்த பின்பும், கிடைத்த இடத்தில் அமர்ந்து பார்த்தார்கள். இது போன்ற சரித்திரங்கள் நம்மிடம் ஏராளமாக உண்டு. அது அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் பொறுப்பு நம் அனைவருக்கும் நிச்சயம் உண்டு. இது போன்ற நிகழ்ச்சிகளை சென்னை மட்டுமல்லாது, அனைத்து ஊர்களிலும் நடத்தப்பட வேண்டும்.

மீண்டும் இந்த நாட்டிய நாடகக் குழுவினருக்கும், அதை தயாரித்து அளித்த வைகோ அவர்களுக்கும் வாழ்த்துகள்.

[குறிப்பு: அரங்கினுள் படம் எடுக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதால், இணையத்தில் கிடைத்த படங்களை இங்கு பயன்படுத்தியுள்ளேன்...]
July 03, 2011

குட்டிம்மா...

4 comments:
[எனது, பெண்ணே! பேசு... என்ற முதல் சிறுகதையை பாராட்டி ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி. எனது அடுத்த முயற்சியாக குட்டிம்மாவை அழைத்து வந்திருக்கிறேன். அந்த செல்லத்தைக் கொஞ்ச உங்களை அன்போடு அழைக்கிறேன்… அப்புறம்... உங்க கருத்தை சொல்ல மறந்துடாதீங்க…]

கார்த்திக் சற்று பதட்டமான மனநிலையில் இருந்தான். கார் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது.
“நாம கிளம்பும்போதுகூட நல்லாதான இருந்தாள். திடீர்ன்னு ஏன் இப்படி ஆகனும்?” – நினைக்கும்போதே ஒரு இனம் புரியாத பயம் அவன் வயிற்றில் பாய்ந்தது. ஏன்தான் இந்த வெளியூர் பயணத்தை ஒத்துக் கொண்டோமோ என்று தன்னைத்தானே நொந்துக்கொண்டான். மனம் கண்டதையும் கற்பனைக் பண்ணி அலைபாய, அவன் தலையை உதறினான்.

“கொஞ்சம் வேகமாப் போங்களேன்!” – ஓட்டுனரை துரிதப்படுத்தினான். கார்த்திக் நிலையறிந்த ஓட்டுனர், “கவலைப்படாதீங்க தம்பி!! உங்களை சீக்கிரமாகவும், பத்திரமாகவும் கொண்டுப்போய் சேர்க்க வேண்டியது என் பொறுப்பு.” என்றார். அவரது வார்த்தை அவன் மனதுக்கு சற்று நிம்மதியை தந்தது. பின்சீட்டில் மெல்ல தலை சாய்த்தான்.

ஒரு மணி நேரத்துக்கு முன் அவன் மாமனார் போனில் சொன்னது இன்னும் காதில் ஒலித்தது.
------
 “மாப்பிள்ளை! உமாவுக்கு திடீர்ன்னு உடம்புக்கு முடியலை. இப்போ ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போறோம்” போனில் கலக்கத்துடன் மாமனார் பேசினார்.

“திடீர்ன்னு என்ன மாமா ஆச்சு?”

“சரியா தெரியல மாப்பிள்ளை! வயிறு வலிக்குதுன்னு சொன்னா.. நிறைமாசம் வேற… அதான் உடனே ஆஸ்பத்திரிக்கு கிளம்பிட்டோம்.”

“உமாவுக்கு இப்போ எப்படி மாமா இருக்கு?”

“இப்போ கொஞ்சம் வலி குறைஞ்சிருக்குன்னு சொன்னா.. அவ அம்மா மடியில படுத்திருக்கா மாப்பிள்ளை!!”

“நீங்க போய் டாக்டர்கிட்ட காட்டிட்டிருங்க.. நான் இப்போ கிளம்பிடறேன்!!”

“சீக்கிரம் வாங்க மாப்பிள்ளை!! நீங்க பக்கத்துல இருந்தீங்கன்னா உமாவுக்கு கொஞ்சம் தெம்பா இருக்கும்.”

“இதோ இப்போ கிளம்பிட்டேன் மாமா. இன்னும் மூணு மணி நேரத்தில் வந்துடுவேன். உமா கண் முழிச்சதும் நான் வந்துக்கிட்டு இருக்கேன்னு சொல்லுங்க..”

“சரிங்க மாப்பிள்ளை. சீக்கிரம் வந்துடுங்க.”

வந்த வேலையை பிறகு வந்து பார்ப்பதாகக் கூறி, உடனே கிளம்பிவிட்டான். அந்த நேரத்துக்கு ரயில், பேருந்து எதுவும் கிடைக்காததால் ஒரு வாடகைக் காரில் கிளம்பிவிட்டான். அவசியம் உணர்ந்த ஓட்டுனரும் வேகமாகவே வண்டியை செலுத்தினார்.
------
கார்த்திக்கின் செல்போன் சினுங்க, அவன் நினைவு கலைந்து போனை எடுத்தான். அவன் அப்பா பேசினார் “கார்த்திக்! எங்கப்பா இருக்க?”

“வந்துக்கிட்டே இருக்கேன்ப்பா.. உமாவுக்கு எப்படி இருக்கு?”

“டாக்டர்கிட்ட காட்டினோம்ப்பா!!” என்றபடி அப்பா அமைதியானார்.

“சொல்லுங்கப்பா!! டாக்டர் என்ன சொன்னாங்க?”

“அது வந்து… குழந்தை இருக்குற அமைப்பு ஏதோ மாறியிருக்காம்ப்பா!! இங்கிலீஷ்ல ஏதேதோ சொல்றாங்க… ஒண்ணுமே புரியல… இப்போ ஆபரேஷன் பண்ணா ரெண்டு பேரையும் காப்பாத்திடலாம்ன்னு சொல்றாங்கப்பா!!”

“அப்பா! உண்மையை சொல்லுங்க. உமா உயிருக்கு ஒண்ணும் ஆபத்து இல்லையே?”

“அதெல்லாம் எதுவும் இல்லைன்னு சொல்றாங்க!!”

“உமாக்கிட்ட நான் பேசனும்ப்பா!!”

“உமா இப்போ மயக்கத்தில் இருக்கா. டாக்டர் உடனே ஆபரேஷன் பண்ணனும்னு சொல்றாங்க” என்று தயங்கியபடியே அப்பா மீண்டும் சொன்னார்.
“சரிப்பா! உமாவுக்கு எதுவும் ஆகாம பாத்துக்குங்க…. அப்புறம்…”
‘டிங்’ – பேட்டரி காலி ஆனதால் செல்போன் தானாக அணைந்தது. வெறுப்பில் செல்போனை சீட்டில் கடாசினான்.
“டிரைவர், உங்கக்கிட்ட போன் இருக்கா?”
“சாரி சார். எங்கிட்டயும் போன் இல்ல. இன்னும் அரை மணியில் அடுத்த டவுன் வந்துடும். ஏதாவது பூத்லயிருந்து பேசிக்கலாம் சார்.”
“இல்லீங்க. வண்டியை எங்கேயும் நிறுத்த வேண்டாம். சீக்கிரம் ஊருக்குப் போங்க..”
சரி என்றபடி ஓட்டுனர் வண்டியின் வேகத்தைக் கூட்டினார்.
------
கார்த்திக்கு, உமாவை கைபிடித்த நாள் முதல், அவளுடன் வாழ்ந்த இந்த ஒன்றரை வருட வாழ்க்கை கலவையாக நினைவில் வந்து போயிற்று. இதுவரை அவளை எதற்கும் கண் கலங்க விட்டதில்லை. வேண்டியதுக்கு அதிகமாகவே அவளுக்கு அன்பைக் கொடுத்தான். அப்படிப்பட்டவள் இன்று வலியில் துடித்துக் கொண்டிருக்கிறாள்.

“கவலைப்படாதீங்க சார். உங்க மனைவிக்கு ஒண்ணும் ஆகாது. நல்லவங்களுக்கு ஆண்டவன் எப்போதும் துணையிருப்பான்.” என்று டிரைவர் ஆறுதல் கூறினார்.

கார்த்திக் மெல்ல சிரித்தான்.
ஆண்டவன்.
அவனாலதான இத்தனை தொல்லையும். “ஆண்டவனே!! நீ நிஜமாவே இருக்கியா? அப்படி இருக்கிறது நிஜம்னா என் கேள்விக்கு பதில் சொல்லு. உன் படைப்பில் எல்லோரும் சமம்னு சொல்றாங்க. அப்படி எல்லோரும் ஒண்ணுன்னா ஏன் உன் பெயரில் இந்த உலகமே அடிச்சிக்குது? சரி! அதை விடு… ஆண், பெண் படைப்பில் ஏன் உனக்கு இத்தனை ஓரவஞ்சனை? பெண்கள் மட்டும் ஏன் எல்லா வலிகளையும் அனுபவிக்கனும். சுகம் மட்டும் ஆணுக்கு, வலி எல்லாம் பெண்களுக்குன்னா அப்புறம் ஏன் இந்த படைப்பு?”
இந்த நேரத்திலும் பகுத்தறிவா என்று எண்ணியபடி உமாவின் நினவுகளில் ஆழ்ந்தான்.
------
ஓட்டுனரின் குரல் அவனை நினைவுகளில் இருந்து மீட்டது.

“சார்.. ஊருக்கு வந்தாச்சு.. ஆஸ்பத்திரிக்கு எப்படி சார் போகனும்?” ஓட்டுனர் கேக்க கார்த்திக் வழி சொன்னான்.

அங்கே….

ஆஸ்பத்திரி வாசலிலேயே அப்பாவும், மாமனாரும் காத்துக்கொண்டிருந்தனர். கார்த்திக் முகத்தைப் பார்த்தவுடன்தான் அவர்கள் முகத்தில் நிம்மதி வந்தது.
அவர்கள் பேசும் முன்பே இவனே கூறினான், “போன்ல சார்ஜ் இல்ல. அதான் உங்களை மறுபடியும் கூப்பிடல.. இப்போ உமாவுக்கு எப்படி இருக்கு?”
அப்பாவும், மாமனாரும் அவர்களுக்குள் சிரித்துக்கொண்டார்கள்.

“அப்பா, என்னன்னு சொல்லுங்கப்பா!! மாமா! நீங்களாவது சொல்லுங்க. எதுக்கு சிரிக்கிறீங்க?”

“மாப்ள! பதட்டப்படாதீங்க!! இளவரசி பொறந்திருக்கா மாப்ள!! போய் பாருங்க…”

கார்த்திக்கு சந்தோஷத்தில் கண்ணில் நீர் கோர்த்துக்கொண்டது. கால் தரையில் நிலைகொள்ளாமல் தவித்தது. “உமாவுக்கு எப்படி இருக்கு மாமா?”

“அவளும் நல்லாதான் இருக்கா மாப்ள!! என்ன ஆபரேஷன் பண்ண வேண்டியதாயிடுச்சி..” என்று வருத்தப்பட்டார்.

“அட.. விடுங்க சம்பந்தி! இன்னும் அதையே நினைச்சிக்கிட்டு.. அதான் மகளும், பேத்தியும் நல்லா இருக்காங்கள்ல… சந்தோஷமா இருங்க.. கார்த்திக், நீ போய் உமாவை பாருப்பா!! ரூம் நெம்பர் 201ல இருக்காங்க”.
சரிப்பா என்றபடி இரண்டாவது மாடிக்கு ஓடினான். எதிர்பட்டவர்களிடம் எல்லாம் 201-க்கு வழி கேட்டபடியே சென்றான்.

201. அறைக்கதவைப் பார்த்ததும் சந்தோஷமும், பதட்டமும் ஒரு பந்தாய் மாறி அவனை உந்தியது. மெல்ல கதவை திறந்தபடி உள்ளே நுழைந்தான். அவன் அம்மாவும், மாமியாரும் உமா கையில் இருந்த குட்டி ரோஜாவுக்கு யார் ஜாடை என்று ஆராய்ச்சி செய்துக்கொண்டிருந்தார்கள். கதவு திறக்கும் சத்தம் கேட்டு அனைவரும் திரும்பிப் பார்த்தார்கள். 

கார்த்திக் மெல்ல அவர்களை நெருங்கினான். “என்னடா? இவ்ளோ நேரம் ஆகிடுச்சி? நீ பக்கத்துல இல்லாம உமா ரொம்ப துடிச்சிட்டாடா!!”. அம்மா சொல்ல, கார்த்திக் உமாவிடம் திரும்பினான். இருவரும் மௌனமாக பார்த்துக்கொண்டார்கள்.

“சரி வாங்க சம்பந்தி! அவங்க ரெண்டு பேரும் கீழே இருக்காங்க.. நாம போய் சாப்பிட்டு இவங்களுக்கும் ஏதாவது வாங்கிட்டு வந்திடலாம். நீ இங்க இருப்பா! நாங்க இப்போ வந்திடறோம்.” என்று அம்மா கூற, இருவரும் கிளம்பினார்கள்.
கார்த்திக் கதவை சாத்திவிட்டு வந்து உமா அருகில் அமர்ந்தான். மெல்ல அவள் தலையில் வருடிக்கொடுத்தான். அவள் கண்களில் கண்ணீர் ஒரு மெல்லிய கோடாக வழிந்தது.

“அட! இப்போ என்னடா ஆச்சு? எதுக்கு அழற?”

“உங்களை பாக்குறதுக்கு முன்னாடி எனக்கு ஏதாவது ஆகிடுமோன்னு பயந்துட்டேங்க..”

“அட! என்ன இப்படிலாம் பேசிக்கிட்டு? நான் இருக்குற வரை உனக்கு எதுவும் ஆகாது. புரியுதா?” என்றபடி அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

ங்ங்ங்ங்கா… என்று மெல்ல குழந்தை சினுங்கியது.

“உன்னை மட்டும் விசாரிக்கறேன்னு நம்ம ரோஜாவுக்கு கோபத்தைப் பாரேன்.” என்று சொல்லியபடி குழந்தையை உமா கையிலிருந்து வாங்கினான்.

குழந்தை ஒரு ரோஜா மொட்டைப் போல கை, காலை உதைத்தபடி அவனைப் பார்த்தது. அவன் குழந்தை முகத்தைப் பார்த்தபடியே இருந்தான்.

“என்னங்க? அவ முகத்தை அப்படி பாக்கறீங்க? என்று உமா கேட்டாள்.

“உமா.. இங்க பாரேன். குழந்தை அப்படியே உன்னை மாதிரியே இருக்கா!!. இன்னைலருந்து இவ எனக்கு குட்டி உமா…”

“குட்டிம்மா….”நல்லவங்க...

ShareThis