December 30, 2011

புத்தாண்டு சபதம் எடுத்தாச்சா?

No comments:


என்ன நண்பர்களே!! இந்த வருடத்தின் கடைசி நாட்களில் இருக்கிறோம். காலம் உருண்டோடும்னு சொல்றதெல்லாம் சரிதான். அதுக்காக இவ்ளோ வேகமாவா? இப்போதான் 2011 புதுவருடம் பார்த்தது போல் இருந்தது. ஆனா அதுக்குள்ள பொங்கல், குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம், தீபாவளி, ரம்ஜான், கிருஸ்துமஸ் என எல்லாம் தாண்டி, இதோ அடுத்த புத்தாண்டும் வந்தாச்சு. புத்தாண்டு இதுவரையிலும் வந்தது. இப்பவும் வரப்போகுது. இனியும் வரும். காலம் கடந்துக்கிட்டுதான் இருக்கு. ஆனால் நம்மக்கிட்ட ஏதாவது மாற்றம் வந்து இருக்கா? பெரும்பாலும் இல்லைன்னுதான் தோணுது. ஆனாலும் சிலபேர் கண்டிப்பா ஏதாவது செய்யணும்னு சொல்லி புத்தாண்டு சபதம் எல்லாம் எடுப்பாங்க. ஆனா அந்த சபதத்துக்கு ஆயுள் சில நாட்கள்தான். மீண்டும், எதை மாத்தணும்னு சபதம் எடுத்தாங்களோ அதை விட முடியாமல், அவர்களையே சமாதானம் செய்துகொண்டு அதை தொடர்வார்கள். அதுக்கு பெரிதாக எல்லாம் காரணம் ஒன்றும் கிடையாது. நிலையற்ற மன நிலைதான் காரணம்.

“சரி!! இவ்ளோ சொல்றியே! நீ ஏதாவது சபதம் எடுத்திருக்கியா? அதை எந்த அளவு காப்பாத்தியிருக்க?” அப்படீன்னு நீங்க கேக்கலாம்.

“இப்போ சொல்றேங்க! நான் புத்தாண்டும் கொண்டாடுவதில்லை. அந்த நாளில் எந்த சபதமும் எடுப்பதில்லை. என்னை பொறுத்தவரை அன்றும் மற்றுமொரு நாளே!!”. எனக்குள் ஏதேனும் மாற்றம் தேவைப்பட்டால் அதை நானே கடுமையாக கடைபிடித்து மாற்றிக்கொள்வேனே தவிர அதற்கு தனியாக நாள் எல்லாம் ஒதுக்கி தொடங்கமாட்டேன்.

“அப்போ எங்களுக்கு சொல்ல உனக்கு என்ன அருகதை இருக்கு?”

“அருகதை இருக்கா இல்லையான்னு எல்லாம் எனக்கு தெரியாது. ஆனா எனக்கு வேண்டிய நண்பர்கள் இந்த உலகம் முழுக்க இருக்காங்க. சில பேர் தங்கள் பழக்கத்தை மாத்திக்கணும்னு நினைச்சு மாத்திக்க முடியாம தவிச்சதை நான் பாத்திருக்கேன். அவங்களுக்காகத்தான் இதை எழுதறேன்.”

“நான் சொல்றது சரின்னு பட்டதுன்னா மேல படிங்க. இல்லைன்னா இப்படியே விலகிடுங்க. சரியா?”

இதுவரைக்கும் உங்கள்ள பல பேர் இந்த சபதங்களை எடுத்திருப்பீங்க...

1. இந்த வருஷத்தோட சிகரெட் பிடிக்கிறதை விட்டுடனும்... 
விட்டீங்களா? நூத்துல 99 பேர் இன்னமும் விட முடியாம கஷ்டப்பட்டுக்கிட்டுதான் இருக்காங்க. காரணம், tension-ஐ குறைக்க, நண்பர்களோட ஜாலியா அப்படின்னு பல காரணங்களால மனம் அதுக்கு பழகிப் போச்சு. சரியா சொல்லனும்னா மனம் அந்த பழக்கத்துக்கு அடிமை ஆகிடுச்சி. அதான் தொடர்ந்து சில நாட்கள் சிகரெட் பிடிக்கலைன்னா மனம் அதை தானா தேட ஆரம்பிச்சிடுது.

ஒரு கணக்கு போட்டு பாக்கலாமா?

1 சிகரெட் விலை 5 ரூபாய்.

ஒரு நாளைக்கு சராசரியாக 5 சிகரெட். அப்போ நாள் ஒன்றுக்கு 5 X 5 = 25 ரூபாய்.

ஒரு மாதத்திற்கு 25 X 30 = 750 ரூபாய்.

ஒரு வருடத்திற்கு 750 X 12 = 9000 ரூபாய்.

இது சராசரி கணக்குதான். ஆனா கணக்கே இல்லாம ஊதி தள்ளுறவங்களும் இருக்காங்க. அவங்க கணக்கு இன்னும் எகிறிடும். சிகரெட் பிடிக்கிறவங்களுக்கு மட்டும் இது பாதிப்பில்லை. அவர்கள் வெளியிடுகிற புகையை சுவாசிக்கிறாங்களே அவங்களுக்குதான் அதிக பாதிப்பு. [“ஏண்டா அப்போ பக்கத்துல நிக்குற? தள்ளி நிக்க வேண்டியதுதானே!!” அப்படின்னு சொல்றவங்களுக்கு நான் சொல்ல ஏதுமில்லை.]

ஒரு வருசத்துக்கு இவ்ளோ பணம் கரியாக்குறதுக்கு பதிலா, அந்த பணத்தை ‘நல்ல வழியில் செலவு செய்வேன்’ என்று சபதம் எடுத்துக் கொள்ளலாமே!!

2. தண்ணி அடிக்கிறதை இந்த வருஷத்தோட நிறுத்திக்கணும்... 
மேலே சிகரெட்டுக்கு சொன்ன காரணங்கள் இதுக்கும் சேரும். அதுவும் நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் பேசுகிறார்களோ இல்லையோ!! கண்டிப்பாக ‘சரக்கு கச்சேரி’யை அரங்கேற்றம் செய்கிறார்கள். இதுக்கும் ஒரு கணக்கு போட்டு பாக்கலாமா?

வாரத்துக்கு ஒரு கட்டிங் = 25 ரூபாய்,

மாதத்துக்கு ஒரு முறை நண்பர்களுடன் சரக்கு கச்சேரி = 1000 ரூபாய்

அப்போ, மாதம் ஒன்றுக்கு (25x4)+1000 = 1100 ரூபாய்.

ஒரு வருடத்திற்கு, 1100x12 = 13,200 ரூபாய்.

இவ்வளவு பணத்தையும் செலவு பண்ணிட்டு அதை ‘ஜாலியான கொண்டாட்டம்’ என அர்த்தப்படுத்திக்கொள்வது நிச்சயம் நல்ல வாழ்க்கைக்கான அடையாளம் அல்ல.

உங்கள் வீட்டின் பொருளாதாரத்தை நிர்வகிப்பவரிடம் கேட்டுப் பாருங்கள். இந்த பணத்தின் அருமை அப்போது உங்களுக்கு புரியும்.

இதுவரை காரணம் ஏதும் தெரியாமல் இருப்பீர்களானால், இனிமேல் குடிப்பழக்கத்தை விட சபதம் எடுப்பீர்களா?

3. இதை உபரி சபதமாகக் கூட எடுத்துக்கொள்ளலாம். அதாவது நண்பன் திருமணத்தின்போது குடிக்காமல் இருப்பது.

இது எந்த வகையில் மகிழ்ச்சியை கொடுக்கிறது என்று தெரியவில்லை. இன்றைய பணிச் சூழலில் நண்பர்கள் அனைவரும் திசைக்கு ஒருவராக சிதறி உள்ளார்கள். அனைவரும் சந்தித்துக் கொள்வது இது போன்ற நண்பர்களின் திருமண விழாவில்தான். அப்போது பேசி மகிழ ஆயிரம் விஷயம் இருக்க, அதை விட்டுவிட்டு ராத்திரி முழுக்க நன்றாக குடித்துவிட்டு, மறுநாள் காலை எழுந்திருக்க முடியாமல் திருமணமே முடிந்த பிறகு மண்டபத்திற்கு போனால் நன்றாகவா இருக்கும். [ஒரு சிலர் திருமணத்தையே பார்க்காமல் ஊருக்கு கிளம்புபவர்களும் இருக்கிறார்கள்] நண்பனின் வாழ்வில் ஒரே ஒரு முறை வரும் அழகான நிகழ்வை நாம் மேலும் மகிழ்வானதாக செய்ய வேண்டாமா? ஒரு நல்ல நண்பனின் அடையாளம் அதுவாகத்தானே இருக்க முடியும்?

யோசிங்க மக்கா..!! யோசிங்க!!!

4. எரிபொருள் சிக்கனம்

அடுத்த தெருவில் இருக்கும் கடைக்கு போவதற்குக்கூட வண்டியை எடுக்காமல், நடக்கலாமே!!

5. போக்குவரத்து விதிகள்

எல்லோருக்குமே போக வேண்டிய இடத்திற்கு சீக்கிரம் போய் சேர வேண்டும் என்ற அவசரம் இருக்கும். அதனால் கிடைத்த சந்தில் எல்லாம் வண்டியை ஓட்டாமல் சரியாக திட்டமிட்டு யாருக்கும் தொல்லை தராமல் பயணத்தை மேற்கொள்ளலாமே!!

6. உருப்படியாக சில புத்தகங்கள் படிக்கலாம்

 
 உண்மையில் புத்தகங்கள் தவிர சிறந்த நண்பன் வேறெதுவுமில்லை. “Reading Books” என்று வெறும் Hobbies-இல் சேர்க்காமல் அதை ஒரு பழக்கமாக ஏற்படுத்திக் கொள்ளலாமே!! ஒன்று மட்டும் நிச்சயம். ஒரே ஒரு புத்தகம். உங்களுக்கு பிடித்தமானதாக தேர்ந்தெடுத்து முழு மனதோடு படித்து முடியுங்கள். அப்புறம் பாருங்கள். நீங்களே தேடித்தேடி படிக்க ஆரம்பிப்பீர்கள்.

என்னங்க பொறுமையா படிச்சிட்டீங்களா? முதல் ரெண்டு விஷயங்களுமே அடிமடியிலே கை வெச்ச மாதிரி பகீர்னு இருக்கா? அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. நான் மேலே சொன்ன விஷயங்களை ஆக்கப்பூர்வமா யோசிச்சு நடைமுறைக்கு கொண்டு வாங்க. இது மட்டுமே சபதங்கள் என்று கிடையாது. உங்களிடம் உங்களுக்கே பிடிக்காத விஷயங்களை வீட்டுடணும்னு திடமான மனதோடு செயல்படுங்கள். அதோட உண்மையான பலன் வருடத்தின் கடைசியில் நிச்சயம் தெரியும்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். 

December 29, 2011

என்றென்றும் ராஜா – உண்மையான 'ராஜ'பாட்டை

2 comments:
நிகழ்ச்சியை காண தொலைக்காட்சி முன் தவம் இருக்க வேண்டியதில்லை, Remote யார் கையில் என்ற சண்டை இல்லை, ‘அடுத்து வருவது’ என்ன என்று விளம்பரம் முடியும் வரை காத்திருக்க தேவையில்லை, முக்கியமாக விளம்பரங்களின் தொல்லை இல்லவே இல்லை [நிகழ்ச்சி தொடங்கும் வரை அங்கிருந்த பெரிய திரைகளில் விளம்பரங்கள் காட்டினார்கள். அது கணக்கில் வராது], முக்கியமாக மீதி நிகழ்ச்சியையும் காண அடுத்த வாரம் வரையில் காத்திருக்க தேவையில்லை. மொத்தமாக தொடர்ந்து 6 மணி நேரம் இளையராஜாவின் கச்சேரி கேட்க வாய்ப்பு கிடைத்தால் சும்மா விடுவோமா? எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.
 
நேற்று மாலை [28-12-2011 புதன்கிழமை] நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான அனுமதி சீட்டை கையில் பார்த்தவுடன் ஏதோ இனம் புரியாத மனதுக்குள் ஓடியது. ஊர் திருவிழாக்களில் நகல்களின் கச்சேரிகளை மட்டுமே பார்த்திருந்த நான், இப்போது அசலின் கச்சேரியை அனுபவிக்கப் போகிறேன். சிறுவயதில் அம்மா, தாத்தாவின் தாலாட்டுக்குப்பின் இளையராஜாவின் பாடல்கள்தானே என்னை தாலாட்டியது. அவர் இசையோடு இணைந்து வளர்ந்தவன் நான். எனக்கு இன்னமும் இசையை பற்றி ஒண்ணும் தெரியாது. ராகம், தாளம், பல்லவி, சரணம் என்று ஏதேதோ சொல்வார்களே!! உண்மையாக இந்த பெயர்களைத் தவிர அதன் ஆதாரம் எதுவும் தெரியாது. தெரியாததுதான் எனது பலம் என்று நினைக்கிறேன். எந்த ராகம் என்று எதையும் ஆராயாமல், பாடலைக் கேட்டவுடன் ரசிக்க மட்டுமே செய்வது பலம்தானே!!!

நிகழ்ச்சி மாலை 6 மணியளவில் தொடங்கியது. நடிகர் பிரகாஷ் ராஜ் வந்திருந்த அனைவரையும் வரவேற்று, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த முறை Hungary நாட்டை சேர்ந்த இசைக்குழுவினரும் வந்திருந்தனர். இளையராஜாவிற்கு வாழ்த்து தெரிவித்தவர்கள் அவர்களுக்காக தங்களின் 3 இசைக்கோர்வையினை அற்பணித்தார்கள். அடுத்து இளையராஜா பற்றிய காட்சித் தொகுப்பு ஒளிபரப்பப்பட்டது. அதன் பின்னர் வந்த பாடகிகள் அனைவரும் சுர வரிசை [அது என்ன பாடல் என்று தெரியவில்லை. ஆனால் மிக நன்றாக இருந்தது] பாடினார்கள். பாடலின் முடிவில் ‘ஓம்காரம்’ பாடியபடி மேடைக்கு வந்தார் இசைஞானி இளையராஜா. பிரகாஷ் ராஜ் முதலிலேயே “இதுவரை பல நிகழ்ச்சிகளில் நிறைய பேசிவிட்டோம். அதனால் இந்த நிகழ்ச்சியில் உங்களுக்கு தொடர்ந்து பாடல்கள்தான்.” என்று அறிவித்துவிட்டார்.

இளையராஜா மேடைக்கு வந்ததும் அனைவருக்கும் நன்றி கூறிவிட்டு, தான் நண்பனை அழைத்தார். “என்னுடன் எப்போதும் இருக்கும் ஒரே நண்பன்” என்று ஆர்மோனியப் பெட்டியைக் கொண்டுவந்து கீழே அமர்ந்து கொண்டார். எதிர்பார்த்தது போலவே முதல் பாடலாக “ஜனனி...!! ஜனனி...!!!” பாடலை பாடினார். நான் அனுபவித்த பரவச அனுபவத்தின் தொடக்கமாக இருந்தது. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் இளையராஜாவின் குரலுக்காகவே அந்த பாடலை அடிக்கடி கேட்பேன். பாடல் முடியும் வரையில் அமைதியாக இருந்த அரங்கம், பின்னர் எழுப்பிய கரவொலி அடங்க கொஞ்ச நேரம் ஆனது. அடுத்த இரு பாடல்களும் ‘அம்மா’ பாடல்களாக அமைந்தது. அதில் முதலாவதாக K.J.யேசுதாஸ் அவர்கள் “அம்மா என்றழைக்காத...!!” பாடலை பாடினார். அடுத்து SPB அவர்கள் “நானாக நானில்லை தாயே..!!!” பாடலை பாடினார். இந்த பாடலைப் பாடுவதற்கு முன் இளையராஜாவின் துணைவியார் திருமதி.ஜீவா பற்றிய ஒளித்தொகுப்பை காட்டி அவருக்கு சமர்ப்பணம் செய்தார்கள்.
பாடல் முடிந்ததும் பிரகாஷ் ராஜ், சிம்பொனியைப் பற்றி கூறுமாறு கேட்டார். ‘அதை உங்களுக்கு எப்படி புரிய வைப்பது?’ என்று யோசித்தவர், தனது குழுவினருக்கு சில குறிப்புகள் கொடுத்த சில நொடிகளில் இசைக்கப்பட்டது. மேற்கத்திய இசை போல தோன்றினாலும் இசையின் முடிவில் “இதயம் போகுதே..!!” பாடலோடு அவர் முடித்த விதம்... யப்பா!! வாய்ப்பே இல்லை. அசத்தல். அடுத்து சில பாடல்களில் இளையராஜா ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். “நான் உங்களுக்காகத்தான் வந்திருக்கேன். நீங்க போதும்னு சொல்ற வரைக்கும் நான் பாடுவேன். ஆனா நீங்க இப்படி சத்தம் போட்டீங்கன்னா எங்களாள பாட முடியாது. நீங்க இந்த மாதிரி சத்தம் போடுறத்துக்கு வேற மாதிரி கச்சேரிகள் இருக்கு. இது அப்படி இல்லை. அதனால் பொறுமையாக பாடலைக் கேட்டு இசையை அனுபவியுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.

“இதயம் ஒரு கோயில்...” பாடும்போது வயலின் குழுவினரின் [31 சின்ன வயலின், 2 பெரிய வயலின்] ஒருமித்த இசை, எந்த பிசிறும் இல்லாமல் கோர்வை மிக அற்புதமாக இருந்தது. காதலிக்காகப் பாடப்பட்ட பாடல், நேற்று அதன் அர்த்தம் ரசிகனை நோக்கியே இருந்தது. அடுத்து கமல் வீடியோ மூலம் தனது வாழ்த்துகளைக் கூறினார். “அவர் வாழ்ந்த காலத்தில் நானும் இருக்கிறேன். பழசாக இருந்தாலும் உண்மை அதுதான். இன்னும் எத்தனை மேடைகளில் வேணும்னாலும் சொல்வேன்.” என்றார். அதை ரசிகர்களும் கரவொலி மூலம் ஆமோதித்தனர்.

பாடகர்கள் K.J.யேசுதாஸ், SPB, ஹரிஹரன், கார்த்திக், யுவன், ஹரிசரன் பாடகிகள் சித்ரா, ரீட்டா, உமா ரமணன், பிரியா [இன்னும் சிலரது பெயர்கள் தெரியவில்லை. மன்னிக்கவும்] என தொடர்ந்து பாடியபடி இருந்தார்கள். பெரும்பாலான பாடல்கள் 80-90 களின் பாடல்களாகவே இருந்தது. “ஆயிரம் மலர்களே மலருங்கள்..!!” பாடல் ‘மலேசியா’ வாசுதேவன் அவர்கள் நினைவாக பாடப்பட்டது.

இளையராஜா கீழே விருந்தினர் பக்கம் நோக்கி, “அண்ணா! மேடைக்கு வர்றீங்களா??” என்று கேட்க, பலத்த கரவொலிக்கிடையில் பாலமுரளிகிருஷ்ணா மேடையேறினார். இளையராஜாவை பாராட்டி பேசிய உடன் பாடுவதற்கு தயாரானார். அவரது குரலால் தனிச் சிறப்பை சேர்த்த “சின்ன கண்ணன் அழைக்கிறான்..” பாடலைப் பாடினார். [ஒரு சின்ன flashback: இளையராஜாவின் முந்தைய இசை நிகழ்ச்சியில் இதே பாடலை யுவன் மற்றும் கார்த்திக் பாடிய விதத்தை விகடன் பலமாகவே குட்டியிருந்தது.] அதனால் நான் ஒரு எதிர்பார்ப்போடு காத்திருந்தேன். தனது கரகரப்பான, சிறு நடுக்கம் கலந்த குரலில் அவர் பாட ஆரம்பித்ததும் “இதைத்தானே எதிர்பார்த்தோம்..!!” என்று கத்த தோன்றியது. இசையனுபவம் என்று சொல்வார்களே!! இந்த பாடலில் அதை நிச்சயம் அனுபவிக்கலாம்.

அடுத்து K.J.யேசுதாஸ் , “A song from my Heart” என்று கூறி “பூவே!! செம்பூவே!!” பாடலை பாடினார். மற்ற பாடல்களில் சிறிது பிசிறு தட்டிய அவரது குரல், இந்தப் பாடலில் மிகச் சரியாக அமைந்திருந்தது. ஆனாலும் timing கொஞ்சம் தவறியதால் பாடலை இடையில் நிறுத்தி மீண்டும் தொடர்ந்தார். இந்தப் பாடலிலும் வயலின் குழுவினரின் இசைக் கோர்வை அபாரம். நிகழ்ச்சி முழுக்க அதிக பாராட்டுக்கள் வாங்கியவர்கள் இவர்கள்தான்.

இளையராஜாவும் சித்ராவும் இணைந்து “நான் தேடும் செவ்வந்திப் பூவிது...” பாடலை பாடினார்கள். எனக்கு என்றென்றும் விருப்பமான பாடல். பாடலின் தொடக்கத்தில் அவர் பாடும் ராகம், அது அவருக்கு மட்டுமேயான அடையாளம். ஆனால் இந்த பாடலும் பாதியில் நிறுத்தப்பட்டது. ஆர்வ மிகுதியால் ரசிகர்கள் போட்ட அதிகமான கூச்சலில், அவருக்கு கொஞ்சம் கோபமே வந்துவிட்டது. “இப்படி சத்தம் போட்டீங்கன்னா எங்களுக்கு சுருதி சேராது. அவங்க என்ன வாசிக்கிறாங்கன்னு தெரியாது. அப்புறம் பாட்டு நல்லா வராது.” என்று கோபமாக கூறினார்.

‘பா’ திரைப்பட இயக்குனர் பால்கி வந்திருந்து இளையராஜாவின் இசையை தனது படத்தின் காட்சியைக் கொண்டு அருமையாக விளக்கினார். பின் தனது பேச்சில் “If you want a magic show, just go to Raja Sir’s Studio” என்றார். இப்போலாம் ‘காப்பி ராகம்’ அதிகமாக இசைக்கப் படுகிறதே!! அவர்களுக்கும் சில யோசனைகள் கூறினார். “நீங்கள் காப்பி ராகம் போடணும்னா அவரோட பாடல்களைத் தொடாதீர்கள். அனைவருக்கும் தெரிந்துவிடும். அவரது பின்னணி இசையை பயன்படுத்திக் கொள்ளுங்கள். யாருக்கும் அதிகமாகத் தெரியாது.” என்று அவர் கூறியதும் அரங்கில் கரவொலியோடு சிரிப்பொலியும் சேர்ந்துக் கொண்டது.

நாட்டுப்புற கும்மி இசையில் அமைந்த “ஆயிரம் தாமரை மொட்டுக்களே..!!” பாடல் ரசிகர்களின் கரவொலியுடன் அமர்க்களமாக ஆரம்பித்தது. SPB-யுடன் இணைந்து பாடிய பாடகி [பெயர் தெரியவில்லை. மன்னிக்க..] S.ஜானகி வரவில்லையே என்ற குறையே தெரியாத அளவுக்கு அருமையாகப் பாடினார். அப்புறம் Hungary குழுவினருடன் இணைந்து இசைத்த ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தின் பின்னணி இசை, ‘பூங்கதவே தாழ் திறவாய்...’, ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி...’ என ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம். அடுத்து அதிக கைத்தட்டல் வாங்கிய பாடல் ஹரிஹரன் பாடிய “என் மன வானில்....” பாடல்தான்.

இளையராஜாவின் ‘இளைய’ராஜா யுவன் மேடையேறியபோது பலத்த கைத்தட்டல். திடீரென்று கமல் போல பேசினார். ‘என்னடா இது?’ என்று பார்த்தால் அடுத்து அவர் பாடிய பாடல் “ராஜா கைய வெச்சா..!!”. அடுத்து பாடியது “நினைவோ ஒரு பறவை..!!”. வழக்கம்போல எந்த அலட்டலும் இல்லாமல் தன் மனம் போல பாடினார். சரி!! எல்லாமே மெல்லிசையாக இருந்தால் நல்லா இருக்குமா? காரமும் இருந்தால்தானே இனிப்பின் ருசி தெரியும். ‘குத்துப் பாடல்’ என்றதும் K.J.யேசுதாஸ் வந்தார். நானும் “தண்ணித் தொட்டி...” பாடலை எதிர்பார்த்தேன். ஆனால் அவர் பாடியது “வச்சப் பார்வை தீராதுடி...!!” பாடல். மெல்லிசைத் தாலாட்டில் தூங்கியவர்கள் அனைவரையும் எழுப்பி உட்கார வைத்தார்.

சரி!! எல்லோரும் தனித்தனியாக பாடியாச்சு. அப்படியே போய்டலாமா? K.J.யேசுதாஸ் மற்றும் SPB மேடைக்கு வந்தார்கள். அதேதான்.. அதே பாட்டுதான். “காட்டுக்குயிலு மனசுக்குள்ள...” பாடல் ரகளையாக ஆரம்பித்தார்கள். திடீரென பாடலின் இடையில் SPB, K.J.யேசுதாஸ் காலைத் தொட்டு எழுந்தார். இந்த திடீர் செய்கை புரியாமல் அவரும் வாழ்த்தினார். அப்புறம்தான் தெரிந்தது. அடுத்து SPB பாடிய வரி “போடா எல்லாம் விட்டுத்தள்ளு...”. மரியாதை.

பின்னர் பாடகர்கள் அனைவரும் இணைந்து “இது ஒரு நிலாக்காலம்” பாட, அடுத்து தனது இசைக் கலைஞர்கள், Hungary குழுவினர் அனைவரையும் ரசிகர்களுக்கு அறிமுகப் படுத்தி வைத்தார். புத்தாண்டு வாழ்த்தாக SPB குரலில் “இளமை இதோ! இதோ!!” பாடலுடன் நிகழ்ச்சி இரவு 12 மணியளவில் இனிதே நிறைவுற்றது.

இப்போ நான்:

பொதுவாக நான் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு சென்றதில்லை. அதை பற்றிய சிந்தனையும் வந்ததில்லை. ஆனால் கண்டிப்பாக வரவேண்டும் என்று கூறி நுழைவுசீட்டையும் ஏற்பாடு செய்த செல்லப்பன் அண்ணனுக்கு [நிகழ்ச்சி முடிய 3 மணியானாலும் சரி, விடிஞ்சாலும் சரி பாத்துட்டுதான் போகணும் என்று கூறிக்கொண்டே இருந்தார்] என் நன்றிகள். அப்புறம் ரசிகர்கள். அனைவரும் ஒரு உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார்கள். ஒவ்வொரு பாடல் தொடங்கும்போதும் மேடையை நோக்கி அணைப்பது போல கையை விரித்துக் கொண்டு உணர்ச்சிக் கூச்சலிட்டார்கள். அனைத்திற்கும் ஒரே காரணம். அது இளையராஜா.

இசையால் இவ்வளவு மக்களையும் தன் வசப்படுத்தி வைத்திருக்கும் இளையராஜா, உண்மையில் தனி ராஜாங்கத்தையே நடத்திக் கொண்டிருக்கிறார். அவரது ராஜாங்கத்தில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

கொசுறு:

இந்த பதிவின் தலைப்பிற்கு உதவி செய்த நண்பன் காளீஸ்வரனுக்கு என் நன்றிகள்.


December 26, 2011

முல்லை பெரியாறு உரிமை காக்கும் போராட்டம் - சென்னை மெரினா

2 comments:

நேற்று மாலை (25-12-2011) சென்னை மெரினா கடற்கரை, கண்ணகி சிலையருகே ‘முல்லை பெரியாறு  உரிமை காக்கும் போராட்டம்’  நடைபெற்றது. மே 17 இயக்கத்தினர் இந்த போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். மாலை 3 மணியளவில் தொடங்கிய கூட்டம் இரவு 9 மணியளவில் நிறைவடைந்தது. திரு.வைகோ, இயக்குனர்கள் பாரதிராஜா, சேரன், தங்கர்பச்சான், விக்ரமன், கௌதமன், பாடலாசிரியர்கள் அறிவுமதி, தாமரை, சினேகன், ஓவியர் வீர சந்தானம் மற்றும் பலர் பங்கேற்க பொதுமக்கள் பேராதரவுடன் போராட்டம் நடந்து முடிந்தது.

அங்கு நடந்த 6 மணி நேர நிகழ்வின் தொகுப்பு இங்கே உங்களுக்காக. முடிந்தவரை தகவல்களை தொகுத்துள்ளேன்.

1. மாலை 3 மணியளவில் கண்ணகி சிலையின் பின்புறம் மக்கள் கூட ஆரம்பித்தார்கள்,

2. அதே இடத்தில் பிரபாகரன் உரைகள், படங்கள், வைகோ உரைகள், சீமான் உரைகள் (குறுந்தகடுகள்) என கடை விரிக்கப்பட்டது. அதில் அதிகமாக பிரபாகரன் அவர்களின் படங்களே விற்பனை ஆனது,

3. மக்கள் கூட்டம் சேர்ந்த சிறிது நேரத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா, விக்ரமன், சேரன், தங்கர்பச்சான் அனைவரும் வந்து சேர்ந்தனர்.

4. அதுவரை மணல் பகுதியில் பதாகைகளுடன் அமைதியாக அமர்ந்திருந்த மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது,

5. ஊடக நண்பர்களுக்காக சிறிது நேரம் பொறுமை காத்த இயக்குனர்கள் பின்பு மக்கள் கூடியிருந்த இடத்திற்கு வந்து அவர்களுடன் இணைந்து முன்வரிசையில் அமர்ந்துகொண்டனர்,

6. இயக்குனர் கௌதமன் ‘மே 17 இயக்கத்தினருடன்’ இணைந்து கூட்டத்தை ஒழுங்குபடுத்தி வழி நடத்தினார்,

7. ஈரோட்டை சேர்ந்த கலைக்குழுவினரின் சார்பில் உணர்ச்சிமிக்க பாடல்கள் பாடப்பட்டது. அதுவும் நமது கிராமிய மெட்டில் அமைந்த பாடலுக்கு மக்கள் மத்தியில் ஏக வரவேற்பு. ‘எழுக எழுக தமிழகம்’ பாடலுக்கு மக்களும் உணர்ச்சிப் பெருக்குடன் உடன் பாடினார்கள்,

8. கலைநிகழ்ச்சியின் இடையே வைகோ அவர்களும், தாமரையும் வந்து இணைந்து கொண்டார்கள்,

 

9. பாடல்களில் இடம்பெற்ற அரசியல் சாடல்களுக்கு பலத்த கைத்தாட்டல் எழுந்தது,

10. மக்கள் ஏந்தியிருந்த பதாகைகளில் “முல்லை பெரியாறு நம் உரிமை”, “இடுக்கி நமது நிலம்”, “இந்திய அரசே!! கேரள அரசே!! நீங்கள் உடைக்க முற்படுவது அணையை மட்டுமல்ல! ஒருமைப்பாட்டையும்தான்!!”, போன்ற பல வாசகங்கள் இடம் பெற்றிருந்தன,

 

11. கலை நிகழ்ச்சி முடிந்தவுடன் கண்ணகி சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை பேரணி செல்ல அனைவரையும் இயக்கத்தினர் ஒழுங்குபடுத்தினர்,

12. பேரணி மெரினா கடற்கரையின் உள்வழி சாலையில் செல்ல ஏற்பாடாகியிருந்தது,

13. பேரணியை ஒழுங்குபடுத்தும் வேளையில் தப்பாட்ட கலைஞர்கள் தப்பை அடித்தபடி நடனம் ஆடினார்கள் [தப்பாட்டத்தை நிகழ்ச்சியில் சேர்த்தவர்களை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். அதுவரை வெறும் கோஷம் எழுப்பியபடி இருந்த போராட்டத்திற்கு தப்பிசையை கேட்டவுடன் ஒரு வேகம் வந்தது என சொல்லலாம்].


14. தப்பிசைக் கலைஞர்கள் இசைத்து, ஆடியபடியே முன்செல்ல பேரணி தொடங்கியது.

15. ‘மே 17 இயக்கத்தினர்’, இயக்குனர்கள் சேரன், தங்கர் பச்சான், கௌதமன் அனைவரும் பேரணியை ஒழுங்குபடுத்தியபடியே முன்னின்று அழைத்து சென்றனர்,


16. பேரணிக்கு எதிர் திசையில் வந்த வைகோ அவர்கள் அனைவருக்கும் வாழ்த்து கூறியபடியே பேரணியில் கலந்துகொண்டார். பின்னால் வந்த இயக்குனர் பாரதிராஜாவும் இணைந்து கொண்டார்.

17. பேரணி ஆங்காங்கே சிறிது நேரம் நின்று கோஷம் எழுப்பியபடியே முன்னேறி சென்றது,

18. பெரும்பாலும் இந்திய, கேரள அரசைக் கண்டித்தும், தனித்தமிழ் தேசியம் வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கோஷம் எழுப்பப்பட்டது. முக்கியமாக ‘அணை உடைந்தால் இந்தியா உடையும்’ என்ற கோஷம் மட்டும் மக்கள் ஆதரவுடன் ஓங்கி ஒலித்தது,

 

19. கடற்கரைக்கு வந்த மக்களும் என்னவென்று பார்க்க வந்தவர்களில் பலர் பேரணியில் கலந்து கொண்டனர்,

20. மெல்ல முன்னேறிய பேரணி காந்தி சிலையை தாண்டி கண்ணகி சிலையருகே நிறைவடைந்தது. அங்கே தலைவர்கள் பேசுவதற்காக சிறு மேடை அமைக்கப்பட்டிருந்தது,

 

21. மேடையில் நாற்காலிகள் எதுவும் போடப்படவில்லை. அழைக்கப்பட்டவர்கள் அனைவரும் தரையில் அமர்ந்துக்கொண்டனர்,

22. மக்கள் அனைவரும் மேடைக்கு முன்பாக சாலையிலேயே அமர்ந்துகொண்டார்கள். ஊடக நண்பர்களுக்கு மட்டும் அவர்கள் வசதிக்காக இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது,

23. ஊடக நண்பர்கள் மேடைக்கு நேர் எதிரே நின்று நிகழ்ச்சியை படம் பிடித்ததால், பொது மக்கள் அவர்களை நகர்ந்து போகும்படி சொல்ல அங்கே சிறிது சேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் வைகோ பேசியதும்தான் மக்கள் அமைதி காத்தனர்,

24. இயக்குனர் கௌதமன் கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பையும் மீறி நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி சென்றார்,


25. முதலில் பேச வந்த மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் அவர்கள் இயக்கம் உருவான காரணம், தமிழர் பிரச்சினையில் மைய அரசின் நிலைப்பாடுகள், முல்லைப் பெரியாரின் தற்போதைய நிலைமை என தெளிவுபடுத்தினார். தமிழர்களுக்கு எங்கு பிரச்சினை என்றாலும் அங்கு ‘மே 17 இயக்கம்’ குரல் கொடுக்கும் என்று கூறினார்,

26. அடுத்து பாடலாசிரியர் தாமரை பேச வந்தார். போராட்டத்திற்கு பங்களித்த பெண்களின் சார்பாக தான் வந்துள்ளதாக தெரிவித்து தனது பேச்சை தொடங்கினார். “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள, கர்நாடக அரசாங்கங்கள் மதிப்பதில்லை. ஆனால் நாம் மட்டும் தேசிய ஒருமைப்பாடு எனக் கூறிக்கொண்டு இன்று ஏமாந்துபோய் நிற்கிறோம். மன்னராட்சி காலத்தில் இதுபோன்ற பிரச்சினை வந்ததில்லை. ஏன்? பிரிட்டிஷ் ஆட்சியின்போதுகூட இப்படி ஆனதில்லை. ஆனால் என்று மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதோ, அன்றிலிருந்து நமக்கு பிரச்சினைதான். தனித் தமிழ் தேசியம்தான் இதற்கு ஒரே தீர்வு” என்றார்.

27. அடுத்து பேசிய வேல்முருகன் பென்னி குய்க் பற்றியும் அன்று முல்லை பெரியாறு அணை கட்ட ஏற்பட்ட சிரமத்தையும் எடுத்துக் கூறினார். “அணை கட்ட பணம் இல்லாதபோது பென்னி குய்க் தனது சொத்துக்களை விற்று அணையைக் கட்டினார். அப்பவும் பணம் போதவில்லை. தமிழர்களிடம் பணம் வசூலித்து அணையை கட்டி முடித்தார். அதாவது யார் காசுல? உன் பாட்டன், முப்பாட்டன் காசுல கட்டின அணையை உடைக்க விடலாமா?” என்று அவர் கூற கூட்டத்தில் கரவொலி பலமாக கிளம்பியது.

28. பின்னர் வந்த ‘மனித நேய மக்கள் கட்சி’யை சேர்ந்த நண்பர் [மன்னிக்கணும். கூட்டத்தில் ஏறிபட்ட சலசலப்பால் அவரது பெயரையும், அவர் வகித்த பொறுப்பையும் கவனிக்க முடியவில்லை.] தமிழர் நலன், முல்லைப் பெரியாரின் அவசியத்தைப் பற்றியும் பேசினார்.

29. அடுத்து வந்தவர் கவிஞர் அறிவுமதி. பிரபாகரனுக்கு மிகவும் பிடித்த கவிஞர் என்ற அறிமுகத்துடன் அழைக்கப்பட்டார். அவரது குரல் மெல்லினமாக இருந்தாலும் வார்த்தைகளில் வல்லினம் மிகுந்தே இருந்தது. “தாகத்துக்கு தண்ணி கேட்டா மோர் குடுக்குறவன்டா தமிழன். ஆனா கேரளாக்காரன் கிட்ட தண்ணி கேட்டா அவன் மூத்திரம் தர்றேன்னு சொல்றான். முள்ளிவாய்க்காலில் தூங்கிய தமிழனை முல்லைப் பெரியாறில் எழுப்பிய மத்திய அரசிற்கு நன்றி. இங்கு கூடியிருக்கும் இளைஞர்களைப் பார்க்கும்பொழுது நம்பிக்கை அதிகமாக இருக்கின்றது.” என்று அவர் கூறும்போது மக்கள் மத்தியில் சந்தோஷக் கூச்சல். “எதிர்க்கத் துணிந்தால் தமிழ் மீளும், எதற்கும் துணிந்தால் தமிழ் ஆளும்” என்று கூறி பேச்சை நிறைவு செய்தார்.

30. “இவரைக் கூப்பிடலைன்னா இவரும் கோவிச்சுக்குவாரு! நீங்களும் கோவிச்சுக்குவீங்க” என்று கௌதமன் கூறியபடியே தங்கர் பச்சானை பேச அழைத்தார். “கேரள முதல்வர் உம்மன் சாண்டியும், எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தனும் ஒன்றாகக் கூடி ஒரு மணி நேரத்தில் முடிவெடுத்து ஒன்றாக அறிக்கை விடுகிறார்கள். ஆனால் நம்ம தமிழ்நாட்டுல அப்படியா இருக்கு?” என்று கூறியவர், தமிழகத்தின் அரசியலில் உள்ள பிரிவினையை சாடிப் பேசினார். அனைத்துக் கட்சியினரும் தமது கொள்கைகள் [அப்படி ஏதேனும் இருந்தால்...], கட்சி, சாதி பேதங்கள் அனைத்தையும் விடுத்து ஒன்றாக இணைந்து குரல் கொடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

31. அடுத்து வந்த ஓவியர் வீரசந்தானம், வைகோவை அண்ணன் என்று அழைத்ததும் கூட்டத்தில் சிரிப்பலை. பின்னர் அவர் நதிநீர் பிரச்சினை பற்றி பேசினார். “நாடு விட்டு நாடு போகின்ற நதிகளில் நீர் பங்கிடுவதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஏனென்றால் அதற்கு சர்வதேச சட்டம் இருக்கின்றது. ஆனால் நமக்கு அப்படி எதுவும் இல்லை. அதனால் நமது உரிமைக்கு நாம்தான் போராட வேண்டும்.” என்றார்.

32. “என் இனிய தமிழ் மக்களே!!” என்று பாரதிராஜா கூறியதும் பயங்கர ஆரவாரம். “இனிமேல் நான் இப்படி சொல்ல முடியாது போலாயிருக்கு. என் இனிய ‘பாவப்பட்ட’ தமிழ் மக்களே!! அப்படின்னுதான் கூப்பிடணும். ஏன்னா இன்னைக்கு நிலைமை அப்படித்தான் இருக்கு. தேசியமும், திராவிடமும்தான் தமிழனை கண்ணீர் விட வைத்தது. முல்லைப் பெரியாறு பிரச்சினை என்பது 5 மாவட்ட பிரச்சினை கிடையாது. ஒட்டுமொத்த தமிழனின் பிரச்சினை. இப்போதும் அமைதி காத்தோமானால் தமிழனை ஒருபோதும் காப்பாற்ற முடியாது. தமிழர்களுக்கு எங்கே இடர் வந்தாலும் சரி! அங்கே முதலில் குரல் கொடுப்பவர் வைகோ. கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தமிழர்களுக்காக நிற்பவர் வைகோ. இந்த பிரச்சினை கேன்சர் போன்றது. ஆரம்ப நிலையிலேயே கிள்ளி எரியனும். இல்லைன்னா நமக்குதான் ஆபத்து. ஒரு நல்ல பொறி கிளம்பியுள்ளது. இதை அணையாமல் பார்த்துக்கொண்டு வெற்றியடைய வேண்டும். தமிழர் நலன் காக்க தமிழ் தேசியம்தான் ஒரே வழி” என்று கூறியதுடன் திரைத்துறையினரையும் ஒரு பிடி பிடித்தார்.

33. திருமுருகன் அவர்கள் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யும்போது நிகழ்ந்த சம்பவங்களை நினைவு கூர்ந்து வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.


34. கடைசியாக பேச வந்தார் வைகோ. முதலில் மெல்ல பேச ஆரம்பித்தவர் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக ஏறிய குரல் போராட்டத்தின் சூட்டை அனைவருக்கும் உணர்த்தியது. முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக அவர் கலந்துகொண்ட போராட்டங்கள் பற்றியும், அணையின் இன்றைய அரசியல் நிலையை அனைவருக்கும் தெளிவாக விளக்கினார். அணையின் உறுதிதன்மை, இந்த பிரச்சினையில் மத்திய அரசின் நிலைப்பாடு என தெளிவுபடக் கூறினார். முல்லைப் பெரியாறு அணை 8 ரிக்டர் அளவு பூகம்பம் வந்தாலும் ரப்பர் போல வளைந்துகொடுக்கும் தன்மையுடன் கட்டப்பட்டுள்ளதாகக் கூறினார். உள்ளொன்று செய்துவிட்டு புறமொன்று பேசும் கேரள அரசை சாடியதுடன், இதுபோன்று அவர்கள் மீண்டும் தொடர்ந்தால் அது ரத்தக் களரியில்தான் முடியும் என்று வருத்தத்துடன் கூறினார்.

“நான் இங்கு அரசியல்வாதியாக வரவில்லை. தமிழனுக்கு குரல் கொடுப்பதற்காக வந்திருக்கிறேன். திருமுருகன் போன்ற இளைஞர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எனது கட்சி அடையாளங்களை தவிர்த்துவிட்டு ஆதரவாளர்களோடு வந்திருக்கிறேன். பேரணியின்போது ‘அணை உடைந்தால் இந்தியா உடையும்’ என்று கூறினீர்கள். இப்போது சொல்கிறேன். 'அணை உடையாது.. இந்த நிலை தொடர்ந்தால் இந்தியா உடையும்'. பிரிடிஷ் காலத்தில் அணைக்காகப் போடப்பட்ட 999 ஒப்பந்தம் செல்லாது என்றால், இந்திய அரசியல் சட்டமே செல்லாது. அணை பாதுகாப்புக்கு மத்திய போலீஸ் வராவிட்டாலும் சரி, ராணுவம் வராவிட்டாலும் சரி... மக்கள் தன்னெழுச்சியாகக் கிளம்பிவிட்டார்கள். சென்னையில் இந்த போராட்டத்திற்கு ஏற்பாடு செய்த திருமுருகனுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்” என்று உரையை நிறைவு செய்தார்.

35. பின்னர் சுனாமியில் உயிர் நீத்த மக்களுக்காக 1 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்திய பிறகு கூட்டம் நிறைவுற்றது.

இப்போ நான்:

இதுபோன்ற போராட்டங்களில் மக்களிடம் ஒரு அதீத உணர்ச்சி இருக்கும். உணர்ச்சி வேகத்தில் ஏதாவது கூறுவார்கள் அல்லது செய்வார்கள். ஆனாலும் இந்த போராட்டத்தில் அப்படி எதுவும் இல்லை. அனைவரும் பொறுமையாக தங்கள் ஆதரவை தெரிவித்தார்கள். பாதுகாப்புக்கு வந்த காவல்துறையினருக்கு வேலையே இல்லை. அந்த வகையில் பொறுமையாக இருந்த மக்களுக்கு நன்றி.

கூட்டத்தில் பேசிய அனைவரது பேச்சிலும் தனித்தமிழ் தேசியமே முக்கியமாக இருந்தது. கவிஞர் தாமரை பேசும்பொழுது, “நாம் தலை நிமிர்ந்து வாழ தனித்தமிழ் தேசியம்தான் ஒரே வழி. அப்படி ஏற்படும்போது திரு.வைகோ அவர்கள்தான் தமிழ்நாட்டின் முதல்வராக இருப்பார்.” என்றார். நமக்கு திராவிடமும் வேண்டாம், தேசிய ஒருமைப்பாடும் வேண்டாம். தனித்தமிழகம்தான் வேண்டும் என்பதே அனைவரின் பேச்சாக இருந்தது.

மொத்தத்தில் தென் தமிழ்நாட்டில் கிளம்பிய முல்லைப் பெரியாறு உரிமைப் போராட்டம் சென்னை வரை ஆழமாக வேரூன்றிவிட்டது.

December 23, 2011

உச்சிதனை முகர்ந்தால்

No comments:

நமக்கு சிறு வயதில் (இப்போதும் கூட...) மகிழ்ச்சி, குதூகலம், கொண்டாட்டம் கொடுத்த விஷயங்கள் என்னவாக இருக்கும்?

1. பல வண்ணங்களுடன் ஜாலம் காட்டும் வான வேடிக்கை,

2. கைக்கு எட்டாத தூரத்தில் சிறு பறவையாய் பறக்கும் விமானம்

அப்புறம்.....

இன்னும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கும். ஆனால் இவை எதுவும் 13 வயதேயான புனிதவதிக்கு கிட்டவும் இல்லை, கொண்டாட்டம் அளிப்பவையாகவும் இல்லை. புனிதவதி மட்டும் அல்ல. இவளைப் போல இந்த தலைமுறையை சேர்ந்த பல குழந்தைகள் தங்கள் வாழ்வின் மகிழ்வான தருணங்களைத் தொலைத்துவிட்டு காரணமே தெரியாமல் வேட்டுசத்தம் கேட்டாலோ, விமானத்தைக் கண்டாலோ பதுங்கு குழிகளைத் தேடி ஓடுகிறார்கள். அப்படி வாழ்வில் அனைத்து மகிழ்வான தருணங்களைத் தொலைத்த இந்த தலைமுறையின் ஒரே அடையாளம்தான் ‘புனிதவதி’. இந்தச் சிறுமிக்கு ஏற்பட்ட வன்கொடுமையும் அதை சார்ந்த நிகழ்வுகளுமே ‘உச்சிதனை முகர்ந்தால்’.


 ஈழம் பற்றி பொது மேடையில் பேசியதற்காக கைதாகி பின்னர் நீதிமன்றம் மூலம் விடுவிக்கப்படுகின்றார் பேராசிரியர் நடேசன். இவரது மனைவி நந்தினி. தன் கணவனின் நிலைப்பாடுகளுக்கு உறுதுணையாக இருப்பவர். பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்தவர் இப்போது ஐந்து மாதம் கர்ப்பம். விடுதலையான பின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மேலும் ஈழம் பற்றிய செய்திகளையும், புனிதவதிக்கு நிகழ்ந்த வன்கொடுமை பற்றியும் கூறுகிறார். வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் ஈழத்திலிருந்து அவரது நண்பர் மூலம் புனிதவதி பற்றி செய்தி வருகின்றது. ஆமிக்காரர்களால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட புனிதவதி 4 மாதம் கர்ப்பம் என்று அறிந்ததும் அவளை தக்க துணையுடன் இந்தியா அனுப்பும்படி சொல்கிறார் நடேசன்.

 

தாயின் துணையுடன் வரும் புனிதவதியை பாசமாக அரவணைத்துக்கொள்கிறார் நந்தினி. இவர்களது குடும்ப நண்பர் மருத்துவர் ரேகாவிடம் மருத்துவ பரிசோதனை செய்கிறார்கள். புனிதவதியின் தாய் இந்தக் குழந்தை வேண்டாமெனவும் அதை கலைத்துவிடும்படியும் கூறிவிடுகிறார். பரிசோதனையில் குழந்தை நன்றாக வளர்ந்திருப்பதால், தற்போது கருவை கலைப்பது இரு உயிர்களுக்குமே ஆபத்து என்று மருத்துவர் கூறிவிட, வேறு வழியில்லாமல் புனிதவதியின் உயிரைக் காப்பாற்ற அவள் குழந்தையை பிரசிவிக்கும் வரையில் தன் வீட்டிலேயே இருக்கட்டும் என நந்தினி கூறிவிடுகின்றார். இரண்டு வருடங்களுக்கு முன் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட தன் கணவன் சுட்டுக் கொல்லப்பட்டது தெரியவர புனிதவதியின் தாய் திரும்ப இலங்கை செல்கிறார். புனிதவதியின் மருத்துவ அறிக்கையில் வரும் ஒரு அதிர்ச்சியான தகவல், பின்னர் அதையொற்றி வரும் ஈரமும், மனிதமும் கலந்த நிகழ்வுகளுடன் மனதை கனக்கச் செய்யும் செய்தியுடன் திரைப்படம் நிறைவுறுகிறது.

 

பேராசிரியர் நடேசனாக சத்யராஜ். அவரது மனைவி நந்தினியாக சங்கீதா. இருவரும் கதைக்களன் உணர்ந்து இயல்பாக வருகிறார்கள். மருத்துவர் ரேகாவாக நந்தினி ராமகிருஷ்ணன். புனிதவதி நிலை அறிந்து அவளுக்கு மருத்துவம் செய்வது, தோளில் சாய்த்து அரவணைத்துக் கொள்வது என மருத்துவம் தாண்டி அன்பும் பாராட்டுகிறார். காவல்துறை அதிகாரியாக வரும் சீமான், சிறப்பு மருத்துவராக வரும் நாசர், போராளிகள், பெண்புலிகள், திருநங்கைகள், ஆட்டோ ஓட்டுனர் என அனைவரும் நிகழ்வின் நகர்விற்கு உறுதுணையாக உள்ளார்கள்.


முக்கியமாக கதையின் நாயகி புனிதவதியாக நீநிகா (நீர், நிலம், காற்று ஆகியவற்றின் அடையாளமாக சூட்டப்பட்ட பெயர்). உண்மையான புனிதவதியை போல இருக்க வேண்டுமென பலநாள் தேடியதாக இயக்குனர் கூறியிருந்தார். அவரது தேடுதல் சரியான இடத்தில்தான் முடிந்துள்ளது. புனிதவதி சிரிப்பு, விளையாட்டு, கண்ணீர், பயம், அழுகை என மிகச் சரியாகக் கொடுத்துள்ளார். இவர்கள் அனைவரையும் மீறி நடிப்பில் கவனம் ஈர்ப்பவர் புனிதவதியின் தாயாக நடித்திருப்பவர். அவர் ஈழத்தில் நடந்த கொடுமைகளை விவரிக்கும்போது உண்மையில் மனம் கனத்துப்போகிறது. தூக்கம் தொண்டையை அடைக்க, ஈழத்தமிழில் அவர் விவரிக்கும் விதம் அங்கு மக்கள் அனைவரும் அடைந்த துன்பத்தை நம்மை உணரச் செய்கிறது.

 

புனிதவதியின் வாழ்வில் நிகழ்ந்த துயர சம்பவத்தை மிக நேர்த்தியாக, தெளிவான திரைக்கதை மூலம் நம் முன் வைத்திருக்கிறார் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ். ஈழம் பற்றிய தொலைக்காட்சி காணொளிகளை தேவைப்பட்ட இடத்தில் இணைத்து படத்துக்கு ஒரு நம்பகத்தன்மையை கொடுத்துள்ளார். அதுவும் தமிழ் ஆண்களை கண்ணைக் கட்டி கொல்லும் சம்பவக் காட்சியை படத்தோடு இணைத்து கலங்க செய்கிறார். இவருக்கும் இந்த படைப்பிற்கும் சரியான முறையில் தோள் கொடுத்த ஒளிப்பதிவாளர் கண்ணன், எடிட்டர் லெனின், இசையமைப்பாளர் டி.இமான் மற்றும் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.


 வசனம் – தமிழருவி மணியன். படத்தின் ஆகப்பெரிய பலம் வசனம் என்றால் அது மிகையில்லை. புனிதவதிக்கு அவள் தாய் கூறும், “நமக்காக குரல் கொடுப்பவர்களுக்கு நாம் மேலும் பாரமாக இருக்கக்கூடாது.” எனத் தொடர்ந்து வரும் வசனம் உதவி கோரும் ஈழ மக்களின் எண்ணமாகவே இருக்கும். அடுத்து திருநங்கை கூறும் வசனம். “என்னை அவன் அடிக்கும்போது ஒருத்தனும் வரல. உதவிக்கு ஒரு ஆம்பளை வந்ததும் தர்ம அடி கொடுக்க வந்துட்டாங்க. போங்கடா பொட்டப்பசங்களா..!!!” இப்படி படம் நெடுக வசனமே பல விஷயங்களை நறுக்கென்று கூறிவிடுகின்றது.

ஆனாலும் ஈழம் பற்றி பேசும்போது வரும் வசனங்களை சென்சார் கத்திரியை மனதில் கொண்டே எழுதியிருப்பார்கள் போல. நயமான வார்த்தைகளைக் கொண்டு  ஈழத்தின் வலியை வலிமையாகவே கூறியுள்ளார்கள். பெரும்பாலான இடங்களில் தப்பித்தாலும் படத்தின் ஆரம்பக் காட்சிகளில் சில வெட்டுகள் விழுந்திருக்கின்றன. குறிப்பாக 'புலி', தமிழ்ச்செல்வனில் 'தமிழ்' என்று வெட்டுகள் விழுந்திருக்கின்றன. இந்த சென்சார் குழுவை பார்த்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை. இந்த வார்த்தைகள் வெட்டுப்பட்டவுடன்தான் அதிக வீரியம் பெற்றதாகத் தெரிகின்றன. 

படம் மிகத்தெளிவாக இருந்தாலும் ஆங்காங்கே சில தடைகள் கதை போகும் போக்கை தடை செய்வதாக இருந்தது. குறிப்பாக காவல்துறை ஆய்வாளராக வரும் சீமான் அரசியல் பேசுவது இந்தக் கதைக்கு தேவையா?? ஆனால் கதையின் முடிவு தந்த கனத்தால் இந்த குறைகள் அனைத்தும் மறந்து போயின என்பதே உண்மை.

அரங்கம் பக்கம்:

சென்னை - தேவிபாலாவில் இந்த படத்தை பார்த்தேன். காட்சிக்கான நேரம் நெருங்கியதால் அவசரமாக உள்ளே நுழைந்தேன். என்னவென்று சொல்வது? நான்தான் அந்த காட்சிக்கு முதல் ஆள். வெளியே வந்து சரியான இடம்தானா என உறுதி செய்துக்கொண்டு மீண்டும் உள்ளே நுழைந்தேன். பின்னர் ஒவ்வொருவராக கிட்டத்தட்ட 60 பேர் வந்திருப்பார்கள். என் அருகில் 3 கல்லூரி மாணவர்கள் கேலியும் கிண்டலுமாக படத்தை பார்த்தார்கள். நானும் பொறுக்க முடியாமல் அவர்களிடம், “தம்பிகளா!! நீங்க comment அடிச்சு பாக்க வேண்டிய படம் இது அல்ல. அதுக்கு வேற நிறைய படங்கள் இருக்கு” என்றேன். அதன்பின் அமைதியானவர்கள் இடைவேளையின் போது “நீங்க சொன்னதும்தான் புரிஞ்சது” எனக் கூறி மன்னிப்பும் கேட்டார்கள்.

படம் பார்க்க உள்ளே நுழையும்போது இருந்த படத்தின் விளம்பரப் பலகை, படம் முடிந்து வெளியே வரும்போது இல்லை. அப்பாடா!!! படம் மாற்றுவதற்குள் பார்த்துவிட்டோம் என்று ஆறுதல்பட்டுக் கொண்டாலும், அதற்குள் மாற்றப்போகிறார்களே என்ற கவலையும் கூடவே வந்தது.

December 17, 2011

'அணை'த்து செல்வோம்!!!

1 comment:

அவ்வப்போது மெல்ல தலை காட்டும் ‘முல்லைப் பெரியாறு’ பிரச்சினை இப்போது மொத்தமாகக் கிளம்பியுள்ளது. போன மாதம் வரையில் இதன் ஆதி, அந்தம் என எதுவும் தெரியாதவர்கள் இன்று அந்த அணையைப் பற்றிய வரலாற்றை பல கோணங்களில், அவரவர் பார்வைபடி அவரவர் விருப்பத்திற்கேற்ப அறிந்திருப்பார்கள். 
 

அதுவும் இணையத்தின் பலத்தால் நாளொரு செய்தியும், பொழுதொரு காணொளியுமாக முல்லைப் பெரியாறு அணை பற்றி செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதில் திடீர் தமிழுணர்வால் உந்தப்பட்டவர்கள் செய்யும் செயல்கள்தான் வியப்பும், அருவருப்பும் ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றன. நம்மை சீண்டுபவர்கள் யாராக இருந்தாலும் அந்த பிரச்சினையின் வேர் என்ன என்பதை அறியாமல் பதிலுக்கு அவர்களை எதிரிகளாக சித்தரிப்பதே இவர்களுக்கு வேலையாகப் போய்விட்டது. இந்த ‘திடீர் வீரர்கள்’ இத்தனை நாள் எங்கே இருந்தார்கள் என்றுதான் தெரியவில்லை. பென்னி குயிக் எதற்காக இந்த அணையை கட்டினார், எவ்வாறு கட்டினார் என்பதை சுலபமாக மறந்து விட்டார்கள். நம்மை திட்டுபவன், நம்மோடு சண்டை போடுபவனெல்லாம் எதிரி என்றால், அப்புறம் நாளை நாம் பேசிப் பழக ஒரு பயலும் சிக்க மாட்டான். வாழ்நாள் முழுக்க யாராவது ஒருவருடன் சண்டை போட்டுக்கொண்டேதான் இருக்க வேண்டும். 
 
 
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை கடந்த 50 வருடங்களாக இருந்து வருகிறது. அணை பற்றிய தவறான தகவல்கள் திட்டமிட்டு வெவ்வேறு காலகட்டங்களில் கேரள அரசால் பரப்பப்பட்டு வந்துள்ளது. அதை தமிழக அரசும் தனது உரிமையை விட்டுக்கொடுக்காமல் கையாண்டு வந்தது. கடந்த 50 வருடங்களாக இந்த பிரச்சினை அரசியல் ரீதியாகவே கையாளப்படுகின்றது. அப்படி இருக்கும் நிலையில் நாம் அனைவரும் நமது நிலைப்பாட்டை, ஆதரவை அரசுக்கு ஒருமுகமாக அளிக்க வேண்டுமே தவிர, ‘தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன்’ என்பதுபோல அவனவன் தனியாகக் கிளம்புவதால் யாதொரு பயனும் இல்லை.

சரி!! பொதுமக்கள்தான் இந்த பிரச்சினையின் வரலாறு தெரியாமல் போராடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ‘மக்களுக்காக உழைப்போம்’ என்று மார்தட்டும் அரசியல்வியாதிகள் என்ன செய்கிறார்கள்? இது போன்ற மாநிலம் தழுவிய பிரச்சினையில் அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி, ஒரு மாபெரும் போராட்டமாக நடத்தி நமது எதிர்ப்பை மத்திய அரசுக்கு பலமாகக் காட்டியிருக்க வேண்டாமா? ஆளுக்கொரு நாள் என பங்கு பிரித்து கூட்டம் கூட்டி மேடையேறி பேசிட்டா போதுமா? அதுக்கு மேல அவங்களுக்கு எந்த பொறுப்பும் இல்லையா?

எல்லா அரசியல்வியாதிகளுக்கும் அடிப்படையாக ஒரே ஒரு கொள்கைதான் வைத்திருக்கிறார்கள். “பிரச்சினை என்று எது வந்தாலும், அதை பற்றி தான்தான் பேச வேண்டும், நடக்கும் நல்லது எல்லாம் தன்னால்தான் நடக்க வேண்டும்” என்ற அளப்பரிய கொள்கைதான் அது. இப்போ இந்த மனோவியாதி எல்லோரிடமும் மெல்ல மெல்ல பரவ ஆரம்பித்துவிட்டது. அதன் விளைவுதான் இன்று பூதாகரமாக கிளம்பியுள்ள ‘முல்லைப் பெரியாறு’ அணை பிரச்சினை.

மத்திய அரசிற்கு பெரும் தலைவலியாக இருப்பது 2G Spectrum ஊழல் குற்றச்சாட்டும், கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினையும்தான். இரண்டும் மையம் கொண்டிருப்பது தமிழ்நாட்டில். ஆக, தனக்கு ஏற்பட்ட தலைவலிக்கு மருந்தாக ‘முல்லை பெரியாறு’ அணைப் பிரச்சினையை மத்திய அரசு பயன்படுத்திக்கொண்டது. கேரளத்திலும் காங்கிரஸ் ஆட்சிதான். இதனால் மத்திய அரசின் எண்ணம் மிகச் சுலபமாக நிறைவேறிவிட்டது. மக்களோட அடிப்படை தேவையிலேயே கை வெச்சா மத்த பிரச்சினை பத்தி யோசிக்கத் தோணுமா?  தோணாதில்லை?? அதைத்தான் மத்திய அரசு செய்துகொண்டிருக்கிறது

ஈழப் போராட்டத்தின்போதே நமது ஒற்றுமை உணர்வைப் பற்றி மத்திய அரசுக்கு தெரிந்துவிட்டது. எவ்வளவு சத்தம் போட்டு போராடினாலும், கொஞ்சம் தட்டினால் நாம் அடங்கிவிடுவோம் என்று நம்மைப் பற்றி நான்கு புரிந்துவைத்துள்ளது. இப்பவும் கொஞ்ச நாள் பார்ப்பார்கள். அப்புறம் நம்மை தலைமேல் தட்டி உட்காரவைக்க முயல்வார்கள். விடலாமா? நாமும் உரிமை, தமிழ், மலையாளம் என்று என்ன காரணம் கூறிப் போராடினாலும் அடிப்படை வரலாறு தெரிந்துகொண்டு, தொலைநோக்குப் பார்வையோடு இந்த பிரச்சினையை அணுகினால் மட்டுமே இருபக்கமும் நலம் பயக்கும் முடிவை எடுக்க முடியும். ஆனால் இன்றைய அரசியல் சூழல் அப்படி ஒரு நல்ல முடிவை எடுக்க அனுமதிக்குமா? 
 
 

December 04, 2011

போராளி

No comments:
ஒரு தனி மனிதன் தனக்கும், தன்னை சார்ந்தவர்களுக்காகவும் போராடும் வாழ்க்கையே ‘போராளி’. போராளி என்ற பெயர் வைத்தவுடனேயே இது சமூகம் சார்ந்த மக்களுக்கான ஒரு போராளியின் கதை என்று பரவலாக பேச்சு நிலவியது. ஆனால் கனி(சமுத்திரக்கனி)-சசி இருவரும் இது ஒரு தனி மனிதனின் போராட்டம் என்று ஆரம்ப நிலையிலேயே அதனை தெளிவுபடுத்தியிருந்தார்கள். அதனால் எந்த ஒரு பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றால் நல்ல படத்தை பார்த்த திருப்தி கிடைக்கும். 
 

சரி, போராளி படத்தின் கதை என்ன?

சிறுவயதிலேயே மிகவும் அதிபுத்திசாலி சசிகுமார். இவரின் நண்பர் ‘பரோட்டா’ சூரி. சசியின் புத்திசாலிதானத்தை பொறுக்க முடியாமல் அவரது படிப்பையும் நிறுத்தி பைத்தியம் என்றும் ஊர் முழுக்க சொல்லிவிடுகிறார் அவர் சித்தி (அப்பாவின் இரண்டாம் தாரம்). குடும்பம், குழந்தை எதுவும் இல்லாத சசியின் பெரியப்பா தனது சொத்துக்கள் அனைத்தையும் சசியின் பெயருக்கு எழுதி வைத்துவிட்டு இறந்து விடுகின்றார். தங்களது விற்காத நிலத்தில் ‘யுரேனியம்’ இருப்பதால் நிலம் பெரும் விலைக்கு பேசப்படுகின்றது. ஆனால் சொத்துக்கள் அனைத்தும் சசியின் பெயரில் இருப்பதால் அதை விற்க முடியாமல் அவரை பைத்தியம் என்று மனநல மருத்துவமனைக்கு அனுப்பிவிடுகின்றனர். அங்கு தனக்கு அறிமுகம் ஆகும் அல்லரி நரேஷுடன் தப்பி சென்னை வருகின்றார். சென்னையில் அவர் வாழ்வை நிலை நிறுத்த எடுக்கும் போராட்டமும், தன் குடும்பத்தாரின் துரத்தல்களை எதிர்கொள்ளும் நிலைதான் ‘போராளி’.

மனநல காப்பகத்திலிருந்து இருவரும் தப்பிப்பதிலிருந்து தொடங்கி இடைவேளை வரை படம் நகரும் வேகமே தெரியவில்லை. பெரும்பாலும் இடைவேளைக்கு முன்தான் கதையே தொடங்கினாலும் முன்னதாக வரும் காட்சிகளும் அதன் கோர்வை நேர்த்தியும் மிகவும் சுறுசுறுப்பாக நகர்கிறது.

 
 

‘நாடோடிகள்’ படத்தைப் போலவே இதிலும் நண்பர்களுக்கு அடைக்கலம் கொடுத்து பின்பு ஆப்பு வாங்கும் கதாபாத்திரத்தில் கஞ்சா கருப்பு. மனிதர் பின்னியிருக்கிறார். அதுவும் சசி-நரேஷ் இருவரையும் ஒரு கும்பல் துரத்த இடையில் வரும் இவரும் காரணம் தெரியாமல் ஓடிக்கொண்டே புலம்பும் காட்சி அட்டகாசம். ஆனாலும் ‘வெச்சு அடிப்பது’ ஏற்கனவே வடிவேல் பண்ணிட்டாரே!!! வேற மாதிரி பண்ணியிருக்கலாம். நகைச்சுவைக்கு அடுத்து உத்திரவாதம் கொடுப்பவர் ‘பரோட்டா’ சூரி. மனிதர் திரையில் வந்தாலே என்ன ஒரு கைத்தட்டல். அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து நன்றாகவே சிரிக்க வைக்கின்றார்.
 
 
 
நரேஷ் – குறும்பு படத்தில் விடலை சேட்டைகள் பண்ணியவர். அக்கட தேசத்தில் பிரபலமான நடிகர். சும்மா சொல்லக்கூடாது. சேட்டைகள் இன்னும் அதிகமாகவே செய்கிறார். ‘மூன்று புள்ளி அப்புறம் ஆச்சரியக்குறி’ என்று கவிதை சொல்லும்போதும், எதிர்வீட்டு சாப்பாட்டை சாப்பிடும்போதும் இவரது சேட்டைகள் செம ரகளை. பின்னர் வில்லன்களின் துரத்தல்களால் மனநிலை தடுமாறும்போது அழகான நடிப்பையும் வெளிப்படுத்துகிறார்.

நடிகைகளில் நிவேதா பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும் கதை ஓட்டத்திற்கு நன்றாக உதவுகிறார். ஸ்வாதி ஆரம்பத்தில் இருவரையும் கண்டு வெறுத்து பொரிந்து தள்ளினாலும், அவரது நிலையில்லாத வாழ்க்கை அதை ஞாயப்படுத்துகிறது. சசி இவருடனான ‘அண்டா’ காதல் மிக சுவாரஸ்யம். படத்தின் பின்பாதியில் வரும் வசுந்தராவுக்குதான் நடிப்பதற்கான வாய்ப்பு. அதுவும் சசியை காப்பாற்ற அவர் போதும் சண்டை மிக உக்கிரம். இதுவரை எத்தனையோ படங்களில் நடிகைகள் சண்டை போட்டிருக்கிறார்கள். ஆனால் யதார்த்தமாக முகத்தில் அவ்வளவு கோப உணர்ச்சிகளைக் காட்டி இவர் போடும் சண்டை மிக நன்று. கொஞ்ச நேரமே வந்தாலும் நினைவில் இருக்கும்படியான கதாபாத்திரம்.

 
 
சசிகுமார் – இந்த படத்தின் தயாரிப்பாளரும் கூட. ஈசனில் விட்டதை இந்த படத்தில் பிடித்துவிடுவார் என்றே தோன்றுகிறது. நடிப்பை பொறுத்தவரை இவருக்கு சரியாகப் பொருந்தும் கதாபாத்திரம். அனைத்து படங்களிலும் நட்பைப் பற்றி பெருமையாகப் பேசினாலும் அலுக்கவில்லை. மாறாக அவர் எது சொன்னாலும் அது நல்லதுதான் என்றே தோன்றுகிறது. அவர் சிரித்தால் ஒரு ஈர்ப்பு, திட்டினால் ஒரு வலி, அக்கறையாகப் பேசினால் கேட்கத் தோன்றுகிறது. ஏதோ நம் வீட்டு அண்ணன் போன்ற தோற்றம். சசிண்ணே!! இப்படியே தொடருங்கள். பாதை மாறிடாதீங்க.. அப்புறம் அந்த இரட்டைக் குதிரை சவாரி. இடைச்செருகல் என்றாலும் மிகச் சரியான செருகல்.
 
 
படத்தில் வரும் சின்ன சின்ன கதாபாத்திரங்களும் கதை ஓட்டத்திற்கு மிகவும் துணை புரிகின்றனர். அந்த ஒண்டுக் குடித்தன வீட்டில் வரும் பேராசிரியர் ஞானசம்பந்தன், மாடி வீட்டு பேச்சிலர், இரு குட்டிப் பெண்கள், சதா சண்டை போடும் தம்பதியர், ஏஞ்சல் பாட்டி, பிச்சைக்காரனாக வருபவர், petrol bunk முதலாளி இப்படி பலர். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தன்மையே அவர்கள் திரையில் வரும்போது கைத்தட்டல் அள்ளுகின்றது. இதுவே கனியின் வெற்றி.

படத்தின் அடுத்த பலம் வசனங்கள். “எனக்கு சிலோனே பிடிக்காது. இதுல சிலோன் பரோட்டா வேணுமாம்”, “நாங்கல்லாம் அப்போவே அப்படி!! இப்போ சொல்லனுமா??”, “இன்னும் எத்தனை காலத்துக்கு ஓடப்போறோம்?”, “இந்த ஊர்லயும் அவனுக்குன்னு சில நல்லவங்க இருக்காங்கடா!! அவன் மேல கை வெச்சீங்க.... செத்தீங்க!!!”, “உடம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு அவ்ளோ அக்கறை காட்டுற நாம, மனசு சம்பந்தப்பட்ட பிரச்சினைன்னா தள்ளி வெச்சிடுறோம்.” இப்படி பல வசனங்கள் படத்திற்கு மேலும் பலம் சேர்க்கின்றன.

இசை - சுந்தர்.சி.பாபு. நாடோடிகள் படத்தின் இசையைவிட ஒரு மாற்று கம்மிதான். ஆனாலும் அந்த தீம் பாடலும் பின்னணி இசையும் படத்தின் வேகத்துக்கு சரியாக ஈடு கொடுக்கின்றது. தீம் பாடலுடன் வரும் சசியின் வீறிட்ட கர்ஜனை சும்மா அடிவயித்தில பாய்கின்றது. அப்புறம், நாடோடிகள் படத்தில் வரும் அந்த குத்துப் பாடல் தேவையில்லாத இடைச்செருகல் என்று பலமான கருத்து ஒன்று நிலவியது. இயக்குனர் இந்த படத்தில் சாமர்த்தியமாக டைட்டில் காட்சிகளில் குத்துப் பாட்டை நுழைத்துவிட்டார். “இப்ப என்ன செய்வீங்க??”

 
 
ஒளிப்பதிவு - எஸ்.ஆர்.கதிர். எந்த உறுத்தாலும் இல்லாமல் நம்மை படத்தையொட்டி பயணிக்கச் செய்கின்றது. அதுவும் அந்த துரத்தல் காட்சிகளில் சுப்ரமணியபுரம் படம் நினைவுக்கு வந்தாலும் அந்த காட்சிக்கான பரபரப்பு நம்மை தொற்றிக்கொள்கிறது. நகரம் சார்ந்த காட்சிகளில் ஒரு நிறம், கிராமம் சார்ந்த காட்சிகளில் ஒரு நிறம், சண்டை காட்சிகளில் ஒரு நிறம் என்று ஒவ்வொரு நிலையையும் மிகச்சரியாக வேறுபடுத்திக் காட்டுகின்றது.

படத்தின் முன் பாதி நகைச்சுவை, சக மனிதனின் மீது அன்பு காட்டுவது, சுயதொழில் யோசனை, என்று நேரம் போதே தெரியாமல் நகர்ந்தாலும் பின்பாதியில் முன்னுக்குப்பின் வரும் flashback காட்சிகள் சற்று கொட்டாவி விடவே செய்கின்றன. அதிலும் பரோட்டா சூரி இல்லை என்றால் ரொம்பவே சோதித்திருக்கும். முன் பாதியில் உள்ள விறுவிறுப்பை, பின்பாதி திரைக்கதையிலும் சேர்த்திருந்தால் போராளி இன்னும் பட்டையை கிளப்பியிருப்பான்.

வாழ்த்துகள்.

நல்லவங்க...

ShareThis