January 16, 2012

‘வேட்டை’யாடிய ‘நண்பன்’


இந்த வருடம் பொங்கலுக்கு வெளியான முக்கியமான 2 திரைப்படங்கள் நண்பன் மற்றும் வேட்டை. இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் உள்ள ஒற்றுமை முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்திருப்பது. தமிழ் சினிமாவில் அத்தி பூத்தாற்போல எப்போதாவது நிகழும் அதிசயம் இது. ஈகோ பிரச்சினை தலை விரித்தாடும் தமிழ் திரையுலகில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நிச்சயம் ஆச்சரியமான விஷயம்தான்.

சரி!! இனி படங்கள் எப்படின்னு பாக்கலாமா?

நண்பன்:  
இந்தியில் வெளிவந்த 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் பதிப்புதான் நம் நண்பன். மனப்பாடம் செய்து படிக்கும் நமது ஓட்டு மொத்த கல்வி அமைப்பையே கேள்வி கேட்கிறது இந்தப் படம். பத்து வருடங்களாக பார்க்காத நண்பனை தேடிச் செல்லும் நண்பர்கள் மூலமாக படம் தொடங்குகிறது.

விருமாண்டி சந்தனம் (சத்யராஜ்) 20 வருடங்களுக்கு மேலாக பொறியியல் கல்லூரி நடத்தி வருகிறார். அங்கு பஞ்சவன் பாரிவேந்தன்(விஜய்), சேவற்கொடி செந்தில்(ஜீவா), வெங்கட் ராமகிருஷ்ணன்(ஸ்ரீகாந்த்) மூவரும் பொறியியல் படிப்பதற்காக வருகிறார்கள். அங்கு இருக்கும் படிப்பு சூழல் பாரிக்கு ஒத்துவரவில்லை. எல்லாவற்றையும் கேள்வி கேட்கிறான். பாரியின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் ஆசிரியர்கள் இவனை வகுப்பை விட்டு வெளியே அனுப்பி விடுவார்கள். அதனால் பாரி எப்போதுமே out-standing மாணவன்.

 [இந்த பெயர்களையெல்லாம் யாருப்பா வெச்சது? சொல்லி முடிக்கிறதுக்குள்ள வாய் சுளுக்கிக்கும் போல. அதுவும் படத்தின் கடைசியில் ஒரு பேர் வரும். அதை சரியா சொல்றவங்களுக்கு ஒரு point.. என்ன சொல்றீங்களா?]
 செந்தில் வீட்டில் உள்ள வறுமை, வெங்கட் அப்பாவின் engineer கனவு என்று குடும்ப சூழல் இவர்களை துரத்துகிறது. வெங்கட்டிற்கு wild life photographer ஆக வேண்டுமென்பது ஆசை. ஆனால் அப்பாவின் கௌரவத்திற்காக engineering படிக்க வருகிறான். இருவருக்கும் பாரியின் நட்பு கிடைக்கிறது. பாரியின் சகவாசத்தால் இவர்கள் பெற்றது என்ன?, இழந்தது என்ன?, உண்மையிலேயே பாரி யார்? போன்ற கேள்விகளுக்கு திரையில் சிரிக்க சிரிக்க பதில் சொல்கிறார்கள்.

படத்தின் முக்கிய பலமே கதாபாத்திரதிற்கான சரியான தேர்வு, அதை அனைவரும் உணர்ந்து நடித்துள்ள விதம் என்று அனைத்தையும் சரிவிகதத்தில் கொடுத்துள்ளார்கள். தமிழ் படுத்துகிறேன் என்று படுத்தி எடுக்காமல் இந்தியில் வந்த அதே திரைக்கதையை தமிழில் பயன்படுத்தியுள்ளார் ஷங்கர். எந்தவித சேதாரமும் இல்லாமல். இதனாலோ என்னவோ வசனமும் அப்படியே இந்தி வசனத்தின் மொழி பெயர்ப்புதான். [உன்னை யாருடா இந்தியில் பாக்க சொன்னதுன்னு நீங்க நினைக்கிறது புரியுது.] ஆனால் நேரடியாக தமிழில் பார்ப்பவர்களுக்கு இது நிச்சயம் அருமையான படமாக இருக்கும்.

எந்த over build-up எதுவும் இல்லாமல் சாதாரணமாக அறிமுகமாகும் விஜய், எதிர்காலத்தை நினைத்து பயந்து நிகழ்காலத்தை தொலைக்கும் ஜீவா, தனது லட்சியத்தை கொன்று அப்பாவின் ஆசைக்காக இன்ஜினியரிங் படிக்க வரும் ஸ்ரீகாந்த், கல்லூரி முதல்வராக எச்சில் தெறிக்க பேசும் சத்யராஜ், எப்போதும் மனப்பாடம் செய்து முதலிடம் வரும் சத்யன் என அனைவருக்கும் இதுவரை செய்திராத கதாபாத்திரம். மிக சிறப்பாக செய்திருக்கிறார்கள். அதிலும் சத்யனின் பங்களிப்பு மிக அருமை. அவரது “கற்பழிப்பு” உரையின்போது அரங்கமே சிரித்ததில் பாதி வசனம் கவனிக்க முடியவில்லை. அவ்வளவு ஆரவாரம். மிக அருமை.

நாயகியாக இலியானா. நடிப்புன்னா என்னன்னு இவருக்கு யாராவது சொல்லி கொடுத்தா தேவலை. இவர் வரும்போதெல்லாம் ஏதோ அவரைக்காய்க்கு துணி சுத்தினது போலவே இருக்கு. தவறான தேர்வு என்று தோன்றுகிறது.

என்னதான் நமது இன்றைய மனப்பாடம் செய்து படிக்கும் அடிமைத்தனமான கல்வி முறையை கேள்வி கேட்டாலும், படம் முடிந்து வரும்போது ஏதோ நகைச்சுவை படத்தை பார்த்தது போன்ற உணர்வே மேலோங்கி இருக்கிறது.

நண்பன் – All is well..!!

வேட்டை:


 

பாக்கியராஜின் ‘அவசர போலீஸ் 100’ படத்தின் கதை, தனது முந்தைய படங்களில் இருந்து சில காட்சிகள் என கோர்த்து நம்மை வேட்டையாடியிருக்கிறார் லிங்குசாமி. தமிழ் திரையுலகில் எந்த காலத்திலும் தோற்காத குறைந்தபட்ச உத்தரவாதம் உள்ள கதை. அதில் தனது வழக்கமான அடிதடி, காதல், பாசம் என மசாலாவை கலந்து கொடுத்துள்ளார்.

பயந்தாங்கொள்ளி அண்ணனாக மாதவன், அசகாய சூரனாக தம்பி ஆர்யா. இவர்கள் குடும்பமே போலீஸ் பரம்பரை. அப்பா திடீரென இறந்துவிடுவதால் அந்த போலீஸ் வேலை மாதவனுக்கு வருகிறது. தூத்துக்குடி நகர காவல் நிலையத்தில் வேலை. அந்த ஊரையே துவம்சம் செய்யும் 2 ரவுடிகள். புதிதாக வரும் மாதவனிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு மற்ற காவலர்கள் விட்டால் போதுமென ஒதுங்குகிறார்கள். ஆர்யா அனைவரையும் பொளந்து கட்ட, அண்ணன் நல்ல போலீஸ் என பெயரெடுக்கிறார். இதனால் ரவுடிகள் பாதிக்கப்படுகிறார்கள். இவங்க அவங்களை அடிக்க, அவங்களை இவங்க அடிக்க என படம் முழுவதும் யாராவது யாரையாவது அடித்துக்கொண்டிருக்கிறார்கள். நமக்குதான் வலிக்கும் போல.

படத்தில் சிறப்பு என்று சொல்லப்போனால், மாதவனின் நடிப்பு. எந்த தனிப்பட்ட வளையத்திலும் சிக்காததால் இவரது பயந்தாங்கொள்ளி கதாபாத்திரம் சற்றே எடுபடுகிறது. அப்புறம் இவரது ‘solo performance’ பின்பாதியில் சரியாக இணைத்திருப்பது நல்ல உத்தி. சில காட்சிகளே வந்தாலும், நாசர் கவர்கிறார். அதிலும் நாக்கை துருத்திக் கொண்டு தப்படிக்கு போடும் ஆட்டம் தூள்.

சமீரா ரெட்டி, அமலா பால் அக்கா-தங்கை. தூத்துக்குடி பொண்ணுங்களாம். நம்பியாச்சு. அப்புறம் ஆர்யாவும் மாதவனும் திட்டம் போட்டு அமலா பால் கல்யாணத்தை நிறுத்துகிறார்கள். வேறு வழியில்லாமல் தன் தங்கையை கல்யாணம் செய்யும்படி ஆர்யாவிடம் சமீரா கெஞ்சுகிறார். சமீரா கெஞ்சும்போதே இவர்கள் திட்டம் வெற்றி அடைந்து விட்டதே!! அப்புறம் எதற்கு சமீரா தன் காலில் விழும்வரை ஆர்யா காத்திருக்க் வேண்டும்? அண்ணனுக்காக எதையும் செய்யும் தம்பி, அண்ணி தன் காலில் விழும்போது பதறியிருக்க வேண்டாமா? அப்போதும் சிரித்தபடியே இருக்கிறார். வலிந்து திணிக்கப்பட்ட ஆணாதிக்கக் காட்சி இது.

பாடல் காட்சிகளின்போது தியேட்டர் கேண்டீனில் நல்ல விற்பனையாம். யுவன்-லிங்கு-முத்துகுமார் கூட்டணி என்னாச்சு? ரொம்ப எதிர்பார்க்கப்பட்ட ‘பப்பப்பா’ பாடலும் திரையில் புஸ்ஸாகிப் போனது. இதைவிட you tube-இல் அவர்கள் வெளியிட்ட காணொளி நன்றாக இருந்தது.

கோழையாக இருக்கும் ஒருவன் வீரம் கொண்டு கெட்டவனை அழிக்கும் கதை. அதை பட்டி பார்த்து, டிங்கரிங் செய்து இன்றைய ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் கொடுத்துள்ளார் இயக்குனர் லிங்குசாமி.

வேட்டை – மயிரிழையில் வெற்றி
 

1 comment:

நல்லவங்க...

ShareThis