August 24, 2008

அலி.. அரவாணி.. திருநங்கை...

3 comments:
(குறிப்பு: இதுவரை அலி என்றும் இன்ன பிற பெயர்களால் அழைக்கப்பட்ட பால்மாறியவர்களை, இப்பொழுது “திருநங்கைகள்“ என்று மரியாதையாக அழைக்கப்படுகின்றனர். பின்வரும் கட்டுரையில் அந்தந்த காலத்தில் நான் அறிந்த வார்தைகளையே, அவர்களைக் குறிக்கப் பயன்படுத்தியுள்ளேன்).

திருநங்கைகள்.... இன்றும் ஒரு நிலையான வாழ்க்கை வாழ முடியாமல் விளிம்பு நிலையில் இருப்பவர்கள். அவர்களின் நிலையைப் பற்றி எனது எண்ணமும், அவர்கள் நிலை உயர சமூகமாகிய நாம் என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசிக்கவே இக்கட்டுரை. இதில் என் சிறுவயது முதல் திருநங்கைகள் பற்றி தெரிய வந்த்ததைக் குறிப்பிட்டுள்ளேன். நாம் ஏதேனும் ஒரு வகையில் இந்த சம்பவங்களைக் கடந்து வந்திருப்போம்.
எனது பதின்மூன்றாம் வயதில்தான் அலிகள்(அன்றைய பெயர்) என்று ஒரு சமூகம் இருப்பது தெரிய வந்தது. அதுவும் ஒரு தமிழ் புதினம் மூலமாக. அதன் பெயரும், எழுதாளரும் ஞாபகம் இல்லை(மன்னிக்கவும்). அந்தக் கதையின் கரு இதுதான்.
“ கதை இருபிரிவாக, இருவேறு காலகட்டங்களில் நிகழ்ந்து, பின்பு ஒரு புள்ளியில் இணையும். ஒரு பிரிவில், வாழ்வின் மகிழ்வான தருணங்களை எதிர்நோக்கியிருக்கும் இளைஞன் (கதையின் நாயகன்), அவனுள் நிகழும் மாற்றங்களைப் புரிந்தும், புரியாமலும் தவித்துக் கொண்டிருப்பான். பின்பு அவன் ’அலி’யாக மாறி விடுவான். குடும்பச் சூழலும், சமுதாய புறக்கணிப்பும் அவனை தற்கொலை வரை இட்டுச் செல்லும். அப்பொழுது ஒரு பெரிய மனிதர் அவனைக் காப்பாற்றி, இவர்களுக்காகவே தான் நடத்து வரும் சேவை அமைப்பில் சேர்த்துக் கொள்வார்.

மற்றொரு பிரிவில் ஒரு காதல் கதை. காதலன், தன் காதல் பற்றி வீட்டில் சொல்ல, அவன் பெற்றோர், காதலியை குடும்பத்துடன் வந்து பேசுமாறு கூறுவர். காதலியின் உறவினர்களைப் பார்த்த பெற்றோருக்கு அதிர்ச்சி. ஏனென்றால், அவர்கள் அனைவரும் அலிகள். இந்த காதலியின் தந்தைதான் நமது நாயகனைக் காப்பாற்றிய பெரிய மனிதர். காதலியின் பெற்றோர் அவளின் சிறுவயதிலேயே இறக்க, இந்த அலிகள்தான் அவளை வளர்த்தெடுப்பர்கள். அவளும், அவர்களை அம்மா, பெரியம்மா, சித்தி என்று உறவுகொண்டே அழைப்பாள். காதலி, மற்றும் அவள் தந்தையின் உயர்நோக்கத்தைப் புரிந்துகொண்ட காதலனின் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பார்கள்.“

இவ்வாறு செல்லும் கதையில், ஒரு ஆண், பெண்ணாக மாறுவதும் அதனால் அவன் சமுதாயத்தால் புறக்கணிக்கப்படுவதும் எனக்கு புதியதாக இருந்தது. இறுதியில், அந்தக் காதலி அவர்களுக்காகப் பேசுவது என்னுள் ஒரு சலனத்தை ஏற்படுத்தியது. 'அலி' என்ற வார்த்தை எனக்கு பரிச்சயமானது அப்பொழுதுதான்.

அதன்பின் எனது பள்ளி வாழ்க்கையிலும் சரி, கல்லூரி வாழ்க்கையிலும் சரி, நண்பர்களுடன் அரட்டை அடிக்கும்போது ’அலி’ என்ற வார்த்தை கிண்டல் செய்வதற்காகப் பயன்படுத்துவார்கள். அந்த சமயத்தில் அக்கிண்டல் சாதாரணமாக இருந்தாலும், பின்னர் அந்த வார்த்தை பிரயோகத்திற்க்கான காரணம், சூழல் ஆகியவற்றை மனம் ஏற்றுக்கொள்ளவில்லை . அதற்கான காரணமும் தெரியவில்லை. (இதற்கான காரணம், சரியான வழிகாட்டி இல்லாததே!) மொத்ததில் ’அலி’ என்று கூறி கிண்டல் செய்த்து எனக்கு பிடிக்கவில்லை.

எனது கல்லூரிக் காலத்தில் நடந்த ஒரு சம்பவம். அரவாணிகள் பற்றிய எனது எண்ணத்தை மாற்றியமைத்த சம்பவம் அது. நாங்கள், இன்பச் சுற்றுலாவிற்காக சென்னையிலிருந்து மும்பைக்கு இரயிலில் சென்றுக் கொண்டிருந்தோம். என் வாழ்வின் முதல் இரயில் பயணம் அதுதான். கிட்டத்தட்ட வரிசையாக எட்டுப் பெட்டிகளில் எங்கள் கல்லூரி மாணவர்கள்தான். பேச்சும், கும்மாளமுமாக எங்கள் பயணம் சென்றது. திடீரென்று, ஒரு பக்கத்திலிருந்து எங்கள் நண்பர்கள் அடித்துப் பிடித்துக்கொண்டு அடுத்தப் பெட்டிக்கு ஓடினார்கள். போகிற வேகத்தில், “அதுங்க வருதுங்கடா...“ என்று கூவியபடி ஓடினார்கள்.

அவர்கள் சென்ற சில நிமிடங்களில், ஐந்து அரவாணிகள் நாங்கள் இருந்த இடத்திற்க்கு வந்தனர். அன்றுதான் நான் அரவாணிகளை முதன்முதாலாகப் பார்த்தது. எங்கள் முன் தெலுங்கில் ஏதோ சொல்லியபடி கையை நீட்டினர். யாரும் எதுவும் கொடுக்கவில்லை. மீண்டும் சற்று குரலை உயர்த்திக் கேட்டனர். உடனே நான் எனது சட்டைப் பையில் ஒன்றும், இரண்டுமாக இருந்ததில் கையில் சிக்கியதை எடுத்து அவர்களிடம் கொடுத்தேன். உடனே, அவர்கள் புன்னகைத்து, எங்கள் தலைமீது கைவைத்து ஆசீர்வாதம் செய்துவித்துப் போனார்கள். அவர்கள் போனதும்தான் கழிவறையில் ஒளிந்திருந்த இன்னொரு நண்பன் வெளியே வந்தான்.

சில நொடிகளில், அடுத்த கும்பல் வந்து அதேபோல் கையை நீட்டினார்கள். நாங்கள், “பணம் கொடுத்தாச்சு. இனிமேல் இல்லை“ என்று கூறியும் அவர்கள் போகவில்லை. அதற்குள், முன்பு வந்த ஐந்து பேரில் ஒருவர் வந்து 2-ம் கும்பலிடம் ஏதோ சொல்லிவிட்டுச் சென்றார். உடனே அவர்கள் எங்களை விட்டுவிட்டு கழிவறையில் ஒளிந்திருந்த நண்பனிடம் மட்டும் பணம் கேட்க ஆரம்பித்தனர். அவன் முடியாது என்று கூற, அவர்களும் விடாமல் கேட்க, சண்டையாகிப் போனது. ஒரு கட்டத்தில், அவர்களில் ஒருவர் அவன் பின்னந்தலையில் கைவைத்து அவனது முகத்தை தனது அடிவயிற்றில் அழுத்திப் பிடித்துக் கொண்டார். எனது நண்பன் பயந்துப்போய், குனிந்தவாறே தன் சட்டைப் பையில் இருந்த ரூபாய் நோட்டுகளில் ஒன்றை உருவி அவர்கள் கையில் வைத்தப் பின்னரே அவனை விட்டனர். (நூறு ரூபாய் போச்சே என்று அவன் புலம்பியது வேறு கதை). இன்னும் சிலர் தங்கள் உடைகளை தூக்கிக் காட்டி பணம் கேட்டனர்.


இந்த சம்பவத்தால் எனக்கு சில கேள்விகள்:
1) பணம் தந்தவுடன் எங்களை ஆசீர்வதித்தவர்கள், பணம் தர முடியாது என்றவனை, அவ்வாறு முரடாக நடத்தி பணம் வாங்கும் சூழலுக்கு அவர்களை யார் தள்ளியது?
2) ’அலி’ என்றும் இன்ன பிற பதங்களைப் பயன்படுத்தியும் மனிதர்களான இவர்களை கேலிப் பொருளாகப் பார்ப்பது சரியா?
3) இன்றும் நகரங்களில், கடைவீதிகளில், ஒவ்வொரு கடையாக ஏறி கைதட்டி காசு வாங்குகிறார்களே! அவர்கள் கௌரவமாக ஒரு தொழில் செய்து பிழைக்க முடியாதது ஏன்?
இன்னும் பல கேள்விகள் இதைப் படிக்கும் உங்கள் மனதிலும் எழலாம். இவற்றுக்கெல்லாம் ஒரே பதில் தந்தை பெரியார் சொன்னதுதான்.
“எந்தவொரு மாற்றமும் உன்னிலிருந்தே தொடங்க வேண்டும்".

மாற்றம் வர என்ன செய்யலாம்?
1) முதலில் நம் மனதில் அவர்கள் ’அலிகள்’ அல்ல, “திருநங்கைகள்“ என்று மரியாதையுடன் இருத்திக் கொள்ள வேண்டும்.
2) அவர்கள் பணம் கேட்டால், வெறுத்து ஒதுக்காமல் இயன்ற அளவு கொடுக்கலாம்,
3) கொஞ்சம் வசதி படைத்தவர்கள், தொழிற்சாலை நடத்துவோர், அவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கலாம்.(ஏனென்றால் வருமானத்திற்க்கு வழி கிடைத்தால் அவர்கள் பணம் கேட்கமாட்டார்கள். மேலும் அவர்கள் வேண்டுவது அங்கீகாரமே!!).

இவையெல்லாம் இன்றைய தலைமுறையான நமக்குள் நிகழவேண்டிய மாற்றங்கள். இனி வருகின்ற தலைமுறைக்கு நாம் என்ன செய்யலாம்?
1) மனிதர்களில் இரண்டு வகையல்ல மூன்றுவகை, அதாவது ஆண், பெண், திருநங்கை என்று உணர்த்த வேண்டும். இது அவர்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டாலே, அதை ஒட்டி வருகின்ற அனைத்துப் பிரச்சினைகளும் ஒவ்வொன்றாக இல்லாமல் ஓடிவிடும்.

மேற்கூறிய சம்பவத்தில், அவர்கள் பணம் மட்டும் கேட்டு வரவில்லை. பல நூற்றாண்டுகளாக அடக்கி ஒதுக்கப்பட்டதினால், தங்கள் அங்கீகாரத்தையே கேட்டு வருகின்றனர். அவர்கள் தங்களது அங்கீகாரத்துக்காக வன்முறையை கையில் எடுத்தால், அதன் விளைவுகளை யோசித்துப் பாருங்கள். அதனால், அவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்கி நாமும் வாழ்வோம்! அவர்களையும் வாழவைப்போம்!!

“எந்தவொரு மாற்றமும் உன்னிலிருந்தே தொடங்க வேண்டும்"

August 15, 2008

சர்தார்ஜிக்கள் காமெடியன்களா???

2 comments:
இன்று நமது அலைபேசியில் உள்ள பல வசதிகளில் ஒன்று குறுஞ்செய்தி அனுப்புவது. அதில் நமக்கு பல வகையான செய்திகள் வருகின்றன. அவற்றில் முக்கிய பங்கு வகிப்பது நகைச்சுவை செய்திகள் தான். அதிலும் சில குறுஞ்செய்திகள் நமது சகோதரர்களைக் கிண்டல் செய்யும் வகையில் உள்ளன. நான் சொல்ல வருவது “சர்தார்ஜி ஜோக்ஸ்“ பற்றி. இந்த மாதிரி செய்திகள் அனுப்புவது தன் தலையில் தானே மண்ணை வாறிப் போட்டுக் கொள்வதைப் போல. இவ்வகை கிண்டல் செய்திகள் நமது சகோதரர்களை முட்டாள்களாகவே சித்தரிக்கின்றன.

முதலில் நாம் ஒரு முக்கியமான விஷயத்தை தெரிந்துக் கொள்ள வேண்டும். நமது இந்திய ராணுவத்தில் பெரும்பகுதியான ராணுவ வீரர்கள் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். மீதம் உள்ள சிறு பகுதியினரே மற்ற மாநிலத்தை சேர்ந்த்தவர்கள். இப்படி தினமும் இடம், பொருள் பாராமல் நமது நாட்டின் பாதுகாப்பிற்க்கு உழைத்துக் கொண்டிருக்கும் நமது சகோதரர்களைப் பற்றி தினமும் நாம் கேலி, கிண்டல் செய்திகளைப் படித்து, பரிமாறிக்கொண்டிருக்கிறோம். வெட்கம்!!!!

இவ்வகையான சர்தார்ஜிக்கள் சார்ந்த கேலி, கிண்டல் உருவான வரலாறு தெரிந்தால் நாம் மனம் மாற வாய்ப்பு உண்டு என்று எண்ணுகிறேன்.“ நமது நாட்டை வெள்ளையர்கள் ஆண்ட காலத்தில், நமது சுதந்திரப் போராட்டத்தில் பெரும்பங்கு வகித்தவர்கள் பஞ்சாபிகள். இயற்கையிலேயே போராட்ட குணம் மிக்கவர்கள். வெள்ளையர்களால் இவர்களது எதிர்ப்பை சமாளிக்க முடியவில்லை. அதனால் மனோரீதியாக நமது விடுதலைப் போராட்டத்தைக் குலைக்க பஞ்சாபிகள் பற்றி பல கேலிச்சித்திரங்களை உருவாக்கி மக்கள் மத்தியில் பரப்பினர். அவ்வகை கேலிச்சித்திரங்களே, இன்று “சர்தார்ஜி ஜோக்ஸ்“ என்ற பெயரில் நம்மிடையே வலம் வந்துகொண்டிருக்கிறது.

இந்த வரலாறு உண்மையோ! பொய்யோ!! யோசித்துப் பாருங்கள்! நமது சகோதரனைப் பற்றி நாம் தாழ்வாக எண்ண வேண்டும் என்ற கருத்தில் உருவாக்கப்பட்ட ஒன்றை நாம் மகிழ்ச்சி என்ற பெயரில் கொண்டாடி வருகிறோம். உண்மையில் நாம் நமது சகோதரனை மதிக்கிறோமா?? மிதிக்கிறோமா???



பின்வரும் படத்தை பாருங்கள்...

நல்லவங்க...

ShareThis