February 20, 2012

அம்புலி 3D - வரலாற்றுப் புனைவில் ஓர் கருப்புச் சட்டை

2 comments:



 
நம்மில் பெரும்பாலானோர் முதன்முதலில் முப்பரிமானத்தில் பார்த்த திரைப்படம் ‘மை டியர் குட்டிச்சாத்தான்’. அதன் பின்னர் அனைவரையும் சென்று அடையும் வகையில் வந்த திரைப்படம் ‘அவதார்’. வந்த வேகத்தில் வசூலையும் வாரிக் குவித்தது. மெல்ல திரைப்பட ரசிகர்களிடையே 3D மேல் ஒரு மோகம் வர ஆரம்பித்தது. சாதாரணமாக எடுக்கப்பட்ட திரைப்படங்கள் கூட 3D சட்டை போட்டுக்கொள்ள ஆரம்பித்தன. இருந்தாலும் ‘அவதார்’ ஏற்படுத்திய தாக்கத்தை எந்த திரைப்படங்களாலும் ஏற்படுத்த முடியவில்லை. இதுவரை நாம் பார்த்த 3D படங்கள் அனைத்தும் தமிழ் படுத்தியவையே அன்றி நேரடியாக தமிழில் எதுவும் வரவில்லை.
 
 
 
இதோ..!! நேரடியாக நாம் பெருமைப்படும் வகையில் நம் தமிழில் ஒரு 3D படம். ஒரு திகில் படத்துக்கு தேவையான கதை, தெளிவான திரைக்கதை, தேர்ந்த நடிகர்கள் என வேண்டிய அனைத்தையும் கொண்டு ஒரு அழகான 3D படத்தை நம் கண் முன்னே உலவ விட்டிருக்கிறார்கள் இரட்டை இயக்குனர்களான ஹரி ஷங்கர் & ஹரேஷ் நாராயண். வாழ்த்துகள். ஆனாலும் இந்த படத்துக்கான முதல் பூங்கொத்து பெறுபவர் ஒளிப்பதிவாளர் சதீஷ் அவர்கள். 3D படத்துக்கான துல்லியமான காட்சியமைப்புகள், குறிப்பாக இரவு நேரக் காட்சிகள் கூட 3Dயில் தெளிவாக இருக்கும்படி காட்சிபடுத்திய விதம். மிக நன்று. கண் முன்னே வரும் பாம்பு, சோளக்கொல்லையின் தட்டைகள், கண்ணை குத்த வரும் பார்த்திபனின் ஈட்டி என ஒவ்வொன்றும் 3D அட்டகாசம். படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் படக்குழுவினரின் உழைப்பு தெரிகிறது.

 
 
அமுதனும் பாரிவேந்தனும் நண்பர்கள். கல்லூரி விடுமுறையில் தனது காதலியை சந்திப்பதற்காக அவள் ஊரான பூமாடந்திபுரம் செல்கிறான் அமுதன். கல்லூரியில் இருந்து அவள் ஊருக்கு ஊரைச் சுற்றி செல்ல வேண்டும் அல்லது ஒரு சோளக்கொல்லையை கடந்து செல்ல வேண்டும். ஆனால் பல வருடங்களாக அம்புலி என்ற மிருகம் அந்த சோளக்கொல்லை வழியே செல்வோரை அடித்து கொன்று விடுவதால் அந்த வழியை யாரும் பயன்படுத்துவதில்லை. மேலும் ஊரின் எல்லையில் ஒரு தடுப்பு சுவர் எழுப்பி அதை தாண்டாமல் ஊர் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இது எதுவும் அறியாத அமுதன் அந்த ஊருக்கு சென்று காதலியை சந்தித்து திரும்பும் வேளையில் அம்புலியால் துரத்தப்பட்டு தப்பிக்கிறான். பின்னர்தான் நண்பர்கள் இருவருக்கும் அம்புலி பற்றி தெரிய வருகிறது. இதுவரை அம்புலியை யாரும் பார்த்திராதலால் அதை பற்றி அறிய கிளம்புகிறார்கள். இவர்கள் மேற்கொள்ளும் விசாரணையில் முடிவு என்ன? அம்புலி யார் என்ற கேள்விகளுக்கு திகிலுடன் அமர வைத்து பதில் சொல்லியிருக்கிறார்கள்.
 
 
 
படம் பார்த்தவுடன் எனக்கு படத்தை பற்றி “வரலாற்றுப் புனைவில் ஓர் கருப்புச் சட்டை” என்றுதான் தோன்றியது. இதுவரை வந்த படங்களில் என்னதான் பகுத்தறிவு பேசினாலும் கடைசியில் அந்த கதாபாத்திரம் தன் கஷ்டத்தை தீர்த்தது கடவுள்தான் என்று கட்சி மாற்றி மொத்ததையும் காலி பண்ணி விடுவார்கள். ஆனால் இதிலும் ஒரு பகுத்தறிவுவாதி வருகிறார். பிரச்சாரம் என்று எதையும் செய்யாமல் ஊரில் மக்களிடம் இருக்கும் பயத்தை போக்க அம்புலி விஷயத்தை பகுத்தறிவோடு அணுகுகிறார். படம் கடைசியில் மக்கள் கடவுளுக்கு பூஜை செய்தாலும் இவரது பேச்சில் இருக்கும் உண்மையை நம்பி அதன்படி நடப்பது அவ்வளவு யதார்த்தம். நான் பெருமையாக உணர்ந்த இடம் இது. எந்த நொண்டிச் சாக்கும் சொல்லாமல் கதாபாத்திரங்களை அதனதன் போக்கில் வடித்திருப்பது மிக அருமை.
 
 
நடிகர்களில் முக்கியமாக பாராட்டப்பட வேண்டியவர் ‘மைமிங்’ கலைஞர் கோகுல்நாத். அது ஏன் என்று படத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள். நடிகர் பார்த்திபன் ஒரு சிறிய, முக்கியமான பாத்திரத்தில் வருகிறார். ஆனால் அவரது முக்கியத்துவத்தை புரிந்துகொள்வதற்குள் படம் முடிந்துவிடுவது சோகம். இவரது கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் கவனமாகவும், கனமாகவும் அமைத்திருக்கலாம். மற்ற நடிகர்களான ராஜேந்திரன், ‘நண்டு’ ஜெகன், கலைராணி, உமாரியாஸ், தம்பி ராமைய்யா என அனைவரும் அவர்கள் பங்கை சரியாக செய்து கதை ஓட்டத்திற்கு நன்றாகவே துணை புரிந்திருக்கிறார்கள். நண்பர்களாக வரும் அஜய் மற்றும் ஸ்ரீஜித். கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
 
 
 படத்தின் பலம் முதல் 10 நிமிடங்களில் வசனமே இல்லாமல் வரும் காட்சிகள், தெளிவான ஒளிப்பதிவு மற்றும் திரைக்கதை. படத்தின் பெயர் போடும்போதே கதையின் அமைப்பை நிழல் காட்சிகளாக காட்டியிருப்பது அற்புதம். அப்புறம் அம்புலி பற்றி கிடைக்கும் தகவல்களை ஓவியங்கள் போல சித்தரித்து காட்டி, பின்னர் உண்மை நிலை அறியும்போது அவையே காட்சிகளாக விரிவது அமர்க்களம். ஆனால் இவ்வளவு பலம் இருந்தும் பின்பாதியில் வரும் திரைக்கதையில் உள்ள தொய்வு சற்று அயர்ச்சி ஏற்படுத்துவதை மறுப்பதற்கில்லை. இதுதான் காரணம் என்று காட்டப்படும் வேளையில் திரைக்கதையில் ஒரு வேகம் இருக்க வேண்டும். ஆனால் அது இங்கே இல்லை. படத்திற்கு 5 பேர் இசை அமைத்திருக்கிறார்கள். பாடல்கள் படத்திற்கு பெரிய பலவீனம். இதுபோன்ற திரைக்கதைக்கு பாடல்கள் இல்லாமல் இருந்தாலே மிக அருமையாக இருந்திருக்கும். இந்த படத்திற்கு பாடல்கள் ஒரு மிகப்பெரிய தடைக்கல். ஆனால் பின்னணியிசை திகில் படத்திற்கு வேண்டிய உணர்வை கொடுக்கவே செய்கிறது.

மற்றபடி தெளிவான திரைக்கதை, நாம் சிறுவயதில் பாட்டியிடம் கேட்டு வளர்ந்த கதையை தேர்ந்த தொழில்நுட்ப உதவியுடன் மிக அருமையாக நமக்கு அளித்த அம்புலி இயக்குனர்களுக்கும், படக்குழுவினருக்கும் முக்கியமாக இது போன்ற புது முயற்சிக்கு ஊக்கமளித்து தயாரித்த தயாரிப்பாளருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். 
 
 

February 18, 2012

நல்லவன் - 50

4 comments:
சென்ற பதிவான ‘தோனி’யுடன் 50-வது பதிவை தொட்டுவிட்டேன். இந்தப் பதிவுதான் 50-வதாக இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் தோனி என்னுள் ஏற்படுத்திய தாக்கம் அவன் தானாக வந்து அந்த இடத்தை பிடித்துக் கொண்டான். மகிழ்ச்சி. 2008-ல் எழுத ஆரம்பித்திருந்தாலும் மிகத்தீவிரமாக எழுத ஆரம்பித்தது 2011-இல்தான். ஆனாலும் இந்த குறுகிய காலத்தில் எனது எழுத்துக்களை ஏற்றுக்கொண்டு நிறை குறைகளை சுட்டிக்காட்டி ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் எனது கட்டுரைகள், சினிமா பார்வைகளைப் பற்றி எந்த சமரசமும் இல்லாமல் என்னிடம் விவாதித்து மேலும் எனது எழுத்தை செழுமை படுத்தும் சகோதரிகள் மற்றும் நண்பர்களுக்கும் எனது சிறப்பு நன்றிகள். எனது ஒவ்வொரு பதிவையும் படித்துவிட்டு என்னிடம் தனியாக விவாதிக்கும் எனது அக்காவிற்கு ஒரு சிறப்பு வணக்கம் [‘பொன்னியின் செல்வனை’ என் கையில் கொடுத்து நான் தீவிரமாக புத்தகம் படிக்க முதல் புள்ளி வைத்தவரே அவர்தான்]. பதிவு எழுத தொடங்கி இடையில் சிறிது தேக்கம் ஏற்பட்டபோது வேண்டிய ஊக்கம் அளித்து என்னை தொடர்ந்து எழுத தூண்டிய எனது தோழிக்கு இங்கே எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இணையத்தில் பலரது பதிவுகளை நான் தொடர்ந்து படித்து வந்த நிலையில் என்னுள்ளும் எழுத வேண்டும் என்ற ஆசை மெல்ல எழுந்தது. குறிப்பாக ஜாக்கி சேகர், கேபிள் சங்கர், உண்மைத் தமிழன், லக்கி லுக் ஆகியோரது பதிவுகளை தொடர்ந்து படித்து வந்தேன். அதுவும் ஒவ்வொரு பதிவுக்கும் சுடச்சுட கிடைக்கும் பின்னூட்டங்கள் மிக சுவாரஸ்யம். எழுத்துக்கு மிக முக்கியமான அங்கீகாரம் பாராட்டுதானே!! அதுவும் உடனுக்குடன் கிடைக்கும் என்கிறபோது எழுத வேண்டும் என்கிற எண்ணம் என்னுள் தீவிரமாகியது.

இந்த நேரத்தில் நான் எழுத தொடங்கிய அந்த முதல் கனத்தை நினைத்து பார்க்கிறேன். அலுவலகத்தில் வேலையில்லாத ஒரு நாளில் சர்தார்ஜிக்கள் பற்றி நான் எழுதியதே முதல் பதிவானது. அதை ஒரு பதிவாக இணையத்தில் பார்த்த தருணம் இன்றும் மறக்க முடியாது. ரொம்ப சந்தோஷமாக உணர்ந்தேன். அடுத்து நிதானமாக யோசித்து எழுதிய பதிவு திருநங்கைகள் பற்றியது. அப்புறம் சோம்பலின் உச்சத்தில் இருந்ததால் 2009-இல் எதுவும் எழுதவில்லை. பின்னர் 2010-இல்தான் மெல்ல மீண்டும் எழுத வந்தேன். அதுவும் தீவிரமாக இல்லாமல் சினிமா, சிறு சம்பவங்கள் என்றே எழுதினேன்.

2011-இல்தான் நான் பதிவுகள் எழுதுவதில் கொஞ்சம் தீவிரமானேன். அதுவும் சினிமா பற்றி எழுதியிருந்தாலும் நான் முதல் முயற்சியாக சிறுகதைகள் எழுதியது இப்போதுதான். அதிலும் ‘குட்டிம்மா’ சிறுகதை எனக்கு பல பாராட்டுக்களை கொண்டு வந்தது. ஒரு அதிகாலைப் பொழுதில் என் அண்ணி போனில் என்னை அழைத்து ஒரு அரை மணி நேரம் ‘குட்டிம்மா’வைப் பற்றி என்னிடம் சிலாகித்துப் பேசினார். இது போன்ற பாராட்டுக்காகத்தானே எழுத வந்தேன். நானும் சரியான வழியில்தான் போகிறேன் என்று எனக்கு நம்பிக்கை வந்தது.

அதன் பின்னர் அரசியல் பற்றியும் எழுதினேன். அரசியலைப் பொறுத்தவரை அதன் ஆழம் வரையில் எல்லாம் எனக்கு அனுபவமில்லை. ஒரு குடிமகனின் பார்வையில் மனதிற்கு நல்லது, கெட்டது என்று தோன்றியவற்றை எந்த சமரசமும் இல்லாமல் நேர்மையாகவே எழுதி வருகிறேன்.

இவை அனைத்திலும் முக்கியமானது மெரினாவில் ஈழ மக்களுக்காக ஜூன்-26இல் நடந்த நினைவேந்தலையும், முல்லைப் பெரியாறு அணையை காக்க நடந்த பேரணியையும் பதிவு செய்தது. கிட்டத்தட்ட ஒரு பத்திரிக்கையாளன் போல அனைத்து நிகழ்வுகளையும் படம் எடுத்து, வேண்டிய குறிப்புகள் எடுத்து மொத்த நிகழ்வையும் ஒரு பதிவாக எழுதி பதிவேற்றிய அந்த தருணம் மிகப் பெருமையாக உணர்ந்தேன்.

நான் எழுதிய இந்த 50 பதிவுகளில் எல்லாமே நல்ல பதிவுகள் என்று மனம் ஒப்பவில்லை. சரிபாதியாக கழித்துவிட்டு பார்த்தால் கூட ஒரு 25 பதிவுகள் நல்ல எழுத்தில் சேரும் என்று தோன்றுகிறது. நான் எழுதிய ஒவ்வொரு எழுத்துக்கும் பாராட்டி, குட்டி, கூகிள், முகநூலில் பகிர்ந்து பலருக்கும் எனது எழுத்தை அறிமுகப்படுத்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை எனக்கு கிடைத்த பாராட்டுக்கள், குட்டுகள் என அனைத்தையும் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் மனதோடு வைத்து அடுத்த இலக்கை நோக்கி எனது எழுத்துப் பயணத்தை தொடர்கிறேன்.

எனது எழுத்துக்களை உலகம் முழுக்க எடுத்து சென்ற தமிழ்மணம், இன்ட்லி, தமிழ்10, யுடான்ஸ் குழுவினருக்கு எனது நன்றிகள்.

 
அன்புடன்,

நல்லவன்

February 17, 2012

தோனி

No comments:

 

“நமது கனவுகளை பிள்ளைகள் மேல் திணித்து அவர்கள் வாழ்க்கையை வீணாக்குவதைவிட, பிள்ளைகளின் திறமையை அறிந்து அந்த துறையில் அவர்களின் திறமையை வளர்த்தெடுத்தால், சாதனையும் வெற்றியும் நிச்சயம்.”

இதை அதிகப்படியான செலவில் நகைச்சுவை கலந்து சொன்னால் ‘நண்பன்’. அதுவே கொஞ்சம் வலியோடு தகப்பனாக உணர்ந்து யதார்த்தத்தின் அருகே வந்து சொன்னால் ‘தோனி’.

இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பனாக, அரசாங்க ஊழியனாக, துண்டு விழும் பட்ஜெட்டை சரி செய்ய ஊறுகாய் விற்று பிழைப்பை ஓட்டும் ‘மிடில் கிளாஸ் மாதவனாக’ பிரகாஷ்ராஜ். படிப்பை தவிர வேறு ஏதும் சொத்து அவர்களுக்கு தர முடியாது என்று நிறைய செலவு செய்து பெரிய பள்ளிக்கூடத்தில் படிக்க வைக்கிறார். ஆனால் மகனுக்கோ படிப்பை விட கிரிக்கெட்டில்தான் ரொம்ப ஆர்வம். அப்பாவுக்கோ மகனை MBA படிக்க வைக்க ஆசை. தந்தைக்கும் மகனுக்கும் இந்த புரிதல்கள் ஒரே நேர்க்கோட்டில் வராமல் ஏற்படும் பாதிப்பும், பின்னர் அதனால் ஏற்படும் புரிதல்களுமே ‘தோனி’.

இது வெறும் அப்பா, மகன் படமாக இல்லாமல் இன்றைய கல்வி முறையையே கேள்வி கேட்கிறது இந்த படம்.

“குழந்தைங்கன்னா கஷ்டப்படாமதானே படிக்கணும்?”

“LKG போற குழந்தைக்கு எதுக்கு அத்தனை புத்தகம்? பெரிசாய்ட்டு என்ன மூட்டை தூக்கவா போகுது?”

“டீச்சர் உங்களுக்கே History மட்டும்தான் தெரியும். ஆனா பசங்க மட்டும் எல்லாத்தையும் ஒன்னா படிக்கணும்னா எப்படி?”

இப்படி வசனங்கள் மூலம் பல இடங்களில் கேள்வி கேட்கிறது இந்தப் படம்.

அதை எந்த பிரச்சார நெடியும் இல்லாமல் அழகாக ஒரு கதை மூலம் சொல்லியதில் அழகாக வெற்றி பெறுகிறார் இயக்குனர் பிரகாஷ்ராஜ். நடிப்பிலும் முதலிடம் தட்டி செல்வது இவரே. அதுவும் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் வெட்கமும் கூச்சமுமாக பேச ஆரம்பித்து பின்னர் உணர்ச்சிக் குவியலாக மாறும் இடத்தில் பட்டையை கிளப்பி இருக்கிறார். அடுத்து நடிப்பில் கவனம் ஈர்ப்பவர் மகனாக வரும் ஆகாஷ் பூரி. இடைவேளைக்கு பின்னர் கோமா நிலையில் ஒரே திசையில் நிலைகுத்திய பார்வையுடன் வரும்போது எந்த சலனமும் காட்டாமலே கவனம் ஈர்க்கிறார்.


பக்கத்து வீட்டில் வசிக்கும் ராதிகா ஆப்தே, மகளாக வரும் சிறுமி, காலனி நண்பர்கள், அலுவலத்தில் உடன் பணியாற்றுபவர்கள் என்று அனைவரும் அவரவர் வேலையை சரியாக செய்திருப்பதே இந்த படத்திற்கு பலம்.

இசை – இளையராஜா. ‘’சின்னக் கண்ணிலே’, ‘விளையாட்டா படகோட்டி’ பாடல்கள் கேட்ட மாத்திரத்தில் மனதில் நிற்கிறது. பின்னணி இசையில் இவரது உழைப்பு அபாரம். மகனிடம் மன்னிப்பு கேட்கும் இடத்திலும், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உருகும் இடத்திலும் பின்னணி இசை பலம் சேர்க்கிறது.

 

 படத்தின் இறுதியில் தமிழக முதல்வருடன் பேசும் காட்சி சற்று மிகையாக இருந்தாலும் இப்படி நடந்தால் நல்லா இருக்குமே என்று தோன்றுகிறது. இன்றைய கல்வி முறையின் பாதகத்தை முதல்வரிடம் விளக்கிவிட்டு, “உங்க ஒரே கையெழுத்தால் அடுத்து வரும் தலைமுறையே நல்லா இருக்கும். ஏதாவது செய்யுங்க!!” என்று பிரகாஷ்ராஜ் கூறும் இடத்தில் அரங்கம் முழுக்க பலத்த கைத்தட்டல்.

ஆனால் மார்க் வாங்கும் கல்வி முறை மாற வேண்டுமானால் அதற்கான முயற்சி நம்மிடமும் இருக்க வேண்டும். நம் பிள்ளைகளின் திறமைக்கும், விருப்பத்திற்கும் முன்னுரிமை கொடுத்தாலே போதும். காலமும், தேவையும் சேர்ந்து வேண்டிய மாற்றத்தை தானாகவே கொண்டு வந்துவிடும். போட்டி நிறைந்த இன்றைய சமூக சூழலில் இப்படியான எதிர்பார்ப்பு அசாத்தியம் என்றாலும், அனைவருக்கும் ஒருமித்த சிந்தனை இருந்தால் எதுவும் சாத்தியமே!!

சரி!! அப்போ படம் எப்படி?

17 x 8 = ? இந்த கேள்விக்கு ஒரு நொடிக்கூட தாமதிக்காமல் சட்டென பதில் சொன்னீங்கன்னா அதுதான் ‘தோனி’யின் வெற்றி.

February 05, 2012

மெரினா

3 comments:

சென்னையின் நிரந்தர அடையாளம். எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்பு தட்டாத இடம். ஒவ்வொரு தடவை செல்லும்பொழுதும் புதுவிதமான அனுபவங்களை அள்ளித் தரும் இடம். ஊரிலிருந்து வருபவர்களுக்கு பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் முதல் இடம் பிடிப்பதும் இந்த இடம்தான். அதுதான் மெரினா. இதுவரை மெரினாவில் ஒரு சில காட்சிகள் மட்டுமே படங்களில் வந்து போயிருக்கும். ஆனால் மெரினாவே முழு கதைக்களமாகக் கொண்ட முதல் படம் இதுதான். பலரால் வெறும் கொண்டாட்டங்களுக்கான இடமாக பார்க்கப்பட்ட இடம் ஒரு சாராருக்கு வாழ்வளிக்கும் இடமாகவும் இருக்கிறது. அப்படி பலதரப்பட்ட மக்களின் வாழ்வுநிலை அங்கு இருக்கும் சிறுவர்கள், மெரினா கடற்கரை பற்றிய முழு நீளப் பதிவுதான் ‘மெரினா’.

அப்பா, அம்மாவை இழந்து சித்தப்பாவின் கொடுமை தாளாமல் ஊரை விட்டு சென்னைக்கு வருகிறான் அம்பிகாபதி, வெண்தாடி தாத்தா, நண்பனாக வரும் கைலாசம், போட்டி வியாபாரத்தில் ஈடுபட்டு பின்னர் friendship வைத்துக் கொள்ளும் சிறுவர்கள், இவர்களுக்கு uncle-ஆக வரும் தபால்காரர், பாட்டு பாடி டோலக் அடிக்கும் நபர், அந்த பாட்டுக்கு நடனம் ஆடி பிச்சை எடுக்கும் சிறுமி, கடலை வாடகைக்கு விட்டிருப்பதாக சொல்லும் மன நலம் குன்றியவர், குதிரை ஓட்டுபவர், இதனிடையே வருகிறது சிவகார்த்திகேயன்-ஓவியாவின் காதல் கதை என்று படத்தில் பல்வேறு நிலைகளில் உள்ள கதாபாத்திரங்கள்.


அம்பிகாபதியாக ‘பக்கடா’பாண்டி. படிப்பின் மீது தீராத ஆசை. அதற்காக டுடோரியலில் சேர்வதற்காக பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு உற்றத் தோழனாக வரும் கைலாசம். இவர்கள் இருவரின் நட்பு மற்றும் மற்ற சிறுவர்களின் கதாபாத்திரங்கள் மிக அருமையாக உள்ளது. ‘நாம ரெண்டு பேரும் friendship வெச்சுக்கலாமா?’ என்று பக்கடா அனைவரிடமும் நட்பாக பழகுவது இனிமை. இவர்களுக்கு வளர்ந்த தோழனாக வருகிறார் தபால்காரர். சுப்ரமணியபுரத்தில் வரும் சித்தன்தான். முதலில் விளையாட்டாக ஆரம்பித்து, cricket-இல் chief guest என்று நெருக்கமாகி கடைசியில் பக்கடாவை தத்தெடுத்து படிக்க வைக்கிறார்.

அப்புறம் அந்த வெண்தாடித் தாத்தா. ஊரில் மருமகள் தன்னை பேசிவிட்டாள் என்று வீட்டை விட்டு வந்து தன் மகனையும், மருமகளையும் அவமானப்படுத்த பிச்சை எடுத்து வாழ்பவர். தன் அருகே வந்து அமர்ந்தவனிடம் ‘சாப்பிட்டியா?’ என்று கேட்டு, உடனே தன் உணவை பகிர்ந்துக் கொள்வதும், பணம் கேட்கும் சிறுவர்களிடம் ‘பிச்சைக்காரங்கிட்டயே பிச்சையா?’ என்பதும், ‘நான் உனக்கு சாப்பாடு வாங்கி தரேன் தாத்தா. இனிமே பிச்சை எடுக்காதே!!’ என்று பக்கடா கூறியதும் பிச்சை எடுத்த காசை தூக்கி வீசிவிட்டு அடுத்த நாளில் புல்லாங்குழல் விற்கத் தொடங்குவது என மனம் கவர்கிறார். தபால்காரர் சிறுவர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து கொடுக்கும்போது தனக்கும் கொடுக்க மாட்டாரா என்று எதிர்பார்ப்பது, அவரே தன் மகள் திருமண அழைப்பிதழை சிறுவர்களுக்கு கொடுக்கும்போது தனக்கும் கொடுக்க மாட்டாரா என ஏக்கப் பார்வை பார்ப்பது என பல இடங்களில் நல்ல நடிப்பு. அதுவும் கடைசியில் தன் தவறு உணர்ந்து அந்த சிறுவர்களிடம் வெடித்து அழும்போது கலங்க வைக்கிறார்.


டோலக் அடித்து பாட்டுப்பாடி பிச்சை எடுக்கும் அப்பா-மகள். இவர்களைப் போன்றவர்களை சென்னை ரயில்களில், கடற்கரையில் என்று பல இடங்களில் அடிக்கடி பார்க்கலாம். கையில் ரெண்டு ஓட்டு சிலை வைத்துக்கொண்டு மிக அருமையாகப் பாடுவார்கள். அவர்களை அடையாளப் படுத்தும் வகையில் இருப்பவர்கள், அந்த மக்களைப் போலவே பாடினால்தானே யதார்த்தத்துக்கு அருகில் உணர முடியும். சினிமா பாடல் பின்னனியில் ஒலிக்க இவர் வாயசைத்திருப்பது படத்துடன் ஒன்றாமல் செய்துவிடுகிறது. நாம் கேட்டு ரசித்த பாடல்கள், இவர்கள் போன்ற மக்களின் குரலில் அதே இனிமையுடன் கேட்க மிகவும் நன்றாக இருக்கும், இது நம்ம படம்டா என்று படம் பார்ப்பவர்களை உணர வைக்க வேண்டும். அந்த உணர்வை இங்கே இழந்தது போல இருக்கிறது.

மன நலம் குன்றியவராக வருபவர் குரல் மூலம் மெரினா கடற்கரையின் குரலாக பல இடங்களில் உருவகப் படுத்தியிருப்பது மிக நல்ல உத்தி. கள்ளக் காதலியிடம் பேசுபவனை ‘என் இடத்துலேயே அசிங்கம் பண்றியா?’ என்று உதைப்பதும், துணி போர்த்திக்கொண்டு காதல் செய்பவர்களை காறி உமிழ்ந்து திட்டுவதும், கண்டபடி குப்பை போடுபவர்களை முறைத்துவிட்டு குப்பைகளை அகற்றுவதும், காதல் தோல்வியில் பிதற்றுபவனுடன் கை தட்டி சிரிப்பதும் என்று ஒவ்வொரு காட்சியிலும் மெரினாவின் குரலாகவே தோன்றுகிறது. மிக மிக அருமையான உருவகம்.

படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது போலீஸ்காரரின் மகன் கைலாசம் தலையில் கொட்டும் காட்சி. படத்தில் நான் மிகவும் ரசித்த காட்சி அது. குழந்தை மனநிலையை உள்ளபடியே காட்டியிருக்கிறார் இயக்குனர். அடுத்தது குழந்தைகள் காப்பகத்தில் ஜெயப்ரகாஷ் படித்தால் எப்படி இருக்கலாம் என்று அந்த சிறுவர்களுக்கு விளக்குகிறார். பக்கடா உள்ளே இருந்து அவர் பேச்சை கேட்டுக் கொண்டிருக்கிறான். அந்த நேரத்தில் அங்கு வரும் கைலாசம் ஜன்னல் வழியே இதை பார்க்கிறான். கைலாசத்தை பார்க்கும் பக்கடா நீயும் உள்ள வாடா, படிக்கலாம் என்று அழைக்க அவன் மறுக்க பின்னனியில் படிப்பின் அருமை பற்றி ஜெயப்ரகாஷ் விளக்கம் ஒலிக்க என்று இன்றைக்கு கல்வி மறுக்கப்பட்ட சிறுவர்களின் மனப் போராட்டத்தை மிக அழகாக பதிவு செய்த காட்சி அது. பின்னர் அனைவரும் தாத்தாவின் முயற்சியாலும், தபால்காரரின் உதவியோடும் பள்ளிக்கு செல்லும்போது அவர்கள் கண்களில் தெரியும் சந்தோஷம். அருமையான காட்சிகள்.


படத்திற்கு மிகவும் கலகலப்பு சேர்ப்பது சிவகார்த்திகேயன்-ஓவியாவின் காதல் கதைதான். என் சென்னை நண்பர்கள் மூலம் நான் அறிந்திருந்த பல கதைகளின் தொகுப்பாகவும், இன்றைய அவசர உலகின், அவசர காதலின் பதிவாகவும் இருந்தது அவர்கள் காதல் கதை. தனக்கும் ஒரு figure வேண்டும் என்று இல்லாத சாகசம் செய்து ஓவியாவை மடக்குவது, அதற்காக அவர் செய்யும் செலவுகள் எல்லாம் காட்டப்படும் குட்டி குட்டி animations என்று அவர்கள் காட்சிகள் செம ரகளை. காதலில் எந்த ஈர்ப்பும் இல்லாமல் பின்னர் வெத்து காரணங்களால் பிரிந்து ஆப்பு, ரிவிட், பன்னாடை என்று கலாய்க்கும் இடங்கள் அட்டகாசம்.

படத்திற்கு பெரும்பலம் தருவது ஒருவரி வசனங்கள், நகைச்சுவை கலந்த காட்சிகள், ஒளிப்பதிவும்தான். உதாரணம் ஓவியாவின் பெயர் சொப்பனசுந்தரி என்று அறிந்ததும் நாயகனின் நண்பனுக்கு கரகாட்டக்காரன் காட்சி நினைவுக்கு வருவது. இதுபோல பல காட்சிகள் படம் முழுக்க விரவிக் கிடக்கின்றன. அப்புறம் ஒளிப்பதிவு. சிறுவர்களுக்கிடையே நடக்கும் ஒட்டப் பந்தயம் காட்சிப்படுத்திய விதம் மிக அருமை. தன்னை கடந்து செல்பவனை பார்த்ததும் வருகிற முக மாற்றம் மிக அற்புதம். சிறுமிகள் மணலை அள்ளி விளையாடும்போது தெரிகிற ஒவ்வொரு மணல் துகள்களும் அற்புதம். நேர்த்தியான ஒளிப்பதிவு. அப்புறம் கடைசியில் வரும் குதிரைப்பந்தயம். சம தளம், கடலிலிருந்து, மேலிருந்து என்று பல கோணங்களில் காட்டப்படும் அந்த பந்தயம் நம்மையும் அவர்களுடனே ஓட வைக்கிறது. அறிமுக ஒளிப்பதிவாளர் விஜய்க்கு வாழ்த்துகள்.

 

 இசை - கிரிஷ் (அறிமுகம்). ‘வணக்கம் வாழ வைக்கும் சென்னை’ பாடல் கேட்டவுடனே மனம் சட்டென்று ஈர்க்கிறது. இன்று சென்னையில் இருக்கும் பெரும்பாலானோர் ஊர்நாட்டில் இருந்து வந்தவர்களே!! அந்த வகையில் அனைவரையும் மனதிற்கு நெருக்கமாக உணர வைக்கும் பாடல். மற்ற பாடல்கள் காட்சிக் கோரையுடன் வருவதால் அவ்வளவாக ஈர்க்கவில்லை. பின்னணி இசை ரொம்ப சுமார். அதுவும் தாத்தா தவறு உணர்ந்து புலம்பும் காட்சியில் வரும் பின்னணி இசை அந்த காட்சியின் ஆழத்தையே குறைக்கின்றது.

மெரினா கடற்கரை பற்றிய பதிவில் சிறுவர்களுக்கு கல்வி அவசியம் என்று இயக்குனர் கூற முனைந்திருக்கிறார். படத்தில் பெரும்பாலும் நல்ல சிந்தனைகளையே பதிவு செய்ய முயன்றிருப்பது தெரிகிறது. ஆனால் கடற்கரையில் நடக்கும் நல்ல விஷயங்களுக்கு ஈடாக நிழல் காரியங்களும் நடக்கின்றன. அதை ஓரிரு காட்சிகளில் பதிவு செய்திருந்தால்தானே சொல்ல வந்த நல்ல விஷயங்கள் ஆழமாகப் பதியும். படத்தில் முதல் குறையும் அதுதான். அடுத்து திரைக்கதை. மெரினா போன்ற கதைக்களத்தில் எவ்வளவோ விஷயங்கள் சேர்த்து இன்னும் சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கலாம். சுருக்கமா சொல்லனும்னா அடிச்சு ஆடியிருக்கலாம். ஆனால் கபடியில் ஏர்க்கோட்டை மட்டுமே தொட்டு வருவது போல இருக்கிறது. ஊரில் இருந்து ஓடி வரும் சிறுவர்கள் கடற்கரையில் ஏதேனும் விற்று பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை விதைப்பதுபோல உள்ளது. ஆனால் உண்மை நிலைமை அவ்வாறு இருக்க நிச்சயம் வாய்ப்பில்லை. அப்புறம் குழந்தைகளை மீட்டு கல்வி கொடுக்கும் அதிகாரியாக ஜெயப்ரகாஷ் வரும் காட்சி. அவர் சிறுவர்களுடன் பேசும் உரை மனதை அவ்வளவாகத் தொடவில்லை. மிகவும் உயிர்ப்புடன் வந்திருக்க வேண்டிய காட்சி. அந்த வசனத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

முழுக்க, முழுக்க மெரினாவை மட்டுமே மையப்படுத்தி, அங்கு தினமும் காணப்படும் நபர்களை பதிவு செய்ததில் இயக்குனர் வெற்றி பெறுகிறார். அதுவும் இளம் வயதில் கல்வி மட்டுமே முக்கியம் என்பதை கதை போக்கில் மிக அழகாக உணர்த்தியபடியே செல்கிறார். எப்படி ‘அங்காடித் தெரு’ படம் மூலம் அடுக்கு மாடி கடைகளில் வேலை செய்பவர்களை அன்புடன் அணுக வைத்ததோ, அது போல இனி பிச்சைக்காரர்களையும் கடற்கரையில் சுண்டல் விற்கும் சிறுவர்களையும் எரிச்சலில் விரட்டாமல் அன்போடு அணுக வைக்கிறது ‘மெரினா’. நாம் அன்புப் பார்வை வீசும் அந்த கணத்தில்தான் உண்மையிலேயே இயக்குனர் பாண்டிராஜ் வெற்றிப் பெறுகிறார்.


அரங்கம் பக்கம்:

1. படம் முடிந்து பெயர் போடுகையில் “தமிழ்த்தாய் வாழ்த்து” போட்டார்கள். ஒருவருக்கும் அந்த பாடல் முடியும் வரையில் யாருக்கும் நிற்கும் பொறுமை இல்லை. நின்று என்னை கவனித்த என்னையும் பின்னாலிருந்தவர்கள் நெட்டி வெளிய தள்ளி விட்டார்கள்.

2. “You guys can’t use the media for telling such silly message..” என்று படம் பார்த்த ஒருவன் peter விட்டுக்கொண்டிருந்தான். ஓங்கி முகத்திலேயே ஒரு குத்து விடலாமா என்று தோன்றியது. சரி!! இந்த மாதிரி ஊருக்கு நாலு பேர் இருக்காங்க. எல்லோரையுமா அடிக்க முடியும். அமைதியாக வந்துவிட்டேன்.

February 02, 2012

விஜயகாந்த் - மாற்று அரசியலுக்கான தலைவரா?

1 comment:
 

 “நான் பேசுவேன்..!! நான் பேசுவேன்..!!” என்று கூறிக்கொண்டு பேசாமலே இருந்தவர் இன்று திடீரென்று பேசியதால், இப்போது நாடே அவரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறது. சரி!! ஒருத்தர் பேசுறது அவ்வளவு குத்தமா? அப்படி அதிசயமா என்ன பேசிட்டார்? யார் அவர்? தே.மு.தி.க தலைவரும் எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த் தான் இன்னைக்கு பேசிட்டார்.

ஏங்க? அவர் பேசினது என்ன உலக அதிசயமா? அவர் பேசுறதைதான் தமிழ் கூறும் நல்லுலகம் பல வருடங்களா பாத்துக்கிட்டு இருக்காங்களே!! எத்தனை படம்? அதுல எத்தனை பஞ்சாயத்து பேசி தீத்து வெச்சிருப்பாரு? எத்தனை தீவிரவாதிகளை பாகிஸ்தான்லயே போய் பேசி திருத்தியிருக்கார்? இப்படி நாட்டுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் பேசிக்கிட்டே இருந்தவர் இன்னைக்கு பேசினது மட்டும் அதிசயமா எல்லோரும் சொல்றாங்களே!! அப்படி எங்க பேசினார்? என்னதான் பேசினார்?

அவர் இன்னைக்கு சட்டமன்றத்துல பேசினாராம்...

…….

………..

அது சரி!! சட்டமன்றத்துலயே பேசிட்டாரா? அப்போ ஊரே பேசுறது சரிதான்!!!

இன்று பெரும்பான்மையான மக்களின் நிலைப்பாடு இதுவாகத்தான் இருக்கும். இரண்டு திராவிட கட்சிகளுக்கும் மாற்றி மாற்றி ஓட்டு போட்டுவிட்டு மக்கள் ஏமாந்து, விரக்தியடைந்து, மாற்றாக யாராவது வரமாட்டார்களா என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் கால் பதித்தார் விஜயகாந்த். கட்சி ஆரம்பித்த 6 மாதங்களிலேயே 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலையும் சந்தித்தது தே.மு.தி.க. அனைத்து தொகுதியிலும் தேமுதிகவினர் தோற்றாலும் விருதாச்சலம் தொகுதியில் பெரும் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் விஜயகாந்த். பெரும்பான்மை ஏதும் கிடைக்காவிட்டாலும் பொது மக்கள் எதிர்பார்த்த ஒரு மாற்று தலைவருக்கான தீர்ப்பாக அதை அனைவரும் பார்த்தனர்.


பின்னர் போகும் இடங்களிலெல்லாம் ஆளும்கட்சியின் தவறுகளை உடனுக்குடன் தட்டிக்கேட்டு மக்களிடம் இன்னும் நெருக்கமானார். அப்போது நடந்த அரசியல் விளையாட்டில் ‘குடித்துவிட்டு வருகிறார்’ என்று ஜெயலலிதா கூற, ‘பக்கத்துல இருந்து ஊத்தி கொடுத்தீங்களா?’ என்று விஜயகாந்த் பதிலுக்கு எகிற அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. அதன் பின்னர் அவர் எங்கு சென்றாலும் ஒரு எதிர்பார்ப்போடு கூடிய மக்கள், இப்போது அவரை வேறு பார்வை பார்க்கவும் தவறவில்லை. மாற்றுத் தலைவர் என்ற எதிர்பார்ப்பில் ஒரு செங்கல் நழுவிய தருணம் அது. அதன் பின்னர் விஜயகாந்தையும், குடி பழக்கத்தையும் வைத்து இணையத்தில் பலவாறாக கிண்டலடிக்கப்பட்டார். இன்றும் கூட அது தொடர்கிறது.

பொதுப் பிரச்சினைகள் பற்றி பேசி அவர் மக்களிடம் நெருக்கமானாலும், ‘குடி’ போன்ற அவர்மீதான தனிப்பட்ட தாக்குதல்கள் அவர் மீதான பிம்பத்தை குலைக்கவே செய்தன. ஒரு தலைவன் என்பவன் அறிவு, நடத்தை, நல்லொழுக்கம் போன்ற பல பண்புகளில் அனைவருக்கும் முன் மாதிரியாக இருக்க வேண்டும். மக்களும் அதைத்தான் எதிர்பார்ப்பார்கள். அவ்வாறு எதிர்பார்த்த மக்களிடம் இவரது ‘குடி’ப்பேச்சு நெருக்கத்தை குலைப்பதாகவே இருந்தது. அது ஒரு சிறு குறையாக இருந்தாலும் மக்களின் எதிர்பார்ப்பு குறைந்ததாக தெரியவில்லை.


இந்நிலையில் தான் 2011 சட்டமன்ற தேர்தல் வந்தது. இதுவரை ‘மக்களுடன்தான் கூட்டணி’ என்று முழங்கி வந்தவர், ஒரு சிறு சமரசம் செய்துகொண்டு அஇஅதிமுகவுடன் கூட்டணி வைத்தார். இதற்கு திரைமறைவில் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் அது தற்போது நமக்கு தேவையில்லை. 2011 சட்டமன்ற தேர்தலில் அஇஅதிமுக 174 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. கூட்டணிக் கட்சியான தேமுதிக 29 இடங்களில் வென்று எதிர்கட்சி என்ற நிலையை அடைந்தது. ஆளும்கட்சியாக இருந்த திமுக 23 இடங்களுடன் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

இந்த ஆட்சி மாற்றத்திற்கு பல காரணங்கள் அடுக்கப்பட்டாலும், மக்களுக்கு திமுக ஆட்சி மீதிருந்த கோபம்தான் இந்த ஆட்சி மாற்றத்திற்கான முக்கிய காரணம். ஜெயலலிதா முதலமைச்சராக பதவியில் அமர்ந்தார். மாற்றுத் தலைவராக எதிர்பார்க்கப்பட்ட விஜயகாந்த் இன்று எதிர்கட்சி தலைவர். மக்களுக்கு இந்த செய்திதான் ஒரு நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் கொடுத்தது. இரண்டு திராவிட கட்சிகளையே சட்டமன்றத்தில் பார்த்த மக்களுக்கு மூன்றாவதாக ஒரு கட்சியை பார்த்ததும் ஒருவித நம்பிக்கையில் இருந்தனர்.

திரையில் விஜயகாந்த் பேச்சு கொடுத்த பிம்பம், பிரச்சாரத்தின் பொது அவர் மக்களிடம் காட்டிய நெருக்கம், அதன் மூலம் மக்கள் கொண்ட நம்பிக்கை, என அனைத்தும் சேர்ந்து கொண்டு எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் மீது ஒரு எதிர்பார்ப்பு உருவானதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஜெயலலிதாவின் அதிரடி அரசியல் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதனால் சட்டமன்றத்தில் அவரை எதிர்த்து பேச சரியான ஆள் விஜயகாந்த் அன்றி வேறில்லை என்ற நம்பிக்கையும் ஏற்பட்டது. ஆனால் தற்போது நடக்கும் நிகழ்வுகளோ அவ்வளவு நம்பிக்கை அளிப்பதாக இல்லை.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவி கிட்டத்தட்ட முதல்வர் பதவிக்கு இணையானது. சட்டமன்றத்தில் முதல்வருக்கு அடுத்து எந்த நேரத்திலும், யார் பேசிக்கொண்டு இருந்தாலும் இடைமறித்து பேசும் அதிகாரம் கொண்டது எதிர்கட்சி தலைவர் பதவி. அப்படிபட்ட பதவியை வைத்துக்கொண்டு இவர் என்ன செய்துகொண்டிருக்கிறார்? தற்போது தவறாக செல்லும் ஆளும்கட்சியை தகுந்த கேள்விகள் கேட்டு சரியான வழியில் நடத்தியிருக்க வேண்டாமா? ஆளும்கட்சி தவறு செய்யும்போதெல்லாம் ‘இது தவறு’ என்று சுட்டிக்காட்டும் பொறுப்பு இவரன்றி வேறு யாருக்கு இருக்கிறது?

ஆனால் இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? சமச்சீர் கல்வி பிரச்சினையில் ஜெயலலிதா முரண்டு பிடித்தபோது, எந்த எதிர்ப்பும் காட்டாமல் “குதிரை கேட்டோம்! கழுதைதான் கிடைத்துள்ளது. அதனால் அதையே தற்போது பயன்படுத்துவோம்!!” என்றார். சரியான எந்தவொரு முடிவையும் முன்வைக்காமல் வழ வழவென்று இருந்தது அவரது பதில். பேருந்து கட்டணம், பால் விலை உயர்வு பற்றி கேட்டபோது “ஆளும்கட்சியைப் பற்றி ஆறு மாதம் விமர்சிக்கமாட்டேன். அப்புறம் பாக்கலாம்” என்கிறார்.

விஜயகாந்தின் இதுபோன்ற நடவடிக்கைகள் “மக்களே!! மக்களே!!” என்று அழைப்பாரே! அந்த மக்களின் உணர்வுகள் புரிந்துதான் பேசுகிறாரா என்ற சந்தேகமே வருகிறது. ஒரு வேளை தவறான முடிவு எடுத்துவிட்டோமோ என்ற சந்தேகம் மக்களுக்கு வராமல் இல்லை. பெரும்பாலான பிரச்சினைகளுக்கு இவர் வாயே திறக்காமல் மௌனம் ஒன்றே பதிலாக தந்தார். இவர் செய்ய வேண்டிய வேலைகளை தொண்டு அமைப்புகளும், உச்ச நீதிமன்றமும் செய்தன. அதிலும் ஆளும்கட்சிக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த பல கொட்டுகள் இவர் கொடுத்திருக்க வேண்டியவை. தில்லியில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு தெரிந்த தமிழ் மக்களுக்கான நீதியும், நியாயமும் நம் தமிழக அரசியல் தலைவர்களுக்கு தெரியாதிருப்பது சோகமே!!! 
இந்நிலையில் நேற்று [01-02-2011] புதன்கிழமை சட்டமன்றத்தில் நிகழ்ந்த நிகழ்வுதான் தற்போது அனைவரும் பேசும் பேச்சாக இருக்கிறது. சட்டமன்றத்தில் விஜயகாந்த் பேசினார் என்ற செய்தியறிந்த என் நண்பன் கூறியது, “அட! இவருக்கு பேசக்கூட தெரியுமா?” என்பதுதான். இதுவரை எதிர்கட்சி தலைவராக அவர் பேசாமலிருந்ததே மக்களின் இந்த ஆச்சரியத்திற்கு காரணம். சரி!! பேசினாங்க!! ஆரோக்கியமான விஷயம் பற்றி ஏதும் விவாதித்தார்களா என்றால் அதுவும் இல்லை. வெறும் நீயா? நானா? என்கிற சண்டை.

 

தேமுதிக உறுப்பினர் சந்திரகுமார் தேர்தல் நடவடிக்கை குறித்த விவாதத்தில் ஆளும்கட்சியை விமர்சித்து பேச, அதற்கு பதில் கூறிய ஜெயலலிதா “சங்கரன்கோயில் இடைத்தேர்தலில் நாங்கள் தனித்து வேட்பாளரை நிறுத்தப் போகிறோம். உங்களுக்கு திராணி இருந்தால் நீங்களும் தனித்து வேட்பாளரை நிறுத்துங்கள்” என்று சட்டமன்றத்திலேயே சவால் விடுத்தார். அதற்கு பதிலளித்த விஜயகாந்த் “இடைத்தேர்தலில் ஆளும்கட்சி வெற்றி பெறுவது இயல்பான ஒன்று” என்று கூறினார். பின்னர் வருவாய்த்துறை அமைச்சர் பேச எழுந்தபோது தேமுதிகவினர் கூச்சல் எழுப்பினர். விஜயகாந்த் அமைச்சரை நோக்கி கையை ஆட்டி பேசினார். அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்ததாகக் கூறி அவரையும் மற்ற தேமுதிக உறுப்பினர்களையும் அவையை விட்டு வெளியேற்றும்படி சபாநாயகர் உத்தரவிட்டார்.

 

இந்த நடவடிக்கைகளை காணொளியில் காணும்பொழுது ஒருவித அயர்ச்சியே தோன்றுகிறது. மாற்று அரசியலுக்கான தலைவர் என்று எதிர்பார்க்கப்பட்டவர் அவையில் இன்று நடந்துகொண்ட விதம் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. தனது கட்சி உறுப்பினர்களுக்கு ஒரு முன் மாதிரியாக இருக்க வேண்டியவர், ஏதோ சண்டைக்குப் போவது போல முன்னால் நின்றது நிச்சயம் ஏற்று கொள்ளக்கூடியது அல்ல. இன்றைய தலைமுறைக்கு ஒரு அரசியல் அடையாளமாக இருக்க வேண்டியவர் இவ்வாறு நடந்து கொண்டது ஒரு பின்னடைவே. குறைந்த காலத்திலேயே மக்கள் ஆதரவுடன் எதிர்கட்சி நிலையை எட்டியிருக்கும் தேமுதிகவின் எதிர்காலத்திற்கு இதுபோன்ற நடவடிக்கைகள் நல்லதல்ல. இனியாவது மக்கள் நலனில் அக்கறை செலுத்தி, தெளிவான சிந்தனையோடு சட்டமன்றத்தில் ஆளும்கட்சியின் நிறை, குறைகளை சுட்டிக் காட்டினால்தான் தேமுதிகவின் வளர்ச்சிக்கும் நல்லது. நாட்டிற்கும் நல்லது. இல்லையென்றால் தற்போது இருக்கும் கட்சிகளில் பத்தோடு பதினொன்றாக போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.


 விஜயகாந்த் சட்டமன்ற பேச்சு - காணொளி:




நல்லவங்க...

ShareThis