February 17, 2012

தோனி


 

“நமது கனவுகளை பிள்ளைகள் மேல் திணித்து அவர்கள் வாழ்க்கையை வீணாக்குவதைவிட, பிள்ளைகளின் திறமையை அறிந்து அந்த துறையில் அவர்களின் திறமையை வளர்த்தெடுத்தால், சாதனையும் வெற்றியும் நிச்சயம்.”

இதை அதிகப்படியான செலவில் நகைச்சுவை கலந்து சொன்னால் ‘நண்பன்’. அதுவே கொஞ்சம் வலியோடு தகப்பனாக உணர்ந்து யதார்த்தத்தின் அருகே வந்து சொன்னால் ‘தோனி’.

இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பனாக, அரசாங்க ஊழியனாக, துண்டு விழும் பட்ஜெட்டை சரி செய்ய ஊறுகாய் விற்று பிழைப்பை ஓட்டும் ‘மிடில் கிளாஸ் மாதவனாக’ பிரகாஷ்ராஜ். படிப்பை தவிர வேறு ஏதும் சொத்து அவர்களுக்கு தர முடியாது என்று நிறைய செலவு செய்து பெரிய பள்ளிக்கூடத்தில் படிக்க வைக்கிறார். ஆனால் மகனுக்கோ படிப்பை விட கிரிக்கெட்டில்தான் ரொம்ப ஆர்வம். அப்பாவுக்கோ மகனை MBA படிக்க வைக்க ஆசை. தந்தைக்கும் மகனுக்கும் இந்த புரிதல்கள் ஒரே நேர்க்கோட்டில் வராமல் ஏற்படும் பாதிப்பும், பின்னர் அதனால் ஏற்படும் புரிதல்களுமே ‘தோனி’.

இது வெறும் அப்பா, மகன் படமாக இல்லாமல் இன்றைய கல்வி முறையையே கேள்வி கேட்கிறது இந்த படம்.

“குழந்தைங்கன்னா கஷ்டப்படாமதானே படிக்கணும்?”

“LKG போற குழந்தைக்கு எதுக்கு அத்தனை புத்தகம்? பெரிசாய்ட்டு என்ன மூட்டை தூக்கவா போகுது?”

“டீச்சர் உங்களுக்கே History மட்டும்தான் தெரியும். ஆனா பசங்க மட்டும் எல்லாத்தையும் ஒன்னா படிக்கணும்னா எப்படி?”

இப்படி வசனங்கள் மூலம் பல இடங்களில் கேள்வி கேட்கிறது இந்தப் படம்.

அதை எந்த பிரச்சார நெடியும் இல்லாமல் அழகாக ஒரு கதை மூலம் சொல்லியதில் அழகாக வெற்றி பெறுகிறார் இயக்குனர் பிரகாஷ்ராஜ். நடிப்பிலும் முதலிடம் தட்டி செல்வது இவரே. அதுவும் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் வெட்கமும் கூச்சமுமாக பேச ஆரம்பித்து பின்னர் உணர்ச்சிக் குவியலாக மாறும் இடத்தில் பட்டையை கிளப்பி இருக்கிறார். அடுத்து நடிப்பில் கவனம் ஈர்ப்பவர் மகனாக வரும் ஆகாஷ் பூரி. இடைவேளைக்கு பின்னர் கோமா நிலையில் ஒரே திசையில் நிலைகுத்திய பார்வையுடன் வரும்போது எந்த சலனமும் காட்டாமலே கவனம் ஈர்க்கிறார்.


பக்கத்து வீட்டில் வசிக்கும் ராதிகா ஆப்தே, மகளாக வரும் சிறுமி, காலனி நண்பர்கள், அலுவலத்தில் உடன் பணியாற்றுபவர்கள் என்று அனைவரும் அவரவர் வேலையை சரியாக செய்திருப்பதே இந்த படத்திற்கு பலம்.

இசை – இளையராஜா. ‘’சின்னக் கண்ணிலே’, ‘விளையாட்டா படகோட்டி’ பாடல்கள் கேட்ட மாத்திரத்தில் மனதில் நிற்கிறது. பின்னணி இசையில் இவரது உழைப்பு அபாரம். மகனிடம் மன்னிப்பு கேட்கும் இடத்திலும், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உருகும் இடத்திலும் பின்னணி இசை பலம் சேர்க்கிறது.

 

 படத்தின் இறுதியில் தமிழக முதல்வருடன் பேசும் காட்சி சற்று மிகையாக இருந்தாலும் இப்படி நடந்தால் நல்லா இருக்குமே என்று தோன்றுகிறது. இன்றைய கல்வி முறையின் பாதகத்தை முதல்வரிடம் விளக்கிவிட்டு, “உங்க ஒரே கையெழுத்தால் அடுத்து வரும் தலைமுறையே நல்லா இருக்கும். ஏதாவது செய்யுங்க!!” என்று பிரகாஷ்ராஜ் கூறும் இடத்தில் அரங்கம் முழுக்க பலத்த கைத்தட்டல்.

ஆனால் மார்க் வாங்கும் கல்வி முறை மாற வேண்டுமானால் அதற்கான முயற்சி நம்மிடமும் இருக்க வேண்டும். நம் பிள்ளைகளின் திறமைக்கும், விருப்பத்திற்கும் முன்னுரிமை கொடுத்தாலே போதும். காலமும், தேவையும் சேர்ந்து வேண்டிய மாற்றத்தை தானாகவே கொண்டு வந்துவிடும். போட்டி நிறைந்த இன்றைய சமூக சூழலில் இப்படியான எதிர்பார்ப்பு அசாத்தியம் என்றாலும், அனைவருக்கும் ஒருமித்த சிந்தனை இருந்தால் எதுவும் சாத்தியமே!!

சரி!! அப்போ படம் எப்படி?

17 x 8 = ? இந்த கேள்விக்கு ஒரு நொடிக்கூட தாமதிக்காமல் சட்டென பதில் சொன்னீங்கன்னா அதுதான் ‘தோனி’யின் வெற்றி.

No comments:

Post a Comment

நல்லவங்க...

ShareThis