July 28, 2012

என்டோசல்பான் - உயிரை உறிஞ்சும் பூச்சிக்கொல்லி

2 comments:

அலுவலகம் முடிந்து வீடு திரும்பியதும், இன்றைய செய்திகள் பற்றி இணையத்தில் உலவியபோது ‘என்டோசல்பான்’ பற்றிய செய்தி அதிகமாக அடிபட்டது. உச்ச நீதி மன்றம் மத்திய அரசிடம் என்டோசல்பான் பற்றி விளக்கம் கேட்க, அதற்கு மத்திய அரசு கொடுத்த விளக்கம்தான் இன்று ஊடகம், இணையம் என்று அனைத்து இடங்களிலும் பரபரப்பான விவாதப் பொருளாகிவிட்டது.


 அதாவது, சென்ற ஆண்டு மே மாதமே, உச்சநீதி மன்றம் என்டோசல்பான் தயாரிக்கவும், பயன்படுத்தவும் தடை விதித்திருந்தது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், என்டோசல்பான் தயாரித்த மூன்று நிறுவனங்களின் கையில் உள்ள மூலப்பொருட்களின் அளவு, மற்றும் அவற்றை அகற்றும் வழிமுறைகளைப் பற்றியும் மத்திய அரசை கேட்டிருந்தது.

அதற்கு மத்திய அரசு, “என்டோசல்பானை பயன்படுத்தாமல் அப்படியே அகற்றுவது சுலபம் அல்ல என்றும், மேலும் அரசுக்கு நஷ்டம் வரும் என்றும் அறிக்கை சமர்பித்துள்ளது. அதனால் கேரளா, கர்நாடகா [இந்த இரு மாநிலங்களிலும், அந்தந்த அரசே என்டோசல்பான் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளது.] நீங்கலாக மற்ற அனைத்து மாநிலங்களிலும் என்டோசல்பானை பயன்படுத்த அனுமதி கேட்டும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது”.

மத்திய அரசின் இந்த அறிக்கைதான் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. என்டோசல்பான் பற்றி ஏற்கனவே ஓரளவு தெரிந்தாலும், அதனைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள இணையத்தை மேய்ந்த பொழுது முகநூலில், வேளாண்மை குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.Balachandran Ruthramoorthy அவர்கள் அனைத்து தகவல்களையும் திரட்டி ஒரு பதிவிட்டிருந்தார். அவரின் அனுமதியோடு அந்த கட்டுரையை உங்களுக்காக இங்கே கொடுத்திருக்கிறேன். 

இனி கட்டுரையை படியுங்கள்:

******
நன்றி (வேளாண் நண்பர்கள்)
******
1950களில் கண்டுபிடிக்கப்பட்ட என்டோசல்பான் எனப்படுகின்ற இப்பூச்சிக் கொல்லி மருந்து, உலகெங்கும் தொட பயன்படுத்தப்பட்டு வந்ததன் விளைவாக பல்வேறு நாடுகள் இதனால் பாதிப்பைச் சந்தித்தன. பல்வேறு நாடுகளில் என்டோசல்பான் தெளிக்கப்பட்ட நீரைப் பருகிய கால்நடைகளும், மீன்களும் இறந்து போயின. இதனைத் தொடர்ந்து பயன்படுத்திய உழவர்கள் மடிந்தனர் அல்லது நோய்வாய்ப்பட்டனர். 2002ஆம் ஆண்டு இம்மருந்து நீரில் நச்சுத்தன்மையை பாய்ச்சுவதாகக் கூறி வடஅமெரிக்க மீன் மற்றும் வனத்துறையினர் இம் மருந்தைத் தடை செய்ய பரிந்துரைத்தனர். இவ்வாண்டு வரை ஏறத்தாழ 80க்கும் மேற்பட்ட நாடுகள் என்டோசல்பான் மருந்துகளை தடை செய்துள்ளன.

1995ஆம் ஆண்டு ஐக்கிய நாட்டு சுற்றுச்சூழல் திட்டம் (United Nations Environment Programme - UNEP) மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வேதிப் பொருட்களை தடை செய்ய வலியுறுத்தியது. இதன் விளைவாக மே 2001இல் ஸ்டாக்ஹோம்மில் முடிவு எட்டப்பட்டு மனித இனத்திற்கு கேடு விளைவிக்கும் பல்வேறு வேதிப்பொருட்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டது. 2009ஆம் ஆண்டு இப்பட்டியலில் என்டோசல்பானை சேர்க்கவும் அவ்வமைப்பு ஒப்புக் கொண்டது.

இப்பட்டியலில் என்டோசல்பானை சேர்த்தால், உலகளவில் அப்பொருளைப் பயன்படுத்த தடை விதிக்கப்படும். இதனால் இதனை உற்பத்தி செய்யும் தனியார் பெருநிறுவனங்கள் நட்டமடையும். உலகளவில் அதிகமாக பயன்படுத்தும் நாடாக விளங்கும் இந்திய அரசு, உலகமயப் பெருமுதலாளிகளுக்கு ஏற்படும் இந்த நட்டத்தை தடுக்கவே, இம் மருந்தை தடை செய்ய விரும்பவில்லை. ஸ்டாக்ஹோம் ஒப்பந்தத்தில் இம்மருந்தை இணைக்கவும் இந்தியா எதிர்க்கிறது.

என்டோசல்பான் மருந்திற்கு பதிலாக, மனித இனத்திற்கு கேடு விளைவிக்காத மற்றொரு பூச்சிக்கொல்லி மருந்தை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் சிலர் கூறுகின்றனர். இது தீர்வல்ல. மனித இனத்திற்கு கேடு விளைவிக்காத செயற்கையான வேதிப்பொருட்கள் என ஒன்றும் இருக்க முடியாது. என்டோசல்பான் போன்ற பூச்சிக் கொல்லி மருந்துகள் மட்டுமின்றி, உழவர்களின் உயிரைப் பறிக்கும் அனைத்து விதமான பூச்சிக் கொல்லிகளையும் நாம் முற்றிலும் புறக்கணித்தே ஆக வேண்டும்.


1990களில் இருந்தே இதன் பாதிப்புகள் பெரிய அளவில் வெளிப்பட்டு வந்த நிலையில், கேரள அரசும் இந்திய அரசும் இணைந்து இதுவரை 11 குழுக்கள் அமைத்து இது குறித்து விசாரணை நடத்தியிருக்கின்றன. ஆனால் நிரந்தரத் தீர்வு ஒன்றும் எட்டப்படவில்லை.

வெறும் பூச்சிக் கொல்லி மருந்து என அறிமுகப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த என்டோசல்பான், பூச்சிக் கொல்லி மருந்து மட்டுமல்ல மனித உயிர்களைக் காவு வாங்கும் உயிர்க்கொல்லியாகவும் அது செயல்பட்டு வந்ததை பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், அரசு சாரா அமைப்புகளும் அவ்வப்போது ஆய்வு செய்து வெளியிட்டு வந்தன.


முதியவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் மட்டுமின்றி கருவில் இருந்த குழந்தைகளையும் பாதிப்படையச் செய்த இந்த பூச்சிக் கொல்லி மருந்து ஆண்டுக்கு 3 முறை என 1978லிருந்து 2001ஆம் ஆண்டு வரை கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ள முந்திரிப் பயிர்களில் தெளிக்கப்பட்டு வந்ததாகக் கேரள அரசு இது குறித்து ஆராய்ந்து அளித்த தமது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. கேரள முதல்வர் அச்சுதானந்தன் இம் மருந்தை இந்திய அளவில் தடை செய்ய ஒருநாள் அடையாள உண்ணாநிலை மேற்கொண்டார். ஆனால், இந்திய காங்கிரஸ் அரசு இம்மருந்தை தடை செய்ய விரும்பவில்லை என அறிவித்தது.

என்டோசல்பானில் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கில் கொண்டு, 2001ஆம் ஆண்டு திருமதி. லீலா குமாரி என்பவர் கேரளாவின் மாவட்ட நீதிமன்றம் ஒன்றில், என்டோசல்பான் தெளிப்பதற்கு இடைக்காலத் தடை ஆணையைப் பெற்றார். எனினும், பூச்சிக் கொல்லி மருந்து நிறுவனங்களின் தலையீட்டால் இந்தத் தடை தகர்க்கப்பட்டது. பின்னர், 2003இல் கேரள உயர்நீதி மன்றம் என்டோசல்பான் மருந்தைத் தெளிக்க தடை விதித்த மாவட்ட நீதிமன்றத் தீர்ப்பை உறுதிப்படுத்தி மீண்டும் தடைஉத்தரவு பிறப்பித்தது. தொழில் வழி சுகாதாரத்திற்கான தேசிய நிறுவனம் அளித்த அறிக்கையை முன்னிட்டு கேரள அரசு அம் மருந்தை நிரந்தரமாகத் தடை செய்தது.


ஜூன் 9-2011 இல் வெளியான செய்தி இது

எண்டோசல்பான் - உயிரை உறிஞ்சும் பூச்சிக்கொல்லி ( Human killer Pesticide Endosulfan )


கேரளாவின் என்மகஜே பஞ்சாயத்தில் உள்ள படர் கிராமத்தில் வசிப்பவர், நாராயண பட். அவரது தந்தை புற்றுநோயினால் தாக்கப்பட்டு மரணமடைந்தார். தாய் சிறுநீரகப் புற்றுநோயால் இறந்தார். 35 வயதான அவரது தங்கையும், 22 வயதான மருமகனும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள். இன்னொரு மருமகன் விஷ்ணுவுக்கு வலிப்பு நோயின் பாதிப்போடு மனநிலை பாதிப்பும் இருந்தது. விஷ்ணுவின் இரத்தத்தை பரிசோதித்துப் பார்த்த போது அவரது இரத்தத்தில், 108.0 பி.பி.எம். (Parts-Per-Million) அளவிற்கு என்டோசல்பான் (Endosulfan) என்கிற பூச்சிக் கொல்லி(?) மருந்து இருந்ததைப் பரிசோதனையில் கண்டறிந்தனர்.

2002 இல் ஆறு வயதான சிறுவன் பாலகிருஷ்ணன் மூளையில் கட்டி ஏற்பட்ட நிலையில் இறந்து போக, அவனைக் காப்பாற்றுவதற்கு வசதி, வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் விதியென அவனை அழுகையுடன் வழியனுப்புகின்றனர், அவனது ஏழைப் பெற்றோர்.

நாராயண பட், பாலகிருஷ்ணன் குடும்பத்தைப் போல இவர்களது இருப்பிடத்தைச் சுற்றி அமைந்துள்ள பல்வேறு கிராமங்களிலும் இதுபோன்ற கொடுமைகள் அரங்கேறிக் கொண்டிருந்தன. மனிதர்களுக்கு மட்டுமின்றி, அப்பகுதி மக்களால் வளர்க்கப்பட்டு வந்த கால்நடைகளுக்கும் உடற்கோளாறுகள் ஏற்பட்டு அவதிப்பட்டன. நரம்பு மண்டல பாதிப்புகளுடனும், மனநிலை பாதிப்புகளுடனும், உடல் ஊனமுற்ற நிலையிலும் குழந்தைகள் பிறந்தன. வயதானவர்களுக்கு தோல்நோய், புற்றுநோய் என பல்வேறு பாதிப்புகளும் உண்டாகின. இந்த அசாதாரண உடற்கோளாறுகளின் மூல காரணத்தைக் கண்டறிய யாரும் அவ்வளவு சிரமப்படவில்லை. அவர்கள் வாழும் பகுதி முழுவதிலும் கேரள அரசின் முந்திரித் தோப்பில் தெளிக்கப்பட்டு வந்த என்டோசல்பான் என்கிற பூச்சிக் கொல்லி மருந்தின் பாதிப்பே இது என்று கண்டு பிடிக்கப்பட்டது.

ஏறத்தாழ 1978லிருந்து கால் நூற்றாண்டாக அந்தப் பகுதியில் 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள முந்திரித் தோப்புகளில் தெளிக்கப்பட்டு வந்த இப்பூச்சிக் கொல்லி மருந்தால் தான் அப்பகுதி முழுவதிலும் வாழும் மக்கள் பல்வேறு உடற்கோளாறுகளால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது.

அம்மருந்து கேரளாவில் மட்டுமின்றி, கர்நாடகத்திலும் தடை செய்யப்பட்டது. ஆனால், இந்தியா முழுவதிலும் உள்ள மற்ற மாநிலங்களில் இது பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியக் காங்கிரஸ் அரசு என்டோசல்பான் மருந்தைத் தடை செய்ய மறுத்து வரும் நிலையில், இந்திய அரசின் அம்முடிவுக்கு எதிரான போராட்டம் வலுத்து வருகின்றது. உலகளவில் என்டோசல்பானை அதிகளவில் பயன்படுத்தும் முதன்மை நாடு இந்தியாவே என்பதும் கவனிக்கத்தக்கது.

உணவை உற்பத்தி செய்து உலகின் பசியாற்றும் உழவுத் தொழில் இன்றைக்கு உலகமயப் பொருளியல் வளர வளர நலிந்து போயுள்ளதை நாம் அறிவோம். ஆயினும், உணவு உற்பத்தியை தேவை அடிப்படையில் செய்யாமல், இலாபத்தின் அடிப்படையில் செய்திட பூச்சிக் கொல்லி மருந்து உள்ளிட்டவற்றை 'விஞ்ஞான வளர்ச்சி' என்ற பெயரில் பல்வேறு நாடுகளின் உழவர்களிடையே வலிந்துத் திணித்தது முதலாளியம்.

இரசாயன வேளாண்மை உழவர்களுக்கு இலாபம் தரவில்லை. மாறாகஅவர்களைக் கடனாளி ஆக்கியது. ஆனால் பூச்சிக் கொல்லி நிறுவனங்கள் இலாபத்தில் கொழுத்தன.

பருவநிலை மாறுதலால் புதிய புதிய நோய்கள் உருவாகி பயிர்களை அழிப்பது ஒருபுறம் இருந்தாலும், இரசாயனப் பொருட்களாலும் மருந்துகளாலும், பயிர்களை குறைந்த காலத்தில் வேக வேகமாக வளர்த்திட புதிது புதிதான வேதி மருந்துகளும், புகுத்தப்பட்டன. புதிய புதிய பூச்சிகளும், நோய்களும் பயிர்களைத் தாக்கின. பின், புதிதாக வளர்ந்த பூச்சிகளைக் கொல்வதற்கென பூச்சிக் கொல்லி மருந்துகள் கண்டறியப்பட்டு, உழவர்களை அம்மருந்துகளின் மேல் மோகம் கொள்ள வைத்தன, மருந்து நிறுவனங்கள்.

உழவுத் தொழிலில் மட்டும் 2001ஆம் ஆண்டு உலகெங்கும் பயன்படுத்தப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகளின் அளவு 5.05 பில்லியன் பவுண்டுகள் (5005 கோடி பவுண்டு) என சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை (Environmental Protection Agency - EPA) அமைப்பு கணக்கிட்டது. சற்றொப்ப 31.8 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பூச்சிக் கொல்லி மருந்துகள் அவ்வாண்டு பயன்பாட்டில் இருந்ததையும் அது அறிவித்தது. இவை அனைத்தும் நம் பூமிப்பந்தின் மீது நடத்திய இரசாயனத் தாக்குதலால் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும் என்று எண்ணும்போது அதிர்ச்சியே மேலிடுகின்றது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகள், அவை எதை அழிக்க பயன்படுத்தப்படுகின்றனவோ அதைத் தவிர 98 விழுக்காட்டுப் பொருட்கள் மீதே பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


  
இனி நான்:

பூச்சிக்கொல்லி என்ற பெயரில் நம் கையில் விஷத்தை கொடுத்து நம்மையே திங்க சொல்கிறார்களே!! இது சரிதானா நண்பர்களே!!?? யோசியுங்கள். நமது அடுத்த தலைமுறைகளுக்கு நன்மை பயக்கும் முடிவை எடுக்கும் முக்கியமான ஒரு காலக் கட்டத்தில் இருக்கிறோம். இப்போது நாம் எடுக்கும் முடிவுதான் நமது அடுத்த சந்ததியினர் எப்படிபட்ட வாழ்க்கையை வாழப் போகிறார்கள் என்பதை தீர்மானிக்கும். என்டோசல்பான் என்றில்லை. பூச்சிக்கொல்லி என்ற பெயரில் எந்த விஷத்தையும், நம் மண்ணில் நாம் விதைக்கக் கூடாது. ஆகவே நண்பர்களே!! இந்தக் கட்டுரையை பத்தோடு பதினொன்று என்று விட்டுவிடாமல், முடிந்த வரையில் அனைவரையும் சென்று அடையும் வகையில் பகிர்ந்து கொள்ளுங்கள். இனி விடியும் உலகம் ஆரோக்கியமாக விடியட்டும்.

 சிறிய பின்வீச்சு:

சில மாதங்களுக்கு முன், வயலில் அப்பாவோடு வேலை செய்து கொண்டிருக்கும் போது அவருடன் நடந்த உரையாடல் இது:

"அப்பா! நம்ம வயல்லயும் செடிங்களுக்கு என்டோசல்பான் தெளிக்கிறீங்களா?" என்று கேட்டேன்.

"அதெல்லாம் கிடையாது. ஆரம்பத்துல கொஞ்ச நாள் வாங்கினேன். ஆனால் இப்போ எல்லாம் அதை வாங்குறது கிடையாது." என்று அப்பா கூறினார்.

மனதில் ஒரு இனம் புரியாத நிம்மதி வந்தது. ஆனாலும் அந்த நிம்மதியை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. காரணம் பசுமைப் புரட்சியின் நீட்சியாக, இன்றும் செயற்கை உரங்களைக் கொண்ட விவசாயத்தை விடாமல் அப்பா தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

செயற்கை உரங்களின் பாதிப்புகளையும், இயற்கை விவசாயத்தின் அருமையும், அதன் பலன்களைப் பற்றியும் அப்பாவிடம் எடுத்துக் கூறி அவர் மனதை மாற்றும் முயற்சியில் இப்போது ஈடுபட்டிருக்கிறேன்.

வியசாயக் குடும்பத்தில் இருந்து வந்த நண்பர்களே!! நமக்கு பொறுப்பு இன்னும் அதிகமாகவே இருக்கிறது. உண்மை நிலையை உணர்ந்து கொள்ளுவோம். ஆரோக்கியமான வழி காண்போம்.!!!

‘யாவரும் நலம்'

July 10, 2012

நான் ஈ

4 comments:


தமிழ் சினிமாவில் விலங்குகள் நடிப்பது நமக்கு ஒன்றும் புதிதல்ல. விட்டலாச்சாரியார் காலம் தொட்டு, இப்படி விலங்குகளை நடிக்க வைப்பது வழக்கமான ஒன்றுதான். அதை ராம.நாராயணன் இன்னும் பரவலாக விரிவுபடுத்தினார். அவர் படங்களில்தான் ஆடு, மாடு, குரங்கு, பாம்பு என்று ஒரு விலங்குப் படையே நடித்திருக்கும். “பொண்ணு டைப் அடிக்கிற மாதிரி படம் எடுத்தேன். யாரும் கண்டுக்கல. பாம்பு டைப் அடிக்கிற மாதிரி படம் எடுத்தேன். மக்கள் அமோக ஆதரவு கொடுத்தார்கள்.” என்று அவர் தன்னிலை விளக்கம் வேறு கொடுத்தார். அந்த வரிசையில் தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டமாக விலங்குகளின் வரிசையில்,ஒரு ஈ நடித்திருக்கும் படம்தான் ‘நான் ஈ’.


 கதை என்னவோ எப்பவுமே நாம் பார்த்தும் கேட்டுக் கொண்டிருக்கும் அதே பழி வாங்கும் கதைதான். ஒரு ஊர்ல ஒரு காதலன், காதலி. ஆனால் அந்த காதலியின் மேல் வில்லனுக்கும் ஒரு கண். அவளை அடைய தடையாக இருக்கும் காதலனை, வில்லன் கொன்று விடுகின்றான். இறந்து விட்ட காதலன், ஒரு ஈயாக மறு ஜென்மம் எடுத்து, வில்லனை அழித்து, தனது காதலியை காப்பதே இந்த படத்தின் கதை. பொதுவாக சினிமா விமர்சனம் எழுதும்போது நான் அந்த படத்தின் கதையை கூறுவதில்லை. படம் பார்க்கும்போது சுவாரஸ்யம் குறைந்துவிடக் கூடாதே என்பதுதான் காரணம். ஆனால் இந்த படத்திற்கு கதையை கூறுவதனால் யாதொரு பாதகமும் இல்லை. காரணம், இந்த படத்தை காட்சிகளால் கொண்டு சென்ற விதம். சுமார் இரண்டேகால் மணி நேரம், கவனத்தை சிதற விடாமல் படம் மட்டுமே பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு?

ஒரு ஈயை வைத்து எப்படி கதை சொல்லியிருப்பார்கள் என்ற சிறு ஆர்வத்திலேயே படம் பார்க்க சென்றிருந்தேன். தெலுங்கு ‘ஈகா’ இங்கு மொழி மாற்றி தமிழில் வெளியிட்டிருப்பார்களோ என்ற ஐயமும் கூடவே இருந்தது. காரணம், உதட்டசைவு ஒன்றாக இருக்க, வார்த்தைகள் வேறாக வந்து விழுவது படத்தின் மீதான ஈர்ப்பையே குறைத்து விடும். அப்படியும் சமீபத்தில் என்னை ஈர்த்த மொழி மாற்று திரைப்படம் ‘உருமி’. நிற்க. இப்படி தெலுங்கு தேசத்தில் இருந்து வந்த படம் என்ற காரணம் என்னை தடுத்தாலும், ‘ஈ’யை மையமாகக் கொண்ட படம் என்ற ஒரே காரணத்துக்காக படம் பார்க்க சென்றேன். இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி எனது நம்பிக்கையை மோசம் செய்யவில்லை. மாறாக அவரது மற்ற 8 படங்களையும் தேடி பார்க்கும் அளவுக்கு எனது ஆர்வத்தை தூண்டி விட்டார். ஆமாம். இது அவரது ஒன்பதாவது வெற்றிப் படம்.


முதல் பாதியில் ஒரு முக்கால் மணி நேரம் வெறும் காதல் படமாக செல்ல, நாயகன் நானி இறந்து ஈயாக பிறப்பெடுத்த பின்தான் படம் அசுர வேகத்தில் செல்கிறது. படத்தின் முக்கால்வாசி பணம் வரைகலைப் பணிகளுக்காகவே செலவிடப்பட்டிருக்கிறது. மற்ற விலங்குகள் என்றால் பயிற்சி கொடுத்து நடிக்க வைத்து விடலாம். ஆனால் ஒரு ஈயை எப்படி நடிக்க வைப்பது? அதற்குத்தான் இவ்வளவு செலவும். படத்தின் மொத்த செலவு 30 கோடியாம். அவர்கள் செலவு செய்ததும், பட்ட கஷ்டமும் வீண் போகவில்லை. மொத்த படக்குழுவினருக்கும் ஒரு பெரிய பூங்கொத்து. பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
இயக்குனருக்கு அடுத்து, தனித்த பாராட்டை அள்ளிக்கொள்பவர் ஒளிப்பதிவாளர் செந்தில்குமார். இல்லாத ஒரு ஈ. ஆனால் அது பயணிக்கும் பாதை, வேகம், ஒரு ஈயை காட்டும்போது அதை சுற்றியுள்ள பொருட்கள் தெரியும் விதம் என்று ஒவ்வொன்றையும் கவனத்தில் கொண்டு மிக அற்புதமாக படம் பிடித்துள்ளார். அதுவும் மாந்திரீக பூஜை [தெலுங்கு சினிமாவையும் மாந்திரீகத்தையும் பிரிக்க முடியாது போல..!!] செய்யும் அந்த ஒரு அறைக்குள்ளேயே ஈக்கும், குருவிகளுக்கும் நடக்கும் துரத்தல்கள் மிக அபாரம். அதே போலதான் அந்த விபத்துக் காட்சியும். ஒளிப்பதிவாளருடன் கூடவே அதே அளவு பாராட்டுக்களை பெற்றுக் கொள்பவர் வில்லனாக வரும் சுதீப். இல்லாத ஒரு ஈயை, இருப்பதாக கற்பனை செய்து கொண்டு, அதற்கு ஏற்றார் போல நடிப்பை வெளிப்படுத்துவது சாதாரண விஷயம் அல்ல. ஒரு நடிகன், சரியான ஒரு இயக்குனரிடம் மாட்டினால் எந்த விதத்திலும் வெளிப்படலாம் என்பதற்கு இவரும் ஒரு உதாரணம்.


படத்திற்கு பெரும் பலமாக இருப்பது மரகதமணியின் இசை. ஈ என்று சாதாரணமாக ஒதுக்கி விடாமல், அது செய்யும் சேட்டைகளை நம்மை ரசிக்க வைக்க இசை பெரும் பங்கு வகிக்கின்றது. அதுவும் ‘ஈடா..!! ஈடா..!!’ பாடலில் அதன் இசையும், பாடலுக்கு ஏற்றவாறு காட்சிப்படுத்திய விதமும் தொடர்ந்து கைத்தட்டல்களை அள்ளிக் கொண்டது. ஈ சம்பத்தப்பட்ட காட்சிகளில் இசையமைப்பாளர் தனிக் கவனம் செலுத்தியிருப்பது நன்று தெரிகின்றது.

நாயகி சமந்தா. கதையின் தேவைக்கேற்ப அழகாக வந்து போகிறார். நானி செய்யும் காதல் குறும்புகளால் ஈர்க்கப்படும்போதும், அதை வெளிக்காட்டாமல் அவரை அலைய விடும்போதும், ஈதான் நானி என்று அறியும் வேளையிலும், சுதீப்பை எதிர்பாராத வேளைகளில் சந்திக்கும்போது காட்டும் அதிர்ச்சியில் எனக்கும் நடிக்கத் தெரியும் என்று சொல்லாமல் சொல்லிவிடுகின்றார்.


படத்தின் இன்னொரு இனிய அதிர்ச்சி சந்தானம். மொக்கையாக எடுக்கப்படும் படங்களிலேயே சந்தானம் காட்சிகளை இணைத்து விளம்பரப்படுத்தும் இன்றைய சூழலில், சந்தானம் இருந்தும் அவரை முன்னிலைப் படுத்தாமல் ஈயை மட்டுமே நம்பி விளம்பரப்படுத்தி வெற்றியும் கண்டிருக்கிறார்கள் படக்குழுவினர். படத்தின் நடுவில் திடீரென சந்தானம் வந்து, வந்த வேகத்தில் காணாமல் போய் விடுகின்றார். சரி!! மற்ற படங்கள் போல சந்தானத்தை வைத்து படத்தை வியாபாரம் செய்யும் உத்தி என்று நினைத்தால், படத்தின் முடிவில் அதற்கும் ஒரு விடை வைத்திருக்கிறார் இயக்குனர். படம் முடிந்துவிட்டது என்று அவசர அவசரமாக அரங்கை விட்டு வெளியே ஓடியவர்கள், மீண்டும் திரும்பி வந்தார்கள். அவசரக்குடுக்கைகள்.

அப்புறம் இன்னொரு விஷயத்தை இங்கே சொல்லியே ஆகணும். இதுவரை அக்கட தேசத்திலிருந்து சொல்லியோ, சொல்லாமலோ அவர்கள் படங்களையும், நடனங்கள், காட்சிகள் என்று உருவி தமது படங்களில் வைத்துவிடுவார்கள் நமது தளபதிகளும், அடுத்த முதல்வர்களும். ‘சொந்தமா யோசிச்சு செய்ங்கடா’ என்று பலரும் திட்டியிருப்பார்கள். நானும் திட்டினேன். ஆனால் அப்படி திட்டியதற்கு இப்போது வருத்தப்படுகின்றேன். ஏனென்றால் படத்தில் ஈ செய்யும் பல சாகசக் காட்சிகள் நமது நாயகர்களை கிண்டல் செய்யும் விதமாகவே இருக்கிறது. அதுவும் படம் முடிந்தவுடன் வரும் அந்த இறுதி நடனக் காட்சி [ஐயையோ!! சொல்லிட்டேனே!!] மிக அற்புதம். அப்படி நம்ம நாயகர்கள் உருவி நடிக்கவில்லை என்றால் அந்த இறுதிக் காட்சியை ரசித்திருக்க முடியுமா என்பது சந்தேகமே!!

பலருக்கும் இது குழந்தைகளுக்கான படம் என்று படத்தை பார்த்த மாத்திரத்திலேயே தோன்றக் கூடும். ஈ செய்யும் சேட்டைகள் கண்டிப்பாக குழந்தைகளை ஈர்க்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. ஆனால் கொலை, காமம், வன்மம் என்று கலந்து கட்டிய இந்த படம் குழந்தைகளுக்கான படம்தானா? யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது. 
எப்படியோ!! 'யாவரும் நலம்' என்றிருந்தால் மகிழ்ச்சிதானே!!

நல்லவங்க...

ShareThis