May 30, 2013

வாழ்க்கை வாழ்வதற்கே..!!!

1 comment:


பள்ளியில் நடந்த ஒரு சுவையான சம்பவம்:

அது ஒரு தனியார் பள்ளி. அப்போது 9-வது படித்துக் கொண்டிருந்தோம். எல்லா பள்ளிகளிலும் இருப்பது போல மாணவர்கள் நாங்கள், எங்கள் படிக்கும் திறனுக்கு ஏற்றவாறு அமர வைக்கப்பட்டிருந்தோம். முறையே நன்றாக படிப்பவர்கள் முதல் வரிசைகளில், சுமாராகப் படிப்பவர்கள் நடு வரிசைகளிலும், ஏனைய மாணவர்கள் கடைசி வரிசைகளில் அமர்த்தப்பட்டோம்.

 
எனது நண்பன், படிப்பில் பின்தங்கி இருந்தாலும், மற்ற விஷயங்களில் ஆர்வம் அதிகம். அவனது வார்த்தை விளையாட்டுக்கும், சேட்டைகளுக்கும் எங்களில் ஒரு ரசிகர் வட்டமே இருந்தது. சுருக்கமாக அவன் இருக்கும் இடத்தில் கலகலப்புக்கு பஞ்சம் இல்லை. என்னதான் அனைத்து விஷயங்களிலும் சுட்டியாக இருந்தாலும் படிப்பு வராதவன் என்ற முத்திரை விழுந்துவிட்டால் அவனுக்கு மதிப்பு எது? இதற்கு அந்த நண்பனும் விதிவிலக்கில்லை. தேவைப்பட்ட நேரத்தில் அவனை பயன்படுத்தும் ஆசிரியர்கள், படிப்பு விஷயம் என்று வந்துவிட்டால் அவனை அவமானப்படுத்த தவறியதில்லை.

அப்படிபட்ட என் நண்பனிடம் சிக்கி விழித்த ஒரு ஆசிரியரைப் பற்றியது இது.

அன்றும் எப்போதும்போல வகுப்பு நடந்துக் கொண்டிருந்தது. நாங்கள் அசுவாரசியமாகப் பாடத்தை கவனித்துக் கொண்டிருக்க, என் நண்பன் வழக்கம் போல ஏதோ சேட்டையில் ஈடுபட்டிருந்தான். அவனது செயலால் ஈர்க்கப்பட நாங்கள், கவனம் கலைந்து அவனை ரசிக்க தொடங்கினோம். ஒரு நேரத்தில் சலசலப்பும், சிரிப்பு சத்தமும் எங்களையும் மீறி அதிகமாக வெளிப்பட்டுவிட்டது. இதை கவனித்த ஆசிரியர், என் நண்பனை எழுப்பி என்னவென்று விசாரித்தார்.

“என்ன சார்? அங்க தனியா பாடம் நடத்துறீங்களா?”, என்றார் ஆசிரியார்.

“இல்ல சார். நீங்கதான் பாடம் நடத்துறீங்க. நாங்க கேட்டுக்கிட்டிருக்கோம்!!” என்றான் நண்பன்.

அவ்வளவுதான் ஆசிரியர் கடுப்பாகிவிட்டார். வகுப்பின் வாசலைக் காட்டி, “I say you get out..!!” என்று கத்தி விட்டார்.

எங்களுக்கோ திக்கென்றது. எங்கே அவனோடு சேர்ந்து சிரித்த எங்களையும் வெளியே அனுப்பிவிடுவாரோ என்று பயந்து விட்டோம்.

நண்பன், ”சார்..!!” என்றபடி தயங்கி நின்றான்.

அவர் முறைப்புடன் வாசலைக் கை காட்ட, நண்பன் புத்தகத்துடன் வெளியே சென்றுவிட்டான்.

ஆசிரியர் மீண்டும் பாடத்தை நடத்த தொடங்கினார்.

சிறிது நேரத்தில், எங்கள் வகுப்பறையிலிருந்து மூன்றாவது வகுப்பில் சிறிது சலசலப்பு கேட்டது. அப்போதுதான் ஆசிரியருக்கும், எங்களுக்கும் நினைவு வந்தது. அது பள்ளி முதல்வர் வரும் நேரம். ஆசிரியர் கொஞ்சம் பதட்டமானார். அந்த பள்ளியில் பல ஆசிரியர்கள் மாணவர்களை பாரபட்சத்துடன் நடத்தினாலும், பள்ளி முதல்வர் அப்படி இல்லை. மாணவர் ஒருவர் கூட அனாவசியாமாக தண்டிக்கப்படக்கூடாது என்று கூறுபவர். அதனால்தான் ஆசிரியர் பதட்டமடைந்தார். பள்ளி முதல்வர் வந்தால் அனாவசியமாக அவர் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டுமே!!

அதனால் நண்பனை உள்ளே வருமாறு சைகை காட்டினார். அவனுக்கு புரியவில்லை.

“என்ன சார்?” என்று வெளியே நின்றபடியே கேட்டான். ஆசிரியர் இன்னும் பதட்டமாகிவிட்டார். முதல்வர் வந்துவிடுவாரோ என்ற அவசரத்தில் மீண்டும் உள்ளே வருமாறு சைகை காட்டினார். அவன் புரியாமல் விழித்தான். ஆசிரியருக்கோ கோபமும், பதட்டமும் அதிகமாகி விட்டது. வேகமாக வெளியே வந்தார். அவர் அடிக்கத்தான் வருகிராரோ என்று நண்பன் பயந்து விட்டான்.

வேகமாக வெளியே வந்தவர், வகுப்பின் உள்ளே கை காட்டி, “I say you get out..!!” என்று கத்திவிட்டார். உள்ளே எங்களுக்கும் கேட்டுவிட்டது. கேட்ட மாத்திரத்தில் நாங்கள் அனைவரும் குபீர் என சிரித்து விட்டோம். அவர் என்ன சொன்னார் என்று அவருக்கு புரியவில்லை போல. உள்ளே வந்து எங்களை அதட்டிவிட்டு, வெளியே சென்றார். மீண்டும் அதேபோல வகுப்பின் உள்ளே கை காட்டி, “I say you get out..!!” என்றார்.

இப்போதுதான் அவர் தன்னை வகுப்புக்குள்ளே போகச் சொல்கிறார் என்று நண்பனுக்கு புரிந்தது. விட்டால் போதுமென்று அவன் உள்ளே வந்து அமர்ந்துகொண்டான்.
அன்றிலிருந்து அதை நினைத்து நினைத்து நாங்கள் சிரிக்காத நாளில்லை.

இன்றுவரை அந்த ஆசிரியருக்கு தான் தவறாக சொல்லிவிட்டோம் என்று உணர்ந்துகொண்டாரா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால், நண்பர்கள் நாங்கள் எப்போது ஒன்று கூடினாலும் அவரைப்பற்றி பேசாமல் பிரிவதில்லை.

நன்றாகப் படிக்கிறோம் என்று அடையாளப்படுத்தபட்ட நாங்கள், நகரங்களுக்கு வந்து கம்ப்யூட்டர் தட்டிக்கொண்டிருக்கிறோம். படிக்க லாயக்கில்லை என்று ஒதுக்கப்பட்ட என் நண்பன், இன்று ஆசிரியராகி பல மாணவர்களை படிப்பித்துக்கொண்டிருக்கிறான்.

=======================================

ஆகவே இன்றைய மாணவர்களே!! பள்ளி/கல்லூரி படிப்பும், அதன் மூலம் பெரும் மதிப்பெண்களும் நமக்கு ஒரு அடையாளம் மட்டுமே!!! அதுவே வாழ்க்கை அல்ல. வாழ்க்கை மூலம் நாம் பெறும் அனுபவங்களைக் கொண்டு நம்மை நிரூபிப்பதன் மூலமே நமது தனித்த அடையாளத்தை பெற இயலும். இன்று வாங்கும் மதிப்பெண்களே நமது வாழ்க்கை அல்ல. அதையும் தாண்டி நாம் சந்திக்கவேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன.

நல்ல மதிப்பெண்கள் வாங்கியிருக்கீங்களா?? சந்தோஷம். உங்களுக்கான கதவு டாக்டர், இஞ்சீனியர், வக்கீல் என்று ஒரு சிலதான். அதன் வழியே செல்லுங்கள். வாழ்த்துக்கள்.



குறைந்த மதிப்பெண்கள்தான் வாங்கியிருக்கீங்களா?? ரொம்ப ரொம்ப சந்தோஷம்..!!! உங்களுக்கு கதவு என்பதே இல்லை. நீங்கள் விரும்பிய பக்கம் செல்லுங்கள். அனுபவங்கள் என்ற செல்வம் உலகெங்கும் கொட்டிக் கிடக்கின்றது. அள்ளி வாருங்கள். அதன் மூலம் உங்கள் விருப்பம் போல ஒரு தொழிலை தொடங்குங்கள். முதலாளி ஆகுங்கள். அதில், நன்றாகப் படித்த உங்கள் நண்பர்களுக்கு வேலை கொடுங்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே..!!! வெற்றி நிச்சயம் உனக்கே..!!!

‘யாவரும் நலம்’

நல்லவங்க...

ShareThis