September 27, 2011

உணவகம் செல்கிறீர்களா? ஒரு நிமிடம்....

2 comments:
நமது முகநூல் குழுமம் கேட்டால் கிடைக்கும் ASK மூலம் நுகர்வோர் நலன் பற்றி பல நல்ல விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றது. விவாதம் மட்டும் அல்லாமல் பல பிரச்சினைகள் சம்பந்தப்பட்டவரிடம் எடுத்து செல்லப்பட்டு, அதற்கு தீர்வும் காணப்பட்டு வருகிறது.  வாழ்த்துகள்!!
இந்த குழுமத்தில் முன்வைக்கப்பட்ட பல பிரச்சினைகளில் அதிகம் அடிபட்டது உணவகங்களின் முறையற்ற சேவை. அதைப் பற்றி பலரது கருத்துகளைப் படித்தபோது எனக்கு சில எண்ணங்கள் தோன்றியது. 
 

அதாவது,  உதாரணத்திற்கு பல கிளைகள் கொண்ட உயர்தர உணவகத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.

அங்கு ஒரு சாப்பாட்டின் விலை ரூ.150 என வைத்துக்கொள்வோம்.

அந்த சாப்பாட்டிற்குத் தேவையான மூலப்பொருளின் விலை, தயாரிப்புச் செலவு, பரிமாறுபவரின் சேவை, பிற சேவைக் கட்டணம், வரிகள், நிறுவனரின் லாபம் என அனைத்தையும் உள்ளடக்கித்தான் அந்த 150 ரூபாய் நிர்ணயம் செய்யப்படுகின்றது. [எனது சிந்தனைக்கு எட்டியவரை இங்கு கொடுத்துள்ளேன். விலையின் உள்ளடக்கத்தில் ஏதேனும் கூடக்குறைய இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.]

இதே சாப்பாடு mall-களில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டால் குறைந்தது 20 ரூபாயாவது அதிகமாக இருக்கும். இங்கு self-service தான். சாப்பாட்டை வாங்கிக்கொண்டு, தண்ணீரும் வாங்கிக்கொண்டு இடம் பிடித்து சாப்பிட வேண்டும். இத்தனைக்கும் இந்த இரண்டு உணவகங்களும் ஒரே நிறுவனத்தின் கீழ் வருபவை.
இப்போது சில அலசல்கள்:

1. சாப்பாடு என்பது எங்கு தயார் செய்தாலும் ஒரே மாதிரிதான் கஞ்சி வடிப்பார்கள், ஒரே மாதிரிதான் குழம்பு கொதிக்கும், எல்லாம் ஒரே கடையில் வாங்கப்பட்ட மாளிகை சாமான்கள்தான்... அப்புறம் ஏன் இந்த விலை வித்தியாசம்?


2. தனி உணவகத்தில் சென்று அமர்ந்தால், ஒரு டம்ளர் தண்ணீர் வைத்துவிட்டுதான் 'சாப்பிட என்ன வேண்டும்?' என்றோ அல்லது menu card கொடுப்பார்கள். ஆனால் mall-களில் தண்ணீர் தருவதைப் பற்றிக் கூட யாரும் கவலை கொள்வதில்லை. ஏன்? [இதற்கு கேட்டால் கிடைக்கும் ASK மூலம் சில தீர்வுகள் கிடைத்துள்ளது.] தனி உணவகத்தில் மினரல் வாட்டர் நமக்குத் தேவைப்பட்டால் மட்டுமே நாம் வாங்கிக்கொள்ளலாம். ஆனால் mall-களில் உள்ள உணவகங்கள் வடிக்கையாளர்களை தனியாக தண்ணீர் வாங்க நிர்பந்திக்கின்றன.

3. தனி உணவகத்தில் நாம் நிம்மதியாக அமர்ந்து காற்றாட அல்லது ஏ/சி குளிரில் நிதானமாக சாப்பிட முடியும். ஆனால் mall-களில் உள்ள உணவகங்களில் இடம் பிடிக்க நாம் ஓட வேண்டும். கூடுதலாக காசு கொடுத்து சாப்பாடும் வாங்கிவிட்டு, அதை பத்திரமாக இடம் தேடி அமர்ந்து சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டாலும் நிம்மதி இருக்குமா? நிச்சயம் இருக்காது... இது ஏதோ சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்வது போலதான். 
[இந்த இடங்களில் ஒரு விடுமுறை தினத்தை நினைத்துப் பாருங்கள்!!]

4. mall உணவகங்களில் இன்னொரு கொடுமை, அவர்கள் வைத்து இருக்கும் dining table. இதை வடிவமைத்த engineer யாருங்கோ? அதப் பாத்தீங்கன்னா, அந்த table-ல் ஒருவர் மட்டுமே அமர்ந்து சாப்பிட முடியும். ஆனால் அதை சுற்றி 4 இருக்கையை போட்டுவிட்டு, 1000 பேர் வரை அமர்ந்து சாப்பிட எங்களிடம் வசதி இருக்கிறது என்று கூசாமல் சொல்கிறார்கள். [ஒரு விடுமுறை தினத்தில் இந்த உணவகத்துக்குப் போய் பாருங்கள். சந்தைக்கடைக்கு மாறி வந்துவிட்டோமா என்று தோன்றும்.]

இப்படியும் இன்னும் பல வழிகளிலும் நமக்கு எந்த அடிப்படை வசதியையும் தராமல் நம்மிடம் பணம் பிடுங்குவதை மட்டுமே குறிக்கோளாக வைத்திருக்கிறார்கள்.

இவர்களை என்ன செய்யலாம்??
பேசாம Cableசங்கர் பரிந்துரைக்கும் சாப்பாட்டுக்கடைக்கே செல்லலாம் என்பது என் எண்ணம். நீங்க என்ன சொல்றீங்க?


September 16, 2011

எங்கேயும் எப்போதும்.. - பாதுகாப்பான பயணத்திற்கு

2 comments:
இன்றைய காலக்கட்டத்தில் பரவலாக அடிக்கடி பத்திரிக்கை, தொலைக்காட்சியில் அடிபடும் செய்திதான் இந்த படத்தின் கருப்பொருள். அது... விபத்து...

“இரண்டு பேருந்துகள் நேருக்குநேர் மோதிக் கொண்டதில் 6 பேர் உயிரிழப்பு. 20 பேர் படுகாயம்..”


“நின்றுகொண்டிருந்த கார் மீது லாரி மோதியதில் காரிலிருந்த அனைவரும் சம்பவ இடத்திலேயே மரணம்...”


“அரக்கோணம் அருகே ரயில்கள் மோதி கோர விபத்து. இதுவரை 10 பேர் உயிரிழப்பு. 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்.”

இதுபோன்ற செய்திகளை நாம் தினமும் கடந்து வந்திருப்போம். விபத்துகள் கை மீறிய நேரத்தில் தவிர்க்க முடியாதுதான். ஆனால் அதுவே அனுதினமும் நடக்கும்போது, நாம் அந்த வலிகளெல்லாம் கடந்துபோய் வெறும் செய்தியாகவே பார்க்கிறோம்.

அப்படிபட்ட ஒரு விபத்தின் கோர முகத்தினை, அந்த வலிகளுடன் மிக நெருக்கமாக காட்டும் படம்தான் “எங்கேயும் எப்போதும்....”.

கதை என்று இங்கே குறிப்பிட்டு சொல்ல முடியாது. இது ஒரு பயணம். சென்னை-திருச்சி இடையே நிகழும் பயணம். ஒரு பயணத்தை மிக நெருக்கமாகப் பார்த்த அனுபவமே கிடைக்கிறது. நெருக்கமாக என்றால் எப்படி? ஒரு பேருந்தை சுத்தம் செய்வது, சக்கரம் மாற்றுவது என தயார் செய்வதிலிருந்தே காட்டுகிறார்கள். அப்படிபட்ட பயணம், ஜெய்-அஞ்சலி, சர்வானந்த்-அனன்யா இந்த காதல் இணைகள் மூலம் சொல்லப்படுகிறது.

காதலனை தேடி வந்த அனன்யா, அவனைக் காண முடியாமல் தன் ஊரான திருச்சிக்கு ஒரு தனியார் விரைவுப் பேருந்தில் சென்னையிலிருந்து பயணமாகிறாள்.

காதலி அஞ்சலியை தன் ஊருக்கு அரசு விரைவுப் பேருந்தில் திருச்சியிலிருந்து அழைத்து செல்கிறார் ஜெய். அதே பேருந்தில் அனன்யாவை தேடி வந்த சர்வானந்தும் சென்னைக்கு கிளம்புகிறார்.

சரியா சொல்லிட்டேனா?

இதுதான் கதையான்னு கேட்டா... கண்டிப்பா இல்லை. ஒரு அறிமுகம் அவ்வளவுதான்.

இந்த படத்தின் சிறப்பே, படத்தில் வரும் ஒவ்வொரு character-ன் detailingதான். ஒரு 4 மணி நேர பயணத்தில் வரும் நிகழ்வுகளும், எதிர்பாராமல் நிகழும் கோர விபத்தும் அதன் விளைவுகளையும் மிக அருமையாக காட்சிகளாக்கியிருக்கிறார்கள்.

முதன் முதலாக மகளின் முகத்தைக் காண செல்லும் Dubai return அப்பா, விளையாட்டில் வெற்றிக் கோப்பையுடன் ஊர் திரும்பும் மகளிர் அணி, பேருந்தில் அனைவருடனும் பேசி விளையாடும் வாயாடிச் சிறுமி, மனைவியை ஊருக்கு அனுப்பும் பிரிவைத் தாங்காமல் தானும் கிளம்பும் கணவன், பக்கத்தில் அமர்ந்த இளம்பெண் மீது உடனடி ஈர்ப்பு கொள்ளும் இளைஞன், பேருந்தில் தூங்கிவிட்டு வண்டி நிற்கும்போதெல்லாம் பையைத் தூக்குபவர்... இப்படி பலவிதமான பயணிகள்... நிச்சயம் நாம் அனைவரும் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் மேற்கொண்ட பயணங்களில் ஒன்றுதான் இதுவும்.


பயணம் பற்றிய படம் என்றாலே ஏகப்பட்ட துணை நடிகர்கள் தேவைப்படும். அதுவும் விபத்து, அதன் பின்னர் மீட்பு, மருத்துவமனை என மக்கள் கூட்டம் அதிகம் தேவைப்படும் கதைக்களன். இந்த மாதிரி படத்தில் கூட்டத்தில் உள்ளவர்களின் முகபாவங்கள் ரொம்ப முக்கியம். ஆனால் பெரும்பாலான படங்களில் யாரேனும் காமெராவை பார்த்தோ அல்லது அசந்தர்ப்பமாக காட்சிக்கு ஒவ்வாமல் சிரித்து வைப்பார்கள். [உதாரணம்: ‘பெரியார்’ படத்தில் காங்கிரஸ் கட்சியை விட்டு பெரியார் வெளியேறும்போது மாநாட்டிற்கு வந்திருக்கும் தொண்டர்களுக்குள் கைகலப்பு வந்துவிடும். அந்தக் காட்சியில் சண்டை போடுபவர்கள் ‘என்ன மச்சான்? எப்படி இருக்கே?’ என்பதுபோல், தட்டிக்கொண்டும் சிரித்துக்கொண்டு இருப்பார்கள்.]

ஆனால் இந்தப் படத்தில் கூட்டத்தில் வரும் கடைசி மனிதரின் முகபாவம் வரை மிகச்சரியாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. அதுதான் படத்தின் உண்மைத்தன்மைக்கு அடித்தளம் சேர்க்கிறது. விபத்து நிகழும்போது ஓட்டுனர் முதல் கடைசி இருக்கை பயணி வரை அனைவரின் வலியை துல்லியமாக காட்டும் இடத்தில் ஒளிப்பதிவாளர் வெற்றி பெறுகிறார். தாறுமாறாக விழும் பைகளும், உடைந்து சிதறும் கண்ணாடி சில்லுகளும்... அப்பப்பா... நமக்கும் அடிபட்டது போல மனது கனத்துப்போனது. ஒளிப்பதிவாளரும், எடிட்டரும் கைகோர்த்து வேலை செய்திருக்கிறார்கள். வாழ்த்துகள்.

பொது இடங்களில் வரும் அனைத்து காட்சிகளிலும் அவ்வளவு யதார்த்தம். முக்கியமாக நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள், அவை படம்பிடிக்கப்பட்ட விதம்.... மிக அருமை.

படத்தில் வரும் ‘பளிச்’:

1. நாலு துணிக்கு 6000 ரூபாயா? இதுக்கு சாரதாஸ்-ல 300-400 ரூபாய்ல வாங்கிருக்கலாம்,

2. “சீக்கிரம் போனை எடுங்கப்பா!!” என செல்பேசியின் வரும் குழந்தையின் Ring Tone. அதற்கு ஒவ்வொரு முறையும் அந்த தந்தையின் மகிழ்ச்சி கலந்த பாசமான முகபாவம்,

3. இளம்பெண் பேனா கேட்டதும், பக்கத்திலிருப்பவர் சட்டையிலிருந்து எடுத்து தரும் இளைஞன்,

4. புதிதாக திருமணமாகி மனைவியை பிரிய முடியாமல், நகரும் பேருந்தை நிறுத்தி ஏறும் கணவன்,

 

5. காதல் என்றவுடன், உணர்வுப்பூர்வமாக சரி என்று சொல்லாமல், அறிவுப்பூர்வமாக யோசித்து முடிவு எடுக்கும் அஞ்சலி,

6. தன்னை காதலிப்பதாக இம்சை செய்பவனிடம் ‘என் ஆளைப் பாருடா!!’ என ஜெய்-யை அனுப்புவதும், அடிபட்டு வரும் ஜெய்க்கு மருந்து போடுவதும் கல... கல.... இங்கு ஒரு சண்டைக்காட்சிக்கு வாய்ப்பிருந்தும் அதைக் காட்டாமல், அடுத்தக் காட்சியில் சொல்லியிருப்பது இன்னும் கல.... கல.....

7. Under play acting கேள்விப்பட்டிருக்கோம். ஆனா ஜெய் இவ்ளோ underplay செய்வாரா? Weldone ஜெய்!! அதுவும் “மாசமா! ஆறு மாசமா!!” பாடலில் தோளைக் குலுக்கி ஆடுவது மிக அருமை.

8. சென்னைக்குப் புதிதாக வரும் அனன்யாவின் மிரட்சியான பார்வை. அந்த ‘கோவிந்தா! கோவிந்தா!!’ பாடல்... காட்சிக்கோர்வையில் பாடலுக்கு தனிச்சிறப்பு சேர்த்து, கூடவே சென்னையை சுத்திக் காட்டுகிறார்கள்.


9. வழித்துணையாக வரு சர்வானந்துடன் எச்சரிக்கையாகப் பழக ஆரம்பித்து, பின்னர் தவிப்புடன் பிரிவது வரை நன்றாக செய்துள்ளார் அனன்யா. நாடோடிகள் படத்துக்கு பின்பு இவர் தமிழிலில் நடிக்கும் படம் இதுதான். நல்லா நடிச்சா தமிழ்ல வாய்ப்பு கிடைக்காது போல!!!

10. இயக்குனர் எந்த சமரசமும் செய்துகொள்ளவில்லை என்பது பேருந்துகளை பயன்படுத்தியதிலிருந்தே தெரிகிறது. ஒரு பக்கம் அரசின் SETC, மறுபக்கம் தனியார் OMNI பேருந்து. [பொதுவாக பிரச்சினை எதுவும் வேண்டாமென்று ஏதோ ரெண்டு ரெண்டு பேருந்து எனக் காட்டியிருப்பார்கள். விபத்து என்பது துறையை சார்ந்தது அல்ல. ஓட்டுனரின் கவனக்குறைவே காரணம். இதில் அரசு என்ன? தனியார் என்ன?]

படத்தில் இன்னும் பல சிறப்பான சங்கதிகள் இருக்கு. எல்லாத்தையும் இங்கே சொல்ல முடியாதே!! திரையரங்குக்குப் போய் பாருங்க...

அப்போ! படத்துல குறைகளே இல்லையா?

ஆங்காங்கே சில குறைகள் இருக்கு. ஆனா இதுபோன்ற படத்துக்கு குறைகளை சுட்டிக்காட்டி அதன் வீச்சைக் குறைக்க விரும்பவில்லை. படம் போகிற போக்கில் அந்த குறைகள் கண்களுக்கு புலப்படாது என்பதே உண்மை.

இனி ஓட்டுனர்களுக்கு விபத்து பற்றிய விழிப்புணர்வு கொண்டுவர வேண்டுமா? பக்கம் பக்கமாக பாடம் எடுக்க வேண்டாம். இந்த படத்தை பார்க்க வைத்தாலே போதும்.

ஒரு பயணத்தின் அனைத்து கோணங்களையும் துல்லியமாக அலசி அதை ஒரு விபத்து மூலம் வலியுடன் கூறியிருக்கிறார் இயக்குனர் சரவணன்.

திரையில், இனிப்பு தடவிய மருந்தாக ஒரு நல்ல செய்தியை சொன்னதற்கு வாழ்த்துகள்.
அரங்கம் பக்கம்:  
1.பள்ளி, கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு வந்த சில அராத்துகள் காட்சிக்கு காட்சி நக்கல் பண்ணிக் கொண்டிருந்தார்கள். விபத்துக் காட்சியின்போது வாயை மூடியவர்கள், கடைசி வரை வாயை திறக்கவில்லை.
2. படம் முடிந்ததும் என்ன அவசரமோ?? அப்படி ஓடுகிறார்கள். இந்த மாதிரி படத்துக்கு நாம் கொடுக்கும் அதிகபட்ச மரியாதையே கைதட்டால்தான். அதைக்கூட ஒருவரும் செய்யவில்லை. நான் கை தட்டியதும் சில கைதட்டல் ஒலி கேட்டது. எண்ணிப் பார்த்தேன். 4 பேர் கை தட்டினார்கள். 

September 14, 2011

அஜித்தும்.. ரசிகர் மன்றங்களும்....

10 comments:
அஜீத் சமீபத்தில் அளித்த பேட்டியும்... அந்த பேட்டி தொடர்பான எனது கருத்துகளும்....


‘மங்காத்தா’ படத்தைப் பற்றி.....

அஜீத்: “வாலி' படத்திற்கு பிறகு நான் வில்லன் வேடத்தில் நடித்தது இல்லை. இயக்குனர் வெங்கட்பிரபுவிடம் வில்லன் வேட கதைகள் இருந்தால் சொல்லுமாறு கூறினேன். அவரும் 'மங்காத்தா' படத்தின் ஒன்லைன் சொன்னார். எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.

இன்றைய இளைஞர்களுக்கு எந்த மாதிரி படம் பிடிக்கும் என வெங்கட்பிரபுவிற்கு தெரியும். அவரது வசனங்களும் இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையில் இருக்கும். 'மங்காத்தா' படத்தின் வரவேற்பிற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது. ஒன்று 5 நாட்கள் தொடர்ந்து விடுமுறை மற்றொன்று இப்படம் முழுவது பணத்தை மையப்படுத்தியே இருக்கும். பணம் தான் இன்றைய உலகத்தில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.”


என் கருத்து: தமிழ் சினிமாவில் கதாநாயகனுக்கென்று ஒரு Super Personality உருவாக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரில் தொடங்கி, ரஜினி மூலம் பிரபலமடைந்து பின்னர் இன்றைய அறிமுக நாயகன் வரை பரவிவிட்ட வியாதி அது. [சர்க்கரை இனிப்புதான்... அதற்காக அதையே உணவாகக் கொள்ள முடியுமா? வியாதிதான் வரும்]. அப்படிபட்ட ஒரு வியாதி வந்த நிலையில்தான் இன்றைய தமிழ் சினிமா சூழல் உள்ளது. இந்தச் சூழலில் அஜீத், வில்லன் வேடம், தனது உண்மையான வயது என சினிமாவின் சில பொதுவான விதிமுறைகளை மீறிய படத்தைக் கொடுத்துள்ளார். அதுவும் தனித்த அடையாளம் பெரும் 50-வது படத்தில். வாழ்த்துகள்.

அடுத்து, படத்தின் வெற்றிக்கு இவர் கூறிய காரணங்கள். ‘உயிரினும் மேலான ரசிகர்கள், கண்ணைப் போன்ற ரசிகர்கள், மண்ணைப் போன்ற ரசிகர்கள்’ என சப்பைக்கட்டு காட்டாமல் படம் வெளியான சூழல்தான் படத்தின் வரவேற்பிற்கு காரணம் எனக் கூறியது [கவனிக்கவும்: படம் வெற்றி எனக் கூறவில்லை].

இனி வரும் படங்களைப் பற்றி....

அஜீத்: 'மங்காத்தா' படத்தில் என்னுடைய லுக் வரவேற்பை பெற்று இருக்கிறது. 'பில்லா 2' படத்திற்கு பிறகு என்னுடைய வயதிற்கு ஏற்றவாறு படங்களை தேர்வு செய்யலாம் என்று இருக்கிறேன். 'எனது பெண் அனோஷ்கா முதன் முதலில் என்னை திரையில் பார்த்த படம் 'மங்காத்தா'.

என் கருத்து: பில்லா 2 படத்தில் உடலைக் குறைத்து இளம் வயது தோற்றத்தில் நடிப்பதாக செய்திகள் மூலம் தெரிய வருகிறது. பின் வரும் படங்களில் வயதிற்கு ஏற்ற கதாபாத்திரங்கள் தேர்வு செய்வதாக கூறியது மிகவும் கவனிக்கத்தக்கது. [ரஜினி, கமல் கவனிக்க...]கமல் இந்த முடிவு எடுக்க இன்னும் சில வருடங்கள் ஆகலாம் எனத்தோன்றுகிறது. ஆனால் ரஜினி இனியும் டூயட் பாட ஆசைப்பட்டால், அது ரஜினி என்ற பிம்பத்தை ரசிக்க மட்டுமே பயன்படுமே தவிர வேறெதுவுக்கும் உதவாது. பின்னாளில் மிகவும் அதிகளவில் பகடி செய்யவும் இவர் படங்கள் பயன்படக்கூடும். ரஜினியின் நிலையை பல நிலைகளில் உயர்த்திய படமான அண்ணாமலையில் எனக்கு பிடித்தது, ரஜினி தன் மகளுக்கு அறிவுரை சொல்லும் காட்சி. ரஜினி என்ற பிம்பத்தையும் மீறி ஒரு தந்தையின் நிலையை உணர்த்திய காட்சி அது.

நிற்க: அஜீதிடம் ஆரம்பித்து ரஜினிக்கு போய்விட்டேன்.... இதோ வந்துட்டேன்...


அநேகமாக தன் மகளை மனதில் வைத்துதான் இந்த முடிவை இவர் எடுத்திருக்க வேண்டும். தன்னை தன் மகள் கவனிக்க ஆரம்பித்துவிட்டாள் என்றதும், இனி எப்படி மற்ற பெண்களுடன் சேர்ந்து பாடி ஆட முடியும்? அது தன் மகள் மனதில் தன்னைப் பற்றி எப்படிப்பட்ட பிம்பத்தை வளர்க்கும் என யோசித்திருக்க வேண்டும். இதுதான் காரணமாக இருந்தால், Weldone AJITH…. ஒரு தந்தையாக நீங்கள் எடுத்த பொறுப்பான முடிவுக்கு வாழ்த்துகள்.

ரசிகர் மன்றங்களை கலைத்தது பற்றி...

அஜீத்: சினிமாவுக்கும் அரசியலுக்கும் உள்ள பந்தம் இறுகி வருகிறது. எனது ரசிகர்கள் நலன் எனக்கு மிகவும் முக்கியம். சினிமாவை தவிர்த்து அவர்களுக்கு வேறொரு வாழ்க்கை இருக்கிறது. சினிமா என்பது அவர்களது பொழுதுபோக்கு மட்டுமே.

ஒவ்வொருவருக்கும் அரசியல் கருத்துக்களை வெளியிட உரிமை இருக்கிறது. என் ரசிகர்களை பொறுத்தவரை அவர்கள் என் படங்களை பார்த்து ரசிக்க வேண்டும். இவைகளையெல்லாம் கருத்தில் கொண்டுதான் ரசிகர்மன்றத்தை கலைத்தேன். 


என் கருத்து: எனக்கு ஆரம்பம் முதலே இந்த ரசிகர் மன்றங்களில் உடன்பாடு இல்லை. அதுவும் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியீட்டின் முதல் நாள் அன்று இவர்கள் செய்யும் அக்கப்போர்களுக்கு அளவே இல்லை. அன்றைய தினத்தில் இவர்கள் செய்யும் காரியங்கள் [படப்பெட்டிக்கு ஊர்வலம், பாலாபிஷேகம், பீர் அபிஷேகம்] மிகவும் அருவருக்கத்தக்கவை. பாபா, சந்திரமுகி, சிவாஜி, அசல் என நான் நேரில் கண்ட அனுபவங்கள் பல உண்டு.

இந்த நிலையில் அஜீத் தனது ரசிகர் மன்றங்களை கலைத்தார் என்ற செய்தியை கேட்டவுடன் என்னால் நம்ப முடியவில்லை. அஜீத் அபிமானிகளான எனது நண்பர்களிடம் கேட்டேன். அடிக்க வந்துவிட்டார்கள். பின்னர் இணையம் மூலமே இந்த செய்தியை உறுதிபடுத்திக்கொண்டேன். இந்த கணத்தில்தான் அஜீத் மீது பொதுவான ஒரு மதிப்பு வந்தது. அதன் பின்னர் அவரை கவனித்து வன்ததின் விளைவே இந்த பதிவு. அதுவும் அஜீத் போன்ற பிரபல முகங்களுக்கு சமூக பொறுப்பு மிகவும் அதிகம் இருக்க வேண்டும். தனது ரசிகர்களை விசிலடிச்சான் குஞ்சுகளாக மட்டுமே பார்க்காமல் சமூக அக்கறையுடன் பார்க்க வேண்டும். அஜித்தும் அப்படி பார்த்திருப்பார் என்றே நம்புகிறேன். 

 
அஜித்தின் ரசிகர் மன்றங்கள் கலைப்பு அறிக்கை படித்தவுடன் என் நினைவுக்கு உடனே தேவர் மகன் வசனம்தான் ஞாபகத்துக்கு வந்தது.

“போங்கடா!! புள்ளகுட்டிகள படிக்க வைங்கடா...”

அஜீத் சொல்லாமல் சொன்ன செய்தியும் அதுதான்.

பின்குறிப்பு: 
இந்தப் பதிவை படித்தவுடன் நான் ஒரு தீவிர அஜீத் விசிறி என உங்களுக்குத் தோன்றலாம். உங்களுக்காகவே இந்த விளக்கம். நான் ஆரம்பம் முதலே ரஜினி மற்றும் விஜய்யின் தீவிர ரசிகன். விஜயை பிடித்த காரணத்தாலேயே அஜித்தை வெறுத்தவன். ஆனால் கமலின் ‘மகாநதி’ பார்த்த பின்னர் திரைப்படங்களைப் பற்றிய எனது பார்வை மாறியது. சினிமா என்பது பலம் வாய்ந்த ஊடகம் என்பது எம்.ஜி.ஆர் விஷயத்தில் உறுதியான ஒன்று. ஆனால் அவர் வழியைப் பின்பற்றி இன்று சினிமாவில் தத்துவப் பாட்டு பாடும் அனைவரும் அரசியலுக்கு படையெடுப்பதைப் பார்த்தால் சிரிப்பாகவும், அயர்ச்சியாகவும் இருந்தது. கொஞ்சம், கொஞ்சமாக தெளிவு பெற்று தனி மனித ஆராதனையிலிருந்து விலகி நல்ல கதைகள், மற்றும் கொண்டாட்ட மனநிலையை கொடுக்கும் படங்களைப் பார்க்க ஆரம்பித்தேன்.
[நல்ல படம் என 'காஞ்சீவரம்' படத்தை நண்பர்களுக்கு சிபாரிசு செய்து அவர்களின் ஏளனப் பார்வையையும் சம்பாதித்தேன். இதைப்போன்ற  அனுபவம் எனக்கு பலமுறை ஏற்பட்டுள்ளது.]

நான் வெறுத்த விஷயங்களை சினிமாவிலிருக்கும் ஒருவரே உரக்க சொல்லும்போது கொஞ்சம் என் கவனம் அவர் பக்கம் திரும்பியது. தொடர்ந்து கவனித்ததில் அவர் வார்த்தைகள் இன்றைய இளம் சமூகத்துக்கு மிகவும் அவசியமானது எனத் தோன்றியது. நானும் இதைப் பத்தி சொல்லணும்னு இருந்தேன். சொல்லிட்டேன்....

பின்குறிப்புன்னு சொல்லி பெரிய குறிப்பாகவே ஆகிடுச்சி....

பொறுமையாகப் படித்ததற்கு நன்றி….. 

September 10, 2011

கேட்டேன்... கிடைத்தது...

10 comments:

மதியம் சுமார் 2 மணி.... நல்ல வெயில். தாகம் எடுத்தது. அலுவலகத்திலேயே தண்ணீர் குடித்துவிட்டுக் கிளம்பியிருக்கலாம். ஏதேனும் பழரசம் அருந்தலாம் என்றால் அந்த சாலையில் பழரசக் கடை எதுவும் இல்லை. [பாட்டிலில் விற்கும் குளிர்பானங்களை சில வருடங்களுக்கு முன்பிருந்தே தவிர்த்துவிட்டேன்...]. சரி... என முடிவு செய்து பக்கத்திலிருந்த அடுமனைக்கு சென்றேன்.[Bakery-க்கு தமிழ்ல அடுமனையாம்....] அசல் எலுமிச்சை என விளம்பரப்படுத்தப்படும் குளிர்பானத்தை வாங்கினேன்.

வாங்கும்போதே விலையைப் பார்த்தேன். M.R.P. Rs-8/- என அதன் கழுத்தில் அச்சாகியிருந்தது. பத்து ரூபாய் தாளை கடைப்பையனிடம் [23-26 வயது இருக்கும்] கொடுத்துவிட்டு குளிர்பானத்தை பருக ஆரம்பித்தேன். அவன் கல்லாப்பெட்டியில் நான் கொடுத்தப் பணத்தைப் போட்டுவிட்டு கூட இருந்தவனிடம் பேச ஆரம்பித்தான். நான் குடித்து முடிக்கும் வரையிலும் அவன் என் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை. கடைக்கு வந்த மற்றவர்களை கவனிக்க ஆரம்பித்தார்கள்.


நான் குடித்து முடித்துவிட்டு எனக்கு குளிர்பானம் கொடுத்தவனை அழைத்து, “மீதி சில்லறை கொடுப்பா!” என்றேன்.

“அது பத்து ரூபாய்தாங்க!”

“இதுல 8 ரூபாய்தான் போட்டிருக்கு.. அப்புறம் எதுக்கு 10 ரூபாய் வாங்குறீங்க?”

“அது இல்லைங்க! எப்பவுமே அப்படிதாங்க வாங்குறது”

“அதெப்படி? என்ன காரணத்துக்காக 2 ரூபாய் அதிகமா வாங்குறீங்க?”

இதற்கிடையில் கடையில் பொருள் வாங்க வந்த 2 பேர் என்னை மேலும் கீழும் பார்த்தபடி சென்றனர்.

நான் விடாமல் மீதிப் பணத்தை கேட்டுக்கொண்டிருந்தேன்.

உடனே இன்னொருவன், “எங்க முதலாளிதாங்க வாங்க சொன்னாரு!” என்றான்.

“சரி! அப்போ உங்க முதலாளியை வரச் சொல்லுங்க. நான் அவர்கிட்ட வாங்கிக்கிறேன்.”

“அவர் சாயாங்காலம்தான் வருவாரு..”

“அப்போ மீதிப் பணத்தை நீதான் கொடுக்கணும். ஒண்ணு நீ கொடு... இல்லை உன் முதலாளியை வரச்சொல்லு”

இருவரும் என்ன செய்வதென்று திணறினார்கள். ஆனாலும் மீதிப்பணம் கொடுக்கும் மனநிலையில் அவர்கள் இல்லை.

“என்னப்பா இது? இவ்ளோ நேரம் கேக்குறேன். ஒண்ணும் சொல்ல மாட்டேங்குறீங்க..”

அவர்கள் ஏதேதோ காரணம் கூறினார்கள்.

“அது இல்லைங்க!! Fridge, cooling.. இதுக்கெல்லாம் சேத்துதாங்க அந்த 2 ரூபாய்.”

உடனே அடுத்த கேள்வியை தொடுத்தேன்.

“அப்படியா? தயாரிப்பு செலவு, போக்குவரத்து செலவு, Fridge, Cooling, உங்க லாபம் எல்லாம் சேர்ந்த அடக்கவிலைதான் இந்த 8 ரூபாய். ஆனா நீ என்னென்னமோ கணக்கு சொல்றியே!! அப்போ எனக்கு பில் போட்டுக்கொடு. இந்த குளிர்பானம் 10 ரூபாய் அப்படின்னு தெளிவா பில் போடு. நான் பாக்க வேண்டிய இடத்தில் பாத்துக்கறேன்” என்றேன். கூடுதலாக என் செல்போனை எடுத்து யாருக்கோ அழைப்பது போல பாவ்லா செய்தேன்.

 
அந்தப் பையன் அரண்டே விட்டான்.

“சார்! சார்! இந்தாங்க சார் 2 ரூபாய்” என்றபடி நாணயத்தை என் கையில் வைத்தான்.

“என்னோட 2 ரூபாயை உன்கிட்ட நான் வாங்குறதுக்கு எவ்ளோ பேசவேண்டியிருக்கு?” என்றபடி கடையிலிருந்து கிளம்பினேன். 

 என் பணம், நான் சம்பாத்தித்த பணம், பாத்திரமாய் என் சட்டைப் பையில். மனம் தெளிவாகவும், உற்சாகமாகவும் இருந்தது.ஒரு கணக்கு போட்டு பாக்கலாமா?

அது ஒரு சாதாரண அளவிலான கடை. ஒரு நாளைக்கு சராசரியாக 25 குளிர்பானங்கள் விற்கபடுகிறது என வைத்துக்கொள்வோம்.

1 நாளைக்கு 25 X 2 = 50

1 மாதத்திற்கு 50 X 30 = 1500

தோராயமாக நமது பணம் ரூ.1500 அவர்களிடம் எந்த கணக்கும் இல்லாமல் செல்கிறது. இதுபோல அந்தக் கடையில் பல பொருட்கள். அதுவும் அவர்கள் நிர்ணயம் செய்த விலை. குறைந்தது 5000 ரூபாயாவது அந்த சிறிய கடைக்கு இப்படி கணக்கில் சேராமல் வரும். இதுபோல பல அளவில், பல கடைகளில், பல விதங்களில் நம் அனுமதி இல்லாமல் நம் சட்டைப் பையில் கைவிட்டு பணம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் பேசினால் ஷங்கர் படம் Climax போல பேச வேண்டியிருக்கும்.

அதனால 1 ரூபாய் ஆனாலும் அது உங்கள் பணம்... அத பத்திரமா பாத்துக்கோங்க....

September 09, 2011

தமிழர்களே!! தமிழர்களே!! தமிழை தூக்கி கடலில் போடுங்கள்....

2 comments:
தலைப்பை படிச்சதும் உடனே என்னை திட்ட ஆரம்பிச்சிடாதீங்க.... கீழே உள்ள விஷயத்தை படிச்சீங்கன்னா நீங்களும் அப்படித்தான் சொல்லுவீங்க.....

நண்பர்கள் ஒன்றாக கூடினால் ஏதேனும் ஒரு பொது விஷயத்தை பற்றி அலசுவது வழக்கமான ஒன்று. நாம என்ன உலக அரசியலா பேசப் போறோம்? எல்லாமே வெட்டி அரட்டைதான். சரி அந்த மாதிரி நேரத்தை கொஞ்சம் பயனுள்ளதாகக் கழிக்கலாமே என யோசித்தேன். 
என்ன பண்ணலாம்?

நம் எல்லோருக்கும் தெரிந்த பிரபலாமான கவியின் ஒரு பாடலை ஒன்றின் கீழ் ஒன்றாக மாற்றி எழுதி(கடைசியில் ஆச்சரியக் குறியோடு..... கவிதைக்கு அது ரொம்ப முக்கியமாச்சே!!!!) அவர்களிடம் நீட்டி, "மச்சி! கவிதை ஒண்ணு எழுதியிருக்கேன். படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்கடா..." என்றேன்.

அந்த கவிதை எல்லோர் கைகளுக்கும் மாறி மாறி கடைசியில் என்னிடம் வந்தது.

எப்படி என்பதுபோல் அவர்கள் அனைவரின் முகத்தைப் பார்த்தேன். அவர்கள் அனைவரிடம் இருந்தும் விதம் விதமான கருத்துகள் வந்தன.

"நீ ஏதோ எழுதுவீன்னு தெரியும். ஆனா கவிதைல்லாம் எழுதுவியாடா?"

"என்னடா எழுதியிருக்க? படிக்க வாயிலேயே நுழைய மாட்டேங்குது."

"இப்போ இருக்குற நிலைல இதெல்லாம் உருப்படருதுக்கு ஆகுமாடா? போடா.... "

"மச்சி! I read only English books da... எனக்கு தமிழ் பேச மட்டும்தான்டா தெரியும்".

இப்படி பல்வேறு விதமாக கருத்துகள் சொன்னார்கள். ஒரு சிலர் தலையில் அடித்தபடி நக்கல் சிரிப்புடன் சிகரெட் வாங்க சென்றுவிட்டார்கள்.

மொத்தத்தில் தமிழ் என்பது கவுரவக் குறைச்சலானது என்பது அவர்கள் பதிலில் நன்கு புலப்பட்டது. அப்போதுதான் இக்கட்டுரையின் தலைப்பை உரக்கக் கூற வேண்டும் போல இருந்தது.

ஆனால் ஒருவன் மட்டும், "இந்த வரிகளை நான் எங்கோ படிச்சிருக்கேன். எங்கேன்னுதான் தெரியல!!! கண்டிப்பா இது உன்னோட கவிதை இல்லை." என்று உறுதியுடன் கூறினான்.

அதுவரை நண்பர்களின் பதிலால் இருண்டிருந்த என் மனதில், ஒரு உற்சாகம் மெல்லிய கீற்றாய் கிளம்பியது. ஆனாலும் அவனை சீண்டும் விதமாக அது என் கவிதைதான் என நான் வாதிட்டேன்.

அவனும் அவன் வார்த்தையில் உறுதியாக நின்றான். மற்ற நண்பர்கள் பொறுமையிழக்க ஆரம்பித்ததால், விளையாடியது போதும் என முடிவெடுத்து அந்த கவியின் பெயரைச் சொல்லி அவர் எழுதியபடியே அந்த பாடலை வாசித்துக் காட்டினேன்.

பாடல்:
நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
                                         -மகாகவி பாரதியார்

அனைவரும் "அட! ஆமால்ல...." என்று அசட்டு சிரிப்புடன் கூறிக் கலைந்தார்கள்.அந்த சிரிப்பில் பல அர்த்தங்கள் ஒளிந்திருந்தது.பின்குறிப்பு: மகாகவி பாரதியார் அவர்களுக்கு, உங்கள் பாடலை வைத்து தமிழை சோதித்ததற்காக என்னை மன்னித்துவிடுங்கள்.


September 08, 2011

குற்றாலம் – சில்லுனு ஒரு பயணம்... பகுதி-3

1 comment:
இந்த பயணத்தின் முந்தைய இரண்டு பகுதிகளை படிக்க இங்கே சொடுக்கவும்.

பயணம்-1

பயணம்-2

மறுநாள் காலை 6 மணியளவில் எழுந்து ஒவ்வொருத்தாராக தலயின் திருமணத்திற்கு கிளம்பத் தயாரானோம். திருமண நிகழ்வின் நேரத்தை முன்தினமே எங்களுக்கு சொல்லியிருந்தார்கள். அதனால் நாங்கள் கிளம்ப மிகவும் சுலபமாக இருந்தது. மணி அண்ணனும் ‘தயாரானதும் சொல்லுங்கள், நான் வந்துவிடுகிறேன்’ எனக் கூறியிருந்தார். காலையில் குளிர் சற்று அதிகமாகவே இருந்தது. முன்தின இரவே சங்கர் சொல்லியிருந்தான். காலையில் நாங்க எழுவது சிரமம். அதனால் அனைவரையும் எழுப்பும்படி சொல்லியிருந்தான்.

தூக்கத்திலிருந்து விழித்து நேரம் பார்த்தேன். மணி 5:51 எனக்காட்டி அடுத்த நொடிகளுக்கு தாவிக் கொண்டிருந்தது. அப்போதிருந்த காலைநேரக் குளிருக்கு இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கினால் ஒரு சுகமான, அருமையான தூக்கம் நிச்சயம். ஆனால் இப்போ எழுந்து ஒவ்வொருத்தராகக் கிளம்பினால்தான் திருமண மண்டபத்துக்கு நேரத்துக்கு செல்ல முடியும். இமைகளை அழுத்திய தூக்கத்தை விரட்டிவிட்டு எழுந்து வெளியே வந்தேன்.

கதவை திறந்தவுடன் குளிர்காற்று சற்று பலமாகவே முகத்தை தழுவி விட்டு வீட்டுக்குள் பிரவேசித்தது. ஏற்கனவே குளிராக இருந்த உடல் இன்னும் சில்லிட்டுப் போனது. அந்த குளிர் காற்று மெல்ல பழக ஆரம்பித்தது. முன்தின இரவு தூறலா இல்லை சாரலா எனக் குழம்பியிருந்தேன். ஆனால் இப்போது வானம் மெலிதாகத் தூரிக்கொண்டிருந்தது. குளிர், தூறல், சில்லென்ற காற்று, அதிகாலை மெலிதான மஞ்சள் வெயில் மிக அருமையான அனுபவமாக இருந்தது. அந்த தூறலில் சிறிது தூரம் சென்று திரும்பி வந்தேன். தூக்கம் முழுதும் விலகி, மனது புத்துணர்வுடன் இருந்தது.

வீட்டுக்கு வந்ததும் நண்பர்களை எழுப்பிவிட்டு குளிக்கச் சென்றேன். பின்பு ஒவ்வொருவராக குளித்து 8 மணி போல அனைவரும் தயாரானோம். இடையில் கல்யாண மாப்பிளை [தலயேதான்] வந்து அனைவரும் எழுந்தாச்சா என விசாரித்து சென்றார். எந்த திருமணத்திலும் நான் பார்க்காத உபசரிப்பு அது. மணி அண்ணனும் சிறிது நேரத்தில் வர, மண்டபத்திற்குக் கிளம்பினோம்.


[மண்டபம் செல்லும் வழி....]

திருமண மண்டபம், குற்றலாத்திலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் இருந்தது. நேத்து பார்டர் கடைக்கு போனோமே... அதே வழியில் சுமார் 3 கி.மீ. தொலைவில் இருந்தது. 9-10:30 முகூர்த்தம் என்பதால், காலை உணவை மண்டபத்தில் முடித்துவிட்டு கோவிலுக்கு செல்வதாக ஏற்பாடு. நாங்கள் மண்டபத்திற்கு போன நேரம், விருந்தினர்கள் எல்லாம் அப்போதுதான் ஒவ்வொருவராக வந்துக் கொண்டிருந்தார்கள். மண்டப வாசலில் திருமண வீட்டாரின் வரவேற்போடு, இளையராஜாவின் இன்னிசையும் எங்களை வரவேற்றது. ஏற்கனவே இளையராஜா பாடலுக்கு தீவிரமான ரசிகன் நான். அதுவும் அந்த காலை நேரத்தில் எதிர்பாராத இளையராஜா பாடல், ஒரு திடீர் உற்சாகத்தை அளித்தது. மணப்பெண்ணின் அப்பா எங்களை உணவுக்கூடத்துக்கு அழைத்து சென்றார். இலை போட்டவுடன் அங்கிருந்தவரிடம் எங்களை கவனித்துக்கொள்ள சொல்லிவிட்டுச் சென்றார்.

காலை உணவு அருமையாக முடிந்தது. அடுத்து திருமணம் நடைபெறும் ‘இலஞ்சி குமரன்’ கோவிலுக்கு செல்ல வேண்டும். மணி அண்ணன் திருமண வேளைகளில் ஈடுபட்டிருந்ததால், அவரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. கோவில் மண்டபத்திலிருந்து குற்றாலம் நோக்கி செல்லும் சாலையில் 1 கி.மீ. தொலைவில் இருந்தது. சரி... நடந்தே செல்லலாம் என முடிவெடுத்தோம். அதுவும் மிக நன்றாக இருந்தது. இதுபோன்ற திடீர் நடைபயணம் பல புதுவித அனுபவங்களுக்கு உத்திரவாதம். முகம் பார்த்து பேசிக்கொண்டே நடக்கலாம். கேலி, கிண்டல்களுக்கு நின்று சிரித்துவிட்டு பின்னர் நடையை தொடரலாம்... இப்படி பல சௌகர்யங்கள் உள்ளன.


[குதூகலாமாக ஒரு நடை பயணம்...]
 
கேலி, கிண்டல், அரசியல், சினிமா என வேண்டிய மட்டும் பேசிக்கொண்டு நடந்ததில் கோவிலை சீக்கிரம் அடைந்தது போல உணர்ந்தோம். அங்கே சென்றால் மக்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. அதற்குள்ளாகவா அனைவரும் வந்துட்டாங்க என எண்ணியபடி கோவிலுக்குள் சென்றோம். அப்புறம்தான் புரிந்தது. அன்று முகூர்த்த நாள் என்பதால், இன்னும் நான்கு திருமானங்கள் அங்கு நடைபெற இருந்தன. அவர்களின் சொந்தபந்தங்கள்தான் அனைவரும். உள்ளே ஒரு யானையை சங்கிலியில் பிணைத்து வைத்திருந்தார்கள். [அட!! ஆட்சிதான் மாறிடுச்சே!! இன்னுமா இதை முதுமலைக்கு அனுப்பாம இருக்காங்க?]


[மறுபடியும் இயற்கைப் பின்னணியில் ஒரு போட்டோ வேணுமாம்....]

குறித்த நேரத்துக்குள் திருமணம் முடிக்க வேண்டுமென அணையரும் சற்று பரபரப்புடன் இருந்தனர். நம்ம தலயின் திருமணம் 10:00 மணி போல நடந்தது. பெரியவர்கள் அனைவரும் ஆசீர்வதிக்க மணப்பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினார். பின்னர் கோவிலில் பூஜைகள், சம்பிரதாயங்கள் முடிந்த பின்பு அனைவரும் மண்டபத்துக்குக் கிளம்பினார்கள். நாங்களும் ஒரு வண்டியை பிடித்து மண்டபம் சென்றடைந்தோம். இந்தமுறை பேச்சு அரசியல் பக்கம் திரும்ப காரம் சற்று தூக்கலாகவே இருந்தது.

இப்போது மண்டபத்தில் இளையராஜா இசைக்கு பதிலாக, நாதஸ்வர குழுவினரின் இசைச் சங்கமம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. எத்தனை இசைக்கருவிகள் புதிதாக வந்தாலும், நம்ம நாதஸ்வரமும், மிருதங்கமும் அதன் பெருமையை இழக்காமல் இன்னமும் வீறுநடை போடுகின்றன. மிக அருமையான இசைக் கச்சேரி. சிறிது நேரத்தில் வரவேற்பு ஆரம்பித்தது. விருந்தினர்கள் ஒவ்வொருவராக மேடையேறி மணமக்களை வாழ்த்தி விடைபெற்றார்கள். கூட்டம் குறைந்ததும் நாங்கள் சென்றோம். நாங்கள் மேடைக்கு சென்றதும், தள எங்களை ‘வாங்கய்யா!! வாங்க!!!’ என்று அழைத்து மணமகளுக்கு அறிமுகம் செய்துவைத்தார். அவர்கள் இருவருக்கும் பரிசுப்பொருளை கொடுத்துவிட்டு எங்கள் வாழ்த்துகளைக் கூறி விடைபெற்றோம்.


மணமக்களுக்கு இனிய திருமண வாழ்த்துகள்....
 
தாம்பூலப்பையுடன் வெளியே வந்தோம். நேரம் மதியம் 12ஐ நெருங்கிக்கொண்டிருந்தது. மணி அண்ணன் குற்றாலம் வரை சென்றதால் அவர் வரும் வரை வெளியே அமர்ந்திருந்தோம். சரி! நேற்றே முடிவு செய்தபடி ஐந்தறுவி செல்லலாமா என யோசித்தபோது அனைவரும் ஒருவித களைப்பில் இருந்தோம். அதுவும் பிரவீன் மிகச் சோர்வாகக் காணப்பட்டான். மணி அண்ணன் வருவதற்குள் மதிய உணவை முடித்துக்கொண்டோம். சாப்பிட்ட சிறிது நேரத்தில் மணி அண்ணன் வந்தார். அவருடன் குற்றாலம் வந்து, கடை வீதியில் வேண்டியதை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தோம்.

காலையிலிருந்து மெலிதாக இருந்த தூறல் இப்போது சற்று வலுவாக இருந்தது. மாலை 5 மணி போல கிளம்பலாம் என மணி அண்ணனிடம் கூறினோம். அவரும் அந்த நேரத்துக்கு வருவதாகக் கூறிவிட்டு மண்டப சென்றார். மதியம் சிறிது தூக்கம். 4 மணிபோல எழுந்து அனைவரும் கிளம்ப தயாரானோம். தலயிடம் கூறலாம் என அழைத்தால் அவர் வீட்டில் இருப்பதாக தகவல் வந்தது. பக்கத்துத் தெருவில்தானே அவர் வீடு. சொல்லிவிட்டுக் கிளம்பலாம் என அவர் வீட்டுக்கு சென்றோம். அருமையான தேநீர் பருகியபடி, புதுமாப்பிள்ளையுடன் சிறிது நேரம் உரையாடிவிட்டுக் கிளம்பினோம்.

நாங்கள் வெளியே வந்த நேரத்தில் தூறல் இன்னும் வலுப்பெற்று கனத்த மழையாக பொழியத் தொடங்கியது. 10 நிமிடத்தில் மழையின் தீவிரம் குறைந்து, கனத்த தூறலாகவே நீடித்தது. தலயிடம் சொல்லிவிடு தூறலிலேயே வீடு வந்து சேர்ந்தோம். எங்கள் பொருட்கள் அனைத்தும் ஏற்கனவே தயார் நிலையில் இருந்தது. மணி அண்ணன் வந்ததும் ரயில் நிலையத்துக்கு கிளம்பினோம்.

மீண்டும் பொதிகை விரைவுவண்டியில் எந்திரச் சூழல்மிக்க சென்னைக்குத் திரும்பினோம்....

இந்த அருமையான பயணத்திற்கு ஏற்பாடு செய்த ‘தல’ வெங்கடேஷ்-க்கு மிக்க நன்றி!!!

சாரல் என்றென்றும் மனதிற்குள் அடிக்கும்.... 

September 07, 2011

குற்றாலம் – சில்லுனு ஒரு பயணம்... பகுதி-2

3 comments:
இந்த பயணத்தின் முதல் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.

பயணம் - 1


 இதமான குளிரும், சாரலும், மிதமான வெயிலும் பயணக் களைப்பையும் மீறி ஒரு உற்சாகத்தைக் கொடுத்தது. ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தோம். எங்களை வரவேற்க தென்காசியின் ஆட்டோ ஓட்டுனர்கள் அனைவரும் வந்திருந்தனர். ஆமாங்க!! வெளியே உள்ளத்தைப் பார்த்ததும் அப்படித்தான் நினைக்கத் தோன்றியது. திரும்பிய பக்கமெல்லாம் மஞ்சள் வண்டுகளாய் ஆட்டோக்கள் நின்றிருந்தன. அது சரி... ஒரு சுற்றுலா தளத்தில் இப்படி இல்லைன்னாதான் ஆச்சரியமே!! அதுவும் நாம் ஊரில் உள்ளது போல சாதா(சவாரி) ஆட்டோக்கள் அங்கே கண்ணிலேயே சிக்கவில்லை. அனைத்தும் Share Auto எனப்படும் பகிர்வு ஆட்டோ வகைதான்.

ஒரு ஆட்டோவில் குற்றாலம் வரை செல்ல ரூ.70 என பேசி வண்டியில் ஏறிக்கொண்டோம். ரயில் நிலையத்திலிருந்து தென்காசி நகரத்துக்கு சுமார் 1 கி.மீ. அந்த ஒரு கிலோமீட்டரை கடக்க நாங்கள் பட்ட பாடு... அய்யய்யோ!! பாலம் கட்டுமானம் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், சாலை மோசமான நிலையிலிருந்தது. பின்பு நகரத்திலிருந்து குற்றாலம் 5 கி.மீ. நல்ல தரமான தார்ச்சாலை. எந்த குலுங்கலுமில்லாமல் குற்றாலக் காற்றை சுவாசித்தபடி, அந்த அனுபவத்தை சிலாகித்தபடியே சென்றோம். ஏற்கனவே தலயிடம் எங்கள் வருகையைக் கூறிவிட்டதால், பிரதான சாலையில் எங்களுக்காகக் காத்திருந்தார். அங்கே அவர் எங்களுக்காக ஒரு தனி வீட்டையே ஏற்பாடு செய்திருந்தார். வீடு என்றால் சாதாரண வீடு அல்ல. Double bedroom வசதி கொண்ட ஒரு குட்டி பங்களா என்றே சொல்லலாம். இங்கேதான் குற்றாலத்தின் இன்னொரு பரிமாணம் தெரிந்தது.


 [நாங்கள் தங்கியிருந்த வீட்டின் உட்புறத் தோற்றம்]

 பெரும்பாலும் இந்த வீடுகளில் இருப்பவர்கள், அந்த வீட்டின் பெரியவர்களே!! அவர்களின் பிள்ளைகளும், வாரிசுகளும் வேலை நிமித்தமாக வெளியூரிலோ, வெளிநாட்டிலோ குடியேறிவிட்டார்கள். அதனால் இங்கே காலியாக உள்ள வீடுகள், குற்றாலம் சுற்றுலா வருபவர்களுக்கு வாடகைக்கு விடப்படுகிறது. அதுவும் நாள் வாடகைதான். உலகமயமாக்கலின் பல மோசமான பின்விளைவுகளில் இதுவும் ஒன்று. சொந்த வீட்டில் பெரியவர்கள் மட்டும் இருக்க, அவர்களை அருகில் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டியப் பிள்ளைகள் எங்கோ இருக்கிறார்கள். இப்படி இருக்கும் ஒவ்வொரு வீடும் தனித்தனி முதியோர் இல்லமாகவே இருக்கிறது. [இந்த நிலை குற்றாலம் என்றில்லை. அனைத்து ஊர்களிலுமே இது புதிதாக எழுதப்பட்ட பொது விதியாகவே இருக்கிறது.]

என்னங்க பயணக்கட்டுரை, தத்துவமாப் போகுதா...? இதோ வந்துட்டேன்....

குற்றாலத்தை சுற்றி பல வாடகைப் பாத்திரக் கடைகள் இருந்தன. அதற்கும் ஒரு சுவையான காரணம் இருந்தது. சுற்றுலா வருபவர்கள் அதுவும் குடும்பம் சகிதமாக வருபவர்கள், ஹோட்டல்களில் தங்குவதை விட, இந்த மாதிரி வீடுகளில் பாதுகாப்பு கருதி தங்குவார்கள். இங்கு சுற்றுலா என்பது, குறைந்தது 2 நாட்களாவது இருந்தால்தான் நன்கு அனுபவிக்க முடியும். அப்போ, அந்த 2 நாளும் வெளியே சாப்பிட்டால் பர்ஸ் பழுத்துவிடும். அதுவும் ஆரோக்கியம் சார்ந்த விஷயம் வேறு. அதனால் சமைப்பதற்க்கு வேண்டிய பாத்திரங்களை இந்த கடைகளில் வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். பாத்திரங்கள் இல்லாமல், போர்வை போன்றவையும் இங்கு வாடகைக்கு கிடைக்கின்றன.

எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீட்டுக்கு சென்றோம். ஒரு மணி நேரத்தில் அனைவரும் தயாரானோம். காலை உணவுக்கு தல எங்களை வெளியே அழைத்து சென்றார். தென்காசியில் உள்ள மிகப் பிரபலமான ஹோட்டலின் கிளை எனக் கூறினார். பார்க்க சாதாரணமாகத்தான் இருந்தது. ஆனால் நாங்கள் சாப்பிட இடம் கிடைக்கக் கிட்டத்தட்ட 20 நிமிடம் காத்திருந்தோம். நாங்கள் 6 பெரும் அமர இடம் கிடைத்தது. அனைவருக்கும் தலை வாழை இலை போட்டார்கள். சட்டென்று சென்னை ஹோட்டல்கள் நினைவில் வந்து சென்றன. ஒரு எவெர்சில்வர் தட்டில் பிளாஸ்டிக் காகிதத்தை வைத்து பரிமாறுவார்கள். கொஞ்சம் பெரிய ஹோட்டலாக இருந்தால் ஒரு துண்டு வாழை இலை. அவ்வளவுதான். ஆனால் இங்கு காலை டிபனுக்கு தலை வாழை இலை.

“என்ன சாப்பிடுதீய?”, சர்வரின் குரல் கேட்டு அனைவரும் வேண்டியதை சொல்லி சாப்பிட்டோம்.

சாப்பிட்டு முடிக்கும்போதுதான் அந்த சுவாரசியமான சம்பவம் நடந்தது. எங்கள் அனைவருக்கும் முன்னால் சங்கர் சாப்பிட்டு முடித்தான். சர்வரிடம் பில் எவ்வளவு எனக் கேட்டதும், தல தான் பில் தருவேன் என பாதி சாப்பாட்டில் எழுந்துவிட்டார். இந்த மாதிரி விஷயத்தில் அவரை மீறுவது ரொம்ப கஷ்டம். ஏன்னா, 'அவர் ஒரு முடிவு எடுத்துட்டார்னா, அவர் பேச்சை அவரே கேக்கமாட்டார்'. இங்கயும் சங்கருக்கும் தலைக்கும் நீயா நானா போட்டி ஆரம்பக் கட்டத்தில் இருந்தது. சர்வரும் யாரிடம் பணம் வாங்குவது என குழப்பத்தில் இருந்தார். அப்போ தலை சர்வரிடம் கூறினார்,

"அண்ணே! அவுக நம்ம ஊருக்கு கெஸ்ட். சென்னைலருந்து வந்திருக்காவோ!! அதனால அவுகக்கிட்டா பில் வாங்காதீய!!"

அவ்வளவுதான்... சங்கர் எவ்வளவு சொல்லியும் சர்வர் அவனிடம் பில் வாங்கவில்லை. தலை சாப்பிட்டு முடித்ததும் அவர்தான் பில்லுக்கு பணம் கொடுத்தார்.

 
[குற்றாலம் மலைப் பின்னணியில் போட்டோ வேணுமாம்...]

சாப்பிட்டு முடித்து வீடு வந்து சேர்ந்தோம். சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு அருவிக்கு செல்லலாம் என திட்டம். தல எங்களுக்காக தனி ஆட்டோவை ஏற்பாடு செய்திருந்தார். தலயின் உறவினர் தான் ஆட்டோ ஓட்டுனர். மெல்லிய புன்சிரிப்புடன் பார்ததுமே தோழமையுடன் பழக ஆரம்பித்தார். இன்று ஒருநாள் மட்டுமே அருவிகளுக்கு செல்ல முடியும். மறுநாள் தலயின் திருமணம் என்பதால் இன்றைக்கு மட்டுமே அருவிக்கு செல்லலாம் என முடிவு செய்தோம். சென்ற வருடமே குற்றாலம் வந்திருந்ததால், அருவிகளைப் பற்றி ஓரளவு தெரிந்திருந்தது.

பேரருவி பெரிதாக இருக்கு. ஆனால் இட நெருக்கடியால் அனுபவித்து குளிக்க முடியாது. புலியருவியில் தண்ணீர் வரத்து மிகவும் குறைவாகவும் இருக்கும். என்னைக் கேட்டால் குழந்தைகளுக்கான அருவி எனக் கூறலாம். சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி அனைத்தும் தொலைவில் உள்ளதால் வேண்டாமென முடிவு செய்தோம். இறுதியாக காலையில் பழைய குற்றால அருவியும், மாலையில் ஐந்தருவியும் செல்வதென தீர்மானித்தோம்.

பழைய குற்றாலம்:

இந்த அருவியை சன் டி‌வி பார்க்கும் அனைவரும் பார்த்திருப்பீர்கள். 'கோலங்கள்! கோலங்கள்!!' அப்படின்னு தேவயானி நடந்து வருவாங்களே!! அது இந்த அருவி முன்னாடிதான். நல்ல உயரமான அருவி. நாங்கள் சென்ற நேரம் நல்ல கூட்டம். விநாயகர் சதுர்த்தி - விடுமுறை தினம் அல்லவா!!! போலீஸ் காவல் போடுமளவுக்குக் கூட்டம். ஆனால் சென்ற வருடம் அந்த அருவியே எங்களுக்கு சொந்தம் போல அனுபவித்தோம். கூட்டமே இல்லைங்க!! கூட வந்த ஒருத்தன் அருவியில் உக்காந்து துணி துவைச்சான்னா பாத்துக்கோங்க...


 [நான், சங்கர், பிரவீன், ரகு, பின்னால பழைய குற்றாலம், அப்புறம் தனபால் - இந்த போட்டோவை எடுத்தவர்]

இந்த வருடம் தண்ணீர் ரொம்ப அதிகம். அருவியில் நீர் வரத்து அதிகரித்தால் சிறு சிறு கற்களும் வந்து விழுமாம். வந்து விழுகின்ற வேகத்தில், தலையில் விழுவது தண்ணீரா இல்லை கல்லா எனவே தெரியவில்லை. ஆனா ஒரு கல் கூட விழலைங்க... சிறிது நேரம்[20 நிமிஷம் இருக்கும்!!] அருவியில் ஊறியபின் கொஞ்சம் வெளியே வந்து நின்றோம். அப்போதான் கவனித்தோம்... எங்கள் குழுவில் ரகு இல்லை. அருவியிலும் அவனை பார்த்ததாக நினைவில்லை. எங்கே போனான்?

சுத்தியும் பார்த்ததில், தூரத்தில் அருவியை வேடிக்கை பார்த்தபடி ஒரு உருவம் இன்னும் குளிக்காமல் இருந்தது. வேற யாரு? நாங்க தேடிய ரகுதான்... சைகையில் கிட்டே அழைத்து என்ன ஆச்சு எனக் கேட்டதற்க்கு அவன் கூறிய பதில் என்ன தெரியுமா?

"ரொம்ப குளிருதுடா!! எப்படிடா நீங்க குளிக்கிறீங்க?"

அப்போ நேரம் என்ன தெரியுமா? காலை 11 மணி. உண்மையில் அவன் கேள்விக்கு எங்கக்கிட்ட பதில் இல்லை. மேலும் ஒரு மணி நேரம் அருவியில் குளித்தோம். சரி... கிளம்பலாம் என முடிவெடுத்தால்... "இன்னும் கொஞ்ச நேரம் குளிக்கலாம்டா!!" என்றொரு குரல் கேட்டது. சொன்னது வேற யாரும் இல்லைங்க... நம்ம ரகுவேதான்....

பின்பு அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு 1 மணி போல வந்து சேர்ந்தோம். தல மதிய உணவிற்கு அவர் வீட்டுக்கு அழைத்திருந்தார். போன சிறிது நேரத்தில் உடை மாற்றி தயாராக இருந்தோம். தல வந்து பக்கத்து தெருவிலிருந்த அவர் வீட்டுக்கு அழைத்து சென்றார். அவர் குடும்பத்தினர் அனைவரும் எங்களை வரவேற்றனர். தலயின் தந்தை மற்றும் உறவினர்களோடு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பின்னர் அருமையான சாப்பாடு. சாம்பார், வத்தக்குழம்பு, கூட்டு, பொரியல் என அமர்க்களப்படுத்திவிட்டார்கள். தலயின் சித்தி, அண்ணன், மாமா அனைவரும் உடனிருந்து அன்புடன் பரிமாறினார்கள்.

சாப்பாடு முடிந்து எங்கள் தங்குமிடத்திற்கு திரும்பினோம். அருவியில் குளித்த அசதி, தல வீட்டில் அருமையான சாப்பாடு என அனைத்தும் ஒன்று சேர்ந்ததால் ஒரு அருமையான தூக்கத்திற்குத் தயாரானோம். சென்னையில் இருக்கும் பரபரப்பான சூழ்நிலையில் இந்த மாதிரியான ஒரு மதிய தூக்க கிடைக்குமா என்பது சந்தேகமே!! 4 மணி போல தூங்கி எழுந்து, ஐந்தருவி செல்ல தயாரானோம். சொன்னபடி தனது வாகனத்துடன் வந்தார் மணி அண்ணன்.

ஐந்தருவி: 

[இதுதான் ஐந்தருவின்னு கட்டம் போட்டு சொல்லனுமா?]

ஒரே அருவிதான். மலை மேலிருந்து விழும்போது பாறை இடுக்குகளில் நுழைந்து ஐந்தாகப் பிரிந்து விழுவதால் ஐந்தருவி என அழைக்கப்படுகின்றது. இது குற்றாலத்திலிருந்து சுமார் 2-3 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு வண்டிகளை நிறுத்த நல்ல விசாலமான இடம் இருக்கிறது. ஐந்தருவிகளை 3 பெண்களுக்கும், 2 ஆண்களுக்கும் என பிரித்துள்ளனர். வேண்டிய அளவுக்கு தடுப்புகள் போட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மாலையில் சென்றதால் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது. சங்கரும் பிரவீனும் குளிக்க சென்றார்கள்.
 [இயற்கைப் பின்னணியில் உற்சாகமாக ஒரு படம்...]

நாங்கள் மூவரும் மறுநாள் குளித்துக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டோம். இயற்கை பின்னனியில் பலவிதமாக போட்டோ எடுத்துக் கொண்டோம். மாலை வேளை, அருவியின் சத்தம், சாரலின் ஈரம், மரம், செடி, கொடிகளின் பச்சை வாசம் என அனைத்தும் சேர்ந்து மனதிற்கு உற்சாகத்தைக் கொடுத்தது.

சுமார் ஒரு 6 மணி போல அனைவரும் வீடு திரும்பினோம். ஆரம் வழியில் பேரருவியின் அருகில் இருக்கும் கடை வீதிக்குச் சென்றோம். திரும்பிய பக்கமெல்லாம் பலவகையான பழக்கடைகள், எதை எடுத்தாலும் 6,10,15 ரூபாய் எனக் கூவும் விளையாட்டு சாமான் கடைகள், நேந்திரம்பழ சிப்ஸ் கடைகள், லாலாக் கடை அல்வா என அந்த இடமே கலவையாக மணத்தது. சிறிது நேரம் சுற்றிவிட்டு பேரருவியின் முன்னால் படம் எடுத்துக்கொண்டு வீடு திரும்பினோம்.


 [பின்னாடி பேரருவி... முன்னாடி நாங்க....]

அடுத்து இரவு உணவுக்கு நாங்கள் செல்ல திட்டமிட்டிருந்த இடம்தான் “பிரானூர் பார்டர் கடை”.

பிரானூர் பார்டர் கடை:

குற்றாலத்திலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது பிரானூர். கேரளாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் இந்த இடம்தான் எல்லைக்கோடாக உள்ளது. இங்கு அமைந்துள்ள ஹோட்டல் என்பதால் பார்டர் கடை என்றே அழைக்கப்படுகின்றது. இந்த ஹோட்டல் முழுக்க அசைவப் பிரியர்களுக்கானது. நாங்கள் சென்ற சமயம் ரம்ஜான் மறுதினம் என்பதால் கடைக்கு விடுமுறை. ராகுவும் பிரவீனும் இப்போதுதான் முதன்முறையாக இங்கு வருகிறார்கள். எங்களைவிட அவர்களுக்குதான் ஏமாற்றம். சென்ற வருடம் இங்கு வந்த அனுபவத்தில் சொல்கிறேன்... குற்றாலம் வருபவர்கள் நிச்சயம் தவிர்க்கக்கூடாத ஒன்று இந்த பார்டர் கடை. நல்ல விசாலமான கட்டிடம். பரோட்டா, கோழி, காடை, என நல்ல அருமையான விருந்து. பரோட்டா மாவு பிசைவதற்கு தனி எந்திரமே வைத்துள்ளார்கள். அவ்வளவு சிறப்பு வாய்ந்த கடையில் இந்த முறை எங்களால் சாப்பிடமுடியவில்லை.

பின்னர் மணி அண்ணன் எங்களை வேறு ஒரு ஹோட்டலுக்கு அழைத்து சென்றார். அது ஒரு சிறிய சைவ உணவகம். வெறும் இட்லி, தோசை மட்டுமே இருந்தது. அதுவும் மிக அருமையாக. சாப்பிட்டு கிளம்ப இருக்கையில் மெல்லிய தூரல் விழ ஆரம்பித்தது. மறுநாள் தல திருமணத்துக்கு செல்வது குறித்து பேசியபடியே வீடு வந்து சேர்ந்தோம். இன்னமும் தூரல் விழுந்துக்கொண்டிருந்தது.

அப்போதுதான் அந்த சந்தேகம் வந்தது. விழுவது தூரலா? இல்லை குற்றால அருவியின் சாரலா?

சாரல் அடிக்கும்......

September 06, 2011

குற்றாலம் – சில்லுனு ஒரு பயணம்... பகுதி-1

2 comments:

[நண்பன் ‘தல’ வெங்கடேஷின் திருமணத்துக்கு வர முடியாமல் இருந்த நண்பர்களுக்காக.. ]

நான் இதை பயணம் என்று குறிப்பிட்டாலும், குற்றாலம் செல்ல முக்கிய காரணம், நண்பன் வெங்கடேஷின் திருமணம்... ரம்ஜான், விநாயகர் சதுர்த்தி என அடுத்தடுத்து விடுமுறை வந்ததால் இந்தப் பயணம் இனிய சுற்றுலாவாகவும் மாறியது.

ஏற்கனவே முன்பதிவு செய்திருந்ததால், எந்த பரபரப்புமின்றி ரயில் கிளம்ப ஒரு மணி நேரத்துக்கு முன்பே அனைவரும் வந்து சேர்ந்தோம். கல்லூரி காலத்திற்குப் பிறகு, அநேகமாக நண்பர்கள் அனைவரும் அமர்ந்து பேசுவது இது போன்ற தருணங்களில்தான். அவ்வகை தருணங்கள் எங்களுக்கு நிறையவே கிடைத்தன. பல பேர் வருவதாக எண்ணி திட்டமிடப்பட்ட பயணம், கடைசி நேர மாறுதலுக்குட்பட்டு 5 பேர் மட்டுமே[நான், ரகு, பிரவீன்(EsPee), உமா சங்கர், தனபால்] செல்ல வேண்டியிருந்தது காலத்தின் கட்டாயமே!!! [இந்த கட்டாயத்தால் இன்னொரு நண்பன் ரமேஷின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனது கொஞ்சம் வருத்தமே!!]
 
சென்னை-செங்கோட்டை விரைவு வண்டியில் சரியாக 8 மணிக்கு எங்கள் பயணம் தொடங்கியது. சென்னைலதான் இருக்கோம்னு பேரு... ஆனா எப்பவாவது இந்த மாதிரி தருணங்களில் சந்தித்தால்தான் உண்டு... ரொம்ப நாள் கழித்து பார்த்ததால் பேச்சு இதுதான்னு இல்ல... பல விஷயங்களைப் பத்தி பேசிக்கிட்டே பயணத்தை தொடங்கினோம். கண்டிப்பா என்ன பேசினோம்னு இப்போ நினைச்சுப் பாத்தா.... ப்ச்... எதுவுமே ஞாபகத்தில் இல்லை. ஆனா அந்த மகிழ்வான மனநிலை மட்டும் இப்போதும் உணர முடியுது. கேலி, கிண்டல், latest cell phone model, அவரவர் வேலை இப்படி பல விஷயங்கள்....

இப்படி ஜாலியா பேசிக்கிட்டிருந்தபோது தனபால் கேட்டார், “மச்சான்!! நைட் சாப்பாட்டுக்கு என்னடா பண்ணலாம்?”. பேச்சு அப்படியே அறுபட்டது. முக்கியமான பிரச்சினை. சரி... எப்படியும் ரயில்-ல சாப்பாடு கிடைக்கும்ல... பாத்துக்கலாம்.... இப்படியே சில நிமிடங்கள் கழிந்த நிலையில் ரயில் சத்ததினிடையே மெலிதாய் கேட்டது...

“சப்பாத்தி, இட்லி, தோசை, பரோட்டா......”


நாங்கள் வேண்டியதை விலை பேசி வாங்கிக்கொண்டிருக்கிறோம்..... மற்ற பிரயாணிகள் அவர்கள் உணவை முடித்து தூக்கத்தை தழுவ ஆயத்தமானார்கள். எங்கள் அனைவருக்கும் நல்ல பசி. சாப்பாட்டுப் பொட்டலத்தைப் பிரித்து கொஞ்சம் எடுத்து வாயில் வைத்ததும், அனைவரின் முகமும் சுருங்கியது. எந்த உணவிலும் பேருக்குக்கூட உப்பு, காரம் இல்லை.

தனபால் சொன்னார், “இந்த சொக்கலிங்கம் மெஸ்ல சாப்பாடு வாங்கினாலே இப்படித்தான்....”[அந்நியன் படம் ஞாபகம் வருதா??]

நான் சொன்னேன், “விடுங்க பாஸு!! திண்டிவனம் போற வழிதானே!! சொக்கனை பாத்து சொல்லிட்டுப் போவோம்” என்றேன்.

கஷ்டப்பட்டு சாப்பிட்டு முடித்தோம். உறங்கச் செல்லும்போதுதான் அந்த சங்கடம் பெரிதாக தெரிந்தது.

நாங்கள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது waiting list 192-லிருந்தது. மெல்ல எங்கள் நிலை நகர்ந்து 10,9,8,7,6… என குறைந்து.... 2-ம் இடம் வந்தது. அப்பாடா என சிறிது நேர கழித்து, பார்த்தால் RAC:96-100 என இருந்தது. சரி.... உட்காரவாவது இடம் கிடைத்ததே என ஆறுதல்பட்டுக் கொண்டோம்.

எங்களுக்கு கிடைத்தது side-lower berth. ஒரு சீட்டுக்கு இருவர் என எதிர் எதிராக படுத்துக்கொண்டோம். எல்லாம் சிரமப்படு நாங்கள் உறங்கச் செல்கையில் அந்த சத்தம் கேட்டது.

கொர்ர்ர்ர்......

பக்கத்தில் படுத்திருந்த பெரியவர் ரயிலுக்கு போட்டியாக சத்தம் எழுப்பியபடி தூங்கிக்கொண்டிருந்தார். நானும் தனபாலும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டோம். வேற என்ன பண்ண முடியும்?

மெல்ல... ரயிலின் மெல்லிய தாலாட்டும், தடக்... தடக்... ஓசையும் தூக்கத்துக்கு இட்டுச் சென்றது. என்னதான் சகித்துக் கொண்டாலும், ரயிலில் RAC பயணம் என்பது சற்று சிரமம்தான். இதை அன்றுதான் அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.. நான் கொஞ்சம் உயரம் ஜாஸ்தியா? எனது இடத்தில் இடம் கொள்ளாமல், அடுத்த side lower berth-ல் படுத்திருந்த சங்கரின் தலை வரை என் கால் நீண்டிருக்கிறது. [Sorry-டா சங்கர்...].

சுமாரான தூக்கதில் இருந்த எனக்கு சட்டென்று விழிப்பு தட்டியது. எனது செல்பேசி நேரம் 5:10 AM எனக் காட்டியது. ரயில் ஏதோ ஒரு நிலையத்தில் நின்றிருந்தது. பக்கத்தில் அனைத்து இருக்கையும் காலியாக இருந்தது. வசதியாக சென்று ஜன்னல் இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.

பையுடன் கிளம்பியவரிடம் இது என்ன ஊர் எனக் கேட்டேன். மதுரை எனக் கூறியபடி இறங்கிப் போனார். மதுரை எனக் கேட்டவுடன் விஜய், கில்லி, பிரகாஷ்ராஜ், ஒரு லோடு அருவா, ஹரி, அழகிரி என ஒரு கலவையான கட்சி கண்முன்னே தோன்றியது. பிளாட்பாரத்தில் என்னை கடந்து சென்ற இருவரின் முதுகை தன்னிச்சையாக பார்த்தேன். அப்பாடா!!! அரிவாள் எதுவும் இல்லை என நான் ஆறுதல்பட்டுக் கொண்டேன். பின்னர்தான் நான் எவ்வளவு தூரம் என்னை அறியாமல் தமிழ் சினிமாவை நம்பியிருக்கிறேன் என்பதை உணர்ந்தேன்.

சில நிமிடங்களில் ரயில் புறப்பட்டது. இரவில் தூக்கம் இல்லாததால் மற்ற நால்வரும் கிடைத்த இடத்தில் நல்ல உறக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். நானும் மெல்ல தூங்கிப் போனேன். மீண்டும் பேச்சுக் குரல் கேட்டு விழித்தேன்.


6:45 AM.


சங்கரும், பிரவீனும் பேசிக்கொண்டிருந்தனர். மெல்லிய குளிர், இதமான காற்றுடன் ஜன்னல் வழியே முகத்தில் தவழ்ந்தபடி கடந்து சென்றது. மிக அருமையான காலை பொழுது. ஜன்னல் வழியே பார்த்ததை எல்லாம் பேசிக்கொண்டிருந்தோம். களிமண் பூமி, செடி கொடிகளின் பசுமை, திடீரென வந்த செம்மண் பூமி, காற்றாலை மின்சாரம்... இப்படி பல... இடையில் டனபாலும் வந்து சேர்ந்துக் கொண்டார். ரகு இன்னும் உறங்கிக் கொண்டிருந்தான். ரகுவும் சங்கரும் இரவு முழுக்க தூங்கவில்லை என சங்கர் கூறினான்.

[சங்கர் & தனபால்]
பின்னர் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தபடி தென்காசி வரக் காத்திருந்தோம். அப்போது செல்லும் வழியெல்லாம் ஒரு புதுமையான காட்சி கண்ணில் பட்டது. நாம் ஊரில் காகம் போல அங்கே வழி நெடுகிலும் மயில் கூட்டம் காணக் கிடைத்தது. அதுவும் ஒவ்வொரு மின்சாரக் கம்பத்திலும் ஒரு மயில் அமர்ந்திருந்தது கண்கொள்ளாக் காட்சி.

அனைத்தையும் ரசித்தபடி இருந்த வேளையில், அருகில் இருந்த பெரியவர் தென்காசி நெருங்குவதாகக் கூறினார். ரகுவை எழுப்பிவிட்டு எங்கள் உடைமைகளை சரிபார்த்து எடுத்துக்கொண்டோம். சரியாக 7:40க்கு தென்காசி வந்து இறங்கினோம். 
 


சூரியன் தன் கரங்களை இன்னும் அகல விரித்திருந்தாலும், காற்றில் இதமான குளிர் இன்னும் இருந்தது. அலுவலக நண்பர்கள் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது,

’குற்றால அருவியில் நீர் பெருக்கெடுத்தால் தென்காசியில் சாரல் அடிக்குமாம்’

ஒருவேளை குளிருக்கு காரணம் அந்த சாரல்தானோ??


சாரல் அடிக்கும்......

September 04, 2011

மங்காத்தா - ஒரு பார்வை

No comments:

 

அஜித்தின் 50-வது படம், வெங்கட் பிரபுவின் இயக்கம் என படம் தொடங்கிய நாளிலிருந்தே படத்துக்கான எதிர்பார்ப்பு நிறையவே இருந்தது. அதுவும் இதுவரை இல்லாத வரையில் படம் தொடங்கியதற்கே ஒரு டிரைலர் வெளியிட்டார்கள். அதுவும் வெங்கட் பிரபு twitter, facebook என கிடைத்த இடத்திலெல்லாம் முடிந்த அளவு எதிர்பார்ப்பை ஏற்றிக்கொண்டிருந்தார்.  எல்லாம் முடிந்த வேளையில் படம் வெளியிடுவதிலும் கடைசி நேரத்தில் சிக்கல் ஏற்பட்டது. மீண்டும் 'கண்கள் பனிக்க,,, இதயம் இனிக்க...' குடும்பமே சேர்ந்து படத்தை வெளியிட்டார்கள்.
அட ஆமாங்க...!! Red giant movies-க்கு நன்றி கார்ட், அப்புறம் A Dhayanithi Azhagiri Production அப்படின்னு பெரிய எழுத்தில் வருது, Cloud Nine Moviesக்கு ஒரு பெரிய அனிமேஷன், அப்புறம் வழக்கம் போல Sun Pictures பேர் வருது...[என்னங்க படிக்கும்போதே மூச்சு வாங்குதா...??  ஆனா இதெல்லாம் பாத்த பின்னாடிதான் படமே ஆரம்பிக்குது...]

சரி... படத்தை பத்தி பாக்கலாமா?

எப்பவுமே 10 பேர் கூடினா அந்த இடம் தன்னால கலகலப்பா மாறிடும் இல்லையா? அதுவும் வெங்கட் பிரபு மாதிரியான விளையாட்டுப் பையன் படம்னா கேக்கவா வேணும்....

 அஜீத், அர்ஜூன், த்ரிஷா, ஆன்ட்ரியா, அஞ்சலி, பிரேம்ஜி அமரன், வைபவ், புதுசா ரெண்டு பசங்க, ஜெயப்ரகாஷ்[சொக்கலிங்கம் வாத்தியாரேதான்....] அப்புறம்... இன்னும் நிறைய பேர் இருக்காங்க...

இவ்ளோ பேர் இருக்கும்போது ஜாலிக்கு என்னங்க குறைச்சல்? வெங்கட் பிரபு தனது விளையாட்டுத் தனத்தோட கொஞ்சம் கதை அப்படின்னு ஒரு சங்கதியை சேர்த்து.. ஒரு மாதிரியா படத்தை கொடுத்திருக்கார்....

அப்போ படம் எப்படி இருக்கு?

அதை கடைசியில் பாக்கலாம்....
படத்தில் சுவையான சங்கதிகள் சில....
1. வாலி படத்துக்கு அப்புறம் அஜீத் முகத்துல இப்போதான் ஒரு lively energy தெரியுது. இது அப்படியே தொடர்ந்தால் பல சறுக்கல்களை தவிர்க்கலாம்,
 2. அஜித்தின் நரை முடி தோற்றம், 40 வயது என சொல்லிக்கொள்வது [இது தமிழ் சினிமாவுக்கே புதுசு... ரஜினி, கமலுக்கே இன்னும் 35 தாண்டலையே!! ]. சாதாரணமா இருக்கவேண்டிய விஷயம் இது. தமிழ் சினிமாவின் 'என்றும் இளமை' கலாச்சாரத்தால் இதை குறிப்பிட வேண்டிய கட்டாயம் ஆகிறது,

3. அர்ஜூன் - அவருடைய நிரந்தர கதாபாத்திரமாகவே வருகிறார். ஆமாங்க... இதிலும் A Sincere Police Officer - But Corrupted.

4. 'வாடா பின்லேடா!!' பாடல் படமாக்கப்பட்ட விதம் மிக அருமை. கொஞ்சமும் பிசிறில்லாத கண்ணுக்கு இதமான கிராபிக்ஸ். இந்த பாடலுக்காக கிராபிக்ஸ் குழுவினருக்கு ஒரு தனி மலர்க்கொத்து. வாழ்த்துகள். 

5. அதேபோல் உலக நாடுகளின் ரூபாய் நோட்டுக்களை title காட்சிகளில் பயன்படுத்திய விதம் மிக அருமை. அதுவும் நமது ரூபாய் நோட்டில் இருக்கும் காந்தியின் உப்பு சத்யாகிரக நடை பயணம் 3D கோணத்தில் வருவது மிக அருமை.

6. பாடல்கள் அனைத்தும் கேக்கும்போது நல்லாதான் இருந்தது. ஆனா படத்துல பாக்கும்போது இத்தனை பாடல் இந்த படத்துக்கு தேவையா என்ற கேள்வியே தோன்றுகிறது.


 
7. 'அம்பானி பரம்பரை' பாடல் நாம் ஏற்கனவே கேட்ட கிராமத்து குத்துதான். ஆனால் அந்த வேகமான துள்ளல் இசையும், இடையில் வரும் 'ராமன் ஆண்டாலும்...' பாடலும் நல்ல கோர்வை. அதுவும் 'ராமன் ஆண்டாலும்...' பாடலை மட்டும் அஜீத் பாடுவதாக அமைத்தது நல்ல உத்தி. அதற்கு திரை அரங்கிலும் செம வரவேற்பு!!!

8.  அர்ஜூன் கோட் சூட் போட்டுக்கிட்டு நாலு பேர் பின்னாடி வர... நடக்கிறாரு, போறாரு, வாறாரு... ஆனா அஜீத் அவரை Action King என அழைத்தவுடன்தான் படத்தில் அவரது இருப்பு தெரிகிறது.

9. த்ரிஷா - முழுக்க அஜீத் படம். அதனால இவருக்கு அவ்வளவா வேலை இல்லை.

10. அஞ்சலி - வைபவ் character-க்கு sentiment scene வைக்க ஒருத்தர் வேணுமே!! அதுக்காக இருப்பவர்தான் அஞ்சலி. அந்த sentimentக்கு கொஞ்சம் அழுத்தம் வேணுமே!! அதுக்காக ஒரு பாட்டு...

11. அடடா... அர்ஜூன் characterக்கு ஒரு ஜோடி இல்லைன்னா நல்லா இருக்காதே!! அதுக்காக மொக்கையா ஒரு நடிகையா போட முடியும்? அதுக்காக வர்றவர்தான் ஆன்ட்ரியா. ஒரு காதல், ஒரு பயம்-அப்புறம் ஆறுதல், ஒரு அழுகை. அப்பாடா!! இவங்களுக்கும் ஸீன் ரெடி...

12. இந்த மாதிரி கொள்ளை கதைல ஒரு வில்லி வேணுமே!! இருக்கவே இருக்கா... நம்ம பஞ்சாயத்து... லக்ஷ்மி ராய். கொஞ்சம் கொஞ்சல், கொஞ்சம் வழிசல், அரை குறை ஆடையில் ஒரு பாட்டு.. வில்லி இல்லையா?? துப்பாக்கி எடுத்து நாலு பேரை சுடு. செத்துப் போ!!! 

படத்துல இருக்குற ஆண் கூட்டதுக்கு சமமா பெண்களும் இருக்காங்க.... ஆனா எண்ணிக்கைல மட்டும்...

  
சரி... அப்போ படம் ரொம்ப நல்லா இருக்கா?

படத்துல, "நீங்க நல்லவரா? கெட்டவரா?" ன்னு கேட்டவுடன் அஜீத் ஒரு reaction கொடுப்பாரே!!! இந்த கேள்விக்கு பதிலும் அதேதான்....
1. படத்தின் முக்கிய கட்டமே அஜீத் வில்லன் முகம் எடுக்கும் தருணம்தான்... "Money...Money...Money..." என்று அவர் உறுமும் இடத்தில் படம் பார்ப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி வரவேண்டுமே!!! ம்ஹூம்.... ஒண்ணையும் காணோம்.... இதுக்கு முக்கிய காரணம் அஜீத் இந்த படத்தில் ரொம்ப கெட்டவன்னு படம் தயாரிப்பில் இருக்கும்போதே சொல்லிட்டாங்க.... அப்புறம் எப்படிங்க அந்த காட்சில அதிர்ச்சி வரும்? மிக அருமையாக வரவேண்டிய காட்சி.... பத்தோடு பதினொன்றாகப் போய்விட்டது.

2. படத்துல Scenes எல்லாம் தனித்தனியாக யோசிச்சு எடுத்திருப்பாங்க போல.... தனியா நல்லா இருக்கு... ஆனா கோர்வையா பாக்கும்போது ஏதோ ஒண்ணு குறைவா இருக்குற மாதிரி தோணுது....

3. அந்த 500 கோடி டாலர் இருக்குற container-ஐ லவட்டுர காட்சி படு மொக்கையா இருக்கு. அந்த வெட்ட வெளியில சுத்தி போலீஸ் இருக்காங்க, ஒரு கிரேன்-ல container-ஐ தூக்கும்போது யாருமே பாக்க மாட்டாங்களாம்...  பாஸு..... லாஜிக் தேவையில்லாத கதைதான்...  அதுக்காக இப்படியா?

4. அப்புறம் உங்க படத்துல... சஸ்பெண்ட் ஆனா போலீஸ் உடனே கடத்தல், கொள்ளைனு இறங்கிடுறாங்களே!! ஏன் பாஸு? 

 5. இந்தியன் படத்துலர்ந்து, இங்க இந்தியால செத்துட்டு சரியா மலேஷியா, சிங்கப்பூர்ல உயிரோட வர்றாங்களே... எப்படி?

இப்படி பல விஷயங்கள் இருந்தாலும் ஒரு விஷயம் உறுதியாகிடுச்சி.... நல்ல நடிகன்னு பேர் எடுக்கணுமா? பாலா படத்துல நடி.... ஜாலியான, கொண்டாட்டமான படம் வேணுமா? வெங்கட் பிரபுக்கிட்ட போ!!

இனிமே இந்த மாதிரி எல்லோரும் சொல்லுவாங்க.....

மங்காத்தா - அஜீத்-ன் lively style and look, அப்புறம் படத்தின்கூடவே கலந்து வரும் மெல்லிய நகைச்சுவை.... இதுக்காக கண்டிப்பா பாக்கலாம்....

பின்குறிப்பு: மங்காத்தா படமாக்கிய காட்சிகளை கடைசியில் காட்டினார்கள். மிகவும் நன்றாக இருந்தது. அதில் இருந்த ஜாலி இன்னும் படத்தில் சேர்த்திருந்தால் படம் இன்னும் அருமையாக வந்திருக்கும்.

நல்லவங்க...

ShareThis