September 08, 2011

குற்றாலம் – சில்லுனு ஒரு பயணம்... பகுதி-3

இந்த பயணத்தின் முந்தைய இரண்டு பகுதிகளை படிக்க இங்கே சொடுக்கவும்.

பயணம்-1

பயணம்-2

மறுநாள் காலை 6 மணியளவில் எழுந்து ஒவ்வொருத்தாராக தலயின் திருமணத்திற்கு கிளம்பத் தயாரானோம். திருமண நிகழ்வின் நேரத்தை முன்தினமே எங்களுக்கு சொல்லியிருந்தார்கள். அதனால் நாங்கள் கிளம்ப மிகவும் சுலபமாக இருந்தது. மணி அண்ணனும் ‘தயாரானதும் சொல்லுங்கள், நான் வந்துவிடுகிறேன்’ எனக் கூறியிருந்தார். காலையில் குளிர் சற்று அதிகமாகவே இருந்தது. முன்தின இரவே சங்கர் சொல்லியிருந்தான். காலையில் நாங்க எழுவது சிரமம். அதனால் அனைவரையும் எழுப்பும்படி சொல்லியிருந்தான்.

தூக்கத்திலிருந்து விழித்து நேரம் பார்த்தேன். மணி 5:51 எனக்காட்டி அடுத்த நொடிகளுக்கு தாவிக் கொண்டிருந்தது. அப்போதிருந்த காலைநேரக் குளிருக்கு இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கினால் ஒரு சுகமான, அருமையான தூக்கம் நிச்சயம். ஆனால் இப்போ எழுந்து ஒவ்வொருத்தராகக் கிளம்பினால்தான் திருமண மண்டபத்துக்கு நேரத்துக்கு செல்ல முடியும். இமைகளை அழுத்திய தூக்கத்தை விரட்டிவிட்டு எழுந்து வெளியே வந்தேன்.

கதவை திறந்தவுடன் குளிர்காற்று சற்று பலமாகவே முகத்தை தழுவி விட்டு வீட்டுக்குள் பிரவேசித்தது. ஏற்கனவே குளிராக இருந்த உடல் இன்னும் சில்லிட்டுப் போனது. அந்த குளிர் காற்று மெல்ல பழக ஆரம்பித்தது. முன்தின இரவு தூறலா இல்லை சாரலா எனக் குழம்பியிருந்தேன். ஆனால் இப்போது வானம் மெலிதாகத் தூரிக்கொண்டிருந்தது. குளிர், தூறல், சில்லென்ற காற்று, அதிகாலை மெலிதான மஞ்சள் வெயில் மிக அருமையான அனுபவமாக இருந்தது. அந்த தூறலில் சிறிது தூரம் சென்று திரும்பி வந்தேன். தூக்கம் முழுதும் விலகி, மனது புத்துணர்வுடன் இருந்தது.

வீட்டுக்கு வந்ததும் நண்பர்களை எழுப்பிவிட்டு குளிக்கச் சென்றேன். பின்பு ஒவ்வொருவராக குளித்து 8 மணி போல அனைவரும் தயாரானோம். இடையில் கல்யாண மாப்பிளை [தலயேதான்] வந்து அனைவரும் எழுந்தாச்சா என விசாரித்து சென்றார். எந்த திருமணத்திலும் நான் பார்க்காத உபசரிப்பு அது. மணி அண்ணனும் சிறிது நேரத்தில் வர, மண்டபத்திற்குக் கிளம்பினோம்.


[மண்டபம் செல்லும் வழி....]

திருமண மண்டபம், குற்றலாத்திலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் இருந்தது. நேத்து பார்டர் கடைக்கு போனோமே... அதே வழியில் சுமார் 3 கி.மீ. தொலைவில் இருந்தது. 9-10:30 முகூர்த்தம் என்பதால், காலை உணவை மண்டபத்தில் முடித்துவிட்டு கோவிலுக்கு செல்வதாக ஏற்பாடு. நாங்கள் மண்டபத்திற்கு போன நேரம், விருந்தினர்கள் எல்லாம் அப்போதுதான் ஒவ்வொருவராக வந்துக் கொண்டிருந்தார்கள். மண்டப வாசலில் திருமண வீட்டாரின் வரவேற்போடு, இளையராஜாவின் இன்னிசையும் எங்களை வரவேற்றது. ஏற்கனவே இளையராஜா பாடலுக்கு தீவிரமான ரசிகன் நான். அதுவும் அந்த காலை நேரத்தில் எதிர்பாராத இளையராஜா பாடல், ஒரு திடீர் உற்சாகத்தை அளித்தது. மணப்பெண்ணின் அப்பா எங்களை உணவுக்கூடத்துக்கு அழைத்து சென்றார். இலை போட்டவுடன் அங்கிருந்தவரிடம் எங்களை கவனித்துக்கொள்ள சொல்லிவிட்டுச் சென்றார்.

காலை உணவு அருமையாக முடிந்தது. அடுத்து திருமணம் நடைபெறும் ‘இலஞ்சி குமரன்’ கோவிலுக்கு செல்ல வேண்டும். மணி அண்ணன் திருமண வேளைகளில் ஈடுபட்டிருந்ததால், அவரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. கோவில் மண்டபத்திலிருந்து குற்றாலம் நோக்கி செல்லும் சாலையில் 1 கி.மீ. தொலைவில் இருந்தது. சரி... நடந்தே செல்லலாம் என முடிவெடுத்தோம். அதுவும் மிக நன்றாக இருந்தது. இதுபோன்ற திடீர் நடைபயணம் பல புதுவித அனுபவங்களுக்கு உத்திரவாதம். முகம் பார்த்து பேசிக்கொண்டே நடக்கலாம். கேலி, கிண்டல்களுக்கு நின்று சிரித்துவிட்டு பின்னர் நடையை தொடரலாம்... இப்படி பல சௌகர்யங்கள் உள்ளன.


[குதூகலாமாக ஒரு நடை பயணம்...]
 
கேலி, கிண்டல், அரசியல், சினிமா என வேண்டிய மட்டும் பேசிக்கொண்டு நடந்ததில் கோவிலை சீக்கிரம் அடைந்தது போல உணர்ந்தோம். அங்கே சென்றால் மக்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. அதற்குள்ளாகவா அனைவரும் வந்துட்டாங்க என எண்ணியபடி கோவிலுக்குள் சென்றோம். அப்புறம்தான் புரிந்தது. அன்று முகூர்த்த நாள் என்பதால், இன்னும் நான்கு திருமானங்கள் அங்கு நடைபெற இருந்தன. அவர்களின் சொந்தபந்தங்கள்தான் அனைவரும். உள்ளே ஒரு யானையை சங்கிலியில் பிணைத்து வைத்திருந்தார்கள். [அட!! ஆட்சிதான் மாறிடுச்சே!! இன்னுமா இதை முதுமலைக்கு அனுப்பாம இருக்காங்க?]


[மறுபடியும் இயற்கைப் பின்னணியில் ஒரு போட்டோ வேணுமாம்....]

குறித்த நேரத்துக்குள் திருமணம் முடிக்க வேண்டுமென அணையரும் சற்று பரபரப்புடன் இருந்தனர். நம்ம தலயின் திருமணம் 10:00 மணி போல நடந்தது. பெரியவர்கள் அனைவரும் ஆசீர்வதிக்க மணப்பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினார். பின்னர் கோவிலில் பூஜைகள், சம்பிரதாயங்கள் முடிந்த பின்பு அனைவரும் மண்டபத்துக்குக் கிளம்பினார்கள். நாங்களும் ஒரு வண்டியை பிடித்து மண்டபம் சென்றடைந்தோம். இந்தமுறை பேச்சு அரசியல் பக்கம் திரும்ப காரம் சற்று தூக்கலாகவே இருந்தது.

இப்போது மண்டபத்தில் இளையராஜா இசைக்கு பதிலாக, நாதஸ்வர குழுவினரின் இசைச் சங்கமம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. எத்தனை இசைக்கருவிகள் புதிதாக வந்தாலும், நம்ம நாதஸ்வரமும், மிருதங்கமும் அதன் பெருமையை இழக்காமல் இன்னமும் வீறுநடை போடுகின்றன. மிக அருமையான இசைக் கச்சேரி. சிறிது நேரத்தில் வரவேற்பு ஆரம்பித்தது. விருந்தினர்கள் ஒவ்வொருவராக மேடையேறி மணமக்களை வாழ்த்தி விடைபெற்றார்கள். கூட்டம் குறைந்ததும் நாங்கள் சென்றோம். நாங்கள் மேடைக்கு சென்றதும், தள எங்களை ‘வாங்கய்யா!! வாங்க!!!’ என்று அழைத்து மணமகளுக்கு அறிமுகம் செய்துவைத்தார். அவர்கள் இருவருக்கும் பரிசுப்பொருளை கொடுத்துவிட்டு எங்கள் வாழ்த்துகளைக் கூறி விடைபெற்றோம்.


மணமக்களுக்கு இனிய திருமண வாழ்த்துகள்....
 
தாம்பூலப்பையுடன் வெளியே வந்தோம். நேரம் மதியம் 12ஐ நெருங்கிக்கொண்டிருந்தது. மணி அண்ணன் குற்றாலம் வரை சென்றதால் அவர் வரும் வரை வெளியே அமர்ந்திருந்தோம். சரி! நேற்றே முடிவு செய்தபடி ஐந்தறுவி செல்லலாமா என யோசித்தபோது அனைவரும் ஒருவித களைப்பில் இருந்தோம். அதுவும் பிரவீன் மிகச் சோர்வாகக் காணப்பட்டான். மணி அண்ணன் வருவதற்குள் மதிய உணவை முடித்துக்கொண்டோம். சாப்பிட்ட சிறிது நேரத்தில் மணி அண்ணன் வந்தார். அவருடன் குற்றாலம் வந்து, கடை வீதியில் வேண்டியதை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தோம்.

காலையிலிருந்து மெலிதாக இருந்த தூறல் இப்போது சற்று வலுவாக இருந்தது. மாலை 5 மணி போல கிளம்பலாம் என மணி அண்ணனிடம் கூறினோம். அவரும் அந்த நேரத்துக்கு வருவதாகக் கூறிவிட்டு மண்டப சென்றார். மதியம் சிறிது தூக்கம். 4 மணிபோல எழுந்து அனைவரும் கிளம்ப தயாரானோம். தலயிடம் கூறலாம் என அழைத்தால் அவர் வீட்டில் இருப்பதாக தகவல் வந்தது. பக்கத்துத் தெருவில்தானே அவர் வீடு. சொல்லிவிட்டுக் கிளம்பலாம் என அவர் வீட்டுக்கு சென்றோம். அருமையான தேநீர் பருகியபடி, புதுமாப்பிள்ளையுடன் சிறிது நேரம் உரையாடிவிட்டுக் கிளம்பினோம்.

நாங்கள் வெளியே வந்த நேரத்தில் தூறல் இன்னும் வலுப்பெற்று கனத்த மழையாக பொழியத் தொடங்கியது. 10 நிமிடத்தில் மழையின் தீவிரம் குறைந்து, கனத்த தூறலாகவே நீடித்தது. தலயிடம் சொல்லிவிடு தூறலிலேயே வீடு வந்து சேர்ந்தோம். எங்கள் பொருட்கள் அனைத்தும் ஏற்கனவே தயார் நிலையில் இருந்தது. மணி அண்ணன் வந்ததும் ரயில் நிலையத்துக்கு கிளம்பினோம்.

மீண்டும் பொதிகை விரைவுவண்டியில் எந்திரச் சூழல்மிக்க சென்னைக்குத் திரும்பினோம்....

இந்த அருமையான பயணத்திற்கு ஏற்பாடு செய்த ‘தல’ வெங்கடேஷ்-க்கு மிக்க நன்றி!!!

சாரல் என்றென்றும் மனதிற்குள் அடிக்கும்.... 

1 comment:

  1. engal saarpilum thala kku thirumana vaazhththukkalai therivikkavum, innum palamurai kutraalam sella vaazhththukkal..........

    ReplyDelete

நல்லவங்க...

ShareThis