September 09, 2011

தமிழர்களே!! தமிழர்களே!! தமிழை தூக்கி கடலில் போடுங்கள்....

தலைப்பை படிச்சதும் உடனே என்னை திட்ட ஆரம்பிச்சிடாதீங்க.... கீழே உள்ள விஷயத்தை படிச்சீங்கன்னா நீங்களும் அப்படித்தான் சொல்லுவீங்க.....

நண்பர்கள் ஒன்றாக கூடினால் ஏதேனும் ஒரு பொது விஷயத்தை பற்றி அலசுவது வழக்கமான ஒன்று. நாம என்ன உலக அரசியலா பேசப் போறோம்? எல்லாமே வெட்டி அரட்டைதான். சரி அந்த மாதிரி நேரத்தை கொஞ்சம் பயனுள்ளதாகக் கழிக்கலாமே என யோசித்தேன். 




என்ன பண்ணலாம்?

நம் எல்லோருக்கும் தெரிந்த பிரபலாமான கவியின் ஒரு பாடலை ஒன்றின் கீழ் ஒன்றாக மாற்றி எழுதி(கடைசியில் ஆச்சரியக் குறியோடு..... கவிதைக்கு அது ரொம்ப முக்கியமாச்சே!!!!) அவர்களிடம் நீட்டி, "மச்சி! கவிதை ஒண்ணு எழுதியிருக்கேன். படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்கடா..." என்றேன்.

அந்த கவிதை எல்லோர் கைகளுக்கும் மாறி மாறி கடைசியில் என்னிடம் வந்தது.

எப்படி என்பதுபோல் அவர்கள் அனைவரின் முகத்தைப் பார்த்தேன். அவர்கள் அனைவரிடம் இருந்தும் விதம் விதமான கருத்துகள் வந்தன.

"நீ ஏதோ எழுதுவீன்னு தெரியும். ஆனா கவிதைல்லாம் எழுதுவியாடா?"

"என்னடா எழுதியிருக்க? படிக்க வாயிலேயே நுழைய மாட்டேங்குது."

"இப்போ இருக்குற நிலைல இதெல்லாம் உருப்படருதுக்கு ஆகுமாடா? போடா.... "

"மச்சி! I read only English books da... எனக்கு தமிழ் பேச மட்டும்தான்டா தெரியும்".

இப்படி பல்வேறு விதமாக கருத்துகள் சொன்னார்கள். ஒரு சிலர் தலையில் அடித்தபடி நக்கல் சிரிப்புடன் சிகரெட் வாங்க சென்றுவிட்டார்கள்.

மொத்தத்தில் தமிழ் என்பது கவுரவக் குறைச்சலானது என்பது அவர்கள் பதிலில் நன்கு புலப்பட்டது. அப்போதுதான் இக்கட்டுரையின் தலைப்பை உரக்கக் கூற வேண்டும் போல இருந்தது.

ஆனால் ஒருவன் மட்டும், "இந்த வரிகளை நான் எங்கோ படிச்சிருக்கேன். எங்கேன்னுதான் தெரியல!!! கண்டிப்பா இது உன்னோட கவிதை இல்லை." என்று உறுதியுடன் கூறினான்.

அதுவரை நண்பர்களின் பதிலால் இருண்டிருந்த என் மனதில், ஒரு உற்சாகம் மெல்லிய கீற்றாய் கிளம்பியது. ஆனாலும் அவனை சீண்டும் விதமாக அது என் கவிதைதான் என நான் வாதிட்டேன்.

அவனும் அவன் வார்த்தையில் உறுதியாக நின்றான். மற்ற நண்பர்கள் பொறுமையிழக்க ஆரம்பித்ததால், விளையாடியது போதும் என முடிவெடுத்து அந்த கவியின் பெயரைச் சொல்லி அவர் எழுதியபடியே அந்த பாடலை வாசித்துக் காட்டினேன்.

பாடல்:
நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
                                         -மகாகவி பாரதியார்

அனைவரும் "அட! ஆமால்ல...." என்று அசட்டு சிரிப்புடன் கூறிக் கலைந்தார்கள்.அந்த சிரிப்பில் பல அர்த்தங்கள் ஒளிந்திருந்தது.



பின்குறிப்பு: மகாகவி பாரதியார் அவர்களுக்கு, உங்கள் பாடலை வைத்து தமிழை சோதித்ததற்காக என்னை மன்னித்துவிடுங்கள்.


2 comments:

  1. தமிழை அழிக்க தமிழனை தவிர வேறு யாராலும் முடியாது,

    நல்லதோர் மொழியில் பிறந்து- அதை
    நலங்கெடப் புழுதியில் எறிகிறார்கள்...

    ReplyDelete
  2. hear rider solvadhu migachari thirundhuvaai thamizha padhivu nandru nandri

    ReplyDelete

நல்லவங்க...

ShareThis