May 10, 2012

இரண்டாவது வெள்ளிக்கிழமை

 
 
பள்ளி விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவனின் ஒரு விடுமுறையின் முன்னோட்டம் இது. தனியார் பள்ளி விடுதிகளில் படிக்கும் மாணவர்கள் அவ்வளவு சுலபமாக வீட்டிற்கு சென்று வர முடியாது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை மட்டுமே அனுமதி அளிக்கப்படும். மாதம் முழுதும் அடைபட்டிருக்கும் இடத்திலிருந்து வெளியே செல்ல அனுமதி கிடைக்கிறதென்றால் அது விடுதலைதானே!!! என்ன? விடுதி மானவர்களுக்கு இரண்டு நாள் மட்டுமே விடுதலை. மீண்டும் தானாகவே வந்து அடைந்துகொள்ள வேண்டும். இப்படி ஒரு வாழ்க்கை வாழும் மாணவர்களின் விடுமுறை தினத்தை அவர்களோடு சேர்ந்து கொண்டாடலாம் வாருங்கள். 
 
yaavarumnalam.com
 
மூங்கில் குச்சியால், ஜன்னல் கம்பியில் தட்டும் ஒலி மெலிதாக, மிக மெலிதாகக் கேட்டது. எப்போதும் கேட்கும் ஒலித்தான், மற்ற நாளென்றால் தூக்கத்திலேயே ஒருவித வெறுப்பும், சோம்பாலும் வந்து மனதில் ஒட்டிக் கொள்ளும். அறைத் தூக்கத்திலேயே எழுந்து, தினக் கடமைகளை அட்டவணைப்படி செய்வது என்று அன்றையப் பொழுது சங்கடத்துடனேயே கழியும். ஒவ்வொரு நாளையும் சந்தோஷமாகக் கழிப்பது என்பது கட்டாயம் ஆக்கப்படும். ஒவ்வொரு வேலையையும் வேண்டா வெறுப்பாக செய்யத் தோன்றும்.

ஆனால் இன்று அப்படி இல்லை. தூக்கம் கலையும் பொழுதே அந்த நினைப்பு வந்து மனதில் ஒட்டிக் கொள்ளும். ஆம். இன்று இரண்டாவது வெள்ளிக்கிழமை. அந்த நினைப்பு வந்த மாத்திரத்திலேயே கண்ணில் ஒட்டியிருக்கும் தூக்கம் போகும் இடம் தெரியாது. இனம் புரியாத உற்சாகம் ஒன்று மனதில் வந்து ஒட்டிக் கொள்ளும். கட்டிலில் இருந்து எழும்போதே சுறுசுறுப்பு வந்து தோளில் கை போட்டு அழைத்து செல்லும். இதுவரை சண்டை பிடித்தவனை பார்த்து சிரிக்கத் தோன்றும். எப்போதும் பேஸ்ட் கடன் கேட்டு எரிச்சல்படுத்தும் சரவணனுக்கு இன்று கொடுக்கத் தோன்றும். அனைவரது முகங்களும் ஒன்றுபோல சிரிப்பை பூசிக் கொண்டிருக்கும். வழக்கத்தைவிட இன்றுதான் அனைத்து வேலைகளும் நேரப்படி நடக்கும். அவ்வப்போது கிடைக்கும் நேரங்களில் பையை தயார் செய்வதில் அனைவரும் ஆர்வம் காட்டுவோம். இதிலும் ஒரு சிலர் இருப்பார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பே வேண்டியதை தயார் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

காலை உணவின்போது எதிர்ப்படும் அனைவருக்கும் ஒரு புன்னகை வீசப்படும். பதிலுக்கு ஒரு புன்னகை பரிசாக கிடைக்கும். அன்று மட்டும் விடுதி காப்பாளருடன் சினேகமாக பேச சலுகை கிடைக்கும். வகுப்பிற்கு சென்றால் இன்னும் கொண்டாட்டம்தான். Day-Scholar என்று அழைக்கப்படும் வீட்டு மாணவர்கள் [நாங்கள் விடுதி மாணவர்கள் என்றால் அவர்களை வீட்டு மாணவர்கள் என்று அழைக்கலாம்தானே!!] எங்கள் சந்தோஷத்தை இன்னும் அதிகப் படுத்துவார்கள். “வீட்டுக்குப் போறேன். அப்பா, அம்மாவை பாக்கப் போறேன்!! என் செல்ல நாய்க்குட்டியுடன் விளையாடப் போறேன்” என்று எது சொன்னாலும் ரசிப்பார்கள். நமக்கு அது அளவிட முடியாத சந்தோஷம். அடுத்தவர் சந்தோஷத்தை ரசிப்பதும் அவ்வளவு இன்பமாகத்தானே இருக்கும். என்ன பேசினாலும் கேட்பார்கள். அளவு கடந்த சந்தோஷம் ஒரு சில நேரங்களில் எரிச்சலில் கொண்டு விட்டு விடும். அந்த நேரத்தில் “ஏண்டா இப்படி இம்சை பண்றே!?” என்று அலுத்துக் கொள்வார்கள். மனதில் எதுவுமே ஏறாது. மணி எப்போது நாலு அடிக்கும் என்று காலை முதலே எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கும்.

ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியர்கள் ஒவ்வொரு விதமாக சந்தோஷத்தை அதிகப்படுத்துவார்கள். பெரும்பாலும் அன்று வகுப்புகள் நடக்காது. என்ன பாடம் எடுத்தாலும் எங்க மண்டையில ஏறாதுன்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும். காலை வகுப்புகள் முடிந்து மதிய உணவிற்கு விடுதிக்கு வரும்போது நேராக சாப்பிட செல்லாமல் கால்கள் தன்னிச்சையாக எங்கள் பை இருக்கும் இடத்திற்கு செல்லும். ஏற்கனவே பார்த்து, பார்த்து வேண்டியதை எல்லாம் எடுத்து வைத்திருப்போம். ஆனாலும் மீண்டும் அனைத்தையும் சரி பார்த்த பிறகே சாப்பிட செல்வோம். அதுவும் அரை சாப்பாடுதான். நினைப்பெல்லாம் வீட்டில் இருக்கும்போது சாப்பாடாவது ஒண்ணாவது.

மீண்டும் வகுப்புக்கு செல்ல வேண்டும். காலையிலேயே ஒன்றும் நடக்கவில்லை. மதியம் மட்டும் பாடம் நடத்தவா போகிறார்கள். அனைத்து வகுப்புகளிலும் அவ்வப்போது கோரசாக குரலெலுப்பி அடிவயிற்றில் மீண்டும் சந்தோஷத்தை அதிகப்படுத்துவார்கள். பாடமே இல்லாமல் நகரும் அந்த வெள்ளிக்கிழமை அவ்வளவு இனிமை. ஆனாலும் ஒரு சில ஆசிரியர்கள் இருப்பார்கள். சரியாக கடைசி வகுப்பிற்கு வந்து கருமமே கண்ணாக பாடம் எடுப்பார்கள். அவ்வளவு கடுப்பாக இருக்கும். ஆனால் விடுவார்களா? அவர்கள் நினைத்தவரையில் பாடம் எடுத்துவிட்டுதான் ஓய்வார்கள். அவ்வளவு நல்லவர்கள்.
 
 
 
அப்போதெல்லாம் அனைவரிடமும் கைக்கடிகாரம் இருக்காது. ஓரிரு மாணவரிடம்தான் இருக்கும். நொடிக்கொரு முறை யாராவது அந்த பையன்களிடம் மணி கேட்டபடியே இருப்பார்கள். மதியம் இரண்டு மணி தாண்டிவிட்டால் மாணவர்களை அழைத்து செல்ல பெற்றோர்கள் ஒவ்வொருத்தராக வர ஆரம்பிப்பார்கள். தொலைதூரம் செல்லும் மாணவர்கள் என்றால் அவர்கள் சீக்கிரமே பெற்றோருடன் ஊருக்கு செல்ல அனுமதிக்கப் படுவார்கள். அந்த நேரத்தில் அந்த பையன் மீது பல பொறாமை கலந்த பார்வைகள் வந்து விழும். அனைத்தையும் ஒரு வெற்றி கலந்த சிரிப்புடன் ஒதுக்கிவிட்டு வேகமாக செல்வான். தப்பு.தப்பு. ஓடுவான். மணி மூன்றை தாண்டும்போது பெற்றோர் ஒவ்வொருத்தராக வகுப்பு ஜன்னலில் வந்து எட்டி பார்த்தபடி இருப்பார்கள். எங்களை வீட்டிற்கு அழைத்து செல்லும் சந்தோஷம் அவர்களுக்கு. “டேய்!! உன் அப்பாடா!! உன் அம்மா வந்திருக்காங்கடா!!” என்று சந்தோஷக் கூச்சல் அமைதியாக வரும். தங்கள் அப்பா, அம்மாவின் முகம் தெரியாதா என்ற எதிர்பார்ப்பில் வரும் கூச்சல் அது.  
 
 
மணி நான்கை தொட்டதும்தான் இருக்கும் கச்சேரி. விட்டால் போதுமென்று அனைவரும் வகுப்பை விட்டு விடுதிக்கு ஓடுவோம். அந்த ஓட்டத்தை மட்டும் பந்தயமாக அறிவித்தால் அனைத்து பதக்கங்களும் எங்களுக்குதான். அப்படி ஒரு ஓட்டம் ஓடுவோம். அதேபோன்றதொரு மன ஓட்டத்துடன் எங்களது பெற்றோர்களும் விடுதி வாசலில் வந்து நிற்பார்கள். உடை மாற்றி, பையை எடுத்துக்கொண்டு காப்பாளரிடம் கையெழுத்து போட்டு சொல்லிவிட்டு கிளம்பும்போது ஒரு சந்தோஷ பந்து வயிற்றில் அழுத்தும். பள்ளியின் நுழைவாயிலை கடந்து காலை எடுத்து வெளியே வைக்கும்போது அடிவயிற்றில் இருந்த பந்து மெல்ல உடல் முழுக்க விளையாட.. ஒரு புது உற்சாகம் ஊற்றெடுக்க... இரண்டு நாட்கள் விடுதலை பெற்று இதோ ஊருக்கு போகப் போறேன். மாதத்திற்கு ஒரு முறை இரண்டாவது வெள்ளிக்கிழமை வரத்தான் செய்கிறது. அந்த ஒவ்வொரு தினத்திலும் இந்த கொண்டாட்டங்கள் தொடரத்தான் செய்தன. ஒரே காரணம் வீட்டிற்கு போகும் சந்தோஷம்.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் நீங்களும் ஊருக்கு போங்க. உண்மையான சந்தோஷம் அங்கேதான் இருக்கு.

No comments:

Post a Comment

நல்லவங்க...

ShareThis