March 24, 2012

வெங்“காயம்”

No comments:

yaavarumnalam

பெரியார் என்றவுடன் உடனே நினைவுக்கு வருவது அவர் அடிக்கடி உதிர்த்த வார்த்தை ‘வெங்காயம்’. உரிக்க உரிக்க உள்ளே ஒன்றும் இல்லாதது வெங்காயம். ஆனால் வெங்காயம் உரிப்பவரை கண்ணீரில் நனைத்துவிடும். அது போலத்தான் மூட நம்பிக்கைகளும். நம் வாழ்க்கைக்கு பயன் தரக்கூடிய ஒரு விஷயம் கூட அதில் இருக்காது. ஆனால் அதில் சிக்கிவிட்டால் நம் வாழ்க்கையை சின்னா பின்னமாக்கிவிடும். இதை உணர்த்தவே ஒன்றும் இல்லாத விஷயத்தை பெரியார் வெங்காயம் என்றார். அதேபோல ஜோசியம், பரிகாரம், நரபலி என்று ஊரை அடித்து உலையில் போடும் சாமியார்களை உரித்துக் காட்டுகின்றது இந்த வெங்“காயம்”.

சங்ககிரி மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்களில் சாமியார்களும், ஜோசியர்களும் அடுத்தடுத்து கடத்தப்படுகிறார்கள். ஆனால் யாரால், எங்கு, எதற்காக கடத்தப்பட்டார்கள் என்று காரணம் எதுவும் தெரியவில்லை. விசாரிக்க வரும் காவல்துறையும் கிடைக்கும் சிறு சிறு தடயங்களை வைத்து கடத்தல்காரர்களை நோக்கி முன்னேறுகிறார்கள். விசாரணையின் முடிவில் கடத்தியவர்களையும், அதற்கான காரணத்தையும் அறியும்போது தவறு யார் மீது என்று ஒரு பெரிய கேள்விக்குறியே எழுகிறது. அந்த கேள்விக்குறியையும் உரிய பதிலுடன் ஆச்சரியக்குறியாக மாற்றி நம்மை நிம்மதியாக வீட்டுக்கு அனுப்புகிறார் இயக்குனர். அந்த பதிலைக் கொண்டு வேண்டிய முடிவை எடுப்பது நமது கைகளில்.  
 
yaavarumnalam
 
 படத்தில் சத்யராஜ் தவிர அனைவரும் புதுமுகங்களே. படத்திற்கு கூடுதல் பலம் தருவதும் அதுதான். பாட்டி, கூத்தாடி கலைஞர், சிறுமியும் கூட வரும் சிறுவர்கள் என ஒவ்வொருவரும் அவரவர் விதத்தில் கவர்கிறார்கள். குறிப்பாக அந்த சிறுமியின் வெள்ளந்தியான சிரிப்பு கொள்ளை கொள்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் ஜோசியர், சாமியார்களால் பிரச்சினை. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் எடுக்கும் முடிவுதான் படத்தின் பின்பாதி.

இதுவரை அவிங்க, இவிங்க என்று மதுரை வட்டார படங்களையே பார்த்து சலித்தவர்களுக்கு இதோ யதார்த்த நடையை கொண்ட கொங்கு தமிழில் ஒரு படம். அதுவும் அந்த மண்ணை சேர்ந்த எனக்கு இது ஒரு கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்தது. பூனைக் குட்டியை ‘கிளீஸ் குட்டி’ என்று கொஞ்சுவது, நமக்கு மிகவும் நெருக்கமானவரை “என்றா திருவாத்தானாட்டம் பேசுற?” என்று உரிமையுடன் திட்டுவது. இப்படி மண்ணின் மனம் வீசும் பல சொல்லாடல்கள் படம் முழுக்க விரவிக் கிடக்கின்றன.

நாயகன்-நாயகி மோதல் பின்பு காதல் என்று ஆரம்பிக்கும் படம், பைத்தியம் பிடித்த பாட்டியின் வருகைக்குப் பிறகு மெல்ல சூடு பிடித்து படம் முடியும் தருவாயில் பற்றி எரிகிறது. படத்தின் இறுதிக் காட்சியில் வரும் வசனங்கள் ஒவ்வொன்றும் நெத்தியடி. ஒரேயொரு பாடல் காட்சியில் சத்யராஜ் வந்து சிறுவர்களுக்கு தன்னம்பிக்கையும், பகுத்தறிவும் ஊட்டுகிறார். 
 
 
படத்தின் சிறப்புகளை இதுவரை பார்த்துவிட்டோம். குறைகளே இல்லையா என்றால்.. இருக்கிறது. பாண்டிச்சேரியில் நரபலி கொடுக்கும் சாமியார் சங்ககிரியில் சிக்குவது, படத்தின் இறுதியில் சிறுவர்களும், சிறுமியும் அவ்வளவு தெளிவாக பகுத்தறிவு பேசுவது. ஆனால் கதையின் ஓட்டத்தில் இவை எல்லாம் குறைகளாகவே தெரியவில்லை. இன்றைய சூழலில் மூட நம்பிக்கை மலிந்து கிடக்கும் நமது சமூகத்திற்கு இது போன்ற படங்கள் அவசியம் தேவை. இதுவரை ஜோஸ்யம், பூஜை, புனஸ்காரம் என அலைந்தவர்கள் இந்த படம் பார்த்து ஏதேனும் யோசிப்பார்களானால் அதுவே இந்த படத்திற்கான வெற்றி.

முதல் படத்திலேயே எந்த சமரசமும் இல்லாமல் சொல்ல வந்ததை எளிமையாக, தெளிவாக, வலிமையுடன் கூறி வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார். பெருமுயற்சி எடுத்து இந்த படத்தை மறு வெளியீட்டிற்கு ஏற்பாடு செய்து உலகறிய செய்த இயக்குனர் சேரனுக்கு பாராட்டுகளும், நன்றிகளும்.



அரங்கம் பக்கம்: கொங்கு தமிழ் புதிதாக இருப்பதால் சலிப்பு ஏற்படுத்தியிருக்குமோ என்னமோ..!! படத்தின் ஆரம்பத்தில் அசுவாரசிய முனகல்களும், நக்கல் பேச்சும் ஆங்காங்கே எழுந்த வண்ணம் இருந்தது. ஆனால் படத்தின் போக்கில் அமைதியானவர்கள் இறுதிக் காட்சியில் கரவொலி எழுப்பி படத்திற்கு உரிய மரியாதையை கொடுக்கவே செய்தார்கள்.

March 17, 2012

கர்ணன்

1 comment:



இந்த திரைப்படம் வெளியான ஆண்டு 1964. இப்படம் வெளியான சமயத்தில் நம்மில் பெரும்பாலானோர் பிறந்திருக்கவே இல்லை.

நவீனத்தின் துணை கொண்டு புதிய மெருகேற்றலுடன் மறுபதிப்பு கண்டிருக்கும் இப்படம், இன்று வெளியாகும் சமயத்தில் இந்த படத்தில் நடித்த, பணிபுரிந்த யாரும் உயிருடன் இல்லை (இசையமைப்பாளர் M.S. விஸ்வநாதன் தவிர...).

இன்றைய தேதியில் தலைமுறை கடந்து நிற்கும் படைப்பிற்கு மிகச் சரியான உதாரணம் இந்த திரைப்படம். திரையரங்கில் இன்று வந்த மக்கள் கூட்டம் அதை நிரூபித்தது.



இனி மக்களின் பேராதரவு பெற்ற பழைய படங்கள் இது போல மறு பதிப்பு காணும் என்று எதிர்பார்க்கலாம்... பார்ப்போம்...

March 16, 2012

மார்ச் 18 - மெரினாவில் ஒன்று கூடுவோம்

No comments:







சாதி, மாதம், இனம் கடந்து தமிழர்களாய் ஒன்று கூடுவோம். நமது ஒற்றுமை மூலம் தமிழர்களுக்கு நீதி வழங்க சர்வதேசத்தை நெருக்குவோம். தமிழர்கள் குரலை ஐ.நா வரை ஒலிக்க செய்வோம்.

March 10, 2012

ஆட்டுக்கல் [10/03/2012]

No comments:
 இலங்கை:


ஈழத்தில் கொலை வெறியாட்டம் ஆடிய இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. 47 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ளது இந்த ஆணையம். ஏற்கனவே 22 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இலங்கைக்கு நெருக்கடி முற்றியுள்ளது. இலங்கையும் இந்த தீர்மானத்தை எப்பாடுபட்டாவது தடுக்க வேண்டிய அனைத்து முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் பொருளாதார தடை, பல்வேறு விசாரணைகள் என்று இலங்கையே ஆட்டம் கண்டு விடும்.

நீண்ட காலத்திற்கு பிறகு இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்திருப்பது உலகத் தமிழர்களிடையே ஒரு பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது. ஆனால் இந்த விஷயத்தில் முக்கியமாக எடுக்க வேண்டிய இந்தியாவோ கனத்த மௌனம் சாதிக்கிறது. இந்தியாவின் இந்த மௌனம் பலருக்கும் பலவித எண்ணங்களை தோற்றுவிக்காமல் இல்லை. காரணம், இதுவரை இலங்கையில் நடந்த அனைத்து நிகழ்வுகளுக்கும் இந்தியாவின் பங்கு உண்டு என்று அனைவருக்கும் தெரியும். ஏற்கனவே இலங்கையின் நட்பு நாடான ரஷ்யாவும், சீனாவும் பகிரங்கமாக இலங்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதனால் இந்த தருணத்தில் இந்தியாவின் நிலை என்ன என்பது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியா தொடர்ந்து காட்டி வரும் மௌனம் பல்வேறு ஊகங்கள் கிளம்பவும் அடித்தளம் அமைக்கிறது. கடைசி நேரத்தில் இந்தியா இலங்கைக்கு ஆதராவான நிலைப்பாடு எடுக்கலாம் என்று ஒரு கருத்து நிலவுவதால் உலகத் தமிழர்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

உலகத் தமிழர்களின் முக்கியமாக ஈழத் தமிழர்களுக்கு மகிழ்ச்சியான தருணம் என்று கூறினால் அது இந்த தீர்மானம் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்படும் நேரம் என்று கூறலாம்.

அந்த மகிழ்ச்சியான தருணம் அனைவருக்கும் கிட்டுமா?

பொறுத்திருந்து பார்ப்போம்!!
==========================================================================

வியாபாரம்:
 
மக்களின் கோடீஸ்வர கனவு தொலைக்காட்சிகளில் நன்றாகவே அறுவடை செய்யப்படுகிறது.

விஜய் டிவியின் 'ஒரு கோடி': க்ரோரேபதியின் காமெடி ரீமேக்,

சன் டிவியின் 'ஒரு கோடி': நல்ல கதை, ஆனால் சொதப்பல் திரைக்கதை, வசனம்

ஆனால் இரண்டுமே கண்டிப்பாக சூப்பர் ஹிட் ஆக்கப்படும்....
==========================================================================

ஆனந்த விகடன்:

இந்த வார ஆனந்த விகடனில் ராஜு முருகனின் 'வட்டியும் முதலும்' படித்தேன். ஒவ்வொருவரின் வாழ்வில் வரும் 'ஏதுமற்ற பருவம்' பற்றி மிக அருமையாக எழுதியிருக்கிறார்.

எனக்கு என்னவோ அவர் விவரித்து எழுதியிருக்கும் ஏதுமற்ற பருவத்தின் அன்றைய நிலையில் கொஞ்சம், இன்றைய நிலையில் கொஞ்சம் என இரண்டு நிலைகளின் கலவையாக நான் இருப்பது போல தோன்றுகிறது.
------
அன்புமணியின் பேட்டி படித்தவுடன் மனதில் தோன்றியது...

"என்னமோ போடா மாதவா..."
 ==========================================================================

 புத்தகம்:
 

"எஸ்டேட் ஆரம்பிச்சதிலிருந்து லட்சக்கணக்கான செத்துப்போன அல்லது கொல்லப்பட்ட தொழிலாளிகள், எழுத்தர்கள் ஆகியோர்களுடைய ரத்தத்தையும் சதையையும் உரமாப் போட்டுதான் இந்தத் தேயிலைப் புதர்களெல்லாம் வளர்ந்திருக்குன்னு சொன்னா அது முழுக்க முழுக்க சரியாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன் டாக்டர். ஒவ்வொரு தேயிலைப் புதருக்கும் ரெண்டு மூனு இந்தியர்களுடைய உயிராவது பலியாயிருக்கும்னு சொன்னா அதுல மிகைப்படுத்தலே இருக்காது."

#எரியும் பனிக்காடு (Red Tea) புத்தகத்திலிருந்து.....

ஆசிரியர்: பி.எச்.டேனியல், தமிழில்: இரா.முருகவேள்
==========================================================================
 நினைவுகள்:


ஆதித்யாவில் 'முறை மாமன்' திரைப்படம் பார்த்தேன்.

பல வருடங்களாக தாயை பிரிந்திருக்கும் மகள் தன் தாய்க்கு கடிதம் எழுதுகிறாள்... கடிதம் கிடைக்கப் பெற்ற தாய் தபால்காரரையே அந்த கடிதத்தை படித்து காண்பிக்கும்படி கூறுகிறார்...


இன்று நாம் ஏறக்குறைய இழந்துவிட்ட கடிதம் எழுதும் பழக்கத்தை உயிர்ப்புடன் காட்சியாகப் பார்க்கும்பொழுது மனதினுள் பலவித எண்ணங்களை எழுப்புகிறது.

"சார்.. போஸ்ட்!!!" என்ற குரலை கேட்க்கும்பொழுது கிடைக்கும் எதிர்பார்ப்பும், ஆனந்தமும் இன்று நிச்சயம் இல்லை அல்லது வெகுவாகக் குறைந்துவிட்டது. ஏதேனும் அலுவல் ரீதியான கடிதம் தவிர இன்று உறவுகளிடம் இருந்து கடிதம் வருவது மிகவும் அரிதாகிவிட்டது.

#மலரும் நினைவுகள்


மீண்டும் சந்திப்போம்..!!!

 

March 08, 2012

ஓர் அறிவிப்பு

No comments:

நண்பர்களுக்கு வணக்கம்.

எனது தளத்தின் பெயர் மாற்றம் பற்றிய சிறு அறிவிப்பு இது. இதுவரை தளத்தின் பெயர் 'யாவரும் நலம்' என்றும் தளத்தின் தலைப்பு 'நல்லவன்' என்றும் வைத்திருந்தேன். எனது தளத்தை இரண்டு பெயருடன் அறிமுகம் செய்து கொள்ள வேண்டிய நிலையில் இருந்தேன்.

"தளத்தின் பெயர் 'யாவரும் நலம்', 'நல்லவன்' என்ற பெயரில் எழுதுகிறேன்." என்று அறிமுகம் செய்து கொள்ளும் வேளையில் இரண்டு தளத்தில் எழுதுகிறீர்களா? என்ற கேள்வியையே பெரும்பாலும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 

இது போன்ற சங்கடங்களை தவிர்ப்பதற்காக இனி தளத்தின் முகவரியிலேயே தொடர முடிவு செய்துள்ளேன். அதனால் இனி என் தளத்திற்கு ஒரே பெயர்தான். அது 'யாவரும் நலம்'. அடையாளத்திற்காக 'யாவரும் நலம்' வெங்கட்.

அதேபோல தளத்தின் முகவரி ஆங்கிலத்தில் எழுதும்போது www.yaavarumnalam.com என்று கொடுக்கவும். அதாவது 'y' அடுத்து இரண்டு 'a' கொடுக்க வேண்டும். www.yavarumnalam.com என்று கொடுத்துவிட்டு தளத்தினை பார்க்க முடியவில்லை என்று கூறிய நண்பர்களுக்காக இந்த விளக்கம்.

நண்பர்கள், வாசகர்கள் அனைவரும் இதுவரை எனக்கு அளித்து வந்த ஆதரவையும், அன்பையும் தொடர்ந்து அளிக்க வேண்டுகிறேன்.

நன்றி.

நட்புடன்,
'யாவரும் நலம்' வெங்கட்.


March 02, 2012

அரவான்

2 comments:


வரலாற்றுப் படம் என்றாலே அரசர்கள், போர்க்களம் என்றிருந்த தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் வாழ்ந்த கடை நிலை மக்களின் மீதும் நமது இயக்குனர்களின் பார்வை திரும்பியிருப்பது வரவேற்கத்தக்கது. அந்த வகையில் 18ம் நூற்றாண்டில் தென் தமிழகத்தில் வாழ்ந்த கள்ளர்கள் மற்றும் காவலர்கள் பற்றிய படமே வசந்தபாலனின் ‘அரவான்’. எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய ‘காவல் கோட்டம்’ நாவலின் சிறு பகுதிதான் இந்த படத்தின் கதை, வசந்தபாலனின் கூடுதல் கதையுடன்.

நேரம் பார்த்து ஊருக்குள் சென்று திருடுவதில் பசுபதி குழுவினர் மிகக் கெட்டி. ஆனால் அவர்கள் பெயரை சொல்லி ஒருவன் ஊருக்குள் திருடுவது பசுபதிக்கு தெரிய வருகிறது. அதை பற்றி விசாரிக்க செல்கையில் ஆதியின் அறிமுகம் கிடைக்க, அவரை தங்களது ‘கொத்தில்’ இணைத்துக் கொள்கிறார். ஒரு மாடு பிடிக்கும் போட்டியின்போது கரிகாலனும் அவரது ஆட்களும் வந்து ஆதியை அடித்து தூக்கி செல்கிறார்கள்.

ஏன் என்ற காரணத்துக்காக விரிகிறது flash back. ஆதியும், கரிகாலனும் பக்கத்து ஊர்க்காரர்கள். அனைவருமே பாளையத்துக்கு காவல் பணி புரிபவர்கள். ஐந்து தலைமுறைகளாக ஏதோ ஒரு காரணத்துக்காக இரண்டு ஊர்க்காரர்களுக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. இதற்கிடையில் கரிகாலனின் ஊர்க்காரரான பரத் ஆதியின் ஊரில் இறந்து கிடக்கிறார். இதனால் மூளும் சண்டை, மனித பலி கொடுத்தால் சமாதானம் என்று முடிவாகிறது. பலி யார், அடித்து தூக்கி செல்லப்பட்ட ஆதியின் நிலை என்ன என்று ‘மிகப்’ பொறுமையாக திரையில் சொல்கிறார்கள்.

படத்தில் முழு முதல் பாராட்டு பெறுபவர் ‘கலை இயக்குனர்’ விஜய் முருகன். வாழ்த்துகள். வரலாற்றுப் படத்திற்கு மிக முக்கியமான பங்களிப்பு இவர்களிடமிருந்துதான் தேவை. காலம், சூழல் என அனைத்தையும் உருவாக்கி வரலாற்றின் களத்தை நம் கண் முன்னே உலவ விடுபவர்கள். விஜய் முருகனும் அதை சரியாகவே செய்திருக்கிறார். குடிசை, மாட்டு வண்டி, பனை ஓலைப் பாய், அரிசி புடைக்கும் முறம், அரிவாள் என சிறு விஷயங்கள் முதல் அனைத்து நிலைகளிலும் கவனம் செலுத்தி மிக நுட்பமாக படத்தில் வரும் கிராமங்களை உருவாக்கி உள்ளார். மீண்டும் வாழ்த்துகள்.

 

அடுத்து கவனம் ஈர்த்த விஷயம் ஒளிப்பதிவு. வரலாற்றுப் படத்தை நம் மனதோடு ஒன்ற வைப்பதற்கு ஒளிப்பதிவிற்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு. அதற்கான வேலையை செவ்வனே செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் சித்தார்த்.

என்னதான் வரலாற்றுத் திரைப்படம், தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான பதிவு, இந்த படத்தின் குழுவினரின் அயராத உழைப்பு என்று யோசித்தாலும் படத்தின் குறைகளையும் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. படத்தின் முக்கிய பலமே கதைதான். இப்படி ஒரு சமூகம் இருந்தார்கள் என்று இனிமேல்தான் பல பேருக்கு தெரிய வரும். அதே வேளையில் படத்தின் பலவீனமாக திரைக்கதை அமைந்துவிட்டதை சொல்லியே ஆக வேண்டும். நல்ல கதையில் மிகவும் மெதுவாக செல்லும் திரைக்கதை நம் பொறுமையை சோதிக்கவே செய்கிறது.

அடுத்து படத்தில் மிகப் பெரிய சொதப்பல் Graphics. பாம்பும், காளைக் கூட்டமும் தனித்தே தெரிகின்றது. அதுவும் காளைக் கூட்டத்தில் ஆதி வரும் காட்சி பர பரவென பற்றியெரிந்திருக்க வேண்டாமா? Graphics சொதப்பலால் காட்சியில் வேண்டிய அழுத்தம் இல்லாமல் ஏனோவென்று கடந்து செல்கிறது. இன்னும் கொஞ்சம் செலவு செய்திருக்கலாம்.

நடிகர்கள் வரிசையில் பசுபதி வழக்கம் போல அசத்துகிறார். ஆதி ஆறு பொட்டல உடம்புடன் (அதாங்க six pack body) நன்றாகத்தான் இருக்கிறார். ஆனால் இவர் ‘நடிப்பது’ நன்றாகவே தெரிகிறது. ஒரு வரலாற்றுப் படத்தில் நடிக்கிறோம் என்று உணர்ந்துதான் நடித்தாரா என்று தெரியவில்லை. “நீ இன்னும் வளரனும் தம்பி..!!”. அதுவும் அந்த அருவியில் குதிக்கிற காட்சியில் நீங்க ‘வேட்டைக்காரன்’ விஜய்கிட்ட பயிற்சி எடுத்திருக்கணும். அவர் பாருங்க அருவியில் விழுந்து உடலில் காயம் இருந்த இடம் தெரியாமல் சுத்தமாக வெளியே வருவார். ஆனா நீங்க காலை உடைச்சுக்கிட்டீங்க. என்னமோ போங்க..!!

நாயகிகளாக அர்ச்சனா கவி மற்றும் தன்ஷிகா. மற்றப் படங்களுக்கு பரவாயில்லை. ஆனால் வரலாற்றுப் படங்களுக்கு தமிழ் நான்கு பேசத் தெரிந்திருப்பது மிகவும் அவசியம் அல்லவா? ஆனால் படத்தில் இவர்கள் பேசும் வசனத்திற்கு உதட்டசைவு பொருந்தவேயில்லை. அர்ச்சனா கவி பேசும் வசனமும் அதற்கு அவர் கொடுக்கும் முக பாவமும்.. என்னத்தை சொல்ல?

நடிகர் பரத் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் வருகிறார். நன்றாக வளர்ந்து வந்த நடிகர். ‘பழனி’ என்ற ஒரு சூப்பர் டூப்பர் அட்டு படத்தில் விழுந்தவர் இன்னும் எழுந்திருக்கவே இல்லை. இந்த படத்தில் கதை ஓட்டத்திற்கு ஒரு முக்கியமான திருப்பு முனையாக வருகிறார். இவருடைய காதலியாக இன்னும் சிறிய கதாபாத்திரத்தில் நடிகை அஞ்சலி. இவரை திரையில் பார்த்தவுடன் அரங்கத்தில் என்னா விசில். படத்தோட முக்கிய நடிகர்களுக்குக் கூட அப்படி ஒரு வரவேற்பு இல்லை. இதுக்காகவே நீங்க இன்னும் நிறைய படங்கள் நடிக்கணும் அம்மணி. இவருக்கு ஒரு வசனம்கூட இல்லை. ஆனாலும் படத்தின் ஓட்டத்தில் சோர்ந்திருந்த மக்களுக்கு புத்துணர்வு கிடைத்தது போல இருந்தது இவரின் வரவு.(உங்கள் குருபக்தியை மெச்சினோம்!!!) படத்தின் பின்பாதியில் திடீரென்று வந்து கலகலப்பூட்டியவர் நடிகர் சிங்கம்புலி. கிடா மீசையும், முள்ளம்பன்றி தலையுமாக வந்து இவர் பேசும் ஒவ்வொரு வசனமும் அரங்கம் முழுதும் சிரிப்பலை.

படத்தின் தயாரிப்பு ‘அம்மா கிரியேஷன்ஸ்’ சிவா. இது போன்ற ஒரு முக்கியமான வரலாற்றுப் படத்திற்கு ஆதரவு தந்து தயாரிக்க முன் வந்ததற்கு பாராட்டுகளும், நன்றிகளும்.

வரலாற்றுப் படங்கள் மீது நமக்கு என்றுமே தணியாத ஒரு ஆர்வம் உண்டு. நாம் கண்டிராத காலத்தை காணும் வாய்ப்பு கிடைப்பதே அதற்கு காரணம். அதனால் வரலாற்றுப் படம் என்றாலே ஒரு வித எதிர்பார்ப்பு உருவாகிவிடுகின்றது. அதற்கு சமீபத்திய உதாரணம் ஆயிரத்தில் ஒருவன், பாலை, வாகை சூட வா போன்ற படங்கள். ஆனால் இவை அனைத்தும் மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தனவா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். காரணம் முறையே படத்தில் சொல்லப்பட்ட செய்திகளின் முரண்பாடு, தயாரிப்பு நிர்வாகம், திரைக்கதை போன்றவை. பல முக்கியமான விஷயங்களை ஆய்வு செய்து, வேண்டிய தகவல்களை திரட்டி அனைத்தையும் நேர்த்தியாக இணைத்து வழங்குவதில்தான் இயக்குனரின் சாமர்த்தியம் இருக்கிறது. இதில் எங்கேனும் தெரிந்தோ தெரியாமலோ சருக்கும்போதுதான் நமது எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிகிறது.

அரவானிலும் திரைக்கதையில் ஏற்பட்ட தொய்வு அந்த ஏமாற்றத்தையே தருகிறது. திரைக்கதை ஏற்படுத்திய சலிப்பு கடைசியில் இயக்குனர் சொல்ல வந்த செய்தியை கவனிக்க விடாமல் செய்து விடுகிறது. இருந்தும் 18ம் நூற்றாண்டின் கள்ளர்கள் வாழ்வு, மனித பலி என்று தமிழ் சினிமாவிற்கு புதிய மற்றும் முக்கியமான களன், அதற்கு ஏற்றார்போல கதை தேர்ந்தெடுத்து கொடுத்த வகையில் தமிழ் சினிமாவின் முக்கிய பதிவு ‘அரவான்’.

படத்திற்கான முதல் பூங்கொத்து பெறுபவர்: ‘கலை இயக்குனர்’ விஜய் முருகன்.

கூடுதல் பூங்கொத்து பெறுபவர்: ‘தயாரிப்பாளர்’ சிவா.


நல்லவங்க...

ShareThis