March 10, 2012

ஆட்டுக்கல் [10/03/2012]

 இலங்கை:


ஈழத்தில் கொலை வெறியாட்டம் ஆடிய இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. 47 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ளது இந்த ஆணையம். ஏற்கனவே 22 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இலங்கைக்கு நெருக்கடி முற்றியுள்ளது. இலங்கையும் இந்த தீர்மானத்தை எப்பாடுபட்டாவது தடுக்க வேண்டிய அனைத்து முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் பொருளாதார தடை, பல்வேறு விசாரணைகள் என்று இலங்கையே ஆட்டம் கண்டு விடும்.

நீண்ட காலத்திற்கு பிறகு இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்திருப்பது உலகத் தமிழர்களிடையே ஒரு பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது. ஆனால் இந்த விஷயத்தில் முக்கியமாக எடுக்க வேண்டிய இந்தியாவோ கனத்த மௌனம் சாதிக்கிறது. இந்தியாவின் இந்த மௌனம் பலருக்கும் பலவித எண்ணங்களை தோற்றுவிக்காமல் இல்லை. காரணம், இதுவரை இலங்கையில் நடந்த அனைத்து நிகழ்வுகளுக்கும் இந்தியாவின் பங்கு உண்டு என்று அனைவருக்கும் தெரியும். ஏற்கனவே இலங்கையின் நட்பு நாடான ரஷ்யாவும், சீனாவும் பகிரங்கமாக இலங்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதனால் இந்த தருணத்தில் இந்தியாவின் நிலை என்ன என்பது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியா தொடர்ந்து காட்டி வரும் மௌனம் பல்வேறு ஊகங்கள் கிளம்பவும் அடித்தளம் அமைக்கிறது. கடைசி நேரத்தில் இந்தியா இலங்கைக்கு ஆதராவான நிலைப்பாடு எடுக்கலாம் என்று ஒரு கருத்து நிலவுவதால் உலகத் தமிழர்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

உலகத் தமிழர்களின் முக்கியமாக ஈழத் தமிழர்களுக்கு மகிழ்ச்சியான தருணம் என்று கூறினால் அது இந்த தீர்மானம் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்படும் நேரம் என்று கூறலாம்.

அந்த மகிழ்ச்சியான தருணம் அனைவருக்கும் கிட்டுமா?

பொறுத்திருந்து பார்ப்போம்!!
==========================================================================

வியாபாரம்:
 
மக்களின் கோடீஸ்வர கனவு தொலைக்காட்சிகளில் நன்றாகவே அறுவடை செய்யப்படுகிறது.

விஜய் டிவியின் 'ஒரு கோடி': க்ரோரேபதியின் காமெடி ரீமேக்,

சன் டிவியின் 'ஒரு கோடி': நல்ல கதை, ஆனால் சொதப்பல் திரைக்கதை, வசனம்

ஆனால் இரண்டுமே கண்டிப்பாக சூப்பர் ஹிட் ஆக்கப்படும்....
==========================================================================

ஆனந்த விகடன்:

இந்த வார ஆனந்த விகடனில் ராஜு முருகனின் 'வட்டியும் முதலும்' படித்தேன். ஒவ்வொருவரின் வாழ்வில் வரும் 'ஏதுமற்ற பருவம்' பற்றி மிக அருமையாக எழுதியிருக்கிறார்.

எனக்கு என்னவோ அவர் விவரித்து எழுதியிருக்கும் ஏதுமற்ற பருவத்தின் அன்றைய நிலையில் கொஞ்சம், இன்றைய நிலையில் கொஞ்சம் என இரண்டு நிலைகளின் கலவையாக நான் இருப்பது போல தோன்றுகிறது.
------
அன்புமணியின் பேட்டி படித்தவுடன் மனதில் தோன்றியது...

"என்னமோ போடா மாதவா..."
 ==========================================================================

 புத்தகம்:
 

"எஸ்டேட் ஆரம்பிச்சதிலிருந்து லட்சக்கணக்கான செத்துப்போன அல்லது கொல்லப்பட்ட தொழிலாளிகள், எழுத்தர்கள் ஆகியோர்களுடைய ரத்தத்தையும் சதையையும் உரமாப் போட்டுதான் இந்தத் தேயிலைப் புதர்களெல்லாம் வளர்ந்திருக்குன்னு சொன்னா அது முழுக்க முழுக்க சரியாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன் டாக்டர். ஒவ்வொரு தேயிலைப் புதருக்கும் ரெண்டு மூனு இந்தியர்களுடைய உயிராவது பலியாயிருக்கும்னு சொன்னா அதுல மிகைப்படுத்தலே இருக்காது."

#எரியும் பனிக்காடு (Red Tea) புத்தகத்திலிருந்து.....

ஆசிரியர்: பி.எச்.டேனியல், தமிழில்: இரா.முருகவேள்
==========================================================================
 நினைவுகள்:


ஆதித்யாவில் 'முறை மாமன்' திரைப்படம் பார்த்தேன்.

பல வருடங்களாக தாயை பிரிந்திருக்கும் மகள் தன் தாய்க்கு கடிதம் எழுதுகிறாள்... கடிதம் கிடைக்கப் பெற்ற தாய் தபால்காரரையே அந்த கடிதத்தை படித்து காண்பிக்கும்படி கூறுகிறார்...


இன்று நாம் ஏறக்குறைய இழந்துவிட்ட கடிதம் எழுதும் பழக்கத்தை உயிர்ப்புடன் காட்சியாகப் பார்க்கும்பொழுது மனதினுள் பலவித எண்ணங்களை எழுப்புகிறது.

"சார்.. போஸ்ட்!!!" என்ற குரலை கேட்க்கும்பொழுது கிடைக்கும் எதிர்பார்ப்பும், ஆனந்தமும் இன்று நிச்சயம் இல்லை அல்லது வெகுவாகக் குறைந்துவிட்டது. ஏதேனும் அலுவல் ரீதியான கடிதம் தவிர இன்று உறவுகளிடம் இருந்து கடிதம் வருவது மிகவும் அரிதாகிவிட்டது.

#மலரும் நினைவுகள்


மீண்டும் சந்திப்போம்..!!!

 

No comments:

Post a Comment

நல்லவங்க...

ShareThis