March 24, 2012

வெங்“காயம்”


yaavarumnalam

பெரியார் என்றவுடன் உடனே நினைவுக்கு வருவது அவர் அடிக்கடி உதிர்த்த வார்த்தை ‘வெங்காயம்’. உரிக்க உரிக்க உள்ளே ஒன்றும் இல்லாதது வெங்காயம். ஆனால் வெங்காயம் உரிப்பவரை கண்ணீரில் நனைத்துவிடும். அது போலத்தான் மூட நம்பிக்கைகளும். நம் வாழ்க்கைக்கு பயன் தரக்கூடிய ஒரு விஷயம் கூட அதில் இருக்காது. ஆனால் அதில் சிக்கிவிட்டால் நம் வாழ்க்கையை சின்னா பின்னமாக்கிவிடும். இதை உணர்த்தவே ஒன்றும் இல்லாத விஷயத்தை பெரியார் வெங்காயம் என்றார். அதேபோல ஜோசியம், பரிகாரம், நரபலி என்று ஊரை அடித்து உலையில் போடும் சாமியார்களை உரித்துக் காட்டுகின்றது இந்த வெங்“காயம்”.

சங்ககிரி மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்களில் சாமியார்களும், ஜோசியர்களும் அடுத்தடுத்து கடத்தப்படுகிறார்கள். ஆனால் யாரால், எங்கு, எதற்காக கடத்தப்பட்டார்கள் என்று காரணம் எதுவும் தெரியவில்லை. விசாரிக்க வரும் காவல்துறையும் கிடைக்கும் சிறு சிறு தடயங்களை வைத்து கடத்தல்காரர்களை நோக்கி முன்னேறுகிறார்கள். விசாரணையின் முடிவில் கடத்தியவர்களையும், அதற்கான காரணத்தையும் அறியும்போது தவறு யார் மீது என்று ஒரு பெரிய கேள்விக்குறியே எழுகிறது. அந்த கேள்விக்குறியையும் உரிய பதிலுடன் ஆச்சரியக்குறியாக மாற்றி நம்மை நிம்மதியாக வீட்டுக்கு அனுப்புகிறார் இயக்குனர். அந்த பதிலைக் கொண்டு வேண்டிய முடிவை எடுப்பது நமது கைகளில்.  
 
yaavarumnalam
 
 படத்தில் சத்யராஜ் தவிர அனைவரும் புதுமுகங்களே. படத்திற்கு கூடுதல் பலம் தருவதும் அதுதான். பாட்டி, கூத்தாடி கலைஞர், சிறுமியும் கூட வரும் சிறுவர்கள் என ஒவ்வொருவரும் அவரவர் விதத்தில் கவர்கிறார்கள். குறிப்பாக அந்த சிறுமியின் வெள்ளந்தியான சிரிப்பு கொள்ளை கொள்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் ஜோசியர், சாமியார்களால் பிரச்சினை. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் எடுக்கும் முடிவுதான் படத்தின் பின்பாதி.

இதுவரை அவிங்க, இவிங்க என்று மதுரை வட்டார படங்களையே பார்த்து சலித்தவர்களுக்கு இதோ யதார்த்த நடையை கொண்ட கொங்கு தமிழில் ஒரு படம். அதுவும் அந்த மண்ணை சேர்ந்த எனக்கு இது ஒரு கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்தது. பூனைக் குட்டியை ‘கிளீஸ் குட்டி’ என்று கொஞ்சுவது, நமக்கு மிகவும் நெருக்கமானவரை “என்றா திருவாத்தானாட்டம் பேசுற?” என்று உரிமையுடன் திட்டுவது. இப்படி மண்ணின் மனம் வீசும் பல சொல்லாடல்கள் படம் முழுக்க விரவிக் கிடக்கின்றன.

நாயகன்-நாயகி மோதல் பின்பு காதல் என்று ஆரம்பிக்கும் படம், பைத்தியம் பிடித்த பாட்டியின் வருகைக்குப் பிறகு மெல்ல சூடு பிடித்து படம் முடியும் தருவாயில் பற்றி எரிகிறது. படத்தின் இறுதிக் காட்சியில் வரும் வசனங்கள் ஒவ்வொன்றும் நெத்தியடி. ஒரேயொரு பாடல் காட்சியில் சத்யராஜ் வந்து சிறுவர்களுக்கு தன்னம்பிக்கையும், பகுத்தறிவும் ஊட்டுகிறார். 
 
 
படத்தின் சிறப்புகளை இதுவரை பார்த்துவிட்டோம். குறைகளே இல்லையா என்றால்.. இருக்கிறது. பாண்டிச்சேரியில் நரபலி கொடுக்கும் சாமியார் சங்ககிரியில் சிக்குவது, படத்தின் இறுதியில் சிறுவர்களும், சிறுமியும் அவ்வளவு தெளிவாக பகுத்தறிவு பேசுவது. ஆனால் கதையின் ஓட்டத்தில் இவை எல்லாம் குறைகளாகவே தெரியவில்லை. இன்றைய சூழலில் மூட நம்பிக்கை மலிந்து கிடக்கும் நமது சமூகத்திற்கு இது போன்ற படங்கள் அவசியம் தேவை. இதுவரை ஜோஸ்யம், பூஜை, புனஸ்காரம் என அலைந்தவர்கள் இந்த படம் பார்த்து ஏதேனும் யோசிப்பார்களானால் அதுவே இந்த படத்திற்கான வெற்றி.

முதல் படத்திலேயே எந்த சமரசமும் இல்லாமல் சொல்ல வந்ததை எளிமையாக, தெளிவாக, வலிமையுடன் கூறி வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார். பெருமுயற்சி எடுத்து இந்த படத்தை மறு வெளியீட்டிற்கு ஏற்பாடு செய்து உலகறிய செய்த இயக்குனர் சேரனுக்கு பாராட்டுகளும், நன்றிகளும்.அரங்கம் பக்கம்: கொங்கு தமிழ் புதிதாக இருப்பதால் சலிப்பு ஏற்படுத்தியிருக்குமோ என்னமோ..!! படத்தின் ஆரம்பத்தில் அசுவாரசிய முனகல்களும், நக்கல் பேச்சும் ஆங்காங்கே எழுந்த வண்ணம் இருந்தது. ஆனால் படத்தின் போக்கில் அமைதியானவர்கள் இறுதிக் காட்சியில் கரவொலி எழுப்பி படத்திற்கு உரிய மரியாதையை கொடுக்கவே செய்தார்கள்.

No comments:

Post a Comment

நல்லவங்க...

ShareThis