July 10, 2012

நான் ஈ



தமிழ் சினிமாவில் விலங்குகள் நடிப்பது நமக்கு ஒன்றும் புதிதல்ல. விட்டலாச்சாரியார் காலம் தொட்டு, இப்படி விலங்குகளை நடிக்க வைப்பது வழக்கமான ஒன்றுதான். அதை ராம.நாராயணன் இன்னும் பரவலாக விரிவுபடுத்தினார். அவர் படங்களில்தான் ஆடு, மாடு, குரங்கு, பாம்பு என்று ஒரு விலங்குப் படையே நடித்திருக்கும். “பொண்ணு டைப் அடிக்கிற மாதிரி படம் எடுத்தேன். யாரும் கண்டுக்கல. பாம்பு டைப் அடிக்கிற மாதிரி படம் எடுத்தேன். மக்கள் அமோக ஆதரவு கொடுத்தார்கள்.” என்று அவர் தன்னிலை விளக்கம் வேறு கொடுத்தார். அந்த வரிசையில் தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டமாக விலங்குகளின் வரிசையில்,ஒரு ஈ நடித்திருக்கும் படம்தான் ‘நான் ஈ’.


 கதை என்னவோ எப்பவுமே நாம் பார்த்தும் கேட்டுக் கொண்டிருக்கும் அதே பழி வாங்கும் கதைதான். ஒரு ஊர்ல ஒரு காதலன், காதலி. ஆனால் அந்த காதலியின் மேல் வில்லனுக்கும் ஒரு கண். அவளை அடைய தடையாக இருக்கும் காதலனை, வில்லன் கொன்று விடுகின்றான். இறந்து விட்ட காதலன், ஒரு ஈயாக மறு ஜென்மம் எடுத்து, வில்லனை அழித்து, தனது காதலியை காப்பதே இந்த படத்தின் கதை. பொதுவாக சினிமா விமர்சனம் எழுதும்போது நான் அந்த படத்தின் கதையை கூறுவதில்லை. படம் பார்க்கும்போது சுவாரஸ்யம் குறைந்துவிடக் கூடாதே என்பதுதான் காரணம். ஆனால் இந்த படத்திற்கு கதையை கூறுவதனால் யாதொரு பாதகமும் இல்லை. காரணம், இந்த படத்தை காட்சிகளால் கொண்டு சென்ற விதம். சுமார் இரண்டேகால் மணி நேரம், கவனத்தை சிதற விடாமல் படம் மட்டுமே பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு?

ஒரு ஈயை வைத்து எப்படி கதை சொல்லியிருப்பார்கள் என்ற சிறு ஆர்வத்திலேயே படம் பார்க்க சென்றிருந்தேன். தெலுங்கு ‘ஈகா’ இங்கு மொழி மாற்றி தமிழில் வெளியிட்டிருப்பார்களோ என்ற ஐயமும் கூடவே இருந்தது. காரணம், உதட்டசைவு ஒன்றாக இருக்க, வார்த்தைகள் வேறாக வந்து விழுவது படத்தின் மீதான ஈர்ப்பையே குறைத்து விடும். அப்படியும் சமீபத்தில் என்னை ஈர்த்த மொழி மாற்று திரைப்படம் ‘உருமி’. நிற்க. இப்படி தெலுங்கு தேசத்தில் இருந்து வந்த படம் என்ற காரணம் என்னை தடுத்தாலும், ‘ஈ’யை மையமாகக் கொண்ட படம் என்ற ஒரே காரணத்துக்காக படம் பார்க்க சென்றேன். இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி எனது நம்பிக்கையை மோசம் செய்யவில்லை. மாறாக அவரது மற்ற 8 படங்களையும் தேடி பார்க்கும் அளவுக்கு எனது ஆர்வத்தை தூண்டி விட்டார். ஆமாம். இது அவரது ஒன்பதாவது வெற்றிப் படம்.


முதல் பாதியில் ஒரு முக்கால் மணி நேரம் வெறும் காதல் படமாக செல்ல, நாயகன் நானி இறந்து ஈயாக பிறப்பெடுத்த பின்தான் படம் அசுர வேகத்தில் செல்கிறது. படத்தின் முக்கால்வாசி பணம் வரைகலைப் பணிகளுக்காகவே செலவிடப்பட்டிருக்கிறது. மற்ற விலங்குகள் என்றால் பயிற்சி கொடுத்து நடிக்க வைத்து விடலாம். ஆனால் ஒரு ஈயை எப்படி நடிக்க வைப்பது? அதற்குத்தான் இவ்வளவு செலவும். படத்தின் மொத்த செலவு 30 கோடியாம். அவர்கள் செலவு செய்ததும், பட்ட கஷ்டமும் வீண் போகவில்லை. மொத்த படக்குழுவினருக்கும் ஒரு பெரிய பூங்கொத்து. பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
இயக்குனருக்கு அடுத்து, தனித்த பாராட்டை அள்ளிக்கொள்பவர் ஒளிப்பதிவாளர் செந்தில்குமார். இல்லாத ஒரு ஈ. ஆனால் அது பயணிக்கும் பாதை, வேகம், ஒரு ஈயை காட்டும்போது அதை சுற்றியுள்ள பொருட்கள் தெரியும் விதம் என்று ஒவ்வொன்றையும் கவனத்தில் கொண்டு மிக அற்புதமாக படம் பிடித்துள்ளார். அதுவும் மாந்திரீக பூஜை [தெலுங்கு சினிமாவையும் மாந்திரீகத்தையும் பிரிக்க முடியாது போல..!!] செய்யும் அந்த ஒரு அறைக்குள்ளேயே ஈக்கும், குருவிகளுக்கும் நடக்கும் துரத்தல்கள் மிக அபாரம். அதே போலதான் அந்த விபத்துக் காட்சியும். ஒளிப்பதிவாளருடன் கூடவே அதே அளவு பாராட்டுக்களை பெற்றுக் கொள்பவர் வில்லனாக வரும் சுதீப். இல்லாத ஒரு ஈயை, இருப்பதாக கற்பனை செய்து கொண்டு, அதற்கு ஏற்றார் போல நடிப்பை வெளிப்படுத்துவது சாதாரண விஷயம் அல்ல. ஒரு நடிகன், சரியான ஒரு இயக்குனரிடம் மாட்டினால் எந்த விதத்திலும் வெளிப்படலாம் என்பதற்கு இவரும் ஒரு உதாரணம்.


படத்திற்கு பெரும் பலமாக இருப்பது மரகதமணியின் இசை. ஈ என்று சாதாரணமாக ஒதுக்கி விடாமல், அது செய்யும் சேட்டைகளை நம்மை ரசிக்க வைக்க இசை பெரும் பங்கு வகிக்கின்றது. அதுவும் ‘ஈடா..!! ஈடா..!!’ பாடலில் அதன் இசையும், பாடலுக்கு ஏற்றவாறு காட்சிப்படுத்திய விதமும் தொடர்ந்து கைத்தட்டல்களை அள்ளிக் கொண்டது. ஈ சம்பத்தப்பட்ட காட்சிகளில் இசையமைப்பாளர் தனிக் கவனம் செலுத்தியிருப்பது நன்று தெரிகின்றது.

நாயகி சமந்தா. கதையின் தேவைக்கேற்ப அழகாக வந்து போகிறார். நானி செய்யும் காதல் குறும்புகளால் ஈர்க்கப்படும்போதும், அதை வெளிக்காட்டாமல் அவரை அலைய விடும்போதும், ஈதான் நானி என்று அறியும் வேளையிலும், சுதீப்பை எதிர்பாராத வேளைகளில் சந்திக்கும்போது காட்டும் அதிர்ச்சியில் எனக்கும் நடிக்கத் தெரியும் என்று சொல்லாமல் சொல்லிவிடுகின்றார்.


படத்தின் இன்னொரு இனிய அதிர்ச்சி சந்தானம். மொக்கையாக எடுக்கப்படும் படங்களிலேயே சந்தானம் காட்சிகளை இணைத்து விளம்பரப்படுத்தும் இன்றைய சூழலில், சந்தானம் இருந்தும் அவரை முன்னிலைப் படுத்தாமல் ஈயை மட்டுமே நம்பி விளம்பரப்படுத்தி வெற்றியும் கண்டிருக்கிறார்கள் படக்குழுவினர். படத்தின் நடுவில் திடீரென சந்தானம் வந்து, வந்த வேகத்தில் காணாமல் போய் விடுகின்றார். சரி!! மற்ற படங்கள் போல சந்தானத்தை வைத்து படத்தை வியாபாரம் செய்யும் உத்தி என்று நினைத்தால், படத்தின் முடிவில் அதற்கும் ஒரு விடை வைத்திருக்கிறார் இயக்குனர். படம் முடிந்துவிட்டது என்று அவசர அவசரமாக அரங்கை விட்டு வெளியே ஓடியவர்கள், மீண்டும் திரும்பி வந்தார்கள். அவசரக்குடுக்கைகள்.

அப்புறம் இன்னொரு விஷயத்தை இங்கே சொல்லியே ஆகணும். இதுவரை அக்கட தேசத்திலிருந்து சொல்லியோ, சொல்லாமலோ அவர்கள் படங்களையும், நடனங்கள், காட்சிகள் என்று உருவி தமது படங்களில் வைத்துவிடுவார்கள் நமது தளபதிகளும், அடுத்த முதல்வர்களும். ‘சொந்தமா யோசிச்சு செய்ங்கடா’ என்று பலரும் திட்டியிருப்பார்கள். நானும் திட்டினேன். ஆனால் அப்படி திட்டியதற்கு இப்போது வருத்தப்படுகின்றேன். ஏனென்றால் படத்தில் ஈ செய்யும் பல சாகசக் காட்சிகள் நமது நாயகர்களை கிண்டல் செய்யும் விதமாகவே இருக்கிறது. அதுவும் படம் முடிந்தவுடன் வரும் அந்த இறுதி நடனக் காட்சி [ஐயையோ!! சொல்லிட்டேனே!!] மிக அற்புதம். அப்படி நம்ம நாயகர்கள் உருவி நடிக்கவில்லை என்றால் அந்த இறுதிக் காட்சியை ரசித்திருக்க முடியுமா என்பது சந்தேகமே!!

பலருக்கும் இது குழந்தைகளுக்கான படம் என்று படத்தை பார்த்த மாத்திரத்திலேயே தோன்றக் கூடும். ஈ செய்யும் சேட்டைகள் கண்டிப்பாக குழந்தைகளை ஈர்க்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. ஆனால் கொலை, காமம், வன்மம் என்று கலந்து கட்டிய இந்த படம் குழந்தைகளுக்கான படம்தானா? யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது. 
எப்படியோ!! 'யாவரும் நலம்' என்றிருந்தால் மகிழ்ச்சிதானே!!

4 comments:

  1. வெங்கட்... வருகிற சனிக்கிழமை காலை பத்தரை மணி தேவி பாரடைசில் பில்லா 2 டிக்கெட் உங்களுக்கும் சேர்த்து எடுத்து வைத்திருக்கிறேன்... நீங்கள் வர முடியுமா...?

    உங்கள் மொபைல் நம்பர் தரவும்... nrflyingtaurus@gmail.com

    ReplyDelete
    Replies
    1. நண்பரே!! உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு பதில் அனுப்பியுள்ளேன். மீண்டுமொரு நல்ல சந்தர்ப்பத்தில் சந்திப்போம்.

      Delete
  2. good movies reviews http://www.kollywoodthendral.in

    ReplyDelete

நல்லவங்க...

ShareThis