June 03, 2012

உருமி – பதினைந்தாம் நூற்றாண்டின் உறைவாள்

 
 
 
“வாஸ்கோ டா காமா 15ஆம் நூற்றாண்டில் இந்தியா வந்தார்.” இதுதான் வரலாற்றில் நான் வாஸ்கோ டா காமா பற்றி அறிந்திருப்பது. அதுவும் பள்ளியில் படிக்கும்போது இவரின் வருகைப் பற்றி உலக வரைபடங்கள் வரையும்போது பிரான்சில் தொடங்கி ஆப்ரிக்காவின் அடியில் திரும்பி இந்தியாவை வந்தடைவதாக ஒரு கோடு வரைவோம். அதிலும் பலரும் பலவிதமாக வரைந்து ஒரு வரலாற்றுக்கு பல கதைகள் சொன்ன கொடுமையும் நடந்தது. நாங்களும் அந்த கோட்டோடு வரலாற்றை மறந்து போனோம். ஆனால் வாஸ்கோ டா காமா இந்தியாவிற்கு எதற்காக வந்தார்? வந்த பின்னர் என்ன நடந்தது? என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? ‘உருமி’ திரைப்படத்தை பாருங்கள்.

உலகில் பல நாடுகளுக்கு வியாபாரம் பொருட்டு பயணிக்கும் வாஸ்கோ டா காமா ஒரு சுபயோக சுபதினத்தில் சில துணையாகக் கொண்டு இந்தியாவிற்கு வருகிறார். வந்த இடத்தில் நமது நாட்டில் விளையும் மிளகின் அருமையை தெரிந்து கொண்டு அதை வாங்கிச் செல்கிறான். நமது சமையலுக்கு பயன்படும் மிளகை அவர்கள் துப்பாக்கி குண்டாக பயன்படுத்த முடியும் என்று அறிகிறார்கள். அதனால் மீண்டும் ஒரு பெரும்படையுடன் இந்தியாவிற்கு வருகிறான் வாஸ்கோ. அப்போது கேரள சமஸ்தானத்தை சேர்ந்த ‘சிரக்கல் கொத்துவாள்’ தனது படையுடன் சென்று மோதி உயிர் விடுகிறான். அதை கண்டு அவன் மகன் எப்படி வாஸ்கோவை பழி வாங்குகிறான், தனது சொந்த உணர்வுக்காக பழி வாங்குவது என்றில்லாமல், அது எப்படி அந்நிய ஆதிக்கத்தின் முதல் போராட்டமாக அமைந்தது என்று காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் சிவன்.

படம் மொத்தமும் வாஸ்கோவின் வருகையும் அதன் பின்னர் அவன் மரணம் வரை நிகழும் நம் மக்களின் போராட்டம்தான் என்றாலும் அது இந்த தலைமுறைக்குப் புரிய வேண்டுமே!! உருமியின் கதை நிகழ்காலத்தில் தொடங்குகிறது. பிரித்விராஜ், பிரபுதேவா இருவரும் நண்பர்கள். இன்றைய தலைமுறையின் அடையாளமாக குடியும், கூத்துமாக வெட்டியாகப் பொழுதை கழிக்கிறார்கள். அப்போது ஒரு பன்னாட்டு நிறுவனம் பிரித்வியின் பூர்வீக நிலத்தை, அங்கு கிடைக்கும் கனிம வளங்களுக்காக விலை பேச வருகிறார்கள். ஆனால் அந்த இடத்தில் ஒரு பள்ளி இருப்பதால் அந்த இடத்தை விற்பதில் சிக்கல். அந்த சிக்கலை தீர்த்து, நிலத்தை விற்று பணத்தைப் பெற்றுக்கொள்ள தன் ஊருக்கு வருகிறார் பிரித்வி. அந்த நிலத்தை ஒட்டி வாழும் பழங்குடியினர் அவர்களைக் கடத்தி செல்கிறார்கள்.
 
 
பழங்குடியினர் தலைவனான ஆர்யா, பிரித்வியை தனியே அழைத்து அவரது தலைமுறைப் பற்றியும், அதன் வரலாற்றையும் சொல்கிறார். தமது முன்னோர்கள் தங்களது நிலத்தை அன்னியரிடமிருந்து காக்க அவர்களது போராட்டங்கள், செய்த தியாகங்கள் என்று எல்லாவற்றையும் அறிந்து கொள்கிறார். சமூகம் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் விட்டேத்தியாக சுற்றிக் கொண்டிருந்த பிரித்வி, தற்போது தனது நிலை உணர்ந்து எடுக்கும் முடிவுடன் படம் இனிதே நிறைவுறுகிறது.

படத்தில் ஆச்சரியப்படுத்தும் ஒரு விஷயம் திரைக்கதையும், அதற்கான நடிகர்கள் தேர்வும். சரித்திரக் காலத்தில் நிகழும் சம்பவங்கள் அதே உணர்வுகளுடன் அதே கதாபாத்திரங்களால் நிகழ் காலத்திலும் நடப்பதாக அமைத்திருப்பது மிக நன்று. யார், யாரென்று அவர்தான் இவர் என்று திரை அரங்கில் ஆங்காங்கே விவாதமே நடைபெற்றது. அடுத்து பாராட்டப்பட வேண்டியவர் தமிழில் வசனம் எழுதிய சசிகுமரன். இந்த படத்தை வசனத்துக்காகவே மீண்டும் ஒரு முறை பார்க்கலாம். தமிழில் அவ்வளவு அடர்த்தி. அதுவும் அந்நிய ஆதிக்கத்திற்கு எதிரான வசனங்களில் காரம் இன்னும் அதிகம்.

வரலாற்றுப் படங்களுக்கு மிகவும் நம்பகத் தன்மை ஏற்படுத்துவது கதை நிகழும் இடம், கதை மாந்தர்களின் ஆடை, ஆபரணங்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள்தான். இவை அனைத்தும் இந்த படத்தில் சரியாகவே அமைந்திருக்கிறது. உனக்கு எப்படி தெரியும் என்று கேட்கிறீர்களா? ரொம்ப சுலபம். வரலாற்றுப் படங்கள் பார்க்கும்பொழுது எந்த ஒரு விஷயமும் இடறாமல் கதை ஓட்டத்தில் நம்மை அழைத்து சென்றால் அது சரியான படமே!! இந்த படத்தில் எனக்கு எந்த ஒரு இடறலும் ஏற்படவில்லை.
 
 
 ஒளிப்பதிவாளர்களுக்கான உயரிய அமைப்பான American Society of Cinematographers (ASC)யில் சமீபத்தில் கௌரவிக்கப்பட்டவர். இந்தப் படம் அதற்கு சான்று. அதிரும் உருமி, யானையின் கால்கள், குதிரை குளம்புகளில் பட்டு தெறிக்கும் சேறு என ஒவ்வொரு காட்சியும் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போல இருக்கிறது. சண்டைக் காட்சிகளில் வாள் வீச்சு, வேல் கம்பு, தெறிக்கும் ரத்தம், என களத்தின் உள்ளேயே நாம் இருப்பதை போன்ற உணர்வைத் தருகிறது. மொத்தத்தில் ஒளிப்பதிவின் தரம் இந்த படத்தில் மிக அற்புதம்.

நடிகர்கள் என்று பார்க்கப் போனால், பிரித்விராஜ், ஆர்யா, பிரபுதேவா, ஜெனிலியா, நித்யா மேனன், வித்யா பாலன், என்று ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறார்கள். வரலாற்றின் கதாபாத்திரமாக ஒவ்வொருவரும் வருவதால் அவரவர்களின் பங்களிப்பை மிகச் சிறப்பாக அளித்திருக்கிறார்கள். ஆனால் நான்கு காட்சிகளில் வந்து ஆடுவதற்கு தபு எதற்கு? அதிலும் close-up காட்சிகளில் ரொம்ப பயமுறுத்துகிறார். ஒருவேளை மலையாளத்தில் முக்கிய கதாபாத்திரமாக வருகிறாரோ?

இசையைப் பொறுத்தவரை பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்தாலும், இந்த வரலாற்றுப் படத்தில் பாடல்கள் எதற்கு? அனைவருக்கும் தெரிந்த வரலாற்றுப் படம் என்றால் ‘காந்தி’ திரைப்படத்தை சொல்லலாம். பாடலே இல்லாமல் வந்த அருமையான வரலாற்றுப் பதிவு. அதேபோலத்தான் உருமியும். வாஸ்கோ டா காமா ஒரு வரலாற்று நாயகன் அல்ல. நமது வரலாற்றில் நமது மண்ணை காக்கப் போராடியவர்கள்தான் உண்மையான நாயகர்கள் என்பதை கூற வந்த திரைப்படம். நேர்த்தியாக சொல்லியிருக்கும் இந்த படத்தில் பாடல்கள் மிகப் பெரிய தடை.

கண்ட மசாலா குப்பைகள் சினிமா என்று வந்து கழுத்தருக்கும் இந்த காலக் கட்டத்தில் இந்திய வரலாற்றில் ஒரு முக்கியப் பகுதியை மிகவும் அழகாகவும், செய்நேர்த்தியுடனும் படைத்து, சினிமா என்ற ஊடகத்தை மிகச் சரியாக பயன்படுத்தி இந்த படத்தை நமக்கு அளித்த இயக்குனர் சந்தோஷ் சிவன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
 
 
நாம் நமது சுயத்தை உணராமல் என்று அன்னியரின் திறமையை பார்த்து மயங்குகிறோமோ அப்போதெல்லாம் அவன் நம்மை அடிமைப் படுத்த தயங்க மாட்டான். அன்று, நம் மக்கள் வீரத்தில் சிறந்தவர்களாக இருந்தார்கள். அதனால் இன்னும் வலிமையான ஆயுதத்தைக் கொண்டு நம்மை அடிமைப் படுத்தினான். இன்று நம் மக்கள் அறிவில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் என்ற பெயரில் நமது அறிவைக் கொண்டே நம்மை அடிமைப் படுத்திக் கொண்டிருக்கிறான்.

என்று நமது சுயத்தை நாம் உணர்கிறோமோ, அடிமை எண்ணத்தை கலைந்துவிட்டு என்று சுயமாக வாழ்கிறோமோ அன்றுதான் நமது வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தம் கிடைக்கும். ‘உருமி’ சொல்வதும் அதுதான்.

யாவரும் நலம்.


3 comments:

 1. நல்ல விமர்சனம்..நேற்று சூர்யா டிவியில் மலையாள உருமி ஒளிபரப்பினார்கள்..பார்த்தேன்,,

  ReplyDelete
 2. சிறப்பான விமர்சனம். தெளிவாகவும், சுருக்கமாகவும் எழுதியமை அழகு.

  ReplyDelete

 3. விமர்சனம் சூப்பர் ...

  Thanks

  www.padugai.com

  ReplyDelete

நல்லவங்க...

ShareThis