May 23, 2012

ஆட்டுக்கல் [23/05/2012]

2 comments:

இந்த வார ஆட்டுக்கல்லில் முக்கியமாக இரண்டு விஷயங்கள் பற்றி கூற இருக்கிறேன். இன்று அரைக்கப்படும் மசாலா கார மிளகாய் சேர்க்கப்பட்டு இருக்கும் அதிக கார சாரமாகவே!!

கல்வி வியாபாரம்:

yaavarumnalam


நேற்றுதான் +2 தேர்வு முடிவுகள் வெளியானது. இன்னும் இரண்டு வாரங்களில் பத்தாவது தேர்வு முடிவுகளும் வந்துவிடும். +2 தேர்வு முடிவு வந்தவுடன் பிள்ளைகளும், பெற்றோரும் மதிப்பெண் பட்டியலை கையில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு கல்லூரியாக ஏறி இறங்க ஆரம்பித்துவிட்டார்கள். பல இடங்களில் கல்லூரியில் முன்கட்டணம் செலுத்தி பாடப்பிரிவை உறுதி செய்து கொண்டார்கள். அதுவும் எப்படி? நல்ல மதிப்பெண் எடுத்து counseling மூலம் அந்த கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டால் கட்டிய பணம் free seat-க்கான கட்டணமாகக் கொள்ளப்படும். இல்லையென்றால் management quota-க்கான முன்பணமாக எடுத்துக்கொள்ளப்படும். கல்வி வியாபாரம் என்ற முள்மரத்தில் ஒரு கிளை இது.

கல்லூரிகளில் நடக்கும் வியாபாரம் முள் மரம் என்றால், அப்போ பள்ளிக்கூடங்களில் நடக்கும் வியாபாரம்? நிச்சயமாக அவற்றை முள்மரத்தின் விதைகள் என்று கூறலாம்.

நான் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எனது பனிரெண்டாம் வகுப்பை முடித்தேன். மனப்பாடம் செய்யும் எந்திரமாக நாங்கள் எங்களையே உருமாற்றிக் கொண்டிருந்த காலம் அது. (ஒரு சிலர் கணக்கு பாடத்தையே மனப்பாடம் செய்யும் அளவிற்கு நிலை முற்றிப் போயிருந்தது.)

நான் படித்த அந்த பள்ளி, இன்று அருகாமை இடங்களிலேயே தனது கிளைகளை பரப்பி கல்வி வியாபாரத்தில் நன்றாக வேரூன்றிவிட்டது. அதுவும் கவர்ச்சிகரமான பெயர்களுடன். இதுபோலதான் நாமக்கல் மாவட்டத்தில் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட பள்ளிகள் இன்று மதிப்பெண் தொழிற்சாலைகளாக உருவெடுத்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் 10,+2 தேர்வு முடிவுகள் வரும்பொழுது நாமக்கல் மாவட்டம் குறைந்தது தலா இரண்டு இடங்களாவது பெற்றுவிடும்.
கடந்த பத்து வருடங்களில் கல்வி வியாபாரத்தின் தலைநகராக நாமக்கல் மாவட்டம் உருவெடுத்துள்ளது என்றால் அது மிகையில்லை. அதாவது விஷ விதைகளை உருவாக்கத்தில் நாமக்கல் மாவட்டம் தற்போது முன்னிலையில் உள்ளது.

இவையெல்லாம் களைய அரசு ஒன்றே ஒன்று செய்தால் போதும். சமச்சீர் கல்வியை உண்மையிலேயே சமச்சீராக செய்து, அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தினாலே இந்த தனியார் கல்வி வியாபாரிகளின் கொட்டம் தானாக கட்டுக்குள் வந்துவிடும்.

பெட்ரோல் வியாபாரம்:



எனக்கு விபரம் தெரிந்து நான் வண்டிக்கு பெட்ரோல் போடும்போது அதன் விலை லிட்டருக்கு 25 ரூபாய். அப்போதெல்லாம் விலையேற்றம் பைசா அளவிலேயே இருக்கும். அதனால் நம் அன்றாட வாழ்க்கையில் பெரிதாக ஏதும் பாதிக்கவில்லை. என்றைக்கு பெட்ரோல் விலையேற்றம் பைசாவிலிருந்து ரூபாய்க்கு தாவியாதோ அன்றிலிருந்தே நமக்கு ஏழரை துவங்கிவிட்டது. இந்த விலை ஏற்றத்திற்கு எண்ணை நிறுவனங்களும், அரசாங்கமும் சொல்லும் காரணம் 'நஷ்டம்'.

அந்த நஷ்டக் கணக்கை நீங்களே பாருங்கள்.



வருமானம் அதிகமானால் அவர்கள் அகராதியில் நஷ்டம் என்று அர்த்தம் போல.

சரி!! இந்த பெட்ரோல் வியாபாரிகளை எத்தனை நாள்தான் திட்டுவது என்று சலித்து சகித்து திரும்பினால், எங்களை திட்டுங்கள் என்று பெட்ரோல் பங்க் முதலாளிகள் முன்னால் வந்து நிற்கிறார்கள். அவர்கள் செய்யும் அழிச்சாட்டியம் அப்படி..!!

இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் 54 பைசா ஏறிவிட்டது.

விலையேற்றம் அறிவிப்பு வந்தவுடன் பெட்ரோல் பங்க் முதலாளிகள் செய்த முதல் காரியம் பங்கை இழுத்து மூடியதுதான். இன்னைக்குதான் அனைத்து வண்டிகளிலும் ஒருசேர பெட்ரோல் காலியானது போல, திறந்திருந்த ஒரு சில பங்குகளில் அவ்வளவு கூட்டம். இரவு 10 மணிக்கு மேலும் பங்க் இருக்கும் இடங்களில் வாகன நெரிசல்.

ஏண்டா!! இப்படி அநியாயம் பண்றீங்க? இப்படி சம்பாதிக்கிற பணம் உங்களுக்கு செரிக்குமாடா? நொன்னைகளா!! நீங்க பண்ணின இந்த வேலைக்கு வாயில நல்லா அசிங்கம் அசிங்கமா வருது. நாகரீகம் கருதி இதோட நிறுத்திக்கிறேன்.

ஏதோ!! இன்னைக்கே குறைஞ்ச காசுல போடுற பெட்ரோல்-ல ஒரு வருஷம் முழுக்க வண்டி ஒட்டுராப்ப்ல அவசரப்பட்டு வாகன நெரிசலை ஏற்படுத்தும் பொது மக்களே!!! நீங்க இப்படி ஒண்ணு சேர்ந்து நிக்க வேண்டிய இடமே வேற..!!!

இப்படியே இருந்தோம்னா நாம உருப்படியா ஒரு ____ம் புடுங்க முடியாது.

எல்லோரும் நல்லா இருங்க..!!!!

யாவரும் நலம்!!

May 10, 2012

இரண்டாவது வெள்ளிக்கிழமை

No comments:
 
 
பள்ளி விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவனின் ஒரு விடுமுறையின் முன்னோட்டம் இது. தனியார் பள்ளி விடுதிகளில் படிக்கும் மாணவர்கள் அவ்வளவு சுலபமாக வீட்டிற்கு சென்று வர முடியாது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை மட்டுமே அனுமதி அளிக்கப்படும். மாதம் முழுதும் அடைபட்டிருக்கும் இடத்திலிருந்து வெளியே செல்ல அனுமதி கிடைக்கிறதென்றால் அது விடுதலைதானே!!! என்ன? விடுதி மானவர்களுக்கு இரண்டு நாள் மட்டுமே விடுதலை. மீண்டும் தானாகவே வந்து அடைந்துகொள்ள வேண்டும். இப்படி ஒரு வாழ்க்கை வாழும் மாணவர்களின் விடுமுறை தினத்தை அவர்களோடு சேர்ந்து கொண்டாடலாம் வாருங்கள். 
 
yaavarumnalam.com
 
மூங்கில் குச்சியால், ஜன்னல் கம்பியில் தட்டும் ஒலி மெலிதாக, மிக மெலிதாகக் கேட்டது. எப்போதும் கேட்கும் ஒலித்தான், மற்ற நாளென்றால் தூக்கத்திலேயே ஒருவித வெறுப்பும், சோம்பாலும் வந்து மனதில் ஒட்டிக் கொள்ளும். அறைத் தூக்கத்திலேயே எழுந்து, தினக் கடமைகளை அட்டவணைப்படி செய்வது என்று அன்றையப் பொழுது சங்கடத்துடனேயே கழியும். ஒவ்வொரு நாளையும் சந்தோஷமாகக் கழிப்பது என்பது கட்டாயம் ஆக்கப்படும். ஒவ்வொரு வேலையையும் வேண்டா வெறுப்பாக செய்யத் தோன்றும்.

ஆனால் இன்று அப்படி இல்லை. தூக்கம் கலையும் பொழுதே அந்த நினைப்பு வந்து மனதில் ஒட்டிக் கொள்ளும். ஆம். இன்று இரண்டாவது வெள்ளிக்கிழமை. அந்த நினைப்பு வந்த மாத்திரத்திலேயே கண்ணில் ஒட்டியிருக்கும் தூக்கம் போகும் இடம் தெரியாது. இனம் புரியாத உற்சாகம் ஒன்று மனதில் வந்து ஒட்டிக் கொள்ளும். கட்டிலில் இருந்து எழும்போதே சுறுசுறுப்பு வந்து தோளில் கை போட்டு அழைத்து செல்லும். இதுவரை சண்டை பிடித்தவனை பார்த்து சிரிக்கத் தோன்றும். எப்போதும் பேஸ்ட் கடன் கேட்டு எரிச்சல்படுத்தும் சரவணனுக்கு இன்று கொடுக்கத் தோன்றும். அனைவரது முகங்களும் ஒன்றுபோல சிரிப்பை பூசிக் கொண்டிருக்கும். வழக்கத்தைவிட இன்றுதான் அனைத்து வேலைகளும் நேரப்படி நடக்கும். அவ்வப்போது கிடைக்கும் நேரங்களில் பையை தயார் செய்வதில் அனைவரும் ஆர்வம் காட்டுவோம். இதிலும் ஒரு சிலர் இருப்பார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பே வேண்டியதை தயார் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

காலை உணவின்போது எதிர்ப்படும் அனைவருக்கும் ஒரு புன்னகை வீசப்படும். பதிலுக்கு ஒரு புன்னகை பரிசாக கிடைக்கும். அன்று மட்டும் விடுதி காப்பாளருடன் சினேகமாக பேச சலுகை கிடைக்கும். வகுப்பிற்கு சென்றால் இன்னும் கொண்டாட்டம்தான். Day-Scholar என்று அழைக்கப்படும் வீட்டு மாணவர்கள் [நாங்கள் விடுதி மாணவர்கள் என்றால் அவர்களை வீட்டு மாணவர்கள் என்று அழைக்கலாம்தானே!!] எங்கள் சந்தோஷத்தை இன்னும் அதிகப் படுத்துவார்கள். “வீட்டுக்குப் போறேன். அப்பா, அம்மாவை பாக்கப் போறேன்!! என் செல்ல நாய்க்குட்டியுடன் விளையாடப் போறேன்” என்று எது சொன்னாலும் ரசிப்பார்கள். நமக்கு அது அளவிட முடியாத சந்தோஷம். அடுத்தவர் சந்தோஷத்தை ரசிப்பதும் அவ்வளவு இன்பமாகத்தானே இருக்கும். என்ன பேசினாலும் கேட்பார்கள். அளவு கடந்த சந்தோஷம் ஒரு சில நேரங்களில் எரிச்சலில் கொண்டு விட்டு விடும். அந்த நேரத்தில் “ஏண்டா இப்படி இம்சை பண்றே!?” என்று அலுத்துக் கொள்வார்கள். மனதில் எதுவுமே ஏறாது. மணி எப்போது நாலு அடிக்கும் என்று காலை முதலே எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கும்.

ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியர்கள் ஒவ்வொரு விதமாக சந்தோஷத்தை அதிகப்படுத்துவார்கள். பெரும்பாலும் அன்று வகுப்புகள் நடக்காது. என்ன பாடம் எடுத்தாலும் எங்க மண்டையில ஏறாதுன்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும். காலை வகுப்புகள் முடிந்து மதிய உணவிற்கு விடுதிக்கு வரும்போது நேராக சாப்பிட செல்லாமல் கால்கள் தன்னிச்சையாக எங்கள் பை இருக்கும் இடத்திற்கு செல்லும். ஏற்கனவே பார்த்து, பார்த்து வேண்டியதை எல்லாம் எடுத்து வைத்திருப்போம். ஆனாலும் மீண்டும் அனைத்தையும் சரி பார்த்த பிறகே சாப்பிட செல்வோம். அதுவும் அரை சாப்பாடுதான். நினைப்பெல்லாம் வீட்டில் இருக்கும்போது சாப்பாடாவது ஒண்ணாவது.

மீண்டும் வகுப்புக்கு செல்ல வேண்டும். காலையிலேயே ஒன்றும் நடக்கவில்லை. மதியம் மட்டும் பாடம் நடத்தவா போகிறார்கள். அனைத்து வகுப்புகளிலும் அவ்வப்போது கோரசாக குரலெலுப்பி அடிவயிற்றில் மீண்டும் சந்தோஷத்தை அதிகப்படுத்துவார்கள். பாடமே இல்லாமல் நகரும் அந்த வெள்ளிக்கிழமை அவ்வளவு இனிமை. ஆனாலும் ஒரு சில ஆசிரியர்கள் இருப்பார்கள். சரியாக கடைசி வகுப்பிற்கு வந்து கருமமே கண்ணாக பாடம் எடுப்பார்கள். அவ்வளவு கடுப்பாக இருக்கும். ஆனால் விடுவார்களா? அவர்கள் நினைத்தவரையில் பாடம் எடுத்துவிட்டுதான் ஓய்வார்கள். அவ்வளவு நல்லவர்கள்.
 
 
 
அப்போதெல்லாம் அனைவரிடமும் கைக்கடிகாரம் இருக்காது. ஓரிரு மாணவரிடம்தான் இருக்கும். நொடிக்கொரு முறை யாராவது அந்த பையன்களிடம் மணி கேட்டபடியே இருப்பார்கள். மதியம் இரண்டு மணி தாண்டிவிட்டால் மாணவர்களை அழைத்து செல்ல பெற்றோர்கள் ஒவ்வொருத்தராக வர ஆரம்பிப்பார்கள். தொலைதூரம் செல்லும் மாணவர்கள் என்றால் அவர்கள் சீக்கிரமே பெற்றோருடன் ஊருக்கு செல்ல அனுமதிக்கப் படுவார்கள். அந்த நேரத்தில் அந்த பையன் மீது பல பொறாமை கலந்த பார்வைகள் வந்து விழும். அனைத்தையும் ஒரு வெற்றி கலந்த சிரிப்புடன் ஒதுக்கிவிட்டு வேகமாக செல்வான். தப்பு.தப்பு. ஓடுவான். மணி மூன்றை தாண்டும்போது பெற்றோர் ஒவ்வொருத்தராக வகுப்பு ஜன்னலில் வந்து எட்டி பார்த்தபடி இருப்பார்கள். எங்களை வீட்டிற்கு அழைத்து செல்லும் சந்தோஷம் அவர்களுக்கு. “டேய்!! உன் அப்பாடா!! உன் அம்மா வந்திருக்காங்கடா!!” என்று சந்தோஷக் கூச்சல் அமைதியாக வரும். தங்கள் அப்பா, அம்மாவின் முகம் தெரியாதா என்ற எதிர்பார்ப்பில் வரும் கூச்சல் அது.  
 
 
மணி நான்கை தொட்டதும்தான் இருக்கும் கச்சேரி. விட்டால் போதுமென்று அனைவரும் வகுப்பை விட்டு விடுதிக்கு ஓடுவோம். அந்த ஓட்டத்தை மட்டும் பந்தயமாக அறிவித்தால் அனைத்து பதக்கங்களும் எங்களுக்குதான். அப்படி ஒரு ஓட்டம் ஓடுவோம். அதேபோன்றதொரு மன ஓட்டத்துடன் எங்களது பெற்றோர்களும் விடுதி வாசலில் வந்து நிற்பார்கள். உடை மாற்றி, பையை எடுத்துக்கொண்டு காப்பாளரிடம் கையெழுத்து போட்டு சொல்லிவிட்டு கிளம்பும்போது ஒரு சந்தோஷ பந்து வயிற்றில் அழுத்தும். பள்ளியின் நுழைவாயிலை கடந்து காலை எடுத்து வெளியே வைக்கும்போது அடிவயிற்றில் இருந்த பந்து மெல்ல உடல் முழுக்க விளையாட.. ஒரு புது உற்சாகம் ஊற்றெடுக்க... இரண்டு நாட்கள் விடுதலை பெற்று இதோ ஊருக்கு போகப் போறேன். மாதத்திற்கு ஒரு முறை இரண்டாவது வெள்ளிக்கிழமை வரத்தான் செய்கிறது. அந்த ஒவ்வொரு தினத்திலும் இந்த கொண்டாட்டங்கள் தொடரத்தான் செய்தன. ஒரே காரணம் வீட்டிற்கு போகும் சந்தோஷம்.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் நீங்களும் ஊருக்கு போங்க. உண்மையான சந்தோஷம் அங்கேதான் இருக்கு.

May 08, 2012

வழக்கும் என் சிந்தனைகளும்

1 comment:
வழக்கு எண் 18/9 திரைப்படத்தை அவ்வளவு சாதாரணமாக மற்றும் ஓர் திரைப்படம் என்று ஒதுக்கிவிட முடியாது. ஒரே திரைப்படத்தில் சமூகத்தின் அவலங்களையும் இவ்வளவு நேர்த்தியாக எந்த சமரசமும் இல்லாமல் சொல்ல முடியும் என்பதை நிரூபித்துள்ளார் இயக்குனர் பாலாஜி சக்திவேல். இந்த திரைப்படத்தை பற்றிய எனது பார்வையை தெரிந்து கொள்ள இங்கே செல்லுங்கள். நான் இந்த திரைப்படத்தை பற்றி இங்கே மீண்டும் எழுதக் காரணம் இதில் எடுத்தாளப்பட்டுள்ள கதைக்கலன் மற்றும் இதன் கதை மாந்தர்கள். ஆமாம் அனைவரையும் நடிகர்கள் என்பதையும் தாண்டி உண்மை மனிதர்களாக கண் முன்னே உலவ விட்டிருக்கிறார்கள்.

முதலில் கதைக்களனைப் பற்றி பார்ப்போம்.

இந்த கதையின் நாயகன் வேலு தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்திலிருந்து வருவதாகக் கூறுகிறான். தமிழகத்தின் செல்லப்பிள்ளை என்று சில வருடங்களுக்கு முன்னால் இந்த மாவட்டத்தைப் பற்றிக் கூறுவார்கள். ஆனால் இன்று இந்த மாவட்டம் சவலைப் பிள்ளையாக மாறியது காலத்தின் கோலம். விவசாயத்தையே பெரிதாக நம்பியிருக்கும் மாவட்டம். ஆனால் கால மாற்றத்தில் விவசாயம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ஒதுக்கப்பட, விவசாயத்தை நம்பி பிழைப்பை நடத்தி வந்தோர் இன்று கட்டாயமாக அதிலிருந்து வெளியேற்றப்பட்டு வேறு தொழிலில் ஈடுபட நிற்பந்திக்கப்பட்டுள்ளனர். அப்படிபட்ட களனில் தொடங்குகிறது இந்தப் படம்.

விவசாயத்தின் வீழ்ச்சியால் துரத்தப்பட்ட வேலு, அன்றாட வாழ்க்கைக்காக வீட்டு வேலைக்கு செல்லும் ஜோதி, கூத்துக்கலை அழிந்துவரும் நிலையில் சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வரும் சின்னசாமி, பதின்ம வயதுகளில் பருவ கவர்ச்சியில் வீழ்ந்து வாழ்க்கையை சிதைத்து கொள்ளும் பணக்கார வீட்டுப் பிள்ளைகள், வழக்கு விசாரணை நடத்தும் ஆய்வாளர் என்று அனைத்து களன்களுமே நமக்கு புதியவை. இந்த சமூகத்தால் ஒதுக்கப்பட ஆனால் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய வாழ்க்கையை இந்த படம் பதிவு செய்திருப்பதே இதன் பலம்.

அடுத்து நாம் பார்க்க வேண்டியவர்கள் கதையின் மாந்தர்கள்:

ஏழ்மையினால் அப்பாவுக்கு ஏற்பட்ட கடனை அடைக்க பள்ளி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு வேலைக்கு செல்கிறான் வேலு. கந்துவட்டியின் கொடுமை அவனை வட நாட்டிற்கு வேலைக்கு துரத்துகிறது. அவனது பெற்றோரும் ஒரு விபத்தில் இறந்துவிடுகின்றனர். தகவலை காலம் கடந்து அறியும் வேலு, அவனது முதலாளியை தாக்கிவிட்டு சென்னைக்கு ஓடி வந்துவிடுகிறான். வந்த இடத்தில் பாலியல் தொழில் செய்யும் ரோசி அக்காவின் உதவியால் ஒரு நடைபாதை தள்ளுவண்டி கடையில் வேலைக்கு சேர்கிறான். கொஞ்ச நாளில் ரோசி அக்கா காணாமல் போகிறாள். வேலுவும் ஜோதியை ஒரு மோதலில் சந்திக்கிறான். மோதல் ஒருதலைக் காதலாகி பின்னர் அவனை சிறை வரை தள்ளுகிறது. வேலுவின் கதாபாத்திரம் இயல்பைக் கடக்காமல் யதார்த்தமாக கையாளப்பட்டிருக்கிறது. வேலுவாக வரும் ஸ்ரீயின் நடிப்பும் அதற்கு பாந்தமாகப் பொருந்துகிறது.

அடுத்து கூத்துக் கலைஞனாக வரும் சின்னசாமி. இப்போதான் டி‌வி பேட்டியில், மேட்டூர் பக்கம் ஒரு கிராமத்தில் கூத்து பார்த்துக்கொண்டிருக்கும்போது இந்த சின்னசாமி கதாபாத்திரம் உருவானதாக இயக்குனர் கூறினார். முதன்முதலில் அந்த கூத்துக் காட்சியை காட்டியிருந்தால் கண்டிப்பாக அவன் ஒரு பெண் என்றே அனைவரும் நம்பியிருப்பார்கள். அப்படி ஒரு அருமையான நடிப்பு. பெண் போல வளைந்து நெளிந்து ஆடுவதும், நக்கலான தொனியுடன் வேலுவிடம் பேசுவதாகட்டும், பின்னி பெடலெடுக்கிறான் இந்த பையன். வடபழனியில் வாய்ப்பு தேடும் இவனுக்கு சீக்கிரம் பல பெரிய வாய்ப்புகள் கிடைக்கட்டும்.

ஜோதியாக வரும் ஊர்மிளா. தனது இயல்பான இளவயது சந்தோஷங்களை விட்டுவிட்டு அடுக்குமாடி குடியிருப்புகளில் வேலை செய்யும் பெண்களை நினைவுபடுத்துகிறாள் இந்த ஜோதி. எப்போதும் அமைதியாக, தெரியாமல் குறுக்கே வந்த வேலுவை சதா முறைத்துக்கொண்டு இருப்பது என்று பேசாமலேயே தனது கதாபாத்திரத்தை பேச வைக்கிறாள். அதிலும் கடைசி காட்சியில் மெல்ல அவள் உதடு துடித்தபடி முகத்திரை விலகும்போது மனது வலிக்கிறது. இனி நிஜத்தில் எந்த ஒரு பெண்ணிற்கும் இந்த கொடுமை நிகழாமல் இருக்க வேண்டுமே என்றே மனம் நினைக்கிறது. ஜோதியும் அவள் வேலை செய்யும் வீட்டிலுள்ள பெண்ணான ஆர்த்தியும் சம வயதினர்தான். ஆர்த்தி வாழ்வின் அனைத்து சந்தோஷங்களையும் அனுபவித்தபடி இருக்கிறாள். ஆனால் ஜோதி தன் வாழ்வையே ஒரு போராட்டமாக நடத்துகிறாள். இந்த முரண்பாடுதான் நமது அடையாளமா?

நகரத்து பள்ளி மாணவர்களின் வாழ்வும் இந்த படத்தின் ஒரு பகுதியாக[ஆனால் முக்கியமாக] வருகிறது. நான் பள்ளியில் படிக்கும்பொழுது உடன் படிக்கும் மாணவியருடன் அவசியம் இன்றி பேசக்கூடாது. மீறி பேசினால் ஏதோவொரு வகையில் தண்டனை கிடைக்கும். இந்த படத்தில் வரும் ஒரு மாணவி, பின் தொடர்ந்து வரும் பையனை pick-up செய்யுமாறு அறிவுறுத்துகிறாள். “பிடிச்சா continue பண்ணு, இல்லன்னா கழட்டி விட்டுடு” என்று யோசனை வேறு கூறுகிறாள். பொண்ணுங்க இப்படின்னா பசங்க எங்கடா துணி விலகும், அதை படம் எடுக்கலாம் என்று செல்போனோடு அலைகிறார்கள். பருவ வயதில் பாலியல் ஈர்ப்பு வருவது இயற்கையான ஒன்றுதான். ஆனால் இன்று விஞ்ஞானத்தின் அதீதமான வளர்ச்சி வளர் இளம்பருவத்தினருக்கு உதவி புரிவதாக இல்லை. மாறாக அவர்களை தவறாக வழி நடத்தி படுகுழிக்கே இட்டுச் செல்வதாக உள்ளது.

பள்ளி, கல்லூரிகளில் செல்போன் தடை செய்யப்படும்போது மாணவர்கள் சொன்னதை பார்த்திருப்பீர்கள்தானே?? என்ன சொன்னார்கள்? “செல்போன் இருப்பதால் நாங்கள் எங்கே இருக்கிறோம் என்று பெற்றோருக்கு உடனுக்குடனே தெரிவிக்க முடிகிறது, நண்பர்களுடன் பாடத்திலுள்ள சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள உதவியாக இருக்கும்...” இப்படி இன்னும் பல நியாயம் போல அமைந்த காரணங்கள் பல கூறினார்கள். ஆனால் இவை எல்லாம் உண்மைதானா? நிச்சயமாக இல்லை நண்பர்களே!!

விஞ்ஞானத்தின் வளர்ச்சியை நாமும் உடனே பயன்படுத்த வேண்டும் என்று எழும் ஆசை இயல்பான ஒன்றுதான். ஆனால் அதற்காக நாம் எடுத்து வைக்கும் முதல் அடி சரியான பாதையில் இருக்க வேண்டும். இல்லையென்றால் இப்படித்தான் என்று சொல்ல முடியாத பல வழிகளிலிருந்து இன்னல்களை சந்திக்க வேண்டி இருக்கும். இந்த படத்தில் பெங்களுக்கு மிக முக்கியமான செய்தி ஒன்று இருக்கிறது. நீங்கள் பொது இடங்களில் இருக்கும்போது உங்களை பல கண்கள் மேய்கின்றன. அதில் பல கேமரா கண்களும் அடக்கம் என்பதை மறந்து விடாதீர்கள். நாகரீகம் என்று சொல்லி உடல் அங்கங்கள் தெரியும்படி உடை அணிவதில் தொடங்குகிறது உங்களுக்கான ஆபத்து. உங்களுக்கு விருப்பமான உடை அணிவது உங்கள் உரிமையாக இருக்கலாம். ஆனால் அது அளவோடு இருந்தால் நலம். அளவுக்கு மிஞ்சினால்??

கோடை விடுமுறையில் குடும்பத்தோடு சத்யம், ஐநாக்ஸ் திரையரங்கில் படம் பார்க்க வருபவர்கள் இனி அவர்கள் பிள்ளைகளை எப்படி பார்ப்பார்கள்? நிச்சயமாக பிள்ளைகளின் செல்போன்கள் ஒருமுறையாவது சோதனை போடப்படும். கொஞ்சம் கண்காணிக்கப் படலாம். இதனால் நன்மை ஏதேனும் விளையுமா என்றால் இருக்கலாம். ஆனால் பெற்றோர் பிள்ளை இடையே பிரச்சினை வர வாய்ப்புகள் அதிகம். கவனத்தோடு கையாள வேண்டியிருக்கும். நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.

இந்த படத்தை பற்றி நல்லதான விமர்சனங்கள் வந்தபடி இருக்க, எதிர்மறை விமர்சனங்களும் வர ஆரம்பித்துள்ளன. அது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். அச்சு பிச்சு கதாநாயகன் அறிமுகம், கதாநாயகியின் முகத்தை தவிர அவளின் உடல் பாகங்கள் அனைத்தையும் நெருக்கமாக காட்டும் மற்ற குப்பைகளுக்கு நடுவே ‘வழக்கு எண் 18/9’ திரைப்படம் நிச்சயம் அனைவரும் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. ஒரு இயக்குனர் தந்தையின் நிலையில் இருந்து இளம் பிள்ளைகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த படத்தை எடுத்ததற்காக அவருக்கு ஒரு “ஓ” போடுவோம். இயக்குனர் சொல்ல வருவதும் நான் நினைப்பதும் ஒன்றேதான்.

அது.....

‘யாவரும் நலம்’

May 06, 2012

வழக்கு எண்: 18/9

No comments:

www.yaavarumnalam.com

விவசாயம் பொய்த்து வாழ வேறு வழியில்லை என்ற நிலையில் பிழைப்பை தேடி நகரத்துக்கு மக்களை துரத்துகிறது இன்றைய நுகர்வோர் கலாச்சாரம் மிகுந்த உலகம். இந்த கலாச்சாரம் வேகமாக பரவியதால் முதலில் அடிபட்டது விவசாயம்தான். விவசாயத்தில் வருமானம் குறைந்த காலங்களில் கடன் வாங்கி பிழைப்பை நடத்தினார்கள். கடனை அடைக்க மேலும் கடன். அதை அடைக்க மேலும் கடன் என்று கடனிலேயே வாழ்க்கையை ஓட்ட வேண்டிய நிர்பந்தம். இந்த கடின நிலையிலும் தாக்குப் பிடித்தவர்கள், சொந்த ஊரில் இருந்து பிழைத்துக் கொண்டார்கள். முடியாதவர்கள் வருமானம் தேடி நகரத்தை நோக்கி படையெடுத்தார்கள். அப்படி சொந்த மண்ணில் வாழ வழியை இழந்த குடும்பத்திலிருந்து வரும் பையனிடமிருந்து தொடங்குகிறது இந்த படத்தின் கதை.

ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்யும் ஜோதி(ஊர்மிளா) தாக்கப் படுகிறாள். அவளை மருத்துவமனையில் சேர்த்து விசாரணையை துவக்குகிறது காவல்துறை. ஜோதியின் அம்மா கொடுக்கும் தகவலின் பேரில், அந்த குடியிருப்பு இருக்கும் பகுதியில் தள்ளுவண்டி கடை நடத்தும் வேலு(ஸ்ரீ) காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரிக்கப்படுகிறான். வேலுவின் வாக்குமூலத்தில் அவன் ஜோதியை ஒருதலையாகக் காதலிப்பது தெரிய வருகிறது. விசாரணை நடக்கும் அதே நேரத்தில் ஆர்த்தி(மனீஷா யாதவ்) இந்த வழக்கு தொடர்பாக ஆய்வாளரிடம் பேச வருகிறாள். வேலுவை தொடர்ந்து ஆர்த்தியும் விசாரிக்கப்படுகிறாள். அவள் கூறும் விஷயம் இன்றைய பள்ளி மாணவர்கள் எத்தகைய சூழலில் அவர்கள் அறியாமலே சிக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று அதிர்ச்சியுடன் கூறுகிறது இந்த வழக்கு.

www.yaavarumnalam.com

நான் அறிந்த வரையில் சினிமா என்ற ஊடகத்தை மிகச் சரியாக பயன்படுத்தும் மிகச் சில இயக்குனர்களில் பாலாஜி சக்திவேல் முக்கியமானவர். அதுவும் இன்றைய மாணவர்கள் செல்போன் என்ற சனியனை [இந்த படத்தை பொறுத்த வரையில் அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது] கையில் வைத்துக் கொண்டு அடிக்கும் லூட்டி, அவர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் தேர்ந்தெடுக்கும் தவறான பாதை என்று அனைத்தையும் ஒரு அப்பாவின் அக்கறையோடு கையாண்டு நமக்கு நல்லதொரு படத்தை கொடுத்திருக்கிறார்.

இவரின் காதல் திரைப்படத்தை பார்த்துவிட்டு, இன்னதென்று சொல்ல முடியாத ஒரு உணர்வால் ஆட்கொள்ளப்பட்டு மீண்டும் மீண்டும் அந்த படத்தை பார்த்தேன். அடுத்து அவரின் கல்லூரி படத்தை பார்த்து எனக்கு கோபமே வந்தது. தமிழ்நாட்டையே உலுக்கிய அந்த பேருந்து எரிப்பு சம்பவத்தை ஏதோ தேசிய கட்சி, ஆந்திரா என்று ஒப்பேற்றியிருந்தார். மிகவும் ஆழமான பதிவாக வந்திருக்க வேண்டிய அந்த படம் ஒரு சாதாரண நிகழ்வைப் போல படமாக்கப்பட்டிருந்தது. இயக்குனரும் பல கண்டனங்களை பெற்றிருப்பார் போல. விகடன் மூலம் அதற்கு மன்னிப்பும் கேட்டிருந்தார். அனைத்திற்கும் ஈடு செய்யும் விதமாக மிகவும் கவனமாகவும் தரமாகவும் இந்த வழக்கை நம் முன்னே சமர்பித்திருக்கிறார்.

www.yaavarumnalam.com

கந்துவட்டிக்கு கடன் வாங்கி கடனை அடைக்க முடியாமல் பிள்ளைகளை வேலைக்கு அனுப்பும் கொடூரம், பிளாட்பாரக் கடைகளில் வேலை செய்யும் சிறுவர்களின் நிலை, குடும்ப சூழ்நிலையால் அடுக்குமாடி குடியிருப்பில் வேலைக்கு செல்லும் இளம் பெண்கள், பணக்கார வீட்டுப் பிள்ளைகள் இன்று பெற்றோரை விட்டு எவ்வளவு தூரம் விலகி இருக்கிறார்கள், செல்போன் மூலம் தடம் மாறும் அவர்களது வாழ்க்கை என்று அனைத்து விஷயங்களையும் மிகவும் நேர்த்தியாக, உண்மைக்கு நெருக்கமாக படைத்துள்ளார் இயக்குனர். நடிகர்களைப் பொறுத்தவரை இது ஒரு படம் என்பதையும் மீறி ஒரு நல்ல படைப்பு என்பதை உணர வைக்கும் வகையில் அவர்கள் பங்கை மிகச் சரியாக செய்துள்ளார்கள். தொழில்நுட்பக் கலைஞர்களும் அவ்வாறே தங்கள் பங்கை செம்மையாக செய்துள்ளார்கள்.

 www.yaavarumnalam.com

பதின்ம வயதுகளில் இருக்கும் பிள்ளைகளின் பெற்றோர்கள், தமது பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பது மிகவும் அவசியம் என்று உணர்த்துகிறது இந்த படம். இந்த வயது பிள்ளைகளின் சில நடவடிக்கைகளை பெற்றோர் கண்டிப்பார்கள். அவர்களின் சுதந்திரத்தை பறிப்பதற்காக அல்ல. அவர்கள் எந்த தவறான இடத்திலும், சூழ்நிலையிலும் சிக்காமல் இருக்க வேண்டுமே என்பதற்காக. ஆனால் இப்படி அக்கறை கொண்ட பெற்றோரை வில்லன்கள் போல பார்ப்பார்கள் பிள்ளைகள்.

வழக்கு எண் 18/9 படத்தை பார்த்தபிறகு, அவர்களின் நலனுக்காக வில்லனாகவே இருக்கலாம் என்றே தோன்றுகிறது. தப்பில்லை.

நல்லவங்க...

ShareThis