October 30, 2011

வேலாயுதம்

No comments:
விஜய்க்கு ரீமேக் ஆசை விடாது போல. இதுவரை தெலுங்கு படங்களின் ரீமேக்கில் நடித்துக்கொண்டிருந்தவர் இப்போ தமிழ் படங்களையே ரீமேக் செய்ய ஆரம்பித்துவிட்டார்.

திருபாச்சி தங்கச்சி சென்டிமெண்ட் + ரமணா climax + அந்நியன் climax + விஜயகாந்த், அர்ஜூன் பட தீவிரவாதிகள் = வேலாயுதம்.

 
 இந்தியாவில் குண்டு வெடிக்காத ஒரே நகரம் சென்னைதான். அதனால் அங்கு சீக்கிரம் குண்டுவெடிப்பு நடத்தி அமைதியை சீர்குலைக்கனும் என்பது தீவிரவாத கும்பல் திட்டம். [ஏண்டா!! அவங்களுக்கு அந்த எண்ணம் இல்லாட்டியும் நீங்களே சொல்லிக் கொடுப்பீங்க போலிருக்கே?] இதற்கு உதவி செய்பவர் தமிழ்நாட்டு உள்துறை அமைச்சர்.[எங்கப்பா புடிச்சீங்க அந்த ஆளை? Serious காட்சிகள்ல அந்த ஆள் பேசுற வசனம் எல்லாம் செம காமெடி.]

திட்டப்படி முதல்ல ஒரு குண்டு வெடிக்குது. ஆனா குண்டு வெச்சவங்க ஒரு விபத்தில் இறந்து போக, இவர்களைக் கொன்றது வேலாயுதம்தான் என தொலைக்காட்சி நிருபர் ஜெனிலியா கற்பனையாக எழுதி வைத்து விட, தங்களைக் காக்க வந்த வீராதி வீரன், சூராதி சூரன் எனக் கொண்டாடுகின்றார்கள். 
 
இது எதுவும் தெரியாத விஜய், தன் தங்கை திருமண விஷயமாக குடும்பத்தோடு சென்னை வருகிறார். அவர் போகிற இடங்களில்,  எதேத்சையாக செய்யும் காரியங்களால் மக்கள் குண்டு வெடிப்பில் இருந்து தப்பிக்கிறார்கள். இதனால் வேலாயுதம்தான் தங்களைக் காப்பாற்றுவதாக மக்கள் நம்ப ஆரம்பிக்கிறார்கள்.

ஜெனிலியா மூலம் உண்மை அனைத்தையும் அறிந்த விஜய் எடுக்கும் அதிரடி(?) முடிவுதான் ‘வேலாயுதம்’.

தொடர்ந்து fail mark எடுக்கும் மாணவன், border-ல just pass ஆனா எவ்ளோ சந்தோஷப்படுவான். அந்த நிலைதான் விஜய்க்கும்.
 
6 படங்கள் மரண மொக்கைகள். அதன் பின் இயக்குனர் தயவால் சுமாராய் வந்த காவலன் சூப்பர் படம் ஆனது. அந்த வரிசையில்தான் வேலாயுதமும்.

என்னதான் ஏற்கனவே பார்த்த காட்சிகள், மொக்கை heroin [ஜெனிலியா இல்லீங்கோ!!], அர்த்தமற்ற சண்டைக்காட்சிகள், அரைவேக்காட்டு தத்துவப் பாடல், குத்துவசனங்கள் என்று இருந்தாலும் இவை அனைத்தையும் மீறி படம் பார்க்க வைத்தது விஜயின் screen presenceம், சந்தானம் நகைச்சுவையும்தான். முதல் பாதி முழுக்க பின்னி எடுக்கிறார். அதுவும் வைரம் திருடும் காட்சியில் அரங்கம் முழுக்க சிரிப்பாலை. சந்தானம் திரையில் தெரிந்தாலே சிரிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.

அப்புறம் அந்த Heroin. எங்க புடிச்சாங்கன்னே தெரியல. Expression–ம் வரல, நடிப்புன்னா என்னன்னும் தெரியல. இதெல்லாம் பாக்கணும்னு நம்ம தலையெழுத்து.

ஜெனிலியா தொலைக்காட்சி நிருபராய் வந்து கவனம் ஈர்க்கிறார்.

 
கில்லியில் பார்த்த விஜய் அதே துள்ளல், சுறுசுறுப்போடு வருகிறார். கிராமத்தில் தங்கைக்காக இவர் செய்யும் சேட்டைகள் ஏற்கனவே பார்த்ததுதான் என்றாலும் நன்றாக உள்ளது. ‘பாசமலர்’ காட்சியில் கிராமத்தினர் கடுப்பாவது ஓர் உதாரணம். ஆனால் கல்கி அவதாரம் போல தப்பு நடக்கும் இடம் அனைத்திலும் சரியாக வந்து தன் மேல் ஒரு அடிகூட படாமல் அனைவரையும் துவம்சம் செய்கிறார். [சுறா, வேட்டைக்காரன் நினைப்புல இருந்து வெளிய வாங்க சார். இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படியே இருக்கப் போறீங்க?] அதுவும் climax சண்டையில், “What a man?” என்று அரங்கின் பல இடங்களில் கேட்டது [படையப்பா effect!!].

 
ஆனா எவ்ளோ மொக்கைகள் வந்தாலும் விஜய் படம்னா ஒரு எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது. ரஜினிக்குப் பிறகு ஒரு mass entertainer-னா அது விஜய்தான். இதை சரியா புரிஞ்சும் ஏன் தப்பான வழியில போய்க்கிட்டிருக்கர்னுதான் தெரியல.

இசை – விஜய் ஆண்டனி. எப்பவும்போல பாடல்களை குத்தி எடுக்காமல் கொஞ்சம் மிதமான இசையை கொடுத்துள்ளார். ‘மொளைச்சு மூணு இலை’ பாடல் இதமான மெல்லிசை.

இயக்கம் – ஜெயம் ராஜா. தனது தம்பியை விட்டு, தனியாக செய்திருக்கும் படம். வழக்கமான மொழிபெயர்ப்புப் படமாக இல்லாமல் முதன்முறையாக கதை, திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார். அந்த வகையில் முதல் பாதியில் வெற்றி பெற்றிருக்கிறார். நீளமான சண்டைக் காட்சிகள், climax வசனம் என பின்பாதியில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் ஒரு அருமையான படம் கிடைத்திருக்கும். ஆனாலும் பழைய விஜய் படங்கள் போல் அல்லாமல் ரசிக்கும் வகையில் ஒரு விஜய் படம் கொடுத்து வெற்றி பெற்றுள்ளார்.

வேலாயுதம் – கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் இல்லை, பார்த்தாலும் நஷ்டம் ஒன்றும் இல்லை.

October 29, 2011

7ஆம் அறிவு

2 comments:

இதுவரை நாம் அறிந்திராத நமது வரலாறு, கால ஓட்டத்தில் மறக்கடிக்கப்பட்ட நமது வரலாறு.. இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வரலாற்றின் நாயகன் போதிதர்மன்.

தற்காப்பு கலை என இன்று நாம் கற்றுக்கொண்டிருக்கும் சீனக் கலையான கராத்தேவும், குங்ஃபூவும் நமது மண்ணில் இருந்து சென்றதுதான் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்?

யுவான் சுவாங் தமிழகம் வந்ததை வரலாற்றில் படித்திருக்கும் நமக்கு, போதிதர்மனின் சீனப்பயணம் பற்றி தெரியாமல் போனது எப்படி?

தமிழரான போதிதர்மனுக்கு சீனாவில் கோவில்கள் இருப்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

அந்த வரலாற்றை கொஞ்சமே கொஞ்சமாக எடுத்துக்கொண்டு அதில் சிறு கற்பனையை புகுத்தி நிகழ் காலத்தோடு முடிச்சு போட்டால் அதுதான் ‘7ஆம் அறிவு’.

போதிதர்மன் வரலாறு:

கி.பி. 6ஆம் நூற்றாண்டு. அப்போதைய பல்லவ மன்னனின் 3வது மகன்தான் போதிதர்மன். போர்க்கலை, மருத்துவம் என சகல கலைகளையும் கற்றுதேர்ந்தவர். தனது குருமாதாவின் கட்டளையை ஏற்று, சீனாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். போகும் முன் தான் கற்ற அனைத்தையும் செப்புத்தகடுகளில் பதிந்து தனது தந்தையிடம் ஒப்படைத்துவிட்டு செல்கிறார். 3 வருட நெடும்பயணத்துக்குப் பின் சீனாவில் ஒரு கிராமத்தை அடைகிறார்.

அதே சமயத்தில் அந்த ஊர் பெரியவர்கள், தங்கள் கிராமத்திற்கு பெரிய ஆபத்து வரப்போவதை கணிக்கிறார்கள். அப்போது வந்து சேர்ந்த அன்னியனான போதிதர்மன்தான் அந்த ஆபத்து என தவறாக புரிந்துக்கொண்டு அவரை விரட்டிவிடுகின்றார்கள். ஆனால் ஆபத்து வேறு வடிவங்களில் அவர்களை சூழ்கிறது. ஒன்று கொடிய நோய் மூலமாக. மற்றொன்று எதிரிகள் மூலமாக. போதிதர்மன் கிராம மக்களை இந்த ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுகின்றார்.

அந்த கொடிய நோய் பல ஊர்களுக்கும் பரவிவிடுகின்றது. அதனால் தனது மருத்துவ அறிவை அங்குள்ள வைத்தியர்களுக்கு போதிதர்மன் பயிற்றுவிக்கிறார். அது அவர்களது சீன மொழியிலும் குறிப்பெடுக்கப்படுகின்றது. நமது தற்காப்பு கலையையும் அந்த கிராமத்தினரின் வேண்டுகோளை ஏற்று அவர்களுக்கு கற்பிக்கிறார். இப்படியாக நமது மருத்துவமும், தற்காப்பு கலையும் சீனாவில் பரவுகின்றது. சிறிது காலத்திற்குப் பிறகு தான் தனது ஊருக்கு திரும்பும் வேளை வந்துவிட்டதை ஊர் மக்களுக்கு அறிவிக்கிறார் போதிதர்மன். அவரது இறந்த உடலை தங்கள் மண்ணில் புதைத்தால் தங்கள் வாழ்வு நலமாக இருக்கும் என ஊர் மக்கள் தவறாகக் கணித்து அவருக்கு அளிக்கும் உணவில் நஞ்சைக் கலந்து கொடுக்கிறார்கள். உண்மை அறிந்த போதிதர்மன் அந்த உணவை உண்டு, உயிர் துறக்கிறார். அவரது உடலை பாடம் செய்து உரிய மரியாதையுடன் புதைத்துவிடுகின்றனர்.

இதுதான் போதிதர்மன் வரலாறு.

இவ்வாறாக சீனாவிற்கு சென்ற நமது மருத்துவ அறிவும், போர்க்கலையும் நமக்கு எதிராகத் திரும்பினால் அதுதான் '7ஆம் அறிவு'.

படத்தின் சிறப்பம்சங்கள்:

1. முதல் 20 நிமிடங்கள் வரும் அந்த வரலாற்றுக் காட்சிகள். இன்னும் சில நேரம் காட்டியிருக்கலாமே என்று ஏங்க வைத்துவிட்டது,

2. ஒரு பறவையின் பார்வையில் வரும் பல்லவ அரசின் காட்சி அவ்வளவு அருமை. அதுவும் தெருக்களில் யானைகள் போவதை பார்க்கும்போது இன்று நாம் எதையோ இழந்த உணர்வைத் தருகிறது,

3. போதிதர்மனின் 3 வருட பயணம் மேற்கொள்ளும் வழித்தடம். சில நிமிடங்களே வந்தாலும் படக்குழுவினரின் உழைப்பு அபாரம்,

4. இன்றைய சீனாவே நம்மில் பலபேருக்கு எப்படி இருக்கும் என்று தெரியாது. ஆனால் 6ஆம் நூற்றாண்டு சீனாவை உருவாக்கியிருக்கிறார்கள். உண்மையில் இப்படித்தான் இருந்ததா என்று தெரியாது. ஆனால் நம்பும்படி இருந்தது. கலை இயக்குனர் ராஜீவனுக்கு வாழ்த்துகள்,

5. நஞ்சு கலந்த உணவு என்று தெரிந்தும், அதை உண்ணும்போது வரும் சூர்யாவின் முகபாவம். கண்ணில் ஒளி தெரியும் என்பார்களே!! அப்படி ஒரு பார்வை. நடிகர் சூர்யா வெளிப்பட்ட இடமும் இதுதான்,

6. நிகழ்காலத்தில் வரும் சீன வில்லன் 'டாங் லீ'. சின்ன கண்ணை வைத்துக்கொண்டு என்னமாக மிரட்டுகிறார். நல்ல தேர்வு,

7. டாங் லீ செய்யும் கொலைகள் அனைத்தையும் நேரிடையாகக் காட்டாமல் மறைமுகமாக சொல்லியிருப்பது [கடலை கொறித்தபடி செல்லும்போது தொலைபேசி மணி அடித்துக்கொண்டேயிருப்பது, ரயில் நிலைய சம்பவம்] மிகவும் நன்றாக இருந்தது.

8. நாயகி ஸ்ருதி ஹாசன். தமிழ் சினிமாவிற்கு தமிழறிந்த நடிகை. அழகான புதுவரவு,

9. தனது ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கும்போது, அங்கிருக்கும் பெரிசுகள் தமிழை கேவலமாகப் பேச, அதற்கு ஸ்ருதியின் மறுமொழி அபாரம். இடம்பொருள் பாராமல் தமிழை பழித்தவனை வாயிலேயே குத்துவேன் என்று கூறும்போது திரை அரங்கில் ஆரவார வரவேற்பு,

10. டாங் லீ பார்வை பட்டு சாலையில் போவோரெல்லாம் சூர்யா, ஸ்ருதியை கொள்ள முற்படும் காட்சி பிரம்மாண்டம் என்றாலும் graphics-ல் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்,

11. துப்புரவுப் பணியாளரும், இளம் பெண்ணும் செய்யும் martial arts மிக அருமை.

12. போதிதர்மனின் வரலாறு, DNA, Genetic Engineering என Science Fiction இவற்றுடன் தமிழுணர்வை ஆங்காங்கே தெளித்து நல்ல கலவையாகக் கொடுத்துள்ளார் இயக்குனர் முருகதாஸ்.

13. இங்கு பல விமர்சனங்கள் எழக்கூடும். தமிழ், தமிழன் என்ற உணர்வைக் கிளப்பி அதன் மூலம் காசு பார்க்கிறார்கள் என்று குற்றம் கூறக் கூடும். ஆனால் சினிமா என்ற கலை, வியாபாரம் ஆகிவிட்ட சூழலில், இப்படி இனிப்பு தடவிய மருந்தாகத்தான் கூறமுடியுமே தவிர தெள்ளிய தமிழில் படம் எடுத்தால் இன்றைய நிலையில் கல்லா கட்டுவது சந்தேகமே!! அதனால் இயக்குனர் முருகதாஸ் கூடிய மட்டும் பிரச்சாரம் போல் அல்லாமல் போகிற போக்கில் கிடைக்கிற இடத்தில் வேண்டிய செய்திகளை சொல்லிச் செல்கிறார்,

14. கதைக்கான களன் எந்த பூச்சும் இல்லாமல் அந்தந்த இடங்களிலேயே எடுத்திருப்பது சிறப்பு. ஆழ்வார்பேட்டை சிக்னல், அண்ணா சாலை, IIT Campus இப்படி பல... படத்தின் நம்பகத்தன்மைக்கு இது இன்னும் பலம் சேர்க்கின்றது,

15. இன்றைய வர்த்தக சினிமாவில் இலங்கை, தமிழ், வீரம், துரோகம் என இலங்கைப் பிரச்சினை பற்றி பேசுவது மிகவும் வேண்டிய ஒன்று. ஆனால் காலம் கடந்து பேசுகிறோமே என்ற உறுத்தல் எழவே செய்கின்றது,

16. இசை ஹாரிஸ் ஜெயராஜ். பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே கேட்டது போல் இருந்தாலும் படத்தோடு பார்க்கும்போது பிடிக்கவே செய்கின்றது. 'யம்மா! யம்மா!!’ பாடல் மென் சோக மெல்லிசை என்றால், 'முன் அந்தி சாரல்' மனம் மயக்கும் மெல்லிசை.

சரி!! படத்தில் இவ்வளவு சிறப்புகள் இருக்கிறதே!! அப்போ படம் மிக நன்றாக இருக்கின்றதா என்றால் முழு மனதாக 'ஆம்' என்று சொல்ல முடியவில்லை.

படத்தில் "போதிதர்மனின் வரலாறு, DNA, Genetic Engineering என Science Fiction" என்ற அருமையான களன் இருந்தும் முன் பாதியில் சூர்யா-ஸ்ருதி காதல் என்று ரொம்ப இழுத்திருக்க வேண்டாம். அதுவும் சூர்யாவின் கண்டவுடன் காதலால் படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பு பட்டென்று விழுந்துவிடுகின்றது. சூர்யா செய்யும் காதல் சேட்டைகள் அவ்வளவு செயற்கை. 'கஜினி'யில் அசின்-சூர்யா காதல் [logic ஓட்டைகள் இருந்தாலும்] மிகவும் ரசிக்கும்படி இருந்தது. இதில் அப்படி எதுவும் இல்லை. அதுவும் இந்தக் கதை களனுக்கு காதல் காட்சிகளே தேவை இல்லை. அதுவும் காதல்-பாடல்-காதல்-பாடல்-காதல் தோல்வி-சோகப்பாடல் என்று முதல் பாதியில் சோதனை அதிகம்தான்.

வர்மம், Martial arts பற்றிய படத்தில் அந்தக் கலைகள் இல்லாதது வருத்தமே. இதில் சூர்யா செய்யும் சாகசங்கள் அனைத்தும் நமது கோடம்பாக்க நாயகர்கள் ஏற்கனவே செய்ததுதானே!!! Martial arts எனக் குறிப்பிட்டு சொல்லும்படி ஏதுமில்லையே. பீட்டர் ஹெய்ன் இன்னும் கூடுதல் கவனத்துடன் செய்திருக்கலாம்.



ஆனாலும் இதுவரை தெரிந்திராத நமது வரலாறை நமக்கு சொல்லிய விதத்திலும், அதை இன்றைய நிகழ் காலத்தோடு கற்பனையாகக் கோர்த்த விதத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களுக்கு வாழ்த்துகள்.

October 05, 2011

வாகை சூட வா!!

No comments:

களவாணி இயக்குனரின் அடுத்த படைப்பு, 1960-களின் பின்புலத்தில் நடக்கும் கதை, என படம் ஆரம்பிக்கப்பட்டபோதே எதிர்பார்ப்பை கிளறியிருந்தது. அவ்வப்போது வெளிவந்த படத்தின் புகைப்படங்களும் எதிர்பார்ப்பை அதிகரித்தது. குத்துப் பாடல்கள் எதுவும் இல்லாமல் அனைத்தும் மெல்லிசையை ஒத்திருந்ததால் கண்டிப்பாக படம் பார்க்கும் ஆவல் அதிகரித்தது. இவ்வளவு எதிர்பார்ப்பை உண்டாக்கிய படம் உண்மையில் வெற்றி வாகை சூடியதா??

பார்ப்போம்!!
 

 வெளியுலகத் தொடர்பே இல்லாமல் செங்கல் செய்யும் தொழிலே உலகம் என வாழும் ‘கண்டெடுத்தான் காடு’ கிராம மக்கள். இவர்களின் அறியாமையை பயன்படுத்தி பணம் பார்க்கும் முதலாளி. உறவினர்கள் முன் கௌரவமாக இருக்க, தன் மகனை அரசு உத்யோகத்துக்கு அனுப்ப வைராக்கியமாகப் போராடும் தந்தை. அதற்கு சான்றிதழ் வாங்க தனியார் அமைப்பான ‘கிராம சேவா’ மூலம் 6 மாதம் பயிற்சிக்காக ‘கண்டெடுத்தான் காடு’ கிராமத்து சிறுவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வருகிறார் விமல். வந்த இடத்தில் டீக்கடை நடத்தும் இனியாவுடன் இனிய அறிமுகம். அது இனியாவிற்கு ஒருதலைக் காதலாக வளர்கிறது.

பாடம் சொல்லிக்கொடுக்க வந்த விமல் பயிற்சி முடிந்து தந்தை ஆசையை நிறைவேற்றினாரா? செங்கல் சூளையில் வேலை செய்யும் குழந்தைத் தொழிலார்கள் நிலை என்ன? இனியாவின் காதல் என்னவாயிற்று? மக்கள் வாழ்க்கை நிலை உயர்ந்ததா?

விமல் – அசப்பில் ‘பாட்டுப் பாடவா?’ ஜெமினி கணேசனை நினைவுபடுத்துகிறார். நன்றாக சிரிக்கிறார். பேசுகிறார். நாயகியிடம் சண்டைப் பிடிக்கிறார். உணர்ச்சிமயமான காட்சிகளில்தான் சற்று தினருகிறார்.

இனியா – தமிழ் சினிமாவின் புது முயற்சிகளுக்கு எப்போதுமே புதுமுகத்தைதான் நடிக்க வைக்கிறார்கள். தேர்ந்த நடிகைகள் எண்ணை வடிய நடிக்கத் தயங்குவதே அதற்குக் காரணம். அந்த வகையில் இனியா, தமிழ் சினிமாவிற்கு இனிய வரவு. நுண்ணிய அசைவுகள் மூலம் கண்களாலேயே உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். விமலிடம் பேசி திரும்பும்போது மெல்லிய நடனம் ஆடியபடியே கண்களில் காட்டும் அபிநயம் மிக அருமை.

பாக்கியராஜ், பொன்வண்ணன் இன்னும் சிலர் கொடுத்த வேலையை சரியாக செய்தார்கள் என்று சொல்வதா? இல்லை வந்து போகிறார்கள் என்று சொல்வதா? கொஞ்சம் குழப்பம்தான். அதுவும் பாக்கியராஜின் entry… அருமையான படம் என்று நினைப்பவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான். பொன்வண்ணனும் செங்கல் விளையாட்டு, மிரட்டல் என்று வந்து அப்புறம் காணாமல் போகிறார்.

குருவிக்காரர் கதாபாத்திரம் அறிமுகம் முதலே குழப்பம்தான். ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் சாமியார் ஒருவர் ‘கார்த்திதான் தூதுவன்’ எனக்கண்டு சொல்வாரே! அதுபோல நினைத்து குருவிக்காரர் உருவாக்கப்பட்டிருக்கிறார் போல!! விமலுடனான இவரது ஈர்ப்பு சரிவர விளக்கப்படவில்லை. குழப்பமே மிஞ்சியது. அதையும் மீறி, மண்ணை ருசிபார்த்து அதன் தரம் அறியும் காட்சியில் மனம் நெகிழ்ந்து போனது. இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை உணர்த்தும் காட்சி அது. மனதில் பசுமை விகடனும், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரும் சட்டென தோன்றினார்கள்.

அப்புறம் முக்கியமாக படத்தில் வரும் சிறுவர், சிறுமிகள். சில காட்சிகளில் வயதுக்கு மீறிய பேச்சாக இருந்தாலும், படம் முழுக்க இவர்களின் குறும்பே படம் நகர்விற்கு உறுதுணையாக இருக்கிறது. அவ்வளவு இயல்பான நடிப்பு. படத்தின் சிறப்புகளில் இவர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு.

படத்தின் மிகப்பெரிய பலமே கலை இயக்கம் மற்றும் ஒளிப்பதிவுதான். ஒரு பெரிய பொட்டல் காட்டில் செங்கல் சூளையும் அந்த வாழ்வியல் சார்ந்த கிராமத்தையும் அருமையாக உருவாக்கியிருக்கிறார்கள். கிணறு, வண்டித்தடம், கவர் போடப்பட்டு வார் வைத்த ரேடியோ, பனை ஓலை குடிசைகள், என அனைத்தையும் கச்சிதமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

அடுத்து ஒளிப்பதிவு – சிறுவன் முகத்தில் ஆரம்பித்து மெல்ல உயர்ந்து உயர்ந்து மொத்த கிராமத்தையும் காட்டும் காட்சி மிக அழகு. அதுவும் இந்தக் காட்சியில் வரும் அந்த கிராமத்தினரின் உடல்மொழி, இதுபோன்ற படத்துக்கு மிகவும் தேவையான ஒன்று. இயல்பாவும், யதார்த்தமாகவும் கையாளப்பட்டிருக்கிறது.

இசை – அறிமுகம் ஜிப்ரான். ‘சாரக் காத்து’, ‘போறானே! போறானே!!’ பாடல்கள் ஏற்கனவே மிகப் பிரபலம். ஆனால் படத்தோடு பார்க்கும்போது ‘செங்கல் சூளக்காரா..!!’ பாடல் மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. [நான் செங்கல் சூளை பின்னனியில் வளர்ந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.]

இந்த பின்புலத்தில் குழந்தை தொழிலாளர் பிரச்சினையை சொல்ல முயன்றிருக்கிறார்கள். ஆனால் திரைக்கதை தொய்வினால் அது புரிந்துக் கொள்ளவே சிறிது நேரம் ஆகிறது. ஆனால் படம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இது நாயகனின் லட்சியப் படமா? காதல் படமா? இல்லை... குழந்தைத் தொழிலாளர் பற்றிய படமா என்ற குழப்பம் வருகிறது. இது குழந்தைகளைப் பற்றிய படம்தான்.. ஆனால் அதுவும் இடைவேளைக்குப் பின்னர் அரை மணி நேரம்தான் சொல்லப்படுகிறது. அதுதான் இந்தப் படத்துக்கு பிரச்சினையே!! விமல் செங்கல் எண்ணிக்கையை கூறும் காட்சிதான் படத்துக்கு ஆதாரமே!! ஆனால் அது படத்தின் கடைசிக்கட்டத்தில் வருவதால் முதல் பாதி முழுக்க காதல் படம் என்ற உணர்வையே தருகிறது. அதுவும் பாக்கியராஜ் இறுதியில் திடீரென தோன்றி சட்டம் பேசுவது திணிக்கப்பட்டதாகவே தெரிகிறது. திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

படத்தில் சில ‘பளிச்’கள்:

1. கலை இயக்கம்,

2. ஒளிப்பதிவு,

3. செங்கல் கணக்கை அந்த மக்கள் தெரிந்துக்கொள்ளும் காட்சி,

4. அதைத் தொடர்ந்து தன் மகளை விமலிடம் படிக்க அனுப்பும் தாய்,

5. பாடல்கள்,

6. ஒரு குழந்தை ‘அ’ என்று எழுதிய செங்கல் லாரியில் பயணப்படுவது,

7. செங்கல் ஏற்றிய கூலியை குழந்தைகள் சரியாகக் கேட்டு வாங்குவது. 
 
[இது போன்ற விருந்து எதிர்பார்த்து போனால் சிறிது ஏமாற்றம்தான்...]
 
வாகை சூட வா – திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் வெற்றி வாகை சூடியிருக்கலாம்.




October 03, 2011

முரண்

1 comment:

இரண்டு முரண்பட்ட மனிதர்களின் சந்திப்பும் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுமே இப்படத்தின் கதை. இசைமைப்பாளர் வாய்ப்பு பெற்று பெங்களூருவிலிருந்து சென்னை திரும்பும் சேரன். வழியில் வண்டி சொதப்ப, அங்கு வரும் காரில் lift கேட்டு பயணிக்கிறார். அந்தக் காரில் வருபவர் பிரசன்னா. அப்பாவின் காசில் கூத்தடித்துவிட்டு, எதிர்காலம் பற்றி எந்த அக்கறையும் இல்லாத dirt-minded இளைஞன். இவர்கள் இருவரும் இணைந்த பயணத்தில், நிகழும் மனப்பகிர்வுகளும் அதன் பின்விளைவுகளையும் முடிந்தவரை நேர்கோட்டில், தெளிவான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராஜன் மாதவ். 
 
கிட்டத்தட்ட 3 வருடங்களாக இந்தப் படத்துக்கு தயாரிப்பாளர் கிடைக்காமல் இருந்திருக்கிறார் இயக்குனர். காரணம் பிரசன்னா. அந்த அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு பிரசன்னாதான் வேண்டும் என்று அடம் பிடித்ததால் பல தயாரிப்பாளர்கள் தயங்கி ஒதுங்கிவிட பின்பு சேரனே தயாரிக்க முன்வந்தார். இப்போது UTV மூலம் வெளிவந்துள்ளது. இயக்குனரின் எதிர்பார்ப்பை பிரசன்னா நன்றாகவே புரிந்து நடித்துள்ளார். என்னதான் freak-out இளைஞனாக வந்து கெட்ட காரியங்கள் செய்தாலும் அவரது screen presence ரசிக்கவே வைக்கிறது.

அடுத்து சேரன். முகத்தை மூடிக்கொண்டு முதுகு குலுங்கி அழுவதில் expert. அவரது கதையை சொல்லும்போது எங்கேடா இதிலும் முதுகு குலுங்கி அழுதுடுவாரோன்னு நினைச்சேன். நல்ல வேளை!! அப்படி எதுவும் இல்லை. சேரனிடம் சோகமான, அப்பாவித்தனமான ஒரு முகம் உண்டு. அந்த முகம்தான் இந்தப் படத்தினை கடைசி வரை பரபரப்பாகக் கொண்டு செல்கிறது. மெல்ல மெல்ல நைச்சியமாகப் பேசி சேரன் மனதை கலைப்பதில் தொடங்கி பிரசன்னா செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் அவர் காட்டும் முகபாவம் அசத்தல். முக்கியமாக அந்த மாங்காய் திருடும் காட்சி.

படத்தில் 3 நாயகிகள். 3 பேரில் ஹரிப்ரியா முதலிடம் வகிக்கிறார். அக்கறையான தோழியாக வந்து, பின்பு சேரனின் காதலியாவது வரை நல்ல நடிப்பு. மிகச் சரியான தேர்வு. அடுத்து வருபவர் லிண்டா. Anglo-Indian பெண்ணாக வருவதால் அவரது அரைகுறை தமிழை கொஞ்சம் சகித்துக்கொள்ளலாம். மரியா பெண் என்ற கதையை இன்னும் ஆழமாக சொல்லியிருக்கலாம். அந்த கதாபாத்திரத்தின் impact சற்று குறைவாகவே உள்ளது. மூன்றாவதாக நிகிதா. சரோஜாவில் ‘கோடானு கோடி’ எனக் கெட்ட ஆட்டம் போட்டவர், இதில் கெட்டப் பெண்ணாக வருகிறார். சேரனைப் பிடிக்காமல் அவர் சலித்துக்கொள்வது கதையோடு ஒட்டாமல் கொஞ்சம் தனித்தே தெரிகிறது. இது நிச்சயம் திரைக்கதையின் தவறு அல்ல. அவரது நடிப்பு அப்படி. அவரிடம் இன்னும் கொஞ்சம் இயக்குனர் வேலை வாங்கியிருக்கலாம்.

இடைவேளை வரை பிரசன்னா-சேரன் இருவரை மட்டுமே வைத்து வசனங்களாலும், சின்ன சின்ன காட்சியமைப்புகளிலும் படம் தெளிவாக நகர்கிறது. இடைவேளைக்குப் பின்னர் பிரசன்னா செய்யும் காரியங்கள், அதற்கு சேரனின் பதட்டம், ஜெயப்ரகாஷ், ஹரிப்ரியா என இந்த நால்வரைச் சுற்றியே திரைக்கதை நகர்கிறது. அதுவும் மிகப் பரபரப்பாக.... இதற்கு பின்னணி இசை கூடுதல் பலம். இசை: சாஜன் மாதவ்.

கதை ஆரம்பித்த இடத்திலேயே முடிவது, சின்ன சின்ன சுவாரஸ்யமான வசனங்கள், திறமையான எடிட்டிங், பாடலை நுழைக்காமல் கதைப்போக்கில் பாடலின் சில வரிகள் வருவது [climax பாடல் தவிர.....] என தமிழுக்கு நல்ல படம் கிடைத்துள்ளது. ஆனால்.... தேவையில்லாத சில template காட்சிகளால் கதையின் ஓட்டம் ஆங்காங்கே சற்று வேகம் குறைகிறது. தயவு பார்க்காமல் வெட்டியிருக்கலாம். திரைக்கதை இன்னும் வேகம் பிடித்திருக்கும்.
 
 
இருந்தாலும்....
ஒரு நல்ல படம் கொடுத்த ‘முரண்’ குழுவினருக்கு வாழ்த்துகள். 
 
 

நல்லவங்க...

ShareThis