October 05, 2011

வாகை சூட வா!!


களவாணி இயக்குனரின் அடுத்த படைப்பு, 1960-களின் பின்புலத்தில் நடக்கும் கதை, என படம் ஆரம்பிக்கப்பட்டபோதே எதிர்பார்ப்பை கிளறியிருந்தது. அவ்வப்போது வெளிவந்த படத்தின் புகைப்படங்களும் எதிர்பார்ப்பை அதிகரித்தது. குத்துப் பாடல்கள் எதுவும் இல்லாமல் அனைத்தும் மெல்லிசையை ஒத்திருந்ததால் கண்டிப்பாக படம் பார்க்கும் ஆவல் அதிகரித்தது. இவ்வளவு எதிர்பார்ப்பை உண்டாக்கிய படம் உண்மையில் வெற்றி வாகை சூடியதா??

பார்ப்போம்!!
 

 வெளியுலகத் தொடர்பே இல்லாமல் செங்கல் செய்யும் தொழிலே உலகம் என வாழும் ‘கண்டெடுத்தான் காடு’ கிராம மக்கள். இவர்களின் அறியாமையை பயன்படுத்தி பணம் பார்க்கும் முதலாளி. உறவினர்கள் முன் கௌரவமாக இருக்க, தன் மகனை அரசு உத்யோகத்துக்கு அனுப்ப வைராக்கியமாகப் போராடும் தந்தை. அதற்கு சான்றிதழ் வாங்க தனியார் அமைப்பான ‘கிராம சேவா’ மூலம் 6 மாதம் பயிற்சிக்காக ‘கண்டெடுத்தான் காடு’ கிராமத்து சிறுவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வருகிறார் விமல். வந்த இடத்தில் டீக்கடை நடத்தும் இனியாவுடன் இனிய அறிமுகம். அது இனியாவிற்கு ஒருதலைக் காதலாக வளர்கிறது.

பாடம் சொல்லிக்கொடுக்க வந்த விமல் பயிற்சி முடிந்து தந்தை ஆசையை நிறைவேற்றினாரா? செங்கல் சூளையில் வேலை செய்யும் குழந்தைத் தொழிலார்கள் நிலை என்ன? இனியாவின் காதல் என்னவாயிற்று? மக்கள் வாழ்க்கை நிலை உயர்ந்ததா?

விமல் – அசப்பில் ‘பாட்டுப் பாடவா?’ ஜெமினி கணேசனை நினைவுபடுத்துகிறார். நன்றாக சிரிக்கிறார். பேசுகிறார். நாயகியிடம் சண்டைப் பிடிக்கிறார். உணர்ச்சிமயமான காட்சிகளில்தான் சற்று தினருகிறார்.

இனியா – தமிழ் சினிமாவின் புது முயற்சிகளுக்கு எப்போதுமே புதுமுகத்தைதான் நடிக்க வைக்கிறார்கள். தேர்ந்த நடிகைகள் எண்ணை வடிய நடிக்கத் தயங்குவதே அதற்குக் காரணம். அந்த வகையில் இனியா, தமிழ் சினிமாவிற்கு இனிய வரவு. நுண்ணிய அசைவுகள் மூலம் கண்களாலேயே உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். விமலிடம் பேசி திரும்பும்போது மெல்லிய நடனம் ஆடியபடியே கண்களில் காட்டும் அபிநயம் மிக அருமை.

பாக்கியராஜ், பொன்வண்ணன் இன்னும் சிலர் கொடுத்த வேலையை சரியாக செய்தார்கள் என்று சொல்வதா? இல்லை வந்து போகிறார்கள் என்று சொல்வதா? கொஞ்சம் குழப்பம்தான். அதுவும் பாக்கியராஜின் entry… அருமையான படம் என்று நினைப்பவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான். பொன்வண்ணனும் செங்கல் விளையாட்டு, மிரட்டல் என்று வந்து அப்புறம் காணாமல் போகிறார்.

குருவிக்காரர் கதாபாத்திரம் அறிமுகம் முதலே குழப்பம்தான். ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் சாமியார் ஒருவர் ‘கார்த்திதான் தூதுவன்’ எனக்கண்டு சொல்வாரே! அதுபோல நினைத்து குருவிக்காரர் உருவாக்கப்பட்டிருக்கிறார் போல!! விமலுடனான இவரது ஈர்ப்பு சரிவர விளக்கப்படவில்லை. குழப்பமே மிஞ்சியது. அதையும் மீறி, மண்ணை ருசிபார்த்து அதன் தரம் அறியும் காட்சியில் மனம் நெகிழ்ந்து போனது. இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை உணர்த்தும் காட்சி அது. மனதில் பசுமை விகடனும், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரும் சட்டென தோன்றினார்கள்.

அப்புறம் முக்கியமாக படத்தில் வரும் சிறுவர், சிறுமிகள். சில காட்சிகளில் வயதுக்கு மீறிய பேச்சாக இருந்தாலும், படம் முழுக்க இவர்களின் குறும்பே படம் நகர்விற்கு உறுதுணையாக இருக்கிறது. அவ்வளவு இயல்பான நடிப்பு. படத்தின் சிறப்புகளில் இவர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு.

படத்தின் மிகப்பெரிய பலமே கலை இயக்கம் மற்றும் ஒளிப்பதிவுதான். ஒரு பெரிய பொட்டல் காட்டில் செங்கல் சூளையும் அந்த வாழ்வியல் சார்ந்த கிராமத்தையும் அருமையாக உருவாக்கியிருக்கிறார்கள். கிணறு, வண்டித்தடம், கவர் போடப்பட்டு வார் வைத்த ரேடியோ, பனை ஓலை குடிசைகள், என அனைத்தையும் கச்சிதமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

அடுத்து ஒளிப்பதிவு – சிறுவன் முகத்தில் ஆரம்பித்து மெல்ல உயர்ந்து உயர்ந்து மொத்த கிராமத்தையும் காட்டும் காட்சி மிக அழகு. அதுவும் இந்தக் காட்சியில் வரும் அந்த கிராமத்தினரின் உடல்மொழி, இதுபோன்ற படத்துக்கு மிகவும் தேவையான ஒன்று. இயல்பாவும், யதார்த்தமாகவும் கையாளப்பட்டிருக்கிறது.

இசை – அறிமுகம் ஜிப்ரான். ‘சாரக் காத்து’, ‘போறானே! போறானே!!’ பாடல்கள் ஏற்கனவே மிகப் பிரபலம். ஆனால் படத்தோடு பார்க்கும்போது ‘செங்கல் சூளக்காரா..!!’ பாடல் மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. [நான் செங்கல் சூளை பின்னனியில் வளர்ந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.]

இந்த பின்புலத்தில் குழந்தை தொழிலாளர் பிரச்சினையை சொல்ல முயன்றிருக்கிறார்கள். ஆனால் திரைக்கதை தொய்வினால் அது புரிந்துக் கொள்ளவே சிறிது நேரம் ஆகிறது. ஆனால் படம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இது நாயகனின் லட்சியப் படமா? காதல் படமா? இல்லை... குழந்தைத் தொழிலாளர் பற்றிய படமா என்ற குழப்பம் வருகிறது. இது குழந்தைகளைப் பற்றிய படம்தான்.. ஆனால் அதுவும் இடைவேளைக்குப் பின்னர் அரை மணி நேரம்தான் சொல்லப்படுகிறது. அதுதான் இந்தப் படத்துக்கு பிரச்சினையே!! விமல் செங்கல் எண்ணிக்கையை கூறும் காட்சிதான் படத்துக்கு ஆதாரமே!! ஆனால் அது படத்தின் கடைசிக்கட்டத்தில் வருவதால் முதல் பாதி முழுக்க காதல் படம் என்ற உணர்வையே தருகிறது. அதுவும் பாக்கியராஜ் இறுதியில் திடீரென தோன்றி சட்டம் பேசுவது திணிக்கப்பட்டதாகவே தெரிகிறது. திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

படத்தில் சில ‘பளிச்’கள்:

1. கலை இயக்கம்,

2. ஒளிப்பதிவு,

3. செங்கல் கணக்கை அந்த மக்கள் தெரிந்துக்கொள்ளும் காட்சி,

4. அதைத் தொடர்ந்து தன் மகளை விமலிடம் படிக்க அனுப்பும் தாய்,

5. பாடல்கள்,

6. ஒரு குழந்தை ‘அ’ என்று எழுதிய செங்கல் லாரியில் பயணப்படுவது,

7. செங்கல் ஏற்றிய கூலியை குழந்தைகள் சரியாகக் கேட்டு வாங்குவது. 
 
[இது போன்ற விருந்து எதிர்பார்த்து போனால் சிறிது ஏமாற்றம்தான்...]
 
வாகை சூட வா – திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் வெற்றி வாகை சூடியிருக்கலாம்.
No comments:

Post a Comment

நல்லவங்க...

ShareThis