October 29, 2011

7ஆம் அறிவு


இதுவரை நாம் அறிந்திராத நமது வரலாறு, கால ஓட்டத்தில் மறக்கடிக்கப்பட்ட நமது வரலாறு.. இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வரலாற்றின் நாயகன் போதிதர்மன்.

தற்காப்பு கலை என இன்று நாம் கற்றுக்கொண்டிருக்கும் சீனக் கலையான கராத்தேவும், குங்ஃபூவும் நமது மண்ணில் இருந்து சென்றதுதான் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்?

யுவான் சுவாங் தமிழகம் வந்ததை வரலாற்றில் படித்திருக்கும் நமக்கு, போதிதர்மனின் சீனப்பயணம் பற்றி தெரியாமல் போனது எப்படி?

தமிழரான போதிதர்மனுக்கு சீனாவில் கோவில்கள் இருப்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

அந்த வரலாற்றை கொஞ்சமே கொஞ்சமாக எடுத்துக்கொண்டு அதில் சிறு கற்பனையை புகுத்தி நிகழ் காலத்தோடு முடிச்சு போட்டால் அதுதான் ‘7ஆம் அறிவு’.

போதிதர்மன் வரலாறு:

கி.பி. 6ஆம் நூற்றாண்டு. அப்போதைய பல்லவ மன்னனின் 3வது மகன்தான் போதிதர்மன். போர்க்கலை, மருத்துவம் என சகல கலைகளையும் கற்றுதேர்ந்தவர். தனது குருமாதாவின் கட்டளையை ஏற்று, சீனாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். போகும் முன் தான் கற்ற அனைத்தையும் செப்புத்தகடுகளில் பதிந்து தனது தந்தையிடம் ஒப்படைத்துவிட்டு செல்கிறார். 3 வருட நெடும்பயணத்துக்குப் பின் சீனாவில் ஒரு கிராமத்தை அடைகிறார்.

அதே சமயத்தில் அந்த ஊர் பெரியவர்கள், தங்கள் கிராமத்திற்கு பெரிய ஆபத்து வரப்போவதை கணிக்கிறார்கள். அப்போது வந்து சேர்ந்த அன்னியனான போதிதர்மன்தான் அந்த ஆபத்து என தவறாக புரிந்துக்கொண்டு அவரை விரட்டிவிடுகின்றார்கள். ஆனால் ஆபத்து வேறு வடிவங்களில் அவர்களை சூழ்கிறது. ஒன்று கொடிய நோய் மூலமாக. மற்றொன்று எதிரிகள் மூலமாக. போதிதர்மன் கிராம மக்களை இந்த ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுகின்றார்.

அந்த கொடிய நோய் பல ஊர்களுக்கும் பரவிவிடுகின்றது. அதனால் தனது மருத்துவ அறிவை அங்குள்ள வைத்தியர்களுக்கு போதிதர்மன் பயிற்றுவிக்கிறார். அது அவர்களது சீன மொழியிலும் குறிப்பெடுக்கப்படுகின்றது. நமது தற்காப்பு கலையையும் அந்த கிராமத்தினரின் வேண்டுகோளை ஏற்று அவர்களுக்கு கற்பிக்கிறார். இப்படியாக நமது மருத்துவமும், தற்காப்பு கலையும் சீனாவில் பரவுகின்றது. சிறிது காலத்திற்குப் பிறகு தான் தனது ஊருக்கு திரும்பும் வேளை வந்துவிட்டதை ஊர் மக்களுக்கு அறிவிக்கிறார் போதிதர்மன். அவரது இறந்த உடலை தங்கள் மண்ணில் புதைத்தால் தங்கள் வாழ்வு நலமாக இருக்கும் என ஊர் மக்கள் தவறாகக் கணித்து அவருக்கு அளிக்கும் உணவில் நஞ்சைக் கலந்து கொடுக்கிறார்கள். உண்மை அறிந்த போதிதர்மன் அந்த உணவை உண்டு, உயிர் துறக்கிறார். அவரது உடலை பாடம் செய்து உரிய மரியாதையுடன் புதைத்துவிடுகின்றனர்.

இதுதான் போதிதர்மன் வரலாறு.

இவ்வாறாக சீனாவிற்கு சென்ற நமது மருத்துவ அறிவும், போர்க்கலையும் நமக்கு எதிராகத் திரும்பினால் அதுதான் '7ஆம் அறிவு'.

படத்தின் சிறப்பம்சங்கள்:

1. முதல் 20 நிமிடங்கள் வரும் அந்த வரலாற்றுக் காட்சிகள். இன்னும் சில நேரம் காட்டியிருக்கலாமே என்று ஏங்க வைத்துவிட்டது,

2. ஒரு பறவையின் பார்வையில் வரும் பல்லவ அரசின் காட்சி அவ்வளவு அருமை. அதுவும் தெருக்களில் யானைகள் போவதை பார்க்கும்போது இன்று நாம் எதையோ இழந்த உணர்வைத் தருகிறது,

3. போதிதர்மனின் 3 வருட பயணம் மேற்கொள்ளும் வழித்தடம். சில நிமிடங்களே வந்தாலும் படக்குழுவினரின் உழைப்பு அபாரம்,

4. இன்றைய சீனாவே நம்மில் பலபேருக்கு எப்படி இருக்கும் என்று தெரியாது. ஆனால் 6ஆம் நூற்றாண்டு சீனாவை உருவாக்கியிருக்கிறார்கள். உண்மையில் இப்படித்தான் இருந்ததா என்று தெரியாது. ஆனால் நம்பும்படி இருந்தது. கலை இயக்குனர் ராஜீவனுக்கு வாழ்த்துகள்,

5. நஞ்சு கலந்த உணவு என்று தெரிந்தும், அதை உண்ணும்போது வரும் சூர்யாவின் முகபாவம். கண்ணில் ஒளி தெரியும் என்பார்களே!! அப்படி ஒரு பார்வை. நடிகர் சூர்யா வெளிப்பட்ட இடமும் இதுதான்,

6. நிகழ்காலத்தில் வரும் சீன வில்லன் 'டாங் லீ'. சின்ன கண்ணை வைத்துக்கொண்டு என்னமாக மிரட்டுகிறார். நல்ல தேர்வு,

7. டாங் லீ செய்யும் கொலைகள் அனைத்தையும் நேரிடையாகக் காட்டாமல் மறைமுகமாக சொல்லியிருப்பது [கடலை கொறித்தபடி செல்லும்போது தொலைபேசி மணி அடித்துக்கொண்டேயிருப்பது, ரயில் நிலைய சம்பவம்] மிகவும் நன்றாக இருந்தது.

8. நாயகி ஸ்ருதி ஹாசன். தமிழ் சினிமாவிற்கு தமிழறிந்த நடிகை. அழகான புதுவரவு,

9. தனது ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கும்போது, அங்கிருக்கும் பெரிசுகள் தமிழை கேவலமாகப் பேச, அதற்கு ஸ்ருதியின் மறுமொழி அபாரம். இடம்பொருள் பாராமல் தமிழை பழித்தவனை வாயிலேயே குத்துவேன் என்று கூறும்போது திரை அரங்கில் ஆரவார வரவேற்பு,

10. டாங் லீ பார்வை பட்டு சாலையில் போவோரெல்லாம் சூர்யா, ஸ்ருதியை கொள்ள முற்படும் காட்சி பிரம்மாண்டம் என்றாலும் graphics-ல் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்,

11. துப்புரவுப் பணியாளரும், இளம் பெண்ணும் செய்யும் martial arts மிக அருமை.

12. போதிதர்மனின் வரலாறு, DNA, Genetic Engineering என Science Fiction இவற்றுடன் தமிழுணர்வை ஆங்காங்கே தெளித்து நல்ல கலவையாகக் கொடுத்துள்ளார் இயக்குனர் முருகதாஸ்.

13. இங்கு பல விமர்சனங்கள் எழக்கூடும். தமிழ், தமிழன் என்ற உணர்வைக் கிளப்பி அதன் மூலம் காசு பார்க்கிறார்கள் என்று குற்றம் கூறக் கூடும். ஆனால் சினிமா என்ற கலை, வியாபாரம் ஆகிவிட்ட சூழலில், இப்படி இனிப்பு தடவிய மருந்தாகத்தான் கூறமுடியுமே தவிர தெள்ளிய தமிழில் படம் எடுத்தால் இன்றைய நிலையில் கல்லா கட்டுவது சந்தேகமே!! அதனால் இயக்குனர் முருகதாஸ் கூடிய மட்டும் பிரச்சாரம் போல் அல்லாமல் போகிற போக்கில் கிடைக்கிற இடத்தில் வேண்டிய செய்திகளை சொல்லிச் செல்கிறார்,

14. கதைக்கான களன் எந்த பூச்சும் இல்லாமல் அந்தந்த இடங்களிலேயே எடுத்திருப்பது சிறப்பு. ஆழ்வார்பேட்டை சிக்னல், அண்ணா சாலை, IIT Campus இப்படி பல... படத்தின் நம்பகத்தன்மைக்கு இது இன்னும் பலம் சேர்க்கின்றது,

15. இன்றைய வர்த்தக சினிமாவில் இலங்கை, தமிழ், வீரம், துரோகம் என இலங்கைப் பிரச்சினை பற்றி பேசுவது மிகவும் வேண்டிய ஒன்று. ஆனால் காலம் கடந்து பேசுகிறோமே என்ற உறுத்தல் எழவே செய்கின்றது,

16. இசை ஹாரிஸ் ஜெயராஜ். பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே கேட்டது போல் இருந்தாலும் படத்தோடு பார்க்கும்போது பிடிக்கவே செய்கின்றது. 'யம்மா! யம்மா!!’ பாடல் மென் சோக மெல்லிசை என்றால், 'முன் அந்தி சாரல்' மனம் மயக்கும் மெல்லிசை.

சரி!! படத்தில் இவ்வளவு சிறப்புகள் இருக்கிறதே!! அப்போ படம் மிக நன்றாக இருக்கின்றதா என்றால் முழு மனதாக 'ஆம்' என்று சொல்ல முடியவில்லை.

படத்தில் "போதிதர்மனின் வரலாறு, DNA, Genetic Engineering என Science Fiction" என்ற அருமையான களன் இருந்தும் முன் பாதியில் சூர்யா-ஸ்ருதி காதல் என்று ரொம்ப இழுத்திருக்க வேண்டாம். அதுவும் சூர்யாவின் கண்டவுடன் காதலால் படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பு பட்டென்று விழுந்துவிடுகின்றது. சூர்யா செய்யும் காதல் சேட்டைகள் அவ்வளவு செயற்கை. 'கஜினி'யில் அசின்-சூர்யா காதல் [logic ஓட்டைகள் இருந்தாலும்] மிகவும் ரசிக்கும்படி இருந்தது. இதில் அப்படி எதுவும் இல்லை. அதுவும் இந்தக் கதை களனுக்கு காதல் காட்சிகளே தேவை இல்லை. அதுவும் காதல்-பாடல்-காதல்-பாடல்-காதல் தோல்வி-சோகப்பாடல் என்று முதல் பாதியில் சோதனை அதிகம்தான்.

வர்மம், Martial arts பற்றிய படத்தில் அந்தக் கலைகள் இல்லாதது வருத்தமே. இதில் சூர்யா செய்யும் சாகசங்கள் அனைத்தும் நமது கோடம்பாக்க நாயகர்கள் ஏற்கனவே செய்ததுதானே!!! Martial arts எனக் குறிப்பிட்டு சொல்லும்படி ஏதுமில்லையே. பீட்டர் ஹெய்ன் இன்னும் கூடுதல் கவனத்துடன் செய்திருக்கலாம்.ஆனாலும் இதுவரை தெரிந்திராத நமது வரலாறை நமக்கு சொல்லிய விதத்திலும், அதை இன்றைய நிகழ் காலத்தோடு கற்பனையாகக் கோர்த்த விதத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களுக்கு வாழ்த்துகள்.

2 comments:

  1. நல்ல விமர்சமனம்

    மிக அருமை சகோ
    பாராட்டுகள்
    நன்றி

    ReplyDelete

நல்லவங்க...

ShareThis