May 06, 2012

வழக்கு எண்: 18/9


www.yaavarumnalam.com

விவசாயம் பொய்த்து வாழ வேறு வழியில்லை என்ற நிலையில் பிழைப்பை தேடி நகரத்துக்கு மக்களை துரத்துகிறது இன்றைய நுகர்வோர் கலாச்சாரம் மிகுந்த உலகம். இந்த கலாச்சாரம் வேகமாக பரவியதால் முதலில் அடிபட்டது விவசாயம்தான். விவசாயத்தில் வருமானம் குறைந்த காலங்களில் கடன் வாங்கி பிழைப்பை நடத்தினார்கள். கடனை அடைக்க மேலும் கடன். அதை அடைக்க மேலும் கடன் என்று கடனிலேயே வாழ்க்கையை ஓட்ட வேண்டிய நிர்பந்தம். இந்த கடின நிலையிலும் தாக்குப் பிடித்தவர்கள், சொந்த ஊரில் இருந்து பிழைத்துக் கொண்டார்கள். முடியாதவர்கள் வருமானம் தேடி நகரத்தை நோக்கி படையெடுத்தார்கள். அப்படி சொந்த மண்ணில் வாழ வழியை இழந்த குடும்பத்திலிருந்து வரும் பையனிடமிருந்து தொடங்குகிறது இந்த படத்தின் கதை.

ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்யும் ஜோதி(ஊர்மிளா) தாக்கப் படுகிறாள். அவளை மருத்துவமனையில் சேர்த்து விசாரணையை துவக்குகிறது காவல்துறை. ஜோதியின் அம்மா கொடுக்கும் தகவலின் பேரில், அந்த குடியிருப்பு இருக்கும் பகுதியில் தள்ளுவண்டி கடை நடத்தும் வேலு(ஸ்ரீ) காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரிக்கப்படுகிறான். வேலுவின் வாக்குமூலத்தில் அவன் ஜோதியை ஒருதலையாகக் காதலிப்பது தெரிய வருகிறது. விசாரணை நடக்கும் அதே நேரத்தில் ஆர்த்தி(மனீஷா யாதவ்) இந்த வழக்கு தொடர்பாக ஆய்வாளரிடம் பேச வருகிறாள். வேலுவை தொடர்ந்து ஆர்த்தியும் விசாரிக்கப்படுகிறாள். அவள் கூறும் விஷயம் இன்றைய பள்ளி மாணவர்கள் எத்தகைய சூழலில் அவர்கள் அறியாமலே சிக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று அதிர்ச்சியுடன் கூறுகிறது இந்த வழக்கு.

www.yaavarumnalam.com

நான் அறிந்த வரையில் சினிமா என்ற ஊடகத்தை மிகச் சரியாக பயன்படுத்தும் மிகச் சில இயக்குனர்களில் பாலாஜி சக்திவேல் முக்கியமானவர். அதுவும் இன்றைய மாணவர்கள் செல்போன் என்ற சனியனை [இந்த படத்தை பொறுத்த வரையில் அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது] கையில் வைத்துக் கொண்டு அடிக்கும் லூட்டி, அவர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் தேர்ந்தெடுக்கும் தவறான பாதை என்று அனைத்தையும் ஒரு அப்பாவின் அக்கறையோடு கையாண்டு நமக்கு நல்லதொரு படத்தை கொடுத்திருக்கிறார்.

இவரின் காதல் திரைப்படத்தை பார்த்துவிட்டு, இன்னதென்று சொல்ல முடியாத ஒரு உணர்வால் ஆட்கொள்ளப்பட்டு மீண்டும் மீண்டும் அந்த படத்தை பார்த்தேன். அடுத்து அவரின் கல்லூரி படத்தை பார்த்து எனக்கு கோபமே வந்தது. தமிழ்நாட்டையே உலுக்கிய அந்த பேருந்து எரிப்பு சம்பவத்தை ஏதோ தேசிய கட்சி, ஆந்திரா என்று ஒப்பேற்றியிருந்தார். மிகவும் ஆழமான பதிவாக வந்திருக்க வேண்டிய அந்த படம் ஒரு சாதாரண நிகழ்வைப் போல படமாக்கப்பட்டிருந்தது. இயக்குனரும் பல கண்டனங்களை பெற்றிருப்பார் போல. விகடன் மூலம் அதற்கு மன்னிப்பும் கேட்டிருந்தார். அனைத்திற்கும் ஈடு செய்யும் விதமாக மிகவும் கவனமாகவும் தரமாகவும் இந்த வழக்கை நம் முன்னே சமர்பித்திருக்கிறார்.

www.yaavarumnalam.com

கந்துவட்டிக்கு கடன் வாங்கி கடனை அடைக்க முடியாமல் பிள்ளைகளை வேலைக்கு அனுப்பும் கொடூரம், பிளாட்பாரக் கடைகளில் வேலை செய்யும் சிறுவர்களின் நிலை, குடும்ப சூழ்நிலையால் அடுக்குமாடி குடியிருப்பில் வேலைக்கு செல்லும் இளம் பெண்கள், பணக்கார வீட்டுப் பிள்ளைகள் இன்று பெற்றோரை விட்டு எவ்வளவு தூரம் விலகி இருக்கிறார்கள், செல்போன் மூலம் தடம் மாறும் அவர்களது வாழ்க்கை என்று அனைத்து விஷயங்களையும் மிகவும் நேர்த்தியாக, உண்மைக்கு நெருக்கமாக படைத்துள்ளார் இயக்குனர். நடிகர்களைப் பொறுத்தவரை இது ஒரு படம் என்பதையும் மீறி ஒரு நல்ல படைப்பு என்பதை உணர வைக்கும் வகையில் அவர்கள் பங்கை மிகச் சரியாக செய்துள்ளார்கள். தொழில்நுட்பக் கலைஞர்களும் அவ்வாறே தங்கள் பங்கை செம்மையாக செய்துள்ளார்கள்.

 www.yaavarumnalam.com

பதின்ம வயதுகளில் இருக்கும் பிள்ளைகளின் பெற்றோர்கள், தமது பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பது மிகவும் அவசியம் என்று உணர்த்துகிறது இந்த படம். இந்த வயது பிள்ளைகளின் சில நடவடிக்கைகளை பெற்றோர் கண்டிப்பார்கள். அவர்களின் சுதந்திரத்தை பறிப்பதற்காக அல்ல. அவர்கள் எந்த தவறான இடத்திலும், சூழ்நிலையிலும் சிக்காமல் இருக்க வேண்டுமே என்பதற்காக. ஆனால் இப்படி அக்கறை கொண்ட பெற்றோரை வில்லன்கள் போல பார்ப்பார்கள் பிள்ளைகள்.

வழக்கு எண் 18/9 படத்தை பார்த்தபிறகு, அவர்களின் நலனுக்காக வில்லனாகவே இருக்கலாம் என்றே தோன்றுகிறது. தப்பில்லை.

No comments:

Post a Comment

நல்லவங்க...

ShareThis