May 08, 2012

வழக்கும் என் சிந்தனைகளும்

வழக்கு எண் 18/9 திரைப்படத்தை அவ்வளவு சாதாரணமாக மற்றும் ஓர் திரைப்படம் என்று ஒதுக்கிவிட முடியாது. ஒரே திரைப்படத்தில் சமூகத்தின் அவலங்களையும் இவ்வளவு நேர்த்தியாக எந்த சமரசமும் இல்லாமல் சொல்ல முடியும் என்பதை நிரூபித்துள்ளார் இயக்குனர் பாலாஜி சக்திவேல். இந்த திரைப்படத்தை பற்றிய எனது பார்வையை தெரிந்து கொள்ள இங்கே செல்லுங்கள். நான் இந்த திரைப்படத்தை பற்றி இங்கே மீண்டும் எழுதக் காரணம் இதில் எடுத்தாளப்பட்டுள்ள கதைக்கலன் மற்றும் இதன் கதை மாந்தர்கள். ஆமாம் அனைவரையும் நடிகர்கள் என்பதையும் தாண்டி உண்மை மனிதர்களாக கண் முன்னே உலவ விட்டிருக்கிறார்கள்.

முதலில் கதைக்களனைப் பற்றி பார்ப்போம்.

இந்த கதையின் நாயகன் வேலு தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்திலிருந்து வருவதாகக் கூறுகிறான். தமிழகத்தின் செல்லப்பிள்ளை என்று சில வருடங்களுக்கு முன்னால் இந்த மாவட்டத்தைப் பற்றிக் கூறுவார்கள். ஆனால் இன்று இந்த மாவட்டம் சவலைப் பிள்ளையாக மாறியது காலத்தின் கோலம். விவசாயத்தையே பெரிதாக நம்பியிருக்கும் மாவட்டம். ஆனால் கால மாற்றத்தில் விவசாயம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ஒதுக்கப்பட, விவசாயத்தை நம்பி பிழைப்பை நடத்தி வந்தோர் இன்று கட்டாயமாக அதிலிருந்து வெளியேற்றப்பட்டு வேறு தொழிலில் ஈடுபட நிற்பந்திக்கப்பட்டுள்ளனர். அப்படிபட்ட களனில் தொடங்குகிறது இந்தப் படம்.

விவசாயத்தின் வீழ்ச்சியால் துரத்தப்பட்ட வேலு, அன்றாட வாழ்க்கைக்காக வீட்டு வேலைக்கு செல்லும் ஜோதி, கூத்துக்கலை அழிந்துவரும் நிலையில் சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வரும் சின்னசாமி, பதின்ம வயதுகளில் பருவ கவர்ச்சியில் வீழ்ந்து வாழ்க்கையை சிதைத்து கொள்ளும் பணக்கார வீட்டுப் பிள்ளைகள், வழக்கு விசாரணை நடத்தும் ஆய்வாளர் என்று அனைத்து களன்களுமே நமக்கு புதியவை. இந்த சமூகத்தால் ஒதுக்கப்பட ஆனால் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய வாழ்க்கையை இந்த படம் பதிவு செய்திருப்பதே இதன் பலம்.

அடுத்து நாம் பார்க்க வேண்டியவர்கள் கதையின் மாந்தர்கள்:

ஏழ்மையினால் அப்பாவுக்கு ஏற்பட்ட கடனை அடைக்க பள்ளி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு வேலைக்கு செல்கிறான் வேலு. கந்துவட்டியின் கொடுமை அவனை வட நாட்டிற்கு வேலைக்கு துரத்துகிறது. அவனது பெற்றோரும் ஒரு விபத்தில் இறந்துவிடுகின்றனர். தகவலை காலம் கடந்து அறியும் வேலு, அவனது முதலாளியை தாக்கிவிட்டு சென்னைக்கு ஓடி வந்துவிடுகிறான். வந்த இடத்தில் பாலியல் தொழில் செய்யும் ரோசி அக்காவின் உதவியால் ஒரு நடைபாதை தள்ளுவண்டி கடையில் வேலைக்கு சேர்கிறான். கொஞ்ச நாளில் ரோசி அக்கா காணாமல் போகிறாள். வேலுவும் ஜோதியை ஒரு மோதலில் சந்திக்கிறான். மோதல் ஒருதலைக் காதலாகி பின்னர் அவனை சிறை வரை தள்ளுகிறது. வேலுவின் கதாபாத்திரம் இயல்பைக் கடக்காமல் யதார்த்தமாக கையாளப்பட்டிருக்கிறது. வேலுவாக வரும் ஸ்ரீயின் நடிப்பும் அதற்கு பாந்தமாகப் பொருந்துகிறது.

அடுத்து கூத்துக் கலைஞனாக வரும் சின்னசாமி. இப்போதான் டி‌வி பேட்டியில், மேட்டூர் பக்கம் ஒரு கிராமத்தில் கூத்து பார்த்துக்கொண்டிருக்கும்போது இந்த சின்னசாமி கதாபாத்திரம் உருவானதாக இயக்குனர் கூறினார். முதன்முதலில் அந்த கூத்துக் காட்சியை காட்டியிருந்தால் கண்டிப்பாக அவன் ஒரு பெண் என்றே அனைவரும் நம்பியிருப்பார்கள். அப்படி ஒரு அருமையான நடிப்பு. பெண் போல வளைந்து நெளிந்து ஆடுவதும், நக்கலான தொனியுடன் வேலுவிடம் பேசுவதாகட்டும், பின்னி பெடலெடுக்கிறான் இந்த பையன். வடபழனியில் வாய்ப்பு தேடும் இவனுக்கு சீக்கிரம் பல பெரிய வாய்ப்புகள் கிடைக்கட்டும்.

ஜோதியாக வரும் ஊர்மிளா. தனது இயல்பான இளவயது சந்தோஷங்களை விட்டுவிட்டு அடுக்குமாடி குடியிருப்புகளில் வேலை செய்யும் பெண்களை நினைவுபடுத்துகிறாள் இந்த ஜோதி. எப்போதும் அமைதியாக, தெரியாமல் குறுக்கே வந்த வேலுவை சதா முறைத்துக்கொண்டு இருப்பது என்று பேசாமலேயே தனது கதாபாத்திரத்தை பேச வைக்கிறாள். அதிலும் கடைசி காட்சியில் மெல்ல அவள் உதடு துடித்தபடி முகத்திரை விலகும்போது மனது வலிக்கிறது. இனி நிஜத்தில் எந்த ஒரு பெண்ணிற்கும் இந்த கொடுமை நிகழாமல் இருக்க வேண்டுமே என்றே மனம் நினைக்கிறது. ஜோதியும் அவள் வேலை செய்யும் வீட்டிலுள்ள பெண்ணான ஆர்த்தியும் சம வயதினர்தான். ஆர்த்தி வாழ்வின் அனைத்து சந்தோஷங்களையும் அனுபவித்தபடி இருக்கிறாள். ஆனால் ஜோதி தன் வாழ்வையே ஒரு போராட்டமாக நடத்துகிறாள். இந்த முரண்பாடுதான் நமது அடையாளமா?

நகரத்து பள்ளி மாணவர்களின் வாழ்வும் இந்த படத்தின் ஒரு பகுதியாக[ஆனால் முக்கியமாக] வருகிறது. நான் பள்ளியில் படிக்கும்பொழுது உடன் படிக்கும் மாணவியருடன் அவசியம் இன்றி பேசக்கூடாது. மீறி பேசினால் ஏதோவொரு வகையில் தண்டனை கிடைக்கும். இந்த படத்தில் வரும் ஒரு மாணவி, பின் தொடர்ந்து வரும் பையனை pick-up செய்யுமாறு அறிவுறுத்துகிறாள். “பிடிச்சா continue பண்ணு, இல்லன்னா கழட்டி விட்டுடு” என்று யோசனை வேறு கூறுகிறாள். பொண்ணுங்க இப்படின்னா பசங்க எங்கடா துணி விலகும், அதை படம் எடுக்கலாம் என்று செல்போனோடு அலைகிறார்கள். பருவ வயதில் பாலியல் ஈர்ப்பு வருவது இயற்கையான ஒன்றுதான். ஆனால் இன்று விஞ்ஞானத்தின் அதீதமான வளர்ச்சி வளர் இளம்பருவத்தினருக்கு உதவி புரிவதாக இல்லை. மாறாக அவர்களை தவறாக வழி நடத்தி படுகுழிக்கே இட்டுச் செல்வதாக உள்ளது.

பள்ளி, கல்லூரிகளில் செல்போன் தடை செய்யப்படும்போது மாணவர்கள் சொன்னதை பார்த்திருப்பீர்கள்தானே?? என்ன சொன்னார்கள்? “செல்போன் இருப்பதால் நாங்கள் எங்கே இருக்கிறோம் என்று பெற்றோருக்கு உடனுக்குடனே தெரிவிக்க முடிகிறது, நண்பர்களுடன் பாடத்திலுள்ள சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள உதவியாக இருக்கும்...” இப்படி இன்னும் பல நியாயம் போல அமைந்த காரணங்கள் பல கூறினார்கள். ஆனால் இவை எல்லாம் உண்மைதானா? நிச்சயமாக இல்லை நண்பர்களே!!

விஞ்ஞானத்தின் வளர்ச்சியை நாமும் உடனே பயன்படுத்த வேண்டும் என்று எழும் ஆசை இயல்பான ஒன்றுதான். ஆனால் அதற்காக நாம் எடுத்து வைக்கும் முதல் அடி சரியான பாதையில் இருக்க வேண்டும். இல்லையென்றால் இப்படித்தான் என்று சொல்ல முடியாத பல வழிகளிலிருந்து இன்னல்களை சந்திக்க வேண்டி இருக்கும். இந்த படத்தில் பெங்களுக்கு மிக முக்கியமான செய்தி ஒன்று இருக்கிறது. நீங்கள் பொது இடங்களில் இருக்கும்போது உங்களை பல கண்கள் மேய்கின்றன. அதில் பல கேமரா கண்களும் அடக்கம் என்பதை மறந்து விடாதீர்கள். நாகரீகம் என்று சொல்லி உடல் அங்கங்கள் தெரியும்படி உடை அணிவதில் தொடங்குகிறது உங்களுக்கான ஆபத்து. உங்களுக்கு விருப்பமான உடை அணிவது உங்கள் உரிமையாக இருக்கலாம். ஆனால் அது அளவோடு இருந்தால் நலம். அளவுக்கு மிஞ்சினால்??

கோடை விடுமுறையில் குடும்பத்தோடு சத்யம், ஐநாக்ஸ் திரையரங்கில் படம் பார்க்க வருபவர்கள் இனி அவர்கள் பிள்ளைகளை எப்படி பார்ப்பார்கள்? நிச்சயமாக பிள்ளைகளின் செல்போன்கள் ஒருமுறையாவது சோதனை போடப்படும். கொஞ்சம் கண்காணிக்கப் படலாம். இதனால் நன்மை ஏதேனும் விளையுமா என்றால் இருக்கலாம். ஆனால் பெற்றோர் பிள்ளை இடையே பிரச்சினை வர வாய்ப்புகள் அதிகம். கவனத்தோடு கையாள வேண்டியிருக்கும். நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.

இந்த படத்தை பற்றி நல்லதான விமர்சனங்கள் வந்தபடி இருக்க, எதிர்மறை விமர்சனங்களும் வர ஆரம்பித்துள்ளன. அது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். அச்சு பிச்சு கதாநாயகன் அறிமுகம், கதாநாயகியின் முகத்தை தவிர அவளின் உடல் பாகங்கள் அனைத்தையும் நெருக்கமாக காட்டும் மற்ற குப்பைகளுக்கு நடுவே ‘வழக்கு எண் 18/9’ திரைப்படம் நிச்சயம் அனைவரும் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. ஒரு இயக்குனர் தந்தையின் நிலையில் இருந்து இளம் பிள்ளைகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த படத்தை எடுத்ததற்காக அவருக்கு ஒரு “ஓ” போடுவோம். இயக்குனர் சொல்ல வருவதும் நான் நினைப்பதும் ஒன்றேதான்.

அது.....

‘யாவரும் நலம்’

1 comment:

நல்லவங்க...

ShareThis