March 02, 2012

அரவான்வரலாற்றுப் படம் என்றாலே அரசர்கள், போர்க்களம் என்றிருந்த தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் வாழ்ந்த கடை நிலை மக்களின் மீதும் நமது இயக்குனர்களின் பார்வை திரும்பியிருப்பது வரவேற்கத்தக்கது. அந்த வகையில் 18ம் நூற்றாண்டில் தென் தமிழகத்தில் வாழ்ந்த கள்ளர்கள் மற்றும் காவலர்கள் பற்றிய படமே வசந்தபாலனின் ‘அரவான்’. எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய ‘காவல் கோட்டம்’ நாவலின் சிறு பகுதிதான் இந்த படத்தின் கதை, வசந்தபாலனின் கூடுதல் கதையுடன்.

நேரம் பார்த்து ஊருக்குள் சென்று திருடுவதில் பசுபதி குழுவினர் மிகக் கெட்டி. ஆனால் அவர்கள் பெயரை சொல்லி ஒருவன் ஊருக்குள் திருடுவது பசுபதிக்கு தெரிய வருகிறது. அதை பற்றி விசாரிக்க செல்கையில் ஆதியின் அறிமுகம் கிடைக்க, அவரை தங்களது ‘கொத்தில்’ இணைத்துக் கொள்கிறார். ஒரு மாடு பிடிக்கும் போட்டியின்போது கரிகாலனும் அவரது ஆட்களும் வந்து ஆதியை அடித்து தூக்கி செல்கிறார்கள்.

ஏன் என்ற காரணத்துக்காக விரிகிறது flash back. ஆதியும், கரிகாலனும் பக்கத்து ஊர்க்காரர்கள். அனைவருமே பாளையத்துக்கு காவல் பணி புரிபவர்கள். ஐந்து தலைமுறைகளாக ஏதோ ஒரு காரணத்துக்காக இரண்டு ஊர்க்காரர்களுக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. இதற்கிடையில் கரிகாலனின் ஊர்க்காரரான பரத் ஆதியின் ஊரில் இறந்து கிடக்கிறார். இதனால் மூளும் சண்டை, மனித பலி கொடுத்தால் சமாதானம் என்று முடிவாகிறது. பலி யார், அடித்து தூக்கி செல்லப்பட்ட ஆதியின் நிலை என்ன என்று ‘மிகப்’ பொறுமையாக திரையில் சொல்கிறார்கள்.

படத்தில் முழு முதல் பாராட்டு பெறுபவர் ‘கலை இயக்குனர்’ விஜய் முருகன். வாழ்த்துகள். வரலாற்றுப் படத்திற்கு மிக முக்கியமான பங்களிப்பு இவர்களிடமிருந்துதான் தேவை. காலம், சூழல் என அனைத்தையும் உருவாக்கி வரலாற்றின் களத்தை நம் கண் முன்னே உலவ விடுபவர்கள். விஜய் முருகனும் அதை சரியாகவே செய்திருக்கிறார். குடிசை, மாட்டு வண்டி, பனை ஓலைப் பாய், அரிசி புடைக்கும் முறம், அரிவாள் என சிறு விஷயங்கள் முதல் அனைத்து நிலைகளிலும் கவனம் செலுத்தி மிக நுட்பமாக படத்தில் வரும் கிராமங்களை உருவாக்கி உள்ளார். மீண்டும் வாழ்த்துகள்.

 

அடுத்து கவனம் ஈர்த்த விஷயம் ஒளிப்பதிவு. வரலாற்றுப் படத்தை நம் மனதோடு ஒன்ற வைப்பதற்கு ஒளிப்பதிவிற்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு. அதற்கான வேலையை செவ்வனே செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் சித்தார்த்.

என்னதான் வரலாற்றுத் திரைப்படம், தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான பதிவு, இந்த படத்தின் குழுவினரின் அயராத உழைப்பு என்று யோசித்தாலும் படத்தின் குறைகளையும் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. படத்தின் முக்கிய பலமே கதைதான். இப்படி ஒரு சமூகம் இருந்தார்கள் என்று இனிமேல்தான் பல பேருக்கு தெரிய வரும். அதே வேளையில் படத்தின் பலவீனமாக திரைக்கதை அமைந்துவிட்டதை சொல்லியே ஆக வேண்டும். நல்ல கதையில் மிகவும் மெதுவாக செல்லும் திரைக்கதை நம் பொறுமையை சோதிக்கவே செய்கிறது.

அடுத்து படத்தில் மிகப் பெரிய சொதப்பல் Graphics. பாம்பும், காளைக் கூட்டமும் தனித்தே தெரிகின்றது. அதுவும் காளைக் கூட்டத்தில் ஆதி வரும் காட்சி பர பரவென பற்றியெரிந்திருக்க வேண்டாமா? Graphics சொதப்பலால் காட்சியில் வேண்டிய அழுத்தம் இல்லாமல் ஏனோவென்று கடந்து செல்கிறது. இன்னும் கொஞ்சம் செலவு செய்திருக்கலாம்.

நடிகர்கள் வரிசையில் பசுபதி வழக்கம் போல அசத்துகிறார். ஆதி ஆறு பொட்டல உடம்புடன் (அதாங்க six pack body) நன்றாகத்தான் இருக்கிறார். ஆனால் இவர் ‘நடிப்பது’ நன்றாகவே தெரிகிறது. ஒரு வரலாற்றுப் படத்தில் நடிக்கிறோம் என்று உணர்ந்துதான் நடித்தாரா என்று தெரியவில்லை. “நீ இன்னும் வளரனும் தம்பி..!!”. அதுவும் அந்த அருவியில் குதிக்கிற காட்சியில் நீங்க ‘வேட்டைக்காரன்’ விஜய்கிட்ட பயிற்சி எடுத்திருக்கணும். அவர் பாருங்க அருவியில் விழுந்து உடலில் காயம் இருந்த இடம் தெரியாமல் சுத்தமாக வெளியே வருவார். ஆனா நீங்க காலை உடைச்சுக்கிட்டீங்க. என்னமோ போங்க..!!

நாயகிகளாக அர்ச்சனா கவி மற்றும் தன்ஷிகா. மற்றப் படங்களுக்கு பரவாயில்லை. ஆனால் வரலாற்றுப் படங்களுக்கு தமிழ் நான்கு பேசத் தெரிந்திருப்பது மிகவும் அவசியம் அல்லவா? ஆனால் படத்தில் இவர்கள் பேசும் வசனத்திற்கு உதட்டசைவு பொருந்தவேயில்லை. அர்ச்சனா கவி பேசும் வசனமும் அதற்கு அவர் கொடுக்கும் முக பாவமும்.. என்னத்தை சொல்ல?

நடிகர் பரத் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் வருகிறார். நன்றாக வளர்ந்து வந்த நடிகர். ‘பழனி’ என்ற ஒரு சூப்பர் டூப்பர் அட்டு படத்தில் விழுந்தவர் இன்னும் எழுந்திருக்கவே இல்லை. இந்த படத்தில் கதை ஓட்டத்திற்கு ஒரு முக்கியமான திருப்பு முனையாக வருகிறார். இவருடைய காதலியாக இன்னும் சிறிய கதாபாத்திரத்தில் நடிகை அஞ்சலி. இவரை திரையில் பார்த்தவுடன் அரங்கத்தில் என்னா விசில். படத்தோட முக்கிய நடிகர்களுக்குக் கூட அப்படி ஒரு வரவேற்பு இல்லை. இதுக்காகவே நீங்க இன்னும் நிறைய படங்கள் நடிக்கணும் அம்மணி. இவருக்கு ஒரு வசனம்கூட இல்லை. ஆனாலும் படத்தின் ஓட்டத்தில் சோர்ந்திருந்த மக்களுக்கு புத்துணர்வு கிடைத்தது போல இருந்தது இவரின் வரவு.(உங்கள் குருபக்தியை மெச்சினோம்!!!) படத்தின் பின்பாதியில் திடீரென்று வந்து கலகலப்பூட்டியவர் நடிகர் சிங்கம்புலி. கிடா மீசையும், முள்ளம்பன்றி தலையுமாக வந்து இவர் பேசும் ஒவ்வொரு வசனமும் அரங்கம் முழுதும் சிரிப்பலை.

படத்தின் தயாரிப்பு ‘அம்மா கிரியேஷன்ஸ்’ சிவா. இது போன்ற ஒரு முக்கியமான வரலாற்றுப் படத்திற்கு ஆதரவு தந்து தயாரிக்க முன் வந்ததற்கு பாராட்டுகளும், நன்றிகளும்.

வரலாற்றுப் படங்கள் மீது நமக்கு என்றுமே தணியாத ஒரு ஆர்வம் உண்டு. நாம் கண்டிராத காலத்தை காணும் வாய்ப்பு கிடைப்பதே அதற்கு காரணம். அதனால் வரலாற்றுப் படம் என்றாலே ஒரு வித எதிர்பார்ப்பு உருவாகிவிடுகின்றது. அதற்கு சமீபத்திய உதாரணம் ஆயிரத்தில் ஒருவன், பாலை, வாகை சூட வா போன்ற படங்கள். ஆனால் இவை அனைத்தும் மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தனவா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். காரணம் முறையே படத்தில் சொல்லப்பட்ட செய்திகளின் முரண்பாடு, தயாரிப்பு நிர்வாகம், திரைக்கதை போன்றவை. பல முக்கியமான விஷயங்களை ஆய்வு செய்து, வேண்டிய தகவல்களை திரட்டி அனைத்தையும் நேர்த்தியாக இணைத்து வழங்குவதில்தான் இயக்குனரின் சாமர்த்தியம் இருக்கிறது. இதில் எங்கேனும் தெரிந்தோ தெரியாமலோ சருக்கும்போதுதான் நமது எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிகிறது.

அரவானிலும் திரைக்கதையில் ஏற்பட்ட தொய்வு அந்த ஏமாற்றத்தையே தருகிறது. திரைக்கதை ஏற்படுத்திய சலிப்பு கடைசியில் இயக்குனர் சொல்ல வந்த செய்தியை கவனிக்க விடாமல் செய்து விடுகிறது. இருந்தும் 18ம் நூற்றாண்டின் கள்ளர்கள் வாழ்வு, மனித பலி என்று தமிழ் சினிமாவிற்கு புதிய மற்றும் முக்கியமான களன், அதற்கு ஏற்றார்போல கதை தேர்ந்தெடுத்து கொடுத்த வகையில் தமிழ் சினிமாவின் முக்கிய பதிவு ‘அரவான்’.

படத்திற்கான முதல் பூங்கொத்து பெறுபவர்: ‘கலை இயக்குனர்’ விஜய் முருகன்.

கூடுதல் பூங்கொத்து பெறுபவர்: ‘தயாரிப்பாளர்’ சிவா.


2 comments:

  1. நேர்மையான அலசல் இருந்தாலும் படம் பார்க்க ஆவலாய் இருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி !!!!

    ReplyDelete
  2. விமர்சனம் அருமை...

    ReplyDelete

நல்லவங்க...

ShareThis