September 10, 2011

கேட்டேன்... கிடைத்தது...


மதியம் சுமார் 2 மணி.... நல்ல வெயில். தாகம் எடுத்தது. அலுவலகத்திலேயே தண்ணீர் குடித்துவிட்டுக் கிளம்பியிருக்கலாம். ஏதேனும் பழரசம் அருந்தலாம் என்றால் அந்த சாலையில் பழரசக் கடை எதுவும் இல்லை. [பாட்டிலில் விற்கும் குளிர்பானங்களை சில வருடங்களுக்கு முன்பிருந்தே தவிர்த்துவிட்டேன்...]. சரி... என முடிவு செய்து பக்கத்திலிருந்த அடுமனைக்கு சென்றேன்.[Bakery-க்கு தமிழ்ல அடுமனையாம்....] அசல் எலுமிச்சை என விளம்பரப்படுத்தப்படும் குளிர்பானத்தை வாங்கினேன்.

வாங்கும்போதே விலையைப் பார்த்தேன். M.R.P. Rs-8/- என அதன் கழுத்தில் அச்சாகியிருந்தது. பத்து ரூபாய் தாளை கடைப்பையனிடம் [23-26 வயது இருக்கும்] கொடுத்துவிட்டு குளிர்பானத்தை பருக ஆரம்பித்தேன். அவன் கல்லாப்பெட்டியில் நான் கொடுத்தப் பணத்தைப் போட்டுவிட்டு கூட இருந்தவனிடம் பேச ஆரம்பித்தான். நான் குடித்து முடிக்கும் வரையிலும் அவன் என் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை. கடைக்கு வந்த மற்றவர்களை கவனிக்க ஆரம்பித்தார்கள்.


நான் குடித்து முடித்துவிட்டு எனக்கு குளிர்பானம் கொடுத்தவனை அழைத்து, “மீதி சில்லறை கொடுப்பா!” என்றேன்.

“அது பத்து ரூபாய்தாங்க!”

“இதுல 8 ரூபாய்தான் போட்டிருக்கு.. அப்புறம் எதுக்கு 10 ரூபாய் வாங்குறீங்க?”

“அது இல்லைங்க! எப்பவுமே அப்படிதாங்க வாங்குறது”

“அதெப்படி? என்ன காரணத்துக்காக 2 ரூபாய் அதிகமா வாங்குறீங்க?”

இதற்கிடையில் கடையில் பொருள் வாங்க வந்த 2 பேர் என்னை மேலும் கீழும் பார்த்தபடி சென்றனர்.

நான் விடாமல் மீதிப் பணத்தை கேட்டுக்கொண்டிருந்தேன்.

உடனே இன்னொருவன், “எங்க முதலாளிதாங்க வாங்க சொன்னாரு!” என்றான்.

“சரி! அப்போ உங்க முதலாளியை வரச் சொல்லுங்க. நான் அவர்கிட்ட வாங்கிக்கிறேன்.”

“அவர் சாயாங்காலம்தான் வருவாரு..”

“அப்போ மீதிப் பணத்தை நீதான் கொடுக்கணும். ஒண்ணு நீ கொடு... இல்லை உன் முதலாளியை வரச்சொல்லு”

இருவரும் என்ன செய்வதென்று திணறினார்கள். ஆனாலும் மீதிப்பணம் கொடுக்கும் மனநிலையில் அவர்கள் இல்லை.

“என்னப்பா இது? இவ்ளோ நேரம் கேக்குறேன். ஒண்ணும் சொல்ல மாட்டேங்குறீங்க..”

அவர்கள் ஏதேதோ காரணம் கூறினார்கள்.

“அது இல்லைங்க!! Fridge, cooling.. இதுக்கெல்லாம் சேத்துதாங்க அந்த 2 ரூபாய்.”

உடனே அடுத்த கேள்வியை தொடுத்தேன்.

“அப்படியா? தயாரிப்பு செலவு, போக்குவரத்து செலவு, Fridge, Cooling, உங்க லாபம் எல்லாம் சேர்ந்த அடக்கவிலைதான் இந்த 8 ரூபாய். ஆனா நீ என்னென்னமோ கணக்கு சொல்றியே!! அப்போ எனக்கு பில் போட்டுக்கொடு. இந்த குளிர்பானம் 10 ரூபாய் அப்படின்னு தெளிவா பில் போடு. நான் பாக்க வேண்டிய இடத்தில் பாத்துக்கறேன்” என்றேன். கூடுதலாக என் செல்போனை எடுத்து யாருக்கோ அழைப்பது போல பாவ்லா செய்தேன்.

 
அந்தப் பையன் அரண்டே விட்டான்.

“சார்! சார்! இந்தாங்க சார் 2 ரூபாய்” என்றபடி நாணயத்தை என் கையில் வைத்தான்.

“என்னோட 2 ரூபாயை உன்கிட்ட நான் வாங்குறதுக்கு எவ்ளோ பேசவேண்டியிருக்கு?” என்றபடி கடையிலிருந்து கிளம்பினேன். 

 என் பணம், நான் சம்பாத்தித்த பணம், பாத்திரமாய் என் சட்டைப் பையில். மனம் தெளிவாகவும், உற்சாகமாகவும் இருந்தது.ஒரு கணக்கு போட்டு பாக்கலாமா?

அது ஒரு சாதாரண அளவிலான கடை. ஒரு நாளைக்கு சராசரியாக 25 குளிர்பானங்கள் விற்கபடுகிறது என வைத்துக்கொள்வோம்.

1 நாளைக்கு 25 X 2 = 50

1 மாதத்திற்கு 50 X 30 = 1500

தோராயமாக நமது பணம் ரூ.1500 அவர்களிடம் எந்த கணக்கும் இல்லாமல் செல்கிறது. இதுபோல அந்தக் கடையில் பல பொருட்கள். அதுவும் அவர்கள் நிர்ணயம் செய்த விலை. குறைந்தது 5000 ரூபாயாவது அந்த சிறிய கடைக்கு இப்படி கணக்கில் சேராமல் வரும். இதுபோல பல அளவில், பல கடைகளில், பல விதங்களில் நம் அனுமதி இல்லாமல் நம் சட்டைப் பையில் கைவிட்டு பணம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் பேசினால் ஷங்கர் படம் Climax போல பேச வேண்டியிருக்கும்.

அதனால 1 ரூபாய் ஆனாலும் அது உங்கள் பணம்... அத பத்திரமா பாத்துக்கோங்க....

10 comments:

 1. daily moving consumer goods (milk, curd, cool drinks, cigarette) களில் தான் இம்மாதிரியான பித்தலாட்டங்கள் செய்கிறார்கள்.

  ReplyDelete
 2. பணம் கொடுப்பது நாம். அதனால, நாம அழுத்தமா பேசினா நம்ம பணமும் பத்திரமா இருக்கும். இந்த பித்தலாட்டங்களும் குறையும்.

  ReplyDelete
 3. பதிவு நல்லா இருக்கு... ஆனால் என் பசிக்கு தீனி பத்தவில்லை... கிட்டத்தட்ட 2008ல் இருந்து பதிவு போட ஆரம்பித்து உள்ளீர் ஆனால் ஏன் நிறைய பதிவுகள் இல்லை.. மீண்டும் களத்திற்கு வாருங்கள்...

  ReplyDelete
 4. இனிமே உங்களுக்கு full meals-தான். அடிக்கடி வாங்க...

  ReplyDelete
 5. இன்னும் நிறைய எழுதுன்ன நண்பா..

  ReplyDelete
 6. well done...but apdi naama ketkum pothu matha customers-a nammala oru maadhiri kevalama pakkuranga...crazy people...

  ReplyDelete
 7. எப்படியோ நீங்க வாங்கிடீங்க....அப்படியே மதுரை பஸ் ஸ்டாண்ட் பக்கம் ஒரு விசிட் கொடுங்க....

  ReplyDelete
 8. இதுதான்...இதைத்தான் எதிர்பார்க்கிறோம்...!! வாழ்த்துக்கள்..தொடருங்கள்!

  ReplyDelete

நல்லவங்க...

ShareThis