September 06, 2011

குற்றாலம் – சில்லுனு ஒரு பயணம்... பகுதி-1


[நண்பன் ‘தல’ வெங்கடேஷின் திருமணத்துக்கு வர முடியாமல் இருந்த நண்பர்களுக்காக.. ]

நான் இதை பயணம் என்று குறிப்பிட்டாலும், குற்றாலம் செல்ல முக்கிய காரணம், நண்பன் வெங்கடேஷின் திருமணம்... ரம்ஜான், விநாயகர் சதுர்த்தி என அடுத்தடுத்து விடுமுறை வந்ததால் இந்தப் பயணம் இனிய சுற்றுலாவாகவும் மாறியது.

ஏற்கனவே முன்பதிவு செய்திருந்ததால், எந்த பரபரப்புமின்றி ரயில் கிளம்ப ஒரு மணி நேரத்துக்கு முன்பே அனைவரும் வந்து சேர்ந்தோம். கல்லூரி காலத்திற்குப் பிறகு, அநேகமாக நண்பர்கள் அனைவரும் அமர்ந்து பேசுவது இது போன்ற தருணங்களில்தான். அவ்வகை தருணங்கள் எங்களுக்கு நிறையவே கிடைத்தன. பல பேர் வருவதாக எண்ணி திட்டமிடப்பட்ட பயணம், கடைசி நேர மாறுதலுக்குட்பட்டு 5 பேர் மட்டுமே[நான், ரகு, பிரவீன்(EsPee), உமா சங்கர், தனபால்] செல்ல வேண்டியிருந்தது காலத்தின் கட்டாயமே!!! [இந்த கட்டாயத்தால் இன்னொரு நண்பன் ரமேஷின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனது கொஞ்சம் வருத்தமே!!]
 
சென்னை-செங்கோட்டை விரைவு வண்டியில் சரியாக 8 மணிக்கு எங்கள் பயணம் தொடங்கியது. சென்னைலதான் இருக்கோம்னு பேரு... ஆனா எப்பவாவது இந்த மாதிரி தருணங்களில் சந்தித்தால்தான் உண்டு... ரொம்ப நாள் கழித்து பார்த்ததால் பேச்சு இதுதான்னு இல்ல... பல விஷயங்களைப் பத்தி பேசிக்கிட்டே பயணத்தை தொடங்கினோம். கண்டிப்பா என்ன பேசினோம்னு இப்போ நினைச்சுப் பாத்தா.... ப்ச்... எதுவுமே ஞாபகத்தில் இல்லை. ஆனா அந்த மகிழ்வான மனநிலை மட்டும் இப்போதும் உணர முடியுது. கேலி, கிண்டல், latest cell phone model, அவரவர் வேலை இப்படி பல விஷயங்கள்....

இப்படி ஜாலியா பேசிக்கிட்டிருந்தபோது தனபால் கேட்டார், “மச்சான்!! நைட் சாப்பாட்டுக்கு என்னடா பண்ணலாம்?”. பேச்சு அப்படியே அறுபட்டது. முக்கியமான பிரச்சினை. சரி... எப்படியும் ரயில்-ல சாப்பாடு கிடைக்கும்ல... பாத்துக்கலாம்.... இப்படியே சில நிமிடங்கள் கழிந்த நிலையில் ரயில் சத்ததினிடையே மெலிதாய் கேட்டது...

“சப்பாத்தி, இட்லி, தோசை, பரோட்டா......”


நாங்கள் வேண்டியதை விலை பேசி வாங்கிக்கொண்டிருக்கிறோம்..... மற்ற பிரயாணிகள் அவர்கள் உணவை முடித்து தூக்கத்தை தழுவ ஆயத்தமானார்கள். எங்கள் அனைவருக்கும் நல்ல பசி. சாப்பாட்டுப் பொட்டலத்தைப் பிரித்து கொஞ்சம் எடுத்து வாயில் வைத்ததும், அனைவரின் முகமும் சுருங்கியது. எந்த உணவிலும் பேருக்குக்கூட உப்பு, காரம் இல்லை.

தனபால் சொன்னார், “இந்த சொக்கலிங்கம் மெஸ்ல சாப்பாடு வாங்கினாலே இப்படித்தான்....”[அந்நியன் படம் ஞாபகம் வருதா??]

நான் சொன்னேன், “விடுங்க பாஸு!! திண்டிவனம் போற வழிதானே!! சொக்கனை பாத்து சொல்லிட்டுப் போவோம்” என்றேன்.

கஷ்டப்பட்டு சாப்பிட்டு முடித்தோம். உறங்கச் செல்லும்போதுதான் அந்த சங்கடம் பெரிதாக தெரிந்தது.

நாங்கள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது waiting list 192-லிருந்தது. மெல்ல எங்கள் நிலை நகர்ந்து 10,9,8,7,6… என குறைந்து.... 2-ம் இடம் வந்தது. அப்பாடா என சிறிது நேர கழித்து, பார்த்தால் RAC:96-100 என இருந்தது. சரி.... உட்காரவாவது இடம் கிடைத்ததே என ஆறுதல்பட்டுக் கொண்டோம்.

எங்களுக்கு கிடைத்தது side-lower berth. ஒரு சீட்டுக்கு இருவர் என எதிர் எதிராக படுத்துக்கொண்டோம். எல்லாம் சிரமப்படு நாங்கள் உறங்கச் செல்கையில் அந்த சத்தம் கேட்டது.

கொர்ர்ர்ர்......

பக்கத்தில் படுத்திருந்த பெரியவர் ரயிலுக்கு போட்டியாக சத்தம் எழுப்பியபடி தூங்கிக்கொண்டிருந்தார். நானும் தனபாலும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டோம். வேற என்ன பண்ண முடியும்?

மெல்ல... ரயிலின் மெல்லிய தாலாட்டும், தடக்... தடக்... ஓசையும் தூக்கத்துக்கு இட்டுச் சென்றது. என்னதான் சகித்துக் கொண்டாலும், ரயிலில் RAC பயணம் என்பது சற்று சிரமம்தான். இதை அன்றுதான் அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.. நான் கொஞ்சம் உயரம் ஜாஸ்தியா? எனது இடத்தில் இடம் கொள்ளாமல், அடுத்த side lower berth-ல் படுத்திருந்த சங்கரின் தலை வரை என் கால் நீண்டிருக்கிறது. [Sorry-டா சங்கர்...].

சுமாரான தூக்கதில் இருந்த எனக்கு சட்டென்று விழிப்பு தட்டியது. எனது செல்பேசி நேரம் 5:10 AM எனக் காட்டியது. ரயில் ஏதோ ஒரு நிலையத்தில் நின்றிருந்தது. பக்கத்தில் அனைத்து இருக்கையும் காலியாக இருந்தது. வசதியாக சென்று ஜன்னல் இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.

பையுடன் கிளம்பியவரிடம் இது என்ன ஊர் எனக் கேட்டேன். மதுரை எனக் கூறியபடி இறங்கிப் போனார். மதுரை எனக் கேட்டவுடன் விஜய், கில்லி, பிரகாஷ்ராஜ், ஒரு லோடு அருவா, ஹரி, அழகிரி என ஒரு கலவையான கட்சி கண்முன்னே தோன்றியது. பிளாட்பாரத்தில் என்னை கடந்து சென்ற இருவரின் முதுகை தன்னிச்சையாக பார்த்தேன். அப்பாடா!!! அரிவாள் எதுவும் இல்லை என நான் ஆறுதல்பட்டுக் கொண்டேன். பின்னர்தான் நான் எவ்வளவு தூரம் என்னை அறியாமல் தமிழ் சினிமாவை நம்பியிருக்கிறேன் என்பதை உணர்ந்தேன்.

சில நிமிடங்களில் ரயில் புறப்பட்டது. இரவில் தூக்கம் இல்லாததால் மற்ற நால்வரும் கிடைத்த இடத்தில் நல்ல உறக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். நானும் மெல்ல தூங்கிப் போனேன். மீண்டும் பேச்சுக் குரல் கேட்டு விழித்தேன்.


6:45 AM.


சங்கரும், பிரவீனும் பேசிக்கொண்டிருந்தனர். மெல்லிய குளிர், இதமான காற்றுடன் ஜன்னல் வழியே முகத்தில் தவழ்ந்தபடி கடந்து சென்றது. மிக அருமையான காலை பொழுது. ஜன்னல் வழியே பார்த்ததை எல்லாம் பேசிக்கொண்டிருந்தோம். களிமண் பூமி, செடி கொடிகளின் பசுமை, திடீரென வந்த செம்மண் பூமி, காற்றாலை மின்சாரம்... இப்படி பல... இடையில் டனபாலும் வந்து சேர்ந்துக் கொண்டார். ரகு இன்னும் உறங்கிக் கொண்டிருந்தான். ரகுவும் சங்கரும் இரவு முழுக்க தூங்கவில்லை என சங்கர் கூறினான்.

[சங்கர் & தனபால்]
பின்னர் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தபடி தென்காசி வரக் காத்திருந்தோம். அப்போது செல்லும் வழியெல்லாம் ஒரு புதுமையான காட்சி கண்ணில் பட்டது. நாம் ஊரில் காகம் போல அங்கே வழி நெடுகிலும் மயில் கூட்டம் காணக் கிடைத்தது. அதுவும் ஒவ்வொரு மின்சாரக் கம்பத்திலும் ஒரு மயில் அமர்ந்திருந்தது கண்கொள்ளாக் காட்சி.

அனைத்தையும் ரசித்தபடி இருந்த வேளையில், அருகில் இருந்த பெரியவர் தென்காசி நெருங்குவதாகக் கூறினார். ரகுவை எழுப்பிவிட்டு எங்கள் உடைமைகளை சரிபார்த்து எடுத்துக்கொண்டோம். சரியாக 7:40க்கு தென்காசி வந்து இறங்கினோம். 
 


சூரியன் தன் கரங்களை இன்னும் அகல விரித்திருந்தாலும், காற்றில் இதமான குளிர் இன்னும் இருந்தது. அலுவலக நண்பர்கள் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது,

’குற்றால அருவியில் நீர் பெருக்கெடுத்தால் தென்காசியில் சாரல் அடிக்குமாம்’

ஒருவேளை குளிருக்கு காரணம் அந்த சாரல்தானோ??


சாரல் அடிக்கும்......

2 comments:

  1. சீக்கிரம் குளிங்க சாரி சொல்லுங்க பாஸ் .ரயில் பயணம் அருமை

    ReplyDelete
  2. arumaiyaaga ulladhu, thodarndhu sellungal.

    ReplyDelete

நல்லவங்க...

ShareThis