September 07, 2011

குற்றாலம் – சில்லுனு ஒரு பயணம்... பகுதி-2

இந்த பயணத்தின் முதல் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.

பயணம் - 1


 இதமான குளிரும், சாரலும், மிதமான வெயிலும் பயணக் களைப்பையும் மீறி ஒரு உற்சாகத்தைக் கொடுத்தது. ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தோம். எங்களை வரவேற்க தென்காசியின் ஆட்டோ ஓட்டுனர்கள் அனைவரும் வந்திருந்தனர். ஆமாங்க!! வெளியே உள்ளத்தைப் பார்த்ததும் அப்படித்தான் நினைக்கத் தோன்றியது. திரும்பிய பக்கமெல்லாம் மஞ்சள் வண்டுகளாய் ஆட்டோக்கள் நின்றிருந்தன. அது சரி... ஒரு சுற்றுலா தளத்தில் இப்படி இல்லைன்னாதான் ஆச்சரியமே!! அதுவும் நாம் ஊரில் உள்ளது போல சாதா(சவாரி) ஆட்டோக்கள் அங்கே கண்ணிலேயே சிக்கவில்லை. அனைத்தும் Share Auto எனப்படும் பகிர்வு ஆட்டோ வகைதான்.

ஒரு ஆட்டோவில் குற்றாலம் வரை செல்ல ரூ.70 என பேசி வண்டியில் ஏறிக்கொண்டோம். ரயில் நிலையத்திலிருந்து தென்காசி நகரத்துக்கு சுமார் 1 கி.மீ. அந்த ஒரு கிலோமீட்டரை கடக்க நாங்கள் பட்ட பாடு... அய்யய்யோ!! பாலம் கட்டுமானம் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், சாலை மோசமான நிலையிலிருந்தது. பின்பு நகரத்திலிருந்து குற்றாலம் 5 கி.மீ. நல்ல தரமான தார்ச்சாலை. எந்த குலுங்கலுமில்லாமல் குற்றாலக் காற்றை சுவாசித்தபடி, அந்த அனுபவத்தை சிலாகித்தபடியே சென்றோம். ஏற்கனவே தலயிடம் எங்கள் வருகையைக் கூறிவிட்டதால், பிரதான சாலையில் எங்களுக்காகக் காத்திருந்தார். அங்கே அவர் எங்களுக்காக ஒரு தனி வீட்டையே ஏற்பாடு செய்திருந்தார். வீடு என்றால் சாதாரண வீடு அல்ல. Double bedroom வசதி கொண்ட ஒரு குட்டி பங்களா என்றே சொல்லலாம். இங்கேதான் குற்றாலத்தின் இன்னொரு பரிமாணம் தெரிந்தது.


 [நாங்கள் தங்கியிருந்த வீட்டின் உட்புறத் தோற்றம்]

 பெரும்பாலும் இந்த வீடுகளில் இருப்பவர்கள், அந்த வீட்டின் பெரியவர்களே!! அவர்களின் பிள்ளைகளும், வாரிசுகளும் வேலை நிமித்தமாக வெளியூரிலோ, வெளிநாட்டிலோ குடியேறிவிட்டார்கள். அதனால் இங்கே காலியாக உள்ள வீடுகள், குற்றாலம் சுற்றுலா வருபவர்களுக்கு வாடகைக்கு விடப்படுகிறது. அதுவும் நாள் வாடகைதான். உலகமயமாக்கலின் பல மோசமான பின்விளைவுகளில் இதுவும் ஒன்று. சொந்த வீட்டில் பெரியவர்கள் மட்டும் இருக்க, அவர்களை அருகில் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டியப் பிள்ளைகள் எங்கோ இருக்கிறார்கள். இப்படி இருக்கும் ஒவ்வொரு வீடும் தனித்தனி முதியோர் இல்லமாகவே இருக்கிறது. [இந்த நிலை குற்றாலம் என்றில்லை. அனைத்து ஊர்களிலுமே இது புதிதாக எழுதப்பட்ட பொது விதியாகவே இருக்கிறது.]

என்னங்க பயணக்கட்டுரை, தத்துவமாப் போகுதா...? இதோ வந்துட்டேன்....

குற்றாலத்தை சுற்றி பல வாடகைப் பாத்திரக் கடைகள் இருந்தன. அதற்கும் ஒரு சுவையான காரணம் இருந்தது. சுற்றுலா வருபவர்கள் அதுவும் குடும்பம் சகிதமாக வருபவர்கள், ஹோட்டல்களில் தங்குவதை விட, இந்த மாதிரி வீடுகளில் பாதுகாப்பு கருதி தங்குவார்கள். இங்கு சுற்றுலா என்பது, குறைந்தது 2 நாட்களாவது இருந்தால்தான் நன்கு அனுபவிக்க முடியும். அப்போ, அந்த 2 நாளும் வெளியே சாப்பிட்டால் பர்ஸ் பழுத்துவிடும். அதுவும் ஆரோக்கியம் சார்ந்த விஷயம் வேறு. அதனால் சமைப்பதற்க்கு வேண்டிய பாத்திரங்களை இந்த கடைகளில் வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். பாத்திரங்கள் இல்லாமல், போர்வை போன்றவையும் இங்கு வாடகைக்கு கிடைக்கின்றன.

எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீட்டுக்கு சென்றோம். ஒரு மணி நேரத்தில் அனைவரும் தயாரானோம். காலை உணவுக்கு தல எங்களை வெளியே அழைத்து சென்றார். தென்காசியில் உள்ள மிகப் பிரபலமான ஹோட்டலின் கிளை எனக் கூறினார். பார்க்க சாதாரணமாகத்தான் இருந்தது. ஆனால் நாங்கள் சாப்பிட இடம் கிடைக்கக் கிட்டத்தட்ட 20 நிமிடம் காத்திருந்தோம். நாங்கள் 6 பெரும் அமர இடம் கிடைத்தது. அனைவருக்கும் தலை வாழை இலை போட்டார்கள். சட்டென்று சென்னை ஹோட்டல்கள் நினைவில் வந்து சென்றன. ஒரு எவெர்சில்வர் தட்டில் பிளாஸ்டிக் காகிதத்தை வைத்து பரிமாறுவார்கள். கொஞ்சம் பெரிய ஹோட்டலாக இருந்தால் ஒரு துண்டு வாழை இலை. அவ்வளவுதான். ஆனால் இங்கு காலை டிபனுக்கு தலை வாழை இலை.

“என்ன சாப்பிடுதீய?”, சர்வரின் குரல் கேட்டு அனைவரும் வேண்டியதை சொல்லி சாப்பிட்டோம்.

சாப்பிட்டு முடிக்கும்போதுதான் அந்த சுவாரசியமான சம்பவம் நடந்தது. எங்கள் அனைவருக்கும் முன்னால் சங்கர் சாப்பிட்டு முடித்தான். சர்வரிடம் பில் எவ்வளவு எனக் கேட்டதும், தல தான் பில் தருவேன் என பாதி சாப்பாட்டில் எழுந்துவிட்டார். இந்த மாதிரி விஷயத்தில் அவரை மீறுவது ரொம்ப கஷ்டம். ஏன்னா, 'அவர் ஒரு முடிவு எடுத்துட்டார்னா, அவர் பேச்சை அவரே கேக்கமாட்டார்'. இங்கயும் சங்கருக்கும் தலைக்கும் நீயா நானா போட்டி ஆரம்பக் கட்டத்தில் இருந்தது. சர்வரும் யாரிடம் பணம் வாங்குவது என குழப்பத்தில் இருந்தார். அப்போ தலை சர்வரிடம் கூறினார்,

"அண்ணே! அவுக நம்ம ஊருக்கு கெஸ்ட். சென்னைலருந்து வந்திருக்காவோ!! அதனால அவுகக்கிட்டா பில் வாங்காதீய!!"

அவ்வளவுதான்... சங்கர் எவ்வளவு சொல்லியும் சர்வர் அவனிடம் பில் வாங்கவில்லை. தலை சாப்பிட்டு முடித்ததும் அவர்தான் பில்லுக்கு பணம் கொடுத்தார்.

 
[குற்றாலம் மலைப் பின்னணியில் போட்டோ வேணுமாம்...]

சாப்பிட்டு முடித்து வீடு வந்து சேர்ந்தோம். சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு அருவிக்கு செல்லலாம் என திட்டம். தல எங்களுக்காக தனி ஆட்டோவை ஏற்பாடு செய்திருந்தார். தலயின் உறவினர் தான் ஆட்டோ ஓட்டுனர். மெல்லிய புன்சிரிப்புடன் பார்ததுமே தோழமையுடன் பழக ஆரம்பித்தார். இன்று ஒருநாள் மட்டுமே அருவிகளுக்கு செல்ல முடியும். மறுநாள் தலயின் திருமணம் என்பதால் இன்றைக்கு மட்டுமே அருவிக்கு செல்லலாம் என முடிவு செய்தோம். சென்ற வருடமே குற்றாலம் வந்திருந்ததால், அருவிகளைப் பற்றி ஓரளவு தெரிந்திருந்தது.

பேரருவி பெரிதாக இருக்கு. ஆனால் இட நெருக்கடியால் அனுபவித்து குளிக்க முடியாது. புலியருவியில் தண்ணீர் வரத்து மிகவும் குறைவாகவும் இருக்கும். என்னைக் கேட்டால் குழந்தைகளுக்கான அருவி எனக் கூறலாம். சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி அனைத்தும் தொலைவில் உள்ளதால் வேண்டாமென முடிவு செய்தோம். இறுதியாக காலையில் பழைய குற்றால அருவியும், மாலையில் ஐந்தருவியும் செல்வதென தீர்மானித்தோம்.

பழைய குற்றாலம்:

இந்த அருவியை சன் டி‌வி பார்க்கும் அனைவரும் பார்த்திருப்பீர்கள். 'கோலங்கள்! கோலங்கள்!!' அப்படின்னு தேவயானி நடந்து வருவாங்களே!! அது இந்த அருவி முன்னாடிதான். நல்ல உயரமான அருவி. நாங்கள் சென்ற நேரம் நல்ல கூட்டம். விநாயகர் சதுர்த்தி - விடுமுறை தினம் அல்லவா!!! போலீஸ் காவல் போடுமளவுக்குக் கூட்டம். ஆனால் சென்ற வருடம் அந்த அருவியே எங்களுக்கு சொந்தம் போல அனுபவித்தோம். கூட்டமே இல்லைங்க!! கூட வந்த ஒருத்தன் அருவியில் உக்காந்து துணி துவைச்சான்னா பாத்துக்கோங்க...


 [நான், சங்கர், பிரவீன், ரகு, பின்னால பழைய குற்றாலம், அப்புறம் தனபால் - இந்த போட்டோவை எடுத்தவர்]

இந்த வருடம் தண்ணீர் ரொம்ப அதிகம். அருவியில் நீர் வரத்து அதிகரித்தால் சிறு சிறு கற்களும் வந்து விழுமாம். வந்து விழுகின்ற வேகத்தில், தலையில் விழுவது தண்ணீரா இல்லை கல்லா எனவே தெரியவில்லை. ஆனா ஒரு கல் கூட விழலைங்க... சிறிது நேரம்[20 நிமிஷம் இருக்கும்!!] அருவியில் ஊறியபின் கொஞ்சம் வெளியே வந்து நின்றோம். அப்போதான் கவனித்தோம்... எங்கள் குழுவில் ரகு இல்லை. அருவியிலும் அவனை பார்த்ததாக நினைவில்லை. எங்கே போனான்?

சுத்தியும் பார்த்ததில், தூரத்தில் அருவியை வேடிக்கை பார்த்தபடி ஒரு உருவம் இன்னும் குளிக்காமல் இருந்தது. வேற யாரு? நாங்க தேடிய ரகுதான்... சைகையில் கிட்டே அழைத்து என்ன ஆச்சு எனக் கேட்டதற்க்கு அவன் கூறிய பதில் என்ன தெரியுமா?

"ரொம்ப குளிருதுடா!! எப்படிடா நீங்க குளிக்கிறீங்க?"

அப்போ நேரம் என்ன தெரியுமா? காலை 11 மணி. உண்மையில் அவன் கேள்விக்கு எங்கக்கிட்ட பதில் இல்லை. மேலும் ஒரு மணி நேரம் அருவியில் குளித்தோம். சரி... கிளம்பலாம் என முடிவெடுத்தால்... "இன்னும் கொஞ்ச நேரம் குளிக்கலாம்டா!!" என்றொரு குரல் கேட்டது. சொன்னது வேற யாரும் இல்லைங்க... நம்ம ரகுவேதான்....

பின்பு அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு 1 மணி போல வந்து சேர்ந்தோம். தல மதிய உணவிற்கு அவர் வீட்டுக்கு அழைத்திருந்தார். போன சிறிது நேரத்தில் உடை மாற்றி தயாராக இருந்தோம். தல வந்து பக்கத்து தெருவிலிருந்த அவர் வீட்டுக்கு அழைத்து சென்றார். அவர் குடும்பத்தினர் அனைவரும் எங்களை வரவேற்றனர். தலயின் தந்தை மற்றும் உறவினர்களோடு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பின்னர் அருமையான சாப்பாடு. சாம்பார், வத்தக்குழம்பு, கூட்டு, பொரியல் என அமர்க்களப்படுத்திவிட்டார்கள். தலயின் சித்தி, அண்ணன், மாமா அனைவரும் உடனிருந்து அன்புடன் பரிமாறினார்கள்.

சாப்பாடு முடிந்து எங்கள் தங்குமிடத்திற்கு திரும்பினோம். அருவியில் குளித்த அசதி, தல வீட்டில் அருமையான சாப்பாடு என அனைத்தும் ஒன்று சேர்ந்ததால் ஒரு அருமையான தூக்கத்திற்குத் தயாரானோம். சென்னையில் இருக்கும் பரபரப்பான சூழ்நிலையில் இந்த மாதிரியான ஒரு மதிய தூக்க கிடைக்குமா என்பது சந்தேகமே!! 4 மணி போல தூங்கி எழுந்து, ஐந்தருவி செல்ல தயாரானோம். சொன்னபடி தனது வாகனத்துடன் வந்தார் மணி அண்ணன்.

ஐந்தருவி: 

[இதுதான் ஐந்தருவின்னு கட்டம் போட்டு சொல்லனுமா?]

ஒரே அருவிதான். மலை மேலிருந்து விழும்போது பாறை இடுக்குகளில் நுழைந்து ஐந்தாகப் பிரிந்து விழுவதால் ஐந்தருவி என அழைக்கப்படுகின்றது. இது குற்றாலத்திலிருந்து சுமார் 2-3 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு வண்டிகளை நிறுத்த நல்ல விசாலமான இடம் இருக்கிறது. ஐந்தருவிகளை 3 பெண்களுக்கும், 2 ஆண்களுக்கும் என பிரித்துள்ளனர். வேண்டிய அளவுக்கு தடுப்புகள் போட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மாலையில் சென்றதால் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது. சங்கரும் பிரவீனும் குளிக்க சென்றார்கள்.
 [இயற்கைப் பின்னணியில் உற்சாகமாக ஒரு படம்...]

நாங்கள் மூவரும் மறுநாள் குளித்துக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டோம். இயற்கை பின்னனியில் பலவிதமாக போட்டோ எடுத்துக் கொண்டோம். மாலை வேளை, அருவியின் சத்தம், சாரலின் ஈரம், மரம், செடி, கொடிகளின் பச்சை வாசம் என அனைத்தும் சேர்ந்து மனதிற்கு உற்சாகத்தைக் கொடுத்தது.

சுமார் ஒரு 6 மணி போல அனைவரும் வீடு திரும்பினோம். ஆரம் வழியில் பேரருவியின் அருகில் இருக்கும் கடை வீதிக்குச் சென்றோம். திரும்பிய பக்கமெல்லாம் பலவகையான பழக்கடைகள், எதை எடுத்தாலும் 6,10,15 ரூபாய் எனக் கூவும் விளையாட்டு சாமான் கடைகள், நேந்திரம்பழ சிப்ஸ் கடைகள், லாலாக் கடை அல்வா என அந்த இடமே கலவையாக மணத்தது. சிறிது நேரம் சுற்றிவிட்டு பேரருவியின் முன்னால் படம் எடுத்துக்கொண்டு வீடு திரும்பினோம்.


 [பின்னாடி பேரருவி... முன்னாடி நாங்க....]

அடுத்து இரவு உணவுக்கு நாங்கள் செல்ல திட்டமிட்டிருந்த இடம்தான் “பிரானூர் பார்டர் கடை”.

பிரானூர் பார்டர் கடை:

குற்றாலத்திலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது பிரானூர். கேரளாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் இந்த இடம்தான் எல்லைக்கோடாக உள்ளது. இங்கு அமைந்துள்ள ஹோட்டல் என்பதால் பார்டர் கடை என்றே அழைக்கப்படுகின்றது. இந்த ஹோட்டல் முழுக்க அசைவப் பிரியர்களுக்கானது. நாங்கள் சென்ற சமயம் ரம்ஜான் மறுதினம் என்பதால் கடைக்கு விடுமுறை. ராகுவும் பிரவீனும் இப்போதுதான் முதன்முறையாக இங்கு வருகிறார்கள். எங்களைவிட அவர்களுக்குதான் ஏமாற்றம். சென்ற வருடம் இங்கு வந்த அனுபவத்தில் சொல்கிறேன்... குற்றாலம் வருபவர்கள் நிச்சயம் தவிர்க்கக்கூடாத ஒன்று இந்த பார்டர் கடை. நல்ல விசாலமான கட்டிடம். பரோட்டா, கோழி, காடை, என நல்ல அருமையான விருந்து. பரோட்டா மாவு பிசைவதற்கு தனி எந்திரமே வைத்துள்ளார்கள். அவ்வளவு சிறப்பு வாய்ந்த கடையில் இந்த முறை எங்களால் சாப்பிடமுடியவில்லை.

பின்னர் மணி அண்ணன் எங்களை வேறு ஒரு ஹோட்டலுக்கு அழைத்து சென்றார். அது ஒரு சிறிய சைவ உணவகம். வெறும் இட்லி, தோசை மட்டுமே இருந்தது. அதுவும் மிக அருமையாக. சாப்பிட்டு கிளம்ப இருக்கையில் மெல்லிய தூரல் விழ ஆரம்பித்தது. மறுநாள் தல திருமணத்துக்கு செல்வது குறித்து பேசியபடியே வீடு வந்து சேர்ந்தோம். இன்னமும் தூரல் விழுந்துக்கொண்டிருந்தது.

அப்போதுதான் அந்த சந்தேகம் வந்தது. விழுவது தூரலா? இல்லை குற்றால அருவியின் சாரலா?

சாரல் அடிக்கும்......

3 comments:

  1. என்ஜாய் பண்ணி இருக்கீங்க....வீட்டு வாடகை எவ்வளவு...??

    ReplyDelete
  2. செம கொண்டாட்டம் ஜெட்லி. வீட்டு வாடகை 2000-4000 வரை உள்ளது. வாடகை வீட்டை பொறுத்து மாறுபடுகிறது.

    ReplyDelete
  3. thala .parder kadaila pathu sapdunga . naanga last week anga sapdum pothu . paampuraani vaal kidanthuchi . .enna benifit bill pay panala

    ReplyDelete

நல்லவங்க...

ShareThis