September 16, 2011

எங்கேயும் எப்போதும்.. - பாதுகாப்பான பயணத்திற்கு

இன்றைய காலக்கட்டத்தில் பரவலாக அடிக்கடி பத்திரிக்கை, தொலைக்காட்சியில் அடிபடும் செய்திதான் இந்த படத்தின் கருப்பொருள். அது... விபத்து...

“இரண்டு பேருந்துகள் நேருக்குநேர் மோதிக் கொண்டதில் 6 பேர் உயிரிழப்பு. 20 பேர் படுகாயம்..”


“நின்றுகொண்டிருந்த கார் மீது லாரி மோதியதில் காரிலிருந்த அனைவரும் சம்பவ இடத்திலேயே மரணம்...”


“அரக்கோணம் அருகே ரயில்கள் மோதி கோர விபத்து. இதுவரை 10 பேர் உயிரிழப்பு. 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்.”

இதுபோன்ற செய்திகளை நாம் தினமும் கடந்து வந்திருப்போம். விபத்துகள் கை மீறிய நேரத்தில் தவிர்க்க முடியாதுதான். ஆனால் அதுவே அனுதினமும் நடக்கும்போது, நாம் அந்த வலிகளெல்லாம் கடந்துபோய் வெறும் செய்தியாகவே பார்க்கிறோம்.

அப்படிபட்ட ஒரு விபத்தின் கோர முகத்தினை, அந்த வலிகளுடன் மிக நெருக்கமாக காட்டும் படம்தான் “எங்கேயும் எப்போதும்....”.

கதை என்று இங்கே குறிப்பிட்டு சொல்ல முடியாது. இது ஒரு பயணம். சென்னை-திருச்சி இடையே நிகழும் பயணம். ஒரு பயணத்தை மிக நெருக்கமாகப் பார்த்த அனுபவமே கிடைக்கிறது. நெருக்கமாக என்றால் எப்படி? ஒரு பேருந்தை சுத்தம் செய்வது, சக்கரம் மாற்றுவது என தயார் செய்வதிலிருந்தே காட்டுகிறார்கள். அப்படிபட்ட பயணம், ஜெய்-அஞ்சலி, சர்வானந்த்-அனன்யா இந்த காதல் இணைகள் மூலம் சொல்லப்படுகிறது.

காதலனை தேடி வந்த அனன்யா, அவனைக் காண முடியாமல் தன் ஊரான திருச்சிக்கு ஒரு தனியார் விரைவுப் பேருந்தில் சென்னையிலிருந்து பயணமாகிறாள்.

காதலி அஞ்சலியை தன் ஊருக்கு அரசு விரைவுப் பேருந்தில் திருச்சியிலிருந்து அழைத்து செல்கிறார் ஜெய். அதே பேருந்தில் அனன்யாவை தேடி வந்த சர்வானந்தும் சென்னைக்கு கிளம்புகிறார்.

சரியா சொல்லிட்டேனா?

இதுதான் கதையான்னு கேட்டா... கண்டிப்பா இல்லை. ஒரு அறிமுகம் அவ்வளவுதான்.

இந்த படத்தின் சிறப்பே, படத்தில் வரும் ஒவ்வொரு character-ன் detailingதான். ஒரு 4 மணி நேர பயணத்தில் வரும் நிகழ்வுகளும், எதிர்பாராமல் நிகழும் கோர விபத்தும் அதன் விளைவுகளையும் மிக அருமையாக காட்சிகளாக்கியிருக்கிறார்கள்.

முதன் முதலாக மகளின் முகத்தைக் காண செல்லும் Dubai return அப்பா, விளையாட்டில் வெற்றிக் கோப்பையுடன் ஊர் திரும்பும் மகளிர் அணி, பேருந்தில் அனைவருடனும் பேசி விளையாடும் வாயாடிச் சிறுமி, மனைவியை ஊருக்கு அனுப்பும் பிரிவைத் தாங்காமல் தானும் கிளம்பும் கணவன், பக்கத்தில் அமர்ந்த இளம்பெண் மீது உடனடி ஈர்ப்பு கொள்ளும் இளைஞன், பேருந்தில் தூங்கிவிட்டு வண்டி நிற்கும்போதெல்லாம் பையைத் தூக்குபவர்... இப்படி பலவிதமான பயணிகள்... நிச்சயம் நாம் அனைவரும் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் மேற்கொண்ட பயணங்களில் ஒன்றுதான் இதுவும்.


பயணம் பற்றிய படம் என்றாலே ஏகப்பட்ட துணை நடிகர்கள் தேவைப்படும். அதுவும் விபத்து, அதன் பின்னர் மீட்பு, மருத்துவமனை என மக்கள் கூட்டம் அதிகம் தேவைப்படும் கதைக்களன். இந்த மாதிரி படத்தில் கூட்டத்தில் உள்ளவர்களின் முகபாவங்கள் ரொம்ப முக்கியம். ஆனால் பெரும்பாலான படங்களில் யாரேனும் காமெராவை பார்த்தோ அல்லது அசந்தர்ப்பமாக காட்சிக்கு ஒவ்வாமல் சிரித்து வைப்பார்கள். [உதாரணம்: ‘பெரியார்’ படத்தில் காங்கிரஸ் கட்சியை விட்டு பெரியார் வெளியேறும்போது மாநாட்டிற்கு வந்திருக்கும் தொண்டர்களுக்குள் கைகலப்பு வந்துவிடும். அந்தக் காட்சியில் சண்டை போடுபவர்கள் ‘என்ன மச்சான்? எப்படி இருக்கே?’ என்பதுபோல், தட்டிக்கொண்டும் சிரித்துக்கொண்டு இருப்பார்கள்.]

ஆனால் இந்தப் படத்தில் கூட்டத்தில் வரும் கடைசி மனிதரின் முகபாவம் வரை மிகச்சரியாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. அதுதான் படத்தின் உண்மைத்தன்மைக்கு அடித்தளம் சேர்க்கிறது. விபத்து நிகழும்போது ஓட்டுனர் முதல் கடைசி இருக்கை பயணி வரை அனைவரின் வலியை துல்லியமாக காட்டும் இடத்தில் ஒளிப்பதிவாளர் வெற்றி பெறுகிறார். தாறுமாறாக விழும் பைகளும், உடைந்து சிதறும் கண்ணாடி சில்லுகளும்... அப்பப்பா... நமக்கும் அடிபட்டது போல மனது கனத்துப்போனது. ஒளிப்பதிவாளரும், எடிட்டரும் கைகோர்த்து வேலை செய்திருக்கிறார்கள். வாழ்த்துகள்.

பொது இடங்களில் வரும் அனைத்து காட்சிகளிலும் அவ்வளவு யதார்த்தம். முக்கியமாக நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள், அவை படம்பிடிக்கப்பட்ட விதம்.... மிக அருமை.

படத்தில் வரும் ‘பளிச்’:

1. நாலு துணிக்கு 6000 ரூபாயா? இதுக்கு சாரதாஸ்-ல 300-400 ரூபாய்ல வாங்கிருக்கலாம்,

2. “சீக்கிரம் போனை எடுங்கப்பா!!” என செல்பேசியின் வரும் குழந்தையின் Ring Tone. அதற்கு ஒவ்வொரு முறையும் அந்த தந்தையின் மகிழ்ச்சி கலந்த பாசமான முகபாவம்,

3. இளம்பெண் பேனா கேட்டதும், பக்கத்திலிருப்பவர் சட்டையிலிருந்து எடுத்து தரும் இளைஞன்,

4. புதிதாக திருமணமாகி மனைவியை பிரிய முடியாமல், நகரும் பேருந்தை நிறுத்தி ஏறும் கணவன்,

 

5. காதல் என்றவுடன், உணர்வுப்பூர்வமாக சரி என்று சொல்லாமல், அறிவுப்பூர்வமாக யோசித்து முடிவு எடுக்கும் அஞ்சலி,

6. தன்னை காதலிப்பதாக இம்சை செய்பவனிடம் ‘என் ஆளைப் பாருடா!!’ என ஜெய்-யை அனுப்புவதும், அடிபட்டு வரும் ஜெய்க்கு மருந்து போடுவதும் கல... கல.... இங்கு ஒரு சண்டைக்காட்சிக்கு வாய்ப்பிருந்தும் அதைக் காட்டாமல், அடுத்தக் காட்சியில் சொல்லியிருப்பது இன்னும் கல.... கல.....

7. Under play acting கேள்விப்பட்டிருக்கோம். ஆனா ஜெய் இவ்ளோ underplay செய்வாரா? Weldone ஜெய்!! அதுவும் “மாசமா! ஆறு மாசமா!!” பாடலில் தோளைக் குலுக்கி ஆடுவது மிக அருமை.

8. சென்னைக்குப் புதிதாக வரும் அனன்யாவின் மிரட்சியான பார்வை. அந்த ‘கோவிந்தா! கோவிந்தா!!’ பாடல்... காட்சிக்கோர்வையில் பாடலுக்கு தனிச்சிறப்பு சேர்த்து, கூடவே சென்னையை சுத்திக் காட்டுகிறார்கள்.


9. வழித்துணையாக வரு சர்வானந்துடன் எச்சரிக்கையாகப் பழக ஆரம்பித்து, பின்னர் தவிப்புடன் பிரிவது வரை நன்றாக செய்துள்ளார் அனன்யா. நாடோடிகள் படத்துக்கு பின்பு இவர் தமிழிலில் நடிக்கும் படம் இதுதான். நல்லா நடிச்சா தமிழ்ல வாய்ப்பு கிடைக்காது போல!!!

10. இயக்குனர் எந்த சமரசமும் செய்துகொள்ளவில்லை என்பது பேருந்துகளை பயன்படுத்தியதிலிருந்தே தெரிகிறது. ஒரு பக்கம் அரசின் SETC, மறுபக்கம் தனியார் OMNI பேருந்து. [பொதுவாக பிரச்சினை எதுவும் வேண்டாமென்று ஏதோ ரெண்டு ரெண்டு பேருந்து எனக் காட்டியிருப்பார்கள். விபத்து என்பது துறையை சார்ந்தது அல்ல. ஓட்டுனரின் கவனக்குறைவே காரணம். இதில் அரசு என்ன? தனியார் என்ன?]

படத்தில் இன்னும் பல சிறப்பான சங்கதிகள் இருக்கு. எல்லாத்தையும் இங்கே சொல்ல முடியாதே!! திரையரங்குக்குப் போய் பாருங்க...

அப்போ! படத்துல குறைகளே இல்லையா?

ஆங்காங்கே சில குறைகள் இருக்கு. ஆனா இதுபோன்ற படத்துக்கு குறைகளை சுட்டிக்காட்டி அதன் வீச்சைக் குறைக்க விரும்பவில்லை. படம் போகிற போக்கில் அந்த குறைகள் கண்களுக்கு புலப்படாது என்பதே உண்மை.

இனி ஓட்டுனர்களுக்கு விபத்து பற்றிய விழிப்புணர்வு கொண்டுவர வேண்டுமா? பக்கம் பக்கமாக பாடம் எடுக்க வேண்டாம். இந்த படத்தை பார்க்க வைத்தாலே போதும்.

ஒரு பயணத்தின் அனைத்து கோணங்களையும் துல்லியமாக அலசி அதை ஒரு விபத்து மூலம் வலியுடன் கூறியிருக்கிறார் இயக்குனர் சரவணன்.

திரையில், இனிப்பு தடவிய மருந்தாக ஒரு நல்ல செய்தியை சொன்னதற்கு வாழ்த்துகள்.
அரங்கம் பக்கம்:  
1.பள்ளி, கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு வந்த சில அராத்துகள் காட்சிக்கு காட்சி நக்கல் பண்ணிக் கொண்டிருந்தார்கள். விபத்துக் காட்சியின்போது வாயை மூடியவர்கள், கடைசி வரை வாயை திறக்கவில்லை.
2. படம் முடிந்ததும் என்ன அவசரமோ?? அப்படி ஓடுகிறார்கள். இந்த மாதிரி படத்துக்கு நாம் கொடுக்கும் அதிகபட்ச மரியாதையே கைதட்டால்தான். அதைக்கூட ஒருவரும் செய்யவில்லை. நான் கை தட்டியதும் சில கைதட்டல் ஒலி கேட்டது. எண்ணிப் பார்த்தேன். 4 பேர் கை தட்டினார்கள். 

2 comments:

  1. நன்கு அலசி உள்ளீர்கள். பாடல்கள் பார்த்தே பார்க்க நினைத்த படம். நிச்சயம் பார்க்கணும்

    ReplyDelete
  2. // உதாரணம்: ‘பெரியார்’ படத்தில் காங்கிரஸ் கட்சியை விட்டு பெரியார் வெளியேறும்போது மாநாட்டிற்கு வந்திருக்கும் தொண்டர்களுக்குள் கைகலப்பு வந்துவிடும். அந்தக் காட்சியில் சண்டை போடுபவர்கள் ‘என்ன மச்சான்? எப்படி இருக்கே?’ என்பதுபோல், தட்டிக்கொண்டும் சிரித்துக்கொண்டு இருப்பார்கள். //

    இந்த இடத்தை ரொம்ப ரசித்தேன்... நல்லா நோட் பண்ணியிருக்கீங்க...

    ReplyDelete

நல்லவங்க...

ShareThis