February 02, 2012

விஜயகாந்த் - மாற்று அரசியலுக்கான தலைவரா?

 

 “நான் பேசுவேன்..!! நான் பேசுவேன்..!!” என்று கூறிக்கொண்டு பேசாமலே இருந்தவர் இன்று திடீரென்று பேசியதால், இப்போது நாடே அவரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறது. சரி!! ஒருத்தர் பேசுறது அவ்வளவு குத்தமா? அப்படி அதிசயமா என்ன பேசிட்டார்? யார் அவர்? தே.மு.தி.க தலைவரும் எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த் தான் இன்னைக்கு பேசிட்டார்.

ஏங்க? அவர் பேசினது என்ன உலக அதிசயமா? அவர் பேசுறதைதான் தமிழ் கூறும் நல்லுலகம் பல வருடங்களா பாத்துக்கிட்டு இருக்காங்களே!! எத்தனை படம்? அதுல எத்தனை பஞ்சாயத்து பேசி தீத்து வெச்சிருப்பாரு? எத்தனை தீவிரவாதிகளை பாகிஸ்தான்லயே போய் பேசி திருத்தியிருக்கார்? இப்படி நாட்டுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் பேசிக்கிட்டே இருந்தவர் இன்னைக்கு பேசினது மட்டும் அதிசயமா எல்லோரும் சொல்றாங்களே!! அப்படி எங்க பேசினார்? என்னதான் பேசினார்?

அவர் இன்னைக்கு சட்டமன்றத்துல பேசினாராம்...

…….

………..

அது சரி!! சட்டமன்றத்துலயே பேசிட்டாரா? அப்போ ஊரே பேசுறது சரிதான்!!!

இன்று பெரும்பான்மையான மக்களின் நிலைப்பாடு இதுவாகத்தான் இருக்கும். இரண்டு திராவிட கட்சிகளுக்கும் மாற்றி மாற்றி ஓட்டு போட்டுவிட்டு மக்கள் ஏமாந்து, விரக்தியடைந்து, மாற்றாக யாராவது வரமாட்டார்களா என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் கால் பதித்தார் விஜயகாந்த். கட்சி ஆரம்பித்த 6 மாதங்களிலேயே 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலையும் சந்தித்தது தே.மு.தி.க. அனைத்து தொகுதியிலும் தேமுதிகவினர் தோற்றாலும் விருதாச்சலம் தொகுதியில் பெரும் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் விஜயகாந்த். பெரும்பான்மை ஏதும் கிடைக்காவிட்டாலும் பொது மக்கள் எதிர்பார்த்த ஒரு மாற்று தலைவருக்கான தீர்ப்பாக அதை அனைவரும் பார்த்தனர்.


பின்னர் போகும் இடங்களிலெல்லாம் ஆளும்கட்சியின் தவறுகளை உடனுக்குடன் தட்டிக்கேட்டு மக்களிடம் இன்னும் நெருக்கமானார். அப்போது நடந்த அரசியல் விளையாட்டில் ‘குடித்துவிட்டு வருகிறார்’ என்று ஜெயலலிதா கூற, ‘பக்கத்துல இருந்து ஊத்தி கொடுத்தீங்களா?’ என்று விஜயகாந்த் பதிலுக்கு எகிற அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. அதன் பின்னர் அவர் எங்கு சென்றாலும் ஒரு எதிர்பார்ப்போடு கூடிய மக்கள், இப்போது அவரை வேறு பார்வை பார்க்கவும் தவறவில்லை. மாற்றுத் தலைவர் என்ற எதிர்பார்ப்பில் ஒரு செங்கல் நழுவிய தருணம் அது. அதன் பின்னர் விஜயகாந்தையும், குடி பழக்கத்தையும் வைத்து இணையத்தில் பலவாறாக கிண்டலடிக்கப்பட்டார். இன்றும் கூட அது தொடர்கிறது.

பொதுப் பிரச்சினைகள் பற்றி பேசி அவர் மக்களிடம் நெருக்கமானாலும், ‘குடி’ போன்ற அவர்மீதான தனிப்பட்ட தாக்குதல்கள் அவர் மீதான பிம்பத்தை குலைக்கவே செய்தன. ஒரு தலைவன் என்பவன் அறிவு, நடத்தை, நல்லொழுக்கம் போன்ற பல பண்புகளில் அனைவருக்கும் முன் மாதிரியாக இருக்க வேண்டும். மக்களும் அதைத்தான் எதிர்பார்ப்பார்கள். அவ்வாறு எதிர்பார்த்த மக்களிடம் இவரது ‘குடி’ப்பேச்சு நெருக்கத்தை குலைப்பதாகவே இருந்தது. அது ஒரு சிறு குறையாக இருந்தாலும் மக்களின் எதிர்பார்ப்பு குறைந்ததாக தெரியவில்லை.


இந்நிலையில் தான் 2011 சட்டமன்ற தேர்தல் வந்தது. இதுவரை ‘மக்களுடன்தான் கூட்டணி’ என்று முழங்கி வந்தவர், ஒரு சிறு சமரசம் செய்துகொண்டு அஇஅதிமுகவுடன் கூட்டணி வைத்தார். இதற்கு திரைமறைவில் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் அது தற்போது நமக்கு தேவையில்லை. 2011 சட்டமன்ற தேர்தலில் அஇஅதிமுக 174 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. கூட்டணிக் கட்சியான தேமுதிக 29 இடங்களில் வென்று எதிர்கட்சி என்ற நிலையை அடைந்தது. ஆளும்கட்சியாக இருந்த திமுக 23 இடங்களுடன் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

இந்த ஆட்சி மாற்றத்திற்கு பல காரணங்கள் அடுக்கப்பட்டாலும், மக்களுக்கு திமுக ஆட்சி மீதிருந்த கோபம்தான் இந்த ஆட்சி மாற்றத்திற்கான முக்கிய காரணம். ஜெயலலிதா முதலமைச்சராக பதவியில் அமர்ந்தார். மாற்றுத் தலைவராக எதிர்பார்க்கப்பட்ட விஜயகாந்த் இன்று எதிர்கட்சி தலைவர். மக்களுக்கு இந்த செய்திதான் ஒரு நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் கொடுத்தது. இரண்டு திராவிட கட்சிகளையே சட்டமன்றத்தில் பார்த்த மக்களுக்கு மூன்றாவதாக ஒரு கட்சியை பார்த்ததும் ஒருவித நம்பிக்கையில் இருந்தனர்.

திரையில் விஜயகாந்த் பேச்சு கொடுத்த பிம்பம், பிரச்சாரத்தின் பொது அவர் மக்களிடம் காட்டிய நெருக்கம், அதன் மூலம் மக்கள் கொண்ட நம்பிக்கை, என அனைத்தும் சேர்ந்து கொண்டு எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் மீது ஒரு எதிர்பார்ப்பு உருவானதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஜெயலலிதாவின் அதிரடி அரசியல் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதனால் சட்டமன்றத்தில் அவரை எதிர்த்து பேச சரியான ஆள் விஜயகாந்த் அன்றி வேறில்லை என்ற நம்பிக்கையும் ஏற்பட்டது. ஆனால் தற்போது நடக்கும் நிகழ்வுகளோ அவ்வளவு நம்பிக்கை அளிப்பதாக இல்லை.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவி கிட்டத்தட்ட முதல்வர் பதவிக்கு இணையானது. சட்டமன்றத்தில் முதல்வருக்கு அடுத்து எந்த நேரத்திலும், யார் பேசிக்கொண்டு இருந்தாலும் இடைமறித்து பேசும் அதிகாரம் கொண்டது எதிர்கட்சி தலைவர் பதவி. அப்படிபட்ட பதவியை வைத்துக்கொண்டு இவர் என்ன செய்துகொண்டிருக்கிறார்? தற்போது தவறாக செல்லும் ஆளும்கட்சியை தகுந்த கேள்விகள் கேட்டு சரியான வழியில் நடத்தியிருக்க வேண்டாமா? ஆளும்கட்சி தவறு செய்யும்போதெல்லாம் ‘இது தவறு’ என்று சுட்டிக்காட்டும் பொறுப்பு இவரன்றி வேறு யாருக்கு இருக்கிறது?

ஆனால் இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? சமச்சீர் கல்வி பிரச்சினையில் ஜெயலலிதா முரண்டு பிடித்தபோது, எந்த எதிர்ப்பும் காட்டாமல் “குதிரை கேட்டோம்! கழுதைதான் கிடைத்துள்ளது. அதனால் அதையே தற்போது பயன்படுத்துவோம்!!” என்றார். சரியான எந்தவொரு முடிவையும் முன்வைக்காமல் வழ வழவென்று இருந்தது அவரது பதில். பேருந்து கட்டணம், பால் விலை உயர்வு பற்றி கேட்டபோது “ஆளும்கட்சியைப் பற்றி ஆறு மாதம் விமர்சிக்கமாட்டேன். அப்புறம் பாக்கலாம்” என்கிறார்.

விஜயகாந்தின் இதுபோன்ற நடவடிக்கைகள் “மக்களே!! மக்களே!!” என்று அழைப்பாரே! அந்த மக்களின் உணர்வுகள் புரிந்துதான் பேசுகிறாரா என்ற சந்தேகமே வருகிறது. ஒரு வேளை தவறான முடிவு எடுத்துவிட்டோமோ என்ற சந்தேகம் மக்களுக்கு வராமல் இல்லை. பெரும்பாலான பிரச்சினைகளுக்கு இவர் வாயே திறக்காமல் மௌனம் ஒன்றே பதிலாக தந்தார். இவர் செய்ய வேண்டிய வேலைகளை தொண்டு அமைப்புகளும், உச்ச நீதிமன்றமும் செய்தன. அதிலும் ஆளும்கட்சிக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த பல கொட்டுகள் இவர் கொடுத்திருக்க வேண்டியவை. தில்லியில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு தெரிந்த தமிழ் மக்களுக்கான நீதியும், நியாயமும் நம் தமிழக அரசியல் தலைவர்களுக்கு தெரியாதிருப்பது சோகமே!!! 
இந்நிலையில் நேற்று [01-02-2011] புதன்கிழமை சட்டமன்றத்தில் நிகழ்ந்த நிகழ்வுதான் தற்போது அனைவரும் பேசும் பேச்சாக இருக்கிறது. சட்டமன்றத்தில் விஜயகாந்த் பேசினார் என்ற செய்தியறிந்த என் நண்பன் கூறியது, “அட! இவருக்கு பேசக்கூட தெரியுமா?” என்பதுதான். இதுவரை எதிர்கட்சி தலைவராக அவர் பேசாமலிருந்ததே மக்களின் இந்த ஆச்சரியத்திற்கு காரணம். சரி!! பேசினாங்க!! ஆரோக்கியமான விஷயம் பற்றி ஏதும் விவாதித்தார்களா என்றால் அதுவும் இல்லை. வெறும் நீயா? நானா? என்கிற சண்டை.

 

தேமுதிக உறுப்பினர் சந்திரகுமார் தேர்தல் நடவடிக்கை குறித்த விவாதத்தில் ஆளும்கட்சியை விமர்சித்து பேச, அதற்கு பதில் கூறிய ஜெயலலிதா “சங்கரன்கோயில் இடைத்தேர்தலில் நாங்கள் தனித்து வேட்பாளரை நிறுத்தப் போகிறோம். உங்களுக்கு திராணி இருந்தால் நீங்களும் தனித்து வேட்பாளரை நிறுத்துங்கள்” என்று சட்டமன்றத்திலேயே சவால் விடுத்தார். அதற்கு பதிலளித்த விஜயகாந்த் “இடைத்தேர்தலில் ஆளும்கட்சி வெற்றி பெறுவது இயல்பான ஒன்று” என்று கூறினார். பின்னர் வருவாய்த்துறை அமைச்சர் பேச எழுந்தபோது தேமுதிகவினர் கூச்சல் எழுப்பினர். விஜயகாந்த் அமைச்சரை நோக்கி கையை ஆட்டி பேசினார். அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்ததாகக் கூறி அவரையும் மற்ற தேமுதிக உறுப்பினர்களையும் அவையை விட்டு வெளியேற்றும்படி சபாநாயகர் உத்தரவிட்டார்.

 

இந்த நடவடிக்கைகளை காணொளியில் காணும்பொழுது ஒருவித அயர்ச்சியே தோன்றுகிறது. மாற்று அரசியலுக்கான தலைவர் என்று எதிர்பார்க்கப்பட்டவர் அவையில் இன்று நடந்துகொண்ட விதம் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. தனது கட்சி உறுப்பினர்களுக்கு ஒரு முன் மாதிரியாக இருக்க வேண்டியவர், ஏதோ சண்டைக்குப் போவது போல முன்னால் நின்றது நிச்சயம் ஏற்று கொள்ளக்கூடியது அல்ல. இன்றைய தலைமுறைக்கு ஒரு அரசியல் அடையாளமாக இருக்க வேண்டியவர் இவ்வாறு நடந்து கொண்டது ஒரு பின்னடைவே. குறைந்த காலத்திலேயே மக்கள் ஆதரவுடன் எதிர்கட்சி நிலையை எட்டியிருக்கும் தேமுதிகவின் எதிர்காலத்திற்கு இதுபோன்ற நடவடிக்கைகள் நல்லதல்ல. இனியாவது மக்கள் நலனில் அக்கறை செலுத்தி, தெளிவான சிந்தனையோடு சட்டமன்றத்தில் ஆளும்கட்சியின் நிறை, குறைகளை சுட்டிக் காட்டினால்தான் தேமுதிகவின் வளர்ச்சிக்கும் நல்லது. நாட்டிற்கும் நல்லது. இல்லையென்றால் தற்போது இருக்கும் கட்சிகளில் பத்தோடு பதினொன்றாக போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.


 விஜயகாந்த் சட்டமன்ற பேச்சு - காணொளி:
1 comment:

  1. இதுக்கு முன்பு சேலையே பிடிச்சு இழுத்து இருக்காங்க ...அதுக்கு இது எவ்வளவோ மேல்

    ReplyDelete

நல்லவங்க...

ShareThis