January 27, 2012

அந்த ஒரு நொடி

 கார்த்தி தனது வலது உள்ளங்கையையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். இரவு விளக்கின் நீல நிற வெளிச்சம் அறை முழுக்க மெலிதாகப் பரவியிருந்தது. தன் அருகில் உறங்கிக் கொண்டிருக்கும் உமாவை திரும்பிப் பார்த்தான். நெடு நேரம் அழுதபடியே இருந்தவள் அப்படியே தூங்கிவிட்டிருந்தாள். கண்ணீரின் தடம் காய்ந்து அவள் முகத்தில் மெல்லிய கோடாக இருந்தது. அவள் கன்னம் சற்றே சிவந்து, வீங்கியும் தெரிந்தது.

‘ச்சே!! என்ன மனுஷன் நான்? எப்பவும் போல விளையாட்டாக முடிச்சிருக்கலாம். இல்லாத ஒரு விஷயத்துக்கு இப்படி நடந்திருக்க வேண்டாம்.’ என்று கார்த்தி தன்னைத் தானே நொந்துக் கொண்டான். எப்போதும்போல இனிதாக தொடங்கிய பொழுது, அவர்களுக்கு அன்று இனிதாக முடியவில்லை. கவனம் தவறிய அந்த ஒரு நொடியே அவன் கண் முன் வந்தது. அன்று மாலை நடந்த சம்பவம் அவன் மனதில் திரும்ப திரும்ப அவன் நினைவில் வந்து நிம்மதி இல்லாமல் செய்தது.

அன்று மாலை அலுவலகத்தில் இருந்து திரும்பியவன், உமாவை அழைத்தபடியே வீட்டுக்குள் நுழைந்தான். பதிலுக்கு எந்த குரலும் வராமல் போகவே இன்னும் சத்தமாக அழைத்தான். அப்போதும் பதிலில்லை. மூன்றாவது தடவையாக அழைக்க எத்தனித்தபோது அவள் உள்ளறையில் இருந்து மெல்ல புன்னகைத்தவாறே வெளியே வந்தாள். எப்போதும் அவனை மயக்கும் அந்த சிரிப்பு, இன்று எரிச்சல் மூட்டியது போல. சற்று தடித்த வார்த்தைகளால் திட்டிவிட்டான். பதிலுக்கு அவளும் பேச, இவனும் கோபமாக திட்ட காரணம் ஏதுமில்லாமலேயே அவர்களுக்குள் சண்டை நடந்தது. அவள் வார்த்தைக்கு பதில் வார்த்தை பேச முடியாத ஒரு கணத்தில் அவளை ஓங்கி அறைந்துவிட்டான்.

அந்த ஒரு நொடியில் உமா சகலமும் நொறுங்கி விட்டாள். இதுவரை எத்தனையோ தடவை சண்டை வந்திருக்கிறது. அவை எல்லாம் செல்ல சண்டைகள். அவைகளின் ஆயுள் அதிகபட்சம் ஓரிரு மணிகளே. திருமணம் ஆன இந்த ஒன்றரை வருடங்களில் கார்த்தி அவளை அடித்தது இதுதான் முதல் தடவை. அவள் சற்றும் இதை எதிர்பார்க்கவில்லை. கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுதவாறே உள்ளே சென்றுவிட்டாள். கார்த்தியும் பேசாமல் தொலைக்காட்சியை பார்க்க ஆரம்பித்தான். மனதிற்குள் அந்த ஆவேசம் இன்னும் இருந்தது. சிறிது நேரம் உள்ளறையில் அழுதபடி இருந்த உமா பின்னர் எழுந்து சமையலறை சென்றாள்.

வீட்டில் ஒரு விதமான அமைதி நிலவியது. தொலைக்காட்சி சத்தமும், சமையல் செய்யும் சத்தமும் மட்டுமே கேட்டது. அவ்வப்போது வெளியே வந்தவள் கார்த்தி பக்கம் கூட திரும்பவில்லை. கார்த்தி அவளை பார்த்தபடியே அமர்ந்திருந்தான். சிறிது நேரம் கழித்து வெளியே வந்த உமாவை அழைத்தான். ஏதும் கேட்காதது போல அவள் உள்ளே செல்ல, இவனுக்கு மீண்டும் கோபம் வந்து எதுவும் பேசாமல் அமைதியாகிவிட்டான். சமையல் முடிந்த பின்னர் உமா அனைத்தையும் எடுத்து டைனிங் டேபிளில் வைத்துவிட்டு, ஏதும் சொல்லாமல் உள்ளே சென்று படுத்துக்கொண்டாள். கார்த்தியும் அவளை சாப்பிட பல முறை அழைத்து பார்த்தான். அவளிடம் எந்த பதிலும் இல்லாததால் தானும் சாப்பிடாமலே சென்று படுத்துக் கொண்டான்.

நடந்த சம்பவத்தை நினைத்து பார்த்தவன், உமாவை பார்த்தான். அவள் இன்னும் உறக்கத்தில் இருந்தாள். கண்டிப்பாக இது அவளுக்கு நிம்மதியான உறக்கமாக இருக்காது என எண்ணினான். அருகே சென்று அவள் கன்னத்தை மெல்ல தடவிக் கொடுத்தான். திடீரென்று ஏற்பட்ட தொடுகையால் உமா உறக்கம் கலைந்து எழுந்தாள். மணி ஒன்றை தாண்டியிருந்தது. கார்த்தியின் முகத்தை குழப்பத்துடன் பார்த்தாள். அவன் கண்கள் கலங்கியிருந்ததை பார்த்தவுடன் கொஞ்சம் பதற்றம் அடைந்தாள். ஆனால் மாலை நடந்த சம்பவம் மனதில் தோன்றி அவளை எதுவும் பேசவிடாமல் தடுத்தது.

கார்த்தி மெல்ல அவள் கையை எடுத்து தனது கைகளுக்குள் வைத்துக் கொண்டான். அவளிடம் எந்த எதிர்ப்பும் இல்லை. உடலில் ஒரு மெல்லிய நடுக்கம் மட்டும் இருப்பதை உணர்ந்தான். அவள் கைகளை மெல்ல அழுத்தியவாறு பேச்சை ஆரம்பித்தான்.

“என்னம்மா? இன்னும் என் மேல கோவமா?” என்றான்.

உமா பதிலேதும் சொல்லாமல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

அவள் கைகளை மெல்ல அழுத்தியவாறு மேற்கொண்டு பேசத் தொடங்கினான்.

“எனக்கு தெரியும். உனக்கு அவ்வளவு சீக்கிரம் கோவம் தீராதுன்னு. ஆனா இன்னைக்கு காரணமே இல்லாம நாம அப்படி சண்டை போட்டிருக்கக் கூடாது. இந்த ஒன்றரை வருஷத்துல பக்கத்துல இருந்தும் என்கிட்ட நீ இவ்வளவு நேரம் பேசாம இருக்கிறது இதுதான் முதல் தடவை. ரொம்ப கஷ்டமா இருக்கும்மா!!”

உமா இப்போது கார்த்தியின் முகத்தை சில நொடிகள் பார்த்த பின்னர் தலையை தாழ்த்தி கொண்டாள்.

“நான் உன்னை அடிச்ச அந்த நொடியில் உன் முகத்தை நினைச்சுப் பார்த்தா என் மேல எனக்கே கோவம் கோவமா வருது. நம்ம குடும்பம், வேண்டியவங்க எல்லோரையும் விட்டுட்டு இங்க வந்து தனியா இருக்கோம். நாம எவ்வளவு நேரம் வேணும்னாலும் பேசிக்கிட்டே இருக்கலாம். ஆனால் பேசாம இருக்குற இந்த கொஞ்ச நேரம் எனக்கு ஏதோ போல இருக்கு. நான் உன்னை நல்லா பாத்துப்பேன்னு நீ என்னை எவ்வளவு நம்பியிருப்பே? அத்தனையையும் இன்னைக்கு நான் உடைச்சிட்டேன்ல?”

இதை சொல்லும்போதே கார்த்தியின் குரல் கம்மியது. பேசப் பேச அவன் உமாவின் கையை இன்னும் அழுந்த பிடித்துக் கொண்டான். கண்களில் மெல்ல கண்ணீர் துளிர்த்தது.

உமா அவன் கண்களில் வழிய இருந்த கண்ணீரை துடைத்து விட்டாள்.

கார்த்தி அவள் முகத்தை பார்த்து, “என்னை மன்னிச்சிடும்மா!!” என்றான்.

அந்த ஒரு நொடியில் இழந்த நம்பிக்கையை மீண்டும் பெற்றவளாய் அவனிடம் மெல்லிய புன்னகையுடன் கேட்டாள்.

“சாப்பிடலாமா?”


No comments:

Post a Comment

நல்லவங்க...

ShareThis