January 22, 2012

தெர்மக்கோல் தேவதைகள் – சங்கர் நாராயண்


எஸ்.வி.சேகர் நாடகங்களை நகைச்சுவை தோரணம் என்று கூறுவார்கள். அவர் நாடகத்தில் வரும் துணுக்குகளை தனியாக கேட்டாலும் சிரிக்க முடியும். கதையோடும் பொருந்திப் போகும். சங்கர் நாராயணின் தெர்மக்கோல் தேவதைகளும் அப்படித்தான். சிறுகதைத் தோரணம். மொத்தம் 18 சிறுகதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். இவற்றில் சில கதைகள் இவர் தனது வலைப்பூவில் எழுதியவை. ஆனாலும் புத்தகமாக படிக்கும்போது ஏற்படும் அனுபவம் அலாதியானதுதான். இன்றைய மக்களின் சமகால வார்த்தையாடல்கள் கதைகளில் வருவது படிப்பவர் மனதுக்கு நெருக்கமாக உணர்வார் என்றே நம்புகிறேன். நான் உணர்ந்தேன்.

சிறுகதைகளின் தொகுப்பு என்பதால் ஒவ்வொரு கதையைப் பற்றியும் தனித்தனியாக எழுதலாம் என்றால், சுரேகா அவர்கள் ஏற்கனவே அந்த முறையில் எழுதிவிட்டார். இப்போ நாமும் அப்படி எழுதினால், மற்றவர் பதிவுகளை வெட்டி, ஒட்டி பிழைப்பு ஓட்டும் அந்த குழுவினருடன் நம்மையும் சேர்த்துவிடுவார்களோ என்ற ஐயம் எழுந்தது. ஆனால் ஒவ்வொரு கதையைப் பற்றியும் தனியே எழுதத் தோன்றுவதால் நான் அவன் இல்லீங்கோ!!

1. ஜன்னல் – ஆரம்பமே அதிரடியான கதை. அடுக்குமாடி குடியிருப்புகளில் நிகழும் சம்பவம். இப்படியும் நடக்குமா என்ற கேள்வியை எழுப்பும் கதை. சற்றும் எதிர்பாராத முடிவு.

2. பொறுப்பு – கடைகளில் வேலை செய்யும் சிறுவர்களின் வாழ்வு நிலையை இவ்வளவு எளிதாகவும், ஆழமாகவும் பதிவு செய்திருப்பது ஆச்சரியம். அதுவும் அந்த சிறுவன் பதறும்போது நமக்கும் அந்த பதற்றம் தொற்றிக்கொள்வதே கதையின் வெற்றி.

3. கப்பல் ராக்கையா – படித்தவுடன் மனதோடு நெருக்கமாகிவிட்ட கதை. வித்தியாசமான பெயர்களைக் கண்டால் அதன் வரலாறை ஆராயும் எனது மன நிலையோடு பொருந்திப் போகிற கதை. நீண்ட ஆராய்ச்சியில் பெரும் வரலாறு மட்டுமே எப்போதும் இருக்காது என்பதை உணர்த்தும் இடம் அருமை.

4. சுந்தர் கடை – “நீ நல்லா வருவே!!” என்று ஒருத்தரை வாழ்த்திவிட்டு, சில வருடங்கள் கழித்து அவர் அதே நிலையில் இருப்பதை கண்டால் எப்படி இருக்கும்? ஒரு மெல்லிய வலி மனதில் உண்டாவதை தடுக்க முடியவில்லை. சுந்தர் நன்றாக வர வேண்டும்.

5. ரோடு ரேஸ், நேற்றுவரை, மகாநதி – வார இதழ்களில் வரும் ஒரு பக்க கதைகள் படித்தது போல இருந்தது. நேற்றுவரை மட்டுமே கடைசி வரியில் வேப்பிலை அடித்தது.

6. காளிதாஸ் – இசையில் நல்ல திறமை இருந்தும் நிலையான இடத்தை பிடிக்க முடியாத ஒரு கலைஞனின் வலியை சொல்லும் கதை. முடிவில் வலி அதிகம்.

7. மீனாட்சி சாமான் நிக்காலோ – பள்ளி பருவத்தில் நிகழும் ஒரு சிறு சம்பவம்தான் கதை. ஆனால் கதைக்கும், தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்றுதான் தெரியவில்லை.

8. கருணை – ‘திருப்பி அடித்தால்தான் இந்த உலகில் வாழ முடியும்’ என்று போராளியில் ஒரு வசனம் வரும். அதுபோல இன்றைய நிலையில் உரக்க பேசினால்தான் நமது நேர்மை வெளிப்படும். இல்லையென்றால் ‘பிழைப்பது’ கஷ்டம் என்று சொல்லும் கதை.

9. வன்மம் – இன்றைய கார்பரேட் உலகில் எல்லோருடைய மனநிலையிலும் ஏதோவொரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. அந்த மன மாற்றத்தின் ஒரு துளியை படம் பிடிப்பதாகவே இருக்கிறது.

10. ஆதிமூலகிருஷ்ணனின் செய்வினை & சேச்சு பாட்டி – காலம் காலமாக நம் மனதில் ஆழமாக வேரூன்றியுள்ள நம்பிக்கைகளின் இருவேறு நிலைகள். முன்னது மூடநம்பிக்கைகளில் ஊறியிருக்கும் மக்களை ஏமாற்றும் கதை என்றாள், பின்னது வாழ்வின் கடைசி நிமிடங்களில் இருக்கும் ஒரு பாட்டியின் உறுதியான நம்பிக்கை.

11. பிரியாணி – பலவிதமான உணர்வுகளை உண்டு பண்ணிய கதை. மனித உணர்வுகளைப் பற்றி நம்முள் பல்வேறு சிந்தனைகளை கிளறிவிடும் தன்மையுடன் விளங்குகிறது இந்த கதை.

12. ஜெயா, ராஜலட்சுமி, ராஜீ, பிரியா (எ) பிரியதர்ஷிணி – கதையின் அசல் தேவதைகள். வெள்ளை உடையில் வந்து ஆசீர்வதிப்பவர்கள்தான் தேவதைகள் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் முடிவை மாற்றிக் கொள்ளுங்கள். பலவித குண நலன்களுடன் நம் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தும் அனைவரும் தேவதைகள்தான். அப்படி வெவ்வேறு குணங்களைக் கொண்ட நான்குப் பெண்களின் கதைகள் இவை. இவர்களில் என்னை மிகவும் கவர்ந்தவள் ராஜலட்சுமி. அவ்வளவு நம்பிக்கையான பெண், இறுதியில் எடுத்த முடிவு, நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.

மிக எளிமையாக, தெளிவான நடையில் எந்தவித வார்த்தை விளையாடல்கள் இல்லாமல் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருப்பதில் தெர்மக்கோல் தேவதைகள் நம் நெருக்கமான தோழியாகிறாள்.

3 comments:

  1. நூலை படிக்கத் தூண்டும் அருமையான சுருக்கமான
    அழகான விமர்சனம்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete

நல்லவங்க...

ShareThis