January 08, 2012

அழிக்கப் பிறந்தவன் - யுவகிருஷ்ணா


 முன்குறிப்பு: எல்லோருக்குமே ஏதோ ஒரு விஷயத்தில் ‘முதல்’ என்ற இடத்திற்கு ஒரு ஆர்வம் இருக்கும். நானும் 2012 புதிய வருடத்தில் முதல் பதிவு என்ன பதிவு எழுதலாம், எதை பற்றி எழுதலாம் என்று விடை அறியும் ஆவலில் இருந்தேன். ஏனென்றால் பதிவுக்காக எழுதி வைத்த குறிப்புகள் கைவசம் நிறைய உள்ளன. அதில் எதை முதலில் எழுதுவது என்று எனக்குள்ளேயே ஒரு ஆர்வம் கிளம்பியது. ஆனாலும் அனைத்தையும் ஒதுக்கி விட்டு “என்னைப் பற்றி எழுது” என்று என் முன்னால் வந்து சண்டித்தனம் செய்தான் ‘அழிக்கப் பிறந்தவன்’.

சரி..!!! ஏன் இவனைப் பற்றி முதலில் எழுத வேண்டும்? அவன் என்ன, அவ்ளோ பெரிய ‘அப்பாடக்கரா’? (அப்பாடா!! நமக்கும் சென்னை பாஷை வந்துடிச்சி!!)

அப்பாடக்கரா இருந்தா எழுத கொஞ்சம் யோசிக்கணும். இவன் நம்ம தோஸ்து மாதிரி. அதனாலதான் படிச்சு முடிச்ச உடனே மறு சிந்தனை இல்லாமல் எழுத ஆரம்பிச்சிட்டேன்.

ஆமாங்க!! இன்னைக்கு மதியம் சென்னை புத்தக கண்காட்சிக்கு போயிருந்தேன். சென்ற வருடங்கள் போலல்லாமல் இந்த வருடம் வாங்க வேண்டிய புத்தகங்கள் பட்டியல் தயாராக எடுத்து சென்றதால் எந்த குழப்பமும் இல்லாமல் புத்தகங்களை வாங்கிக்கொண்டு கிளம்பினேன். பேருந்தில் அமர்ந்தவுடன் நான் படிக்க ஆரம்பித்த புத்தகம் ‘அழிக்க பிறந்தவன்’. முதல் பதிப்பான இந்த புத்தகத்திற்கு இவ்வளவு ஆர்வம் ஏற்பட காரணம் இணையம், வலைப்பூ, முகநூல் மூலமாக யுவகிருஷ்ணா, கேபிள் சங்கர், சுரேகா சுந்தர் ஏற்படுத்திய எதிர்பார்ப்பு. பேருந்தில் ஏறியவுடன் படிக்க துவங்கியவன், நான் இறங்குமிடம் வரும்போது கிட்டத்தட்ட முடிக்கும் தருவாயில் இருந்தேன். வீட்டுக்கு வந்து மிச்ச அத்தியாயங்கள் படித்து முடித்தவுடன்தான் ஒருவாறு சம நிலைக்கு வந்தேன்.

சரிங்க..! இவ்ளோ சொல்ற அளவுக்கு அந்த புத்தகத்துல அப்படி என்ன இருக்கு?

நாம தினமும் சர்வ சாதாரணமா கடந்து போகிற இடத்தின் கருப்பு உலகத்தை, இல்ல க்ரே உலகத்தை(ஆசிரியர் அப்படிதான் சொல்கிறார்) நமக்கு காட்டுகிறார். அச்சு அசல் அப்படியேவான்னு தெரியாது. ஆனால் அவர் கதையை எடுத்து சென்றுள்ள விதம், நிழல் உலகம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நம்மை நம்ப வைக்கிறது. நம்பிட்டேன்.

அடுத்து, இப்போதைய எதிர்பார்ப்பான ‘நண்பன்’ திரைப்படம், இயக்குனர் சங்கர், விஜய், அரசியல் என்று நடப்பு விஷயங்களை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட விதம். ஆரம்பத்தில் படிக்கும் ஆர்வத்தை உண்டு பண்ணினாலும், படித்து முடித்தவுடன் இவை தேவையா என்ற கேள்வியும் தோன்றுகிறது. நேரிடையாக இரண்டாம் அத்தியாத்திலிருந்து கதையை தொடங்கியிருந்தாலும் எந்த பாதிப்பும் இல்லை.

புத்தகத்தை படிக்கும்போது என்னை மிகவும் ஈர்த்த விஷயம், பர்மா பஜாரைப் பற்றியும், அங்கு நிகழும் வியாபாரத்தைப் பற்றியும் விரவிக் கிடக்கும் தகவல்கள். க்ரே மார்க்கெட்டின் டான் ‘வாப்பா’, மீன் பிடித்தல், மருந்து வியாபாரம், போலீஸ் விசாரணை என்று சென்னையின் மறுபக்கத்தை நுணுக்கமாக விவரித்த விதம் மிக அருமை. ஊர்பக்கம் இருந்து முதன் முதலாக சென்னை வந்த பொழுது கிட்டத்தட்ட 3 மாதங்கள் சென்னையை புரிந்து கொள்ள முடியாமல் திரு திருவென இருந்தவன் நான். பின்னர் ஒருவாறு பழகிக் கொண்டேன். ஆனால் இந்த புத்தகத்தை படித்த பிறகு, சென்னையின் இன்னொரு பக்கத்தை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததாகவே நினைக்கிறேன்.

இந்த புத்தகம் ஆசிரியருக்கு முதல் நாவலாம். இதையும் நம்பியாச்சு. நிருபர், வலைப் பதிவர், எழுத்தாளர் என்ற இவரின் பல நிலைகள் இந்த புத்தகத்துக்கு நல்ல ஊட்டம் கொடுத்திருக்கு. வாழ்த்துகள் யுவகிருஷ்ணா.

என்னதான் விறுவிறுப்பாக இருந்தாலும், கதையின் ஓட்டத்தில் சில குறுக்கீடுகள் இல்லாமல் இல்லை. ‘ஆள், அம்பு, படை, பணம்’ என்ற சொற்பதம் திரும்பத் திரும்ப வருவது கொஞ்சம் சலிப்பைத் தருகிறது. , அப்புறம் மாரி கதாபாத்திரம் வாசகர்கள், அத்தியாயம் என்று திடீரென கூறுவது ஏதோ மாத நாவல் படிப்பது போல உள்ளது. இதை தவிர்த்திருக்கலாமே..!!

மொத்தத்தில் ஒரு நல்ல த்ரில்லர் படத்திற்கான அனைத்து அம்சங்களும் இந்தக் கதையில் இருக்கிறது. அந்த வகையில் ‘கில்லி’ போல ஒரு படம் பார்த்த திருப்தி தருகிறான் ‘அழிக்கப் பிறந்தவன்’.1 comment:

  1. நானும் படிக்கணும், புத்தக கண்காட்சி எங்க நடக்குதுண்ணு சொல்ல முடியுமா?

    ReplyDelete

நல்லவங்க...

ShareThis