December 30, 2011

புத்தாண்டு சபதம் எடுத்தாச்சா?என்ன நண்பர்களே!! இந்த வருடத்தின் கடைசி நாட்களில் இருக்கிறோம். காலம் உருண்டோடும்னு சொல்றதெல்லாம் சரிதான். அதுக்காக இவ்ளோ வேகமாவா? இப்போதான் 2011 புதுவருடம் பார்த்தது போல் இருந்தது. ஆனா அதுக்குள்ள பொங்கல், குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம், தீபாவளி, ரம்ஜான், கிருஸ்துமஸ் என எல்லாம் தாண்டி, இதோ அடுத்த புத்தாண்டும் வந்தாச்சு. புத்தாண்டு இதுவரையிலும் வந்தது. இப்பவும் வரப்போகுது. இனியும் வரும். காலம் கடந்துக்கிட்டுதான் இருக்கு. ஆனால் நம்மக்கிட்ட ஏதாவது மாற்றம் வந்து இருக்கா? பெரும்பாலும் இல்லைன்னுதான் தோணுது. ஆனாலும் சிலபேர் கண்டிப்பா ஏதாவது செய்யணும்னு சொல்லி புத்தாண்டு சபதம் எல்லாம் எடுப்பாங்க. ஆனா அந்த சபதத்துக்கு ஆயுள் சில நாட்கள்தான். மீண்டும், எதை மாத்தணும்னு சபதம் எடுத்தாங்களோ அதை விட முடியாமல், அவர்களையே சமாதானம் செய்துகொண்டு அதை தொடர்வார்கள். அதுக்கு பெரிதாக எல்லாம் காரணம் ஒன்றும் கிடையாது. நிலையற்ற மன நிலைதான் காரணம்.

“சரி!! இவ்ளோ சொல்றியே! நீ ஏதாவது சபதம் எடுத்திருக்கியா? அதை எந்த அளவு காப்பாத்தியிருக்க?” அப்படீன்னு நீங்க கேக்கலாம்.

“இப்போ சொல்றேங்க! நான் புத்தாண்டும் கொண்டாடுவதில்லை. அந்த நாளில் எந்த சபதமும் எடுப்பதில்லை. என்னை பொறுத்தவரை அன்றும் மற்றுமொரு நாளே!!”. எனக்குள் ஏதேனும் மாற்றம் தேவைப்பட்டால் அதை நானே கடுமையாக கடைபிடித்து மாற்றிக்கொள்வேனே தவிர அதற்கு தனியாக நாள் எல்லாம் ஒதுக்கி தொடங்கமாட்டேன்.

“அப்போ எங்களுக்கு சொல்ல உனக்கு என்ன அருகதை இருக்கு?”

“அருகதை இருக்கா இல்லையான்னு எல்லாம் எனக்கு தெரியாது. ஆனா எனக்கு வேண்டிய நண்பர்கள் இந்த உலகம் முழுக்க இருக்காங்க. சில பேர் தங்கள் பழக்கத்தை மாத்திக்கணும்னு நினைச்சு மாத்திக்க முடியாம தவிச்சதை நான் பாத்திருக்கேன். அவங்களுக்காகத்தான் இதை எழுதறேன்.”

“நான் சொல்றது சரின்னு பட்டதுன்னா மேல படிங்க. இல்லைன்னா இப்படியே விலகிடுங்க. சரியா?”

இதுவரைக்கும் உங்கள்ள பல பேர் இந்த சபதங்களை எடுத்திருப்பீங்க...

1. இந்த வருஷத்தோட சிகரெட் பிடிக்கிறதை விட்டுடனும்... 
விட்டீங்களா? நூத்துல 99 பேர் இன்னமும் விட முடியாம கஷ்டப்பட்டுக்கிட்டுதான் இருக்காங்க. காரணம், tension-ஐ குறைக்க, நண்பர்களோட ஜாலியா அப்படின்னு பல காரணங்களால மனம் அதுக்கு பழகிப் போச்சு. சரியா சொல்லனும்னா மனம் அந்த பழக்கத்துக்கு அடிமை ஆகிடுச்சி. அதான் தொடர்ந்து சில நாட்கள் சிகரெட் பிடிக்கலைன்னா மனம் அதை தானா தேட ஆரம்பிச்சிடுது.

ஒரு கணக்கு போட்டு பாக்கலாமா?

1 சிகரெட் விலை 5 ரூபாய்.

ஒரு நாளைக்கு சராசரியாக 5 சிகரெட். அப்போ நாள் ஒன்றுக்கு 5 X 5 = 25 ரூபாய்.

ஒரு மாதத்திற்கு 25 X 30 = 750 ரூபாய்.

ஒரு வருடத்திற்கு 750 X 12 = 9000 ரூபாய்.

இது சராசரி கணக்குதான். ஆனா கணக்கே இல்லாம ஊதி தள்ளுறவங்களும் இருக்காங்க. அவங்க கணக்கு இன்னும் எகிறிடும். சிகரெட் பிடிக்கிறவங்களுக்கு மட்டும் இது பாதிப்பில்லை. அவர்கள் வெளியிடுகிற புகையை சுவாசிக்கிறாங்களே அவங்களுக்குதான் அதிக பாதிப்பு. [“ஏண்டா அப்போ பக்கத்துல நிக்குற? தள்ளி நிக்க வேண்டியதுதானே!!” அப்படின்னு சொல்றவங்களுக்கு நான் சொல்ல ஏதுமில்லை.]

ஒரு வருசத்துக்கு இவ்ளோ பணம் கரியாக்குறதுக்கு பதிலா, அந்த பணத்தை ‘நல்ல வழியில் செலவு செய்வேன்’ என்று சபதம் எடுத்துக் கொள்ளலாமே!!

2. தண்ணி அடிக்கிறதை இந்த வருஷத்தோட நிறுத்திக்கணும்... 
மேலே சிகரெட்டுக்கு சொன்ன காரணங்கள் இதுக்கும் சேரும். அதுவும் நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் பேசுகிறார்களோ இல்லையோ!! கண்டிப்பாக ‘சரக்கு கச்சேரி’யை அரங்கேற்றம் செய்கிறார்கள். இதுக்கும் ஒரு கணக்கு போட்டு பாக்கலாமா?

வாரத்துக்கு ஒரு கட்டிங் = 25 ரூபாய்,

மாதத்துக்கு ஒரு முறை நண்பர்களுடன் சரக்கு கச்சேரி = 1000 ரூபாய்

அப்போ, மாதம் ஒன்றுக்கு (25x4)+1000 = 1100 ரூபாய்.

ஒரு வருடத்திற்கு, 1100x12 = 13,200 ரூபாய்.

இவ்வளவு பணத்தையும் செலவு பண்ணிட்டு அதை ‘ஜாலியான கொண்டாட்டம்’ என அர்த்தப்படுத்திக்கொள்வது நிச்சயம் நல்ல வாழ்க்கைக்கான அடையாளம் அல்ல.

உங்கள் வீட்டின் பொருளாதாரத்தை நிர்வகிப்பவரிடம் கேட்டுப் பாருங்கள். இந்த பணத்தின் அருமை அப்போது உங்களுக்கு புரியும்.

இதுவரை காரணம் ஏதும் தெரியாமல் இருப்பீர்களானால், இனிமேல் குடிப்பழக்கத்தை விட சபதம் எடுப்பீர்களா?

3. இதை உபரி சபதமாகக் கூட எடுத்துக்கொள்ளலாம். அதாவது நண்பன் திருமணத்தின்போது குடிக்காமல் இருப்பது.

இது எந்த வகையில் மகிழ்ச்சியை கொடுக்கிறது என்று தெரியவில்லை. இன்றைய பணிச் சூழலில் நண்பர்கள் அனைவரும் திசைக்கு ஒருவராக சிதறி உள்ளார்கள். அனைவரும் சந்தித்துக் கொள்வது இது போன்ற நண்பர்களின் திருமண விழாவில்தான். அப்போது பேசி மகிழ ஆயிரம் விஷயம் இருக்க, அதை விட்டுவிட்டு ராத்திரி முழுக்க நன்றாக குடித்துவிட்டு, மறுநாள் காலை எழுந்திருக்க முடியாமல் திருமணமே முடிந்த பிறகு மண்டபத்திற்கு போனால் நன்றாகவா இருக்கும். [ஒரு சிலர் திருமணத்தையே பார்க்காமல் ஊருக்கு கிளம்புபவர்களும் இருக்கிறார்கள்] நண்பனின் வாழ்வில் ஒரே ஒரு முறை வரும் அழகான நிகழ்வை நாம் மேலும் மகிழ்வானதாக செய்ய வேண்டாமா? ஒரு நல்ல நண்பனின் அடையாளம் அதுவாகத்தானே இருக்க முடியும்?

யோசிங்க மக்கா..!! யோசிங்க!!!

4. எரிபொருள் சிக்கனம்

அடுத்த தெருவில் இருக்கும் கடைக்கு போவதற்குக்கூட வண்டியை எடுக்காமல், நடக்கலாமே!!

5. போக்குவரத்து விதிகள்

எல்லோருக்குமே போக வேண்டிய இடத்திற்கு சீக்கிரம் போய் சேர வேண்டும் என்ற அவசரம் இருக்கும். அதனால் கிடைத்த சந்தில் எல்லாம் வண்டியை ஓட்டாமல் சரியாக திட்டமிட்டு யாருக்கும் தொல்லை தராமல் பயணத்தை மேற்கொள்ளலாமே!!

6. உருப்படியாக சில புத்தகங்கள் படிக்கலாம்

 
 உண்மையில் புத்தகங்கள் தவிர சிறந்த நண்பன் வேறெதுவுமில்லை. “Reading Books” என்று வெறும் Hobbies-இல் சேர்க்காமல் அதை ஒரு பழக்கமாக ஏற்படுத்திக் கொள்ளலாமே!! ஒன்று மட்டும் நிச்சயம். ஒரே ஒரு புத்தகம். உங்களுக்கு பிடித்தமானதாக தேர்ந்தெடுத்து முழு மனதோடு படித்து முடியுங்கள். அப்புறம் பாருங்கள். நீங்களே தேடித்தேடி படிக்க ஆரம்பிப்பீர்கள்.

என்னங்க பொறுமையா படிச்சிட்டீங்களா? முதல் ரெண்டு விஷயங்களுமே அடிமடியிலே கை வெச்ச மாதிரி பகீர்னு இருக்கா? அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. நான் மேலே சொன்ன விஷயங்களை ஆக்கப்பூர்வமா யோசிச்சு நடைமுறைக்கு கொண்டு வாங்க. இது மட்டுமே சபதங்கள் என்று கிடையாது. உங்களிடம் உங்களுக்கே பிடிக்காத விஷயங்களை வீட்டுடணும்னு திடமான மனதோடு செயல்படுங்கள். அதோட உண்மையான பலன் வருடத்தின் கடைசியில் நிச்சயம் தெரியும்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். 

No comments:

Post a Comment

நல்லவங்க...

ShareThis