December 26, 2011

முல்லை பெரியாறு உரிமை காக்கும் போராட்டம் - சென்னை மெரினா


நேற்று மாலை (25-12-2011) சென்னை மெரினா கடற்கரை, கண்ணகி சிலையருகே ‘முல்லை பெரியாறு  உரிமை காக்கும் போராட்டம்’  நடைபெற்றது. மே 17 இயக்கத்தினர் இந்த போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். மாலை 3 மணியளவில் தொடங்கிய கூட்டம் இரவு 9 மணியளவில் நிறைவடைந்தது. திரு.வைகோ, இயக்குனர்கள் பாரதிராஜா, சேரன், தங்கர்பச்சான், விக்ரமன், கௌதமன், பாடலாசிரியர்கள் அறிவுமதி, தாமரை, சினேகன், ஓவியர் வீர சந்தானம் மற்றும் பலர் பங்கேற்க பொதுமக்கள் பேராதரவுடன் போராட்டம் நடந்து முடிந்தது.

அங்கு நடந்த 6 மணி நேர நிகழ்வின் தொகுப்பு இங்கே உங்களுக்காக. முடிந்தவரை தகவல்களை தொகுத்துள்ளேன்.

1. மாலை 3 மணியளவில் கண்ணகி சிலையின் பின்புறம் மக்கள் கூட ஆரம்பித்தார்கள்,

2. அதே இடத்தில் பிரபாகரன் உரைகள், படங்கள், வைகோ உரைகள், சீமான் உரைகள் (குறுந்தகடுகள்) என கடை விரிக்கப்பட்டது. அதில் அதிகமாக பிரபாகரன் அவர்களின் படங்களே விற்பனை ஆனது,

3. மக்கள் கூட்டம் சேர்ந்த சிறிது நேரத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா, விக்ரமன், சேரன், தங்கர்பச்சான் அனைவரும் வந்து சேர்ந்தனர்.

4. அதுவரை மணல் பகுதியில் பதாகைகளுடன் அமைதியாக அமர்ந்திருந்த மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது,

5. ஊடக நண்பர்களுக்காக சிறிது நேரம் பொறுமை காத்த இயக்குனர்கள் பின்பு மக்கள் கூடியிருந்த இடத்திற்கு வந்து அவர்களுடன் இணைந்து முன்வரிசையில் அமர்ந்துகொண்டனர்,

6. இயக்குனர் கௌதமன் ‘மே 17 இயக்கத்தினருடன்’ இணைந்து கூட்டத்தை ஒழுங்குபடுத்தி வழி நடத்தினார்,

7. ஈரோட்டை சேர்ந்த கலைக்குழுவினரின் சார்பில் உணர்ச்சிமிக்க பாடல்கள் பாடப்பட்டது. அதுவும் நமது கிராமிய மெட்டில் அமைந்த பாடலுக்கு மக்கள் மத்தியில் ஏக வரவேற்பு. ‘எழுக எழுக தமிழகம்’ பாடலுக்கு மக்களும் உணர்ச்சிப் பெருக்குடன் உடன் பாடினார்கள்,

8. கலைநிகழ்ச்சியின் இடையே வைகோ அவர்களும், தாமரையும் வந்து இணைந்து கொண்டார்கள்,

 

9. பாடல்களில் இடம்பெற்ற அரசியல் சாடல்களுக்கு பலத்த கைத்தாட்டல் எழுந்தது,

10. மக்கள் ஏந்தியிருந்த பதாகைகளில் “முல்லை பெரியாறு நம் உரிமை”, “இடுக்கி நமது நிலம்”, “இந்திய அரசே!! கேரள அரசே!! நீங்கள் உடைக்க முற்படுவது அணையை மட்டுமல்ல! ஒருமைப்பாட்டையும்தான்!!”, போன்ற பல வாசகங்கள் இடம் பெற்றிருந்தன,

 

11. கலை நிகழ்ச்சி முடிந்தவுடன் கண்ணகி சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை பேரணி செல்ல அனைவரையும் இயக்கத்தினர் ஒழுங்குபடுத்தினர்,

12. பேரணி மெரினா கடற்கரையின் உள்வழி சாலையில் செல்ல ஏற்பாடாகியிருந்தது,

13. பேரணியை ஒழுங்குபடுத்தும் வேளையில் தப்பாட்ட கலைஞர்கள் தப்பை அடித்தபடி நடனம் ஆடினார்கள் [தப்பாட்டத்தை நிகழ்ச்சியில் சேர்த்தவர்களை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். அதுவரை வெறும் கோஷம் எழுப்பியபடி இருந்த போராட்டத்திற்கு தப்பிசையை கேட்டவுடன் ஒரு வேகம் வந்தது என சொல்லலாம்].


14. தப்பிசைக் கலைஞர்கள் இசைத்து, ஆடியபடியே முன்செல்ல பேரணி தொடங்கியது.

15. ‘மே 17 இயக்கத்தினர்’, இயக்குனர்கள் சேரன், தங்கர் பச்சான், கௌதமன் அனைவரும் பேரணியை ஒழுங்குபடுத்தியபடியே முன்னின்று அழைத்து சென்றனர்,


16. பேரணிக்கு எதிர் திசையில் வந்த வைகோ அவர்கள் அனைவருக்கும் வாழ்த்து கூறியபடியே பேரணியில் கலந்துகொண்டார். பின்னால் வந்த இயக்குனர் பாரதிராஜாவும் இணைந்து கொண்டார்.

17. பேரணி ஆங்காங்கே சிறிது நேரம் நின்று கோஷம் எழுப்பியபடியே முன்னேறி சென்றது,

18. பெரும்பாலும் இந்திய, கேரள அரசைக் கண்டித்தும், தனித்தமிழ் தேசியம் வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கோஷம் எழுப்பப்பட்டது. முக்கியமாக ‘அணை உடைந்தால் இந்தியா உடையும்’ என்ற கோஷம் மட்டும் மக்கள் ஆதரவுடன் ஓங்கி ஒலித்தது,

 

19. கடற்கரைக்கு வந்த மக்களும் என்னவென்று பார்க்க வந்தவர்களில் பலர் பேரணியில் கலந்து கொண்டனர்,

20. மெல்ல முன்னேறிய பேரணி காந்தி சிலையை தாண்டி கண்ணகி சிலையருகே நிறைவடைந்தது. அங்கே தலைவர்கள் பேசுவதற்காக சிறு மேடை அமைக்கப்பட்டிருந்தது,

 

21. மேடையில் நாற்காலிகள் எதுவும் போடப்படவில்லை. அழைக்கப்பட்டவர்கள் அனைவரும் தரையில் அமர்ந்துக்கொண்டனர்,

22. மக்கள் அனைவரும் மேடைக்கு முன்பாக சாலையிலேயே அமர்ந்துகொண்டார்கள். ஊடக நண்பர்களுக்கு மட்டும் அவர்கள் வசதிக்காக இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது,

23. ஊடக நண்பர்கள் மேடைக்கு நேர் எதிரே நின்று நிகழ்ச்சியை படம் பிடித்ததால், பொது மக்கள் அவர்களை நகர்ந்து போகும்படி சொல்ல அங்கே சிறிது சேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் வைகோ பேசியதும்தான் மக்கள் அமைதி காத்தனர்,

24. இயக்குனர் கௌதமன் கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பையும் மீறி நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி சென்றார்,


25. முதலில் பேச வந்த மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் அவர்கள் இயக்கம் உருவான காரணம், தமிழர் பிரச்சினையில் மைய அரசின் நிலைப்பாடுகள், முல்லைப் பெரியாரின் தற்போதைய நிலைமை என தெளிவுபடுத்தினார். தமிழர்களுக்கு எங்கு பிரச்சினை என்றாலும் அங்கு ‘மே 17 இயக்கம்’ குரல் கொடுக்கும் என்று கூறினார்,

26. அடுத்து பாடலாசிரியர் தாமரை பேச வந்தார். போராட்டத்திற்கு பங்களித்த பெண்களின் சார்பாக தான் வந்துள்ளதாக தெரிவித்து தனது பேச்சை தொடங்கினார். “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள, கர்நாடக அரசாங்கங்கள் மதிப்பதில்லை. ஆனால் நாம் மட்டும் தேசிய ஒருமைப்பாடு எனக் கூறிக்கொண்டு இன்று ஏமாந்துபோய் நிற்கிறோம். மன்னராட்சி காலத்தில் இதுபோன்ற பிரச்சினை வந்ததில்லை. ஏன்? பிரிட்டிஷ் ஆட்சியின்போதுகூட இப்படி ஆனதில்லை. ஆனால் என்று மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதோ, அன்றிலிருந்து நமக்கு பிரச்சினைதான். தனித் தமிழ் தேசியம்தான் இதற்கு ஒரே தீர்வு” என்றார்.

27. அடுத்து பேசிய வேல்முருகன் பென்னி குய்க் பற்றியும் அன்று முல்லை பெரியாறு அணை கட்ட ஏற்பட்ட சிரமத்தையும் எடுத்துக் கூறினார். “அணை கட்ட பணம் இல்லாதபோது பென்னி குய்க் தனது சொத்துக்களை விற்று அணையைக் கட்டினார். அப்பவும் பணம் போதவில்லை. தமிழர்களிடம் பணம் வசூலித்து அணையை கட்டி முடித்தார். அதாவது யார் காசுல? உன் பாட்டன், முப்பாட்டன் காசுல கட்டின அணையை உடைக்க விடலாமா?” என்று அவர் கூற கூட்டத்தில் கரவொலி பலமாக கிளம்பியது.

28. பின்னர் வந்த ‘மனித நேய மக்கள் கட்சி’யை சேர்ந்த நண்பர் [மன்னிக்கணும். கூட்டத்தில் ஏறிபட்ட சலசலப்பால் அவரது பெயரையும், அவர் வகித்த பொறுப்பையும் கவனிக்க முடியவில்லை.] தமிழர் நலன், முல்லைப் பெரியாரின் அவசியத்தைப் பற்றியும் பேசினார்.

29. அடுத்து வந்தவர் கவிஞர் அறிவுமதி. பிரபாகரனுக்கு மிகவும் பிடித்த கவிஞர் என்ற அறிமுகத்துடன் அழைக்கப்பட்டார். அவரது குரல் மெல்லினமாக இருந்தாலும் வார்த்தைகளில் வல்லினம் மிகுந்தே இருந்தது. “தாகத்துக்கு தண்ணி கேட்டா மோர் குடுக்குறவன்டா தமிழன். ஆனா கேரளாக்காரன் கிட்ட தண்ணி கேட்டா அவன் மூத்திரம் தர்றேன்னு சொல்றான். முள்ளிவாய்க்காலில் தூங்கிய தமிழனை முல்லைப் பெரியாறில் எழுப்பிய மத்திய அரசிற்கு நன்றி. இங்கு கூடியிருக்கும் இளைஞர்களைப் பார்க்கும்பொழுது நம்பிக்கை அதிகமாக இருக்கின்றது.” என்று அவர் கூறும்போது மக்கள் மத்தியில் சந்தோஷக் கூச்சல். “எதிர்க்கத் துணிந்தால் தமிழ் மீளும், எதற்கும் துணிந்தால் தமிழ் ஆளும்” என்று கூறி பேச்சை நிறைவு செய்தார்.

30. “இவரைக் கூப்பிடலைன்னா இவரும் கோவிச்சுக்குவாரு! நீங்களும் கோவிச்சுக்குவீங்க” என்று கௌதமன் கூறியபடியே தங்கர் பச்சானை பேச அழைத்தார். “கேரள முதல்வர் உம்மன் சாண்டியும், எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தனும் ஒன்றாகக் கூடி ஒரு மணி நேரத்தில் முடிவெடுத்து ஒன்றாக அறிக்கை விடுகிறார்கள். ஆனால் நம்ம தமிழ்நாட்டுல அப்படியா இருக்கு?” என்று கூறியவர், தமிழகத்தின் அரசியலில் உள்ள பிரிவினையை சாடிப் பேசினார். அனைத்துக் கட்சியினரும் தமது கொள்கைகள் [அப்படி ஏதேனும் இருந்தால்...], கட்சி, சாதி பேதங்கள் அனைத்தையும் விடுத்து ஒன்றாக இணைந்து குரல் கொடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

31. அடுத்து வந்த ஓவியர் வீரசந்தானம், வைகோவை அண்ணன் என்று அழைத்ததும் கூட்டத்தில் சிரிப்பலை. பின்னர் அவர் நதிநீர் பிரச்சினை பற்றி பேசினார். “நாடு விட்டு நாடு போகின்ற நதிகளில் நீர் பங்கிடுவதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஏனென்றால் அதற்கு சர்வதேச சட்டம் இருக்கின்றது. ஆனால் நமக்கு அப்படி எதுவும் இல்லை. அதனால் நமது உரிமைக்கு நாம்தான் போராட வேண்டும்.” என்றார்.

32. “என் இனிய தமிழ் மக்களே!!” என்று பாரதிராஜா கூறியதும் பயங்கர ஆரவாரம். “இனிமேல் நான் இப்படி சொல்ல முடியாது போலாயிருக்கு. என் இனிய ‘பாவப்பட்ட’ தமிழ் மக்களே!! அப்படின்னுதான் கூப்பிடணும். ஏன்னா இன்னைக்கு நிலைமை அப்படித்தான் இருக்கு. தேசியமும், திராவிடமும்தான் தமிழனை கண்ணீர் விட வைத்தது. முல்லைப் பெரியாறு பிரச்சினை என்பது 5 மாவட்ட பிரச்சினை கிடையாது. ஒட்டுமொத்த தமிழனின் பிரச்சினை. இப்போதும் அமைதி காத்தோமானால் தமிழனை ஒருபோதும் காப்பாற்ற முடியாது. தமிழர்களுக்கு எங்கே இடர் வந்தாலும் சரி! அங்கே முதலில் குரல் கொடுப்பவர் வைகோ. கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தமிழர்களுக்காக நிற்பவர் வைகோ. இந்த பிரச்சினை கேன்சர் போன்றது. ஆரம்ப நிலையிலேயே கிள்ளி எரியனும். இல்லைன்னா நமக்குதான் ஆபத்து. ஒரு நல்ல பொறி கிளம்பியுள்ளது. இதை அணையாமல் பார்த்துக்கொண்டு வெற்றியடைய வேண்டும். தமிழர் நலன் காக்க தமிழ் தேசியம்தான் ஒரே வழி” என்று கூறியதுடன் திரைத்துறையினரையும் ஒரு பிடி பிடித்தார்.

33. திருமுருகன் அவர்கள் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யும்போது நிகழ்ந்த சம்பவங்களை நினைவு கூர்ந்து வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.


34. கடைசியாக பேச வந்தார் வைகோ. முதலில் மெல்ல பேச ஆரம்பித்தவர் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக ஏறிய குரல் போராட்டத்தின் சூட்டை அனைவருக்கும் உணர்த்தியது. முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக அவர் கலந்துகொண்ட போராட்டங்கள் பற்றியும், அணையின் இன்றைய அரசியல் நிலையை அனைவருக்கும் தெளிவாக விளக்கினார். அணையின் உறுதிதன்மை, இந்த பிரச்சினையில் மத்திய அரசின் நிலைப்பாடு என தெளிவுபடக் கூறினார். முல்லைப் பெரியாறு அணை 8 ரிக்டர் அளவு பூகம்பம் வந்தாலும் ரப்பர் போல வளைந்துகொடுக்கும் தன்மையுடன் கட்டப்பட்டுள்ளதாகக் கூறினார். உள்ளொன்று செய்துவிட்டு புறமொன்று பேசும் கேரள அரசை சாடியதுடன், இதுபோன்று அவர்கள் மீண்டும் தொடர்ந்தால் அது ரத்தக் களரியில்தான் முடியும் என்று வருத்தத்துடன் கூறினார்.

“நான் இங்கு அரசியல்வாதியாக வரவில்லை. தமிழனுக்கு குரல் கொடுப்பதற்காக வந்திருக்கிறேன். திருமுருகன் போன்ற இளைஞர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எனது கட்சி அடையாளங்களை தவிர்த்துவிட்டு ஆதரவாளர்களோடு வந்திருக்கிறேன். பேரணியின்போது ‘அணை உடைந்தால் இந்தியா உடையும்’ என்று கூறினீர்கள். இப்போது சொல்கிறேன். 'அணை உடையாது.. இந்த நிலை தொடர்ந்தால் இந்தியா உடையும்'. பிரிடிஷ் காலத்தில் அணைக்காகப் போடப்பட்ட 999 ஒப்பந்தம் செல்லாது என்றால், இந்திய அரசியல் சட்டமே செல்லாது. அணை பாதுகாப்புக்கு மத்திய போலீஸ் வராவிட்டாலும் சரி, ராணுவம் வராவிட்டாலும் சரி... மக்கள் தன்னெழுச்சியாகக் கிளம்பிவிட்டார்கள். சென்னையில் இந்த போராட்டத்திற்கு ஏற்பாடு செய்த திருமுருகனுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்” என்று உரையை நிறைவு செய்தார்.

35. பின்னர் சுனாமியில் உயிர் நீத்த மக்களுக்காக 1 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்திய பிறகு கூட்டம் நிறைவுற்றது.

இப்போ நான்:

இதுபோன்ற போராட்டங்களில் மக்களிடம் ஒரு அதீத உணர்ச்சி இருக்கும். உணர்ச்சி வேகத்தில் ஏதாவது கூறுவார்கள் அல்லது செய்வார்கள். ஆனாலும் இந்த போராட்டத்தில் அப்படி எதுவும் இல்லை. அனைவரும் பொறுமையாக தங்கள் ஆதரவை தெரிவித்தார்கள். பாதுகாப்புக்கு வந்த காவல்துறையினருக்கு வேலையே இல்லை. அந்த வகையில் பொறுமையாக இருந்த மக்களுக்கு நன்றி.

கூட்டத்தில் பேசிய அனைவரது பேச்சிலும் தனித்தமிழ் தேசியமே முக்கியமாக இருந்தது. கவிஞர் தாமரை பேசும்பொழுது, “நாம் தலை நிமிர்ந்து வாழ தனித்தமிழ் தேசியம்தான் ஒரே வழி. அப்படி ஏற்படும்போது திரு.வைகோ அவர்கள்தான் தமிழ்நாட்டின் முதல்வராக இருப்பார்.” என்றார். நமக்கு திராவிடமும் வேண்டாம், தேசிய ஒருமைப்பாடும் வேண்டாம். தனித்தமிழகம்தான் வேண்டும் என்பதே அனைவரின் பேச்சாக இருந்தது.

மொத்தத்தில் தென் தமிழ்நாட்டில் கிளம்பிய முல்லைப் பெரியாறு உரிமைப் போராட்டம் சென்னை வரை ஆழமாக வேரூன்றிவிட்டது.

2 comments:

  1. mullaipperiyaar anai nighvukkaaga ondru thiranda en inam thamizhaga makkalaukkum adhdhai sirappaga vazhinadaththiyavargalukkum vaazhththukkal nandri

    ReplyDelete
  2. ரொம்ப சிறப்பாக எழுதி இருக்கீங்க.

    ReplyDelete

நல்லவங்க...

ShareThis