December 23, 2011

உச்சிதனை முகர்ந்தால்


நமக்கு சிறு வயதில் (இப்போதும் கூட...) மகிழ்ச்சி, குதூகலம், கொண்டாட்டம் கொடுத்த விஷயங்கள் என்னவாக இருக்கும்?

1. பல வண்ணங்களுடன் ஜாலம் காட்டும் வான வேடிக்கை,

2. கைக்கு எட்டாத தூரத்தில் சிறு பறவையாய் பறக்கும் விமானம்

அப்புறம்.....

இன்னும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கும். ஆனால் இவை எதுவும் 13 வயதேயான புனிதவதிக்கு கிட்டவும் இல்லை, கொண்டாட்டம் அளிப்பவையாகவும் இல்லை. புனிதவதி மட்டும் அல்ல. இவளைப் போல இந்த தலைமுறையை சேர்ந்த பல குழந்தைகள் தங்கள் வாழ்வின் மகிழ்வான தருணங்களைத் தொலைத்துவிட்டு காரணமே தெரியாமல் வேட்டுசத்தம் கேட்டாலோ, விமானத்தைக் கண்டாலோ பதுங்கு குழிகளைத் தேடி ஓடுகிறார்கள். அப்படி வாழ்வில் அனைத்து மகிழ்வான தருணங்களைத் தொலைத்த இந்த தலைமுறையின் ஒரே அடையாளம்தான் ‘புனிதவதி’. இந்தச் சிறுமிக்கு ஏற்பட்ட வன்கொடுமையும் அதை சார்ந்த நிகழ்வுகளுமே ‘உச்சிதனை முகர்ந்தால்’.


 ஈழம் பற்றி பொது மேடையில் பேசியதற்காக கைதாகி பின்னர் நீதிமன்றம் மூலம் விடுவிக்கப்படுகின்றார் பேராசிரியர் நடேசன். இவரது மனைவி நந்தினி. தன் கணவனின் நிலைப்பாடுகளுக்கு உறுதுணையாக இருப்பவர். பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்தவர் இப்போது ஐந்து மாதம் கர்ப்பம். விடுதலையான பின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மேலும் ஈழம் பற்றிய செய்திகளையும், புனிதவதிக்கு நிகழ்ந்த வன்கொடுமை பற்றியும் கூறுகிறார். வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் ஈழத்திலிருந்து அவரது நண்பர் மூலம் புனிதவதி பற்றி செய்தி வருகின்றது. ஆமிக்காரர்களால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட புனிதவதி 4 மாதம் கர்ப்பம் என்று அறிந்ததும் அவளை தக்க துணையுடன் இந்தியா அனுப்பும்படி சொல்கிறார் நடேசன்.

 

தாயின் துணையுடன் வரும் புனிதவதியை பாசமாக அரவணைத்துக்கொள்கிறார் நந்தினி. இவர்களது குடும்ப நண்பர் மருத்துவர் ரேகாவிடம் மருத்துவ பரிசோதனை செய்கிறார்கள். புனிதவதியின் தாய் இந்தக் குழந்தை வேண்டாமெனவும் அதை கலைத்துவிடும்படியும் கூறிவிடுகிறார். பரிசோதனையில் குழந்தை நன்றாக வளர்ந்திருப்பதால், தற்போது கருவை கலைப்பது இரு உயிர்களுக்குமே ஆபத்து என்று மருத்துவர் கூறிவிட, வேறு வழியில்லாமல் புனிதவதியின் உயிரைக் காப்பாற்ற அவள் குழந்தையை பிரசிவிக்கும் வரையில் தன் வீட்டிலேயே இருக்கட்டும் என நந்தினி கூறிவிடுகின்றார். இரண்டு வருடங்களுக்கு முன் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட தன் கணவன் சுட்டுக் கொல்லப்பட்டது தெரியவர புனிதவதியின் தாய் திரும்ப இலங்கை செல்கிறார். புனிதவதியின் மருத்துவ அறிக்கையில் வரும் ஒரு அதிர்ச்சியான தகவல், பின்னர் அதையொற்றி வரும் ஈரமும், மனிதமும் கலந்த நிகழ்வுகளுடன் மனதை கனக்கச் செய்யும் செய்தியுடன் திரைப்படம் நிறைவுறுகிறது.

 

பேராசிரியர் நடேசனாக சத்யராஜ். அவரது மனைவி நந்தினியாக சங்கீதா. இருவரும் கதைக்களன் உணர்ந்து இயல்பாக வருகிறார்கள். மருத்துவர் ரேகாவாக நந்தினி ராமகிருஷ்ணன். புனிதவதி நிலை அறிந்து அவளுக்கு மருத்துவம் செய்வது, தோளில் சாய்த்து அரவணைத்துக் கொள்வது என மருத்துவம் தாண்டி அன்பும் பாராட்டுகிறார். காவல்துறை அதிகாரியாக வரும் சீமான், சிறப்பு மருத்துவராக வரும் நாசர், போராளிகள், பெண்புலிகள், திருநங்கைகள், ஆட்டோ ஓட்டுனர் என அனைவரும் நிகழ்வின் நகர்விற்கு உறுதுணையாக உள்ளார்கள்.


முக்கியமாக கதையின் நாயகி புனிதவதியாக நீநிகா (நீர், நிலம், காற்று ஆகியவற்றின் அடையாளமாக சூட்டப்பட்ட பெயர்). உண்மையான புனிதவதியை போல இருக்க வேண்டுமென பலநாள் தேடியதாக இயக்குனர் கூறியிருந்தார். அவரது தேடுதல் சரியான இடத்தில்தான் முடிந்துள்ளது. புனிதவதி சிரிப்பு, விளையாட்டு, கண்ணீர், பயம், அழுகை என மிகச் சரியாகக் கொடுத்துள்ளார். இவர்கள் அனைவரையும் மீறி நடிப்பில் கவனம் ஈர்ப்பவர் புனிதவதியின் தாயாக நடித்திருப்பவர். அவர் ஈழத்தில் நடந்த கொடுமைகளை விவரிக்கும்போது உண்மையில் மனம் கனத்துப்போகிறது. தூக்கம் தொண்டையை அடைக்க, ஈழத்தமிழில் அவர் விவரிக்கும் விதம் அங்கு மக்கள் அனைவரும் அடைந்த துன்பத்தை நம்மை உணரச் செய்கிறது.

 

புனிதவதியின் வாழ்வில் நிகழ்ந்த துயர சம்பவத்தை மிக நேர்த்தியாக, தெளிவான திரைக்கதை மூலம் நம் முன் வைத்திருக்கிறார் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ். ஈழம் பற்றிய தொலைக்காட்சி காணொளிகளை தேவைப்பட்ட இடத்தில் இணைத்து படத்துக்கு ஒரு நம்பகத்தன்மையை கொடுத்துள்ளார். அதுவும் தமிழ் ஆண்களை கண்ணைக் கட்டி கொல்லும் சம்பவக் காட்சியை படத்தோடு இணைத்து கலங்க செய்கிறார். இவருக்கும் இந்த படைப்பிற்கும் சரியான முறையில் தோள் கொடுத்த ஒளிப்பதிவாளர் கண்ணன், எடிட்டர் லெனின், இசையமைப்பாளர் டி.இமான் மற்றும் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.


 வசனம் – தமிழருவி மணியன். படத்தின் ஆகப்பெரிய பலம் வசனம் என்றால் அது மிகையில்லை. புனிதவதிக்கு அவள் தாய் கூறும், “நமக்காக குரல் கொடுப்பவர்களுக்கு நாம் மேலும் பாரமாக இருக்கக்கூடாது.” எனத் தொடர்ந்து வரும் வசனம் உதவி கோரும் ஈழ மக்களின் எண்ணமாகவே இருக்கும். அடுத்து திருநங்கை கூறும் வசனம். “என்னை அவன் அடிக்கும்போது ஒருத்தனும் வரல. உதவிக்கு ஒரு ஆம்பளை வந்ததும் தர்ம அடி கொடுக்க வந்துட்டாங்க. போங்கடா பொட்டப்பசங்களா..!!!” இப்படி படம் நெடுக வசனமே பல விஷயங்களை நறுக்கென்று கூறிவிடுகின்றது.

ஆனாலும் ஈழம் பற்றி பேசும்போது வரும் வசனங்களை சென்சார் கத்திரியை மனதில் கொண்டே எழுதியிருப்பார்கள் போல. நயமான வார்த்தைகளைக் கொண்டு  ஈழத்தின் வலியை வலிமையாகவே கூறியுள்ளார்கள். பெரும்பாலான இடங்களில் தப்பித்தாலும் படத்தின் ஆரம்பக் காட்சிகளில் சில வெட்டுகள் விழுந்திருக்கின்றன. குறிப்பாக 'புலி', தமிழ்ச்செல்வனில் 'தமிழ்' என்று வெட்டுகள் விழுந்திருக்கின்றன. இந்த சென்சார் குழுவை பார்த்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை. இந்த வார்த்தைகள் வெட்டுப்பட்டவுடன்தான் அதிக வீரியம் பெற்றதாகத் தெரிகின்றன. 

படம் மிகத்தெளிவாக இருந்தாலும் ஆங்காங்கே சில தடைகள் கதை போகும் போக்கை தடை செய்வதாக இருந்தது. குறிப்பாக காவல்துறை ஆய்வாளராக வரும் சீமான் அரசியல் பேசுவது இந்தக் கதைக்கு தேவையா?? ஆனால் கதையின் முடிவு தந்த கனத்தால் இந்த குறைகள் அனைத்தும் மறந்து போயின என்பதே உண்மை.

அரங்கம் பக்கம்:

சென்னை - தேவிபாலாவில் இந்த படத்தை பார்த்தேன். காட்சிக்கான நேரம் நெருங்கியதால் அவசரமாக உள்ளே நுழைந்தேன். என்னவென்று சொல்வது? நான்தான் அந்த காட்சிக்கு முதல் ஆள். வெளியே வந்து சரியான இடம்தானா என உறுதி செய்துக்கொண்டு மீண்டும் உள்ளே நுழைந்தேன். பின்னர் ஒவ்வொருவராக கிட்டத்தட்ட 60 பேர் வந்திருப்பார்கள். என் அருகில் 3 கல்லூரி மாணவர்கள் கேலியும் கிண்டலுமாக படத்தை பார்த்தார்கள். நானும் பொறுக்க முடியாமல் அவர்களிடம், “தம்பிகளா!! நீங்க comment அடிச்சு பாக்க வேண்டிய படம் இது அல்ல. அதுக்கு வேற நிறைய படங்கள் இருக்கு” என்றேன். அதன்பின் அமைதியானவர்கள் இடைவேளையின் போது “நீங்க சொன்னதும்தான் புரிஞ்சது” எனக் கூறி மன்னிப்பும் கேட்டார்கள்.

படம் பார்க்க உள்ளே நுழையும்போது இருந்த படத்தின் விளம்பரப் பலகை, படம் முடிந்து வெளியே வரும்போது இல்லை. அப்பாடா!!! படம் மாற்றுவதற்குள் பார்த்துவிட்டோம் என்று ஆறுதல்பட்டுக் கொண்டாலும், அதற்குள் மாற்றப்போகிறார்களே என்ற கவலையும் கூடவே வந்தது.

No comments:

Post a Comment

நல்லவங்க...

ShareThis