March 10, 2010

இது எந்த ஊர்? நம்ம ஊர்....


நமது ஊர் பெயர்கள் பலவற்றில் பார்த்தோமானால், தமிழில் ஒரு உச்சரிப்பும், மற்ற மொழிகளில் ஒரு உச்சரிப்பும் கொண்டிருக்கும். ஒரு ஊரின் பெயர் அந்த வட்டார மொழியில் எவ்வாறு அழைக்கப்படுகிறதோ, அதே உச்சரிப்போடுதான் மற்ற மொழிகளில் அழைக்கப்பட வேண்டும், எழுதப்பட வேண்டும். [உதாரணம்: தருமபுரி என்ற பெயரை ஆங்கிலத்தில் Dharmapuri எனவும், இந்தியில் धरमपुरी எனவும் எழுதலாம். இதனால் இந்த ஊர் பெயரின் ஆதார நாதம் இந்த இரு மொழியிலும் இருப்பதை காணலாம்.]

 ஆனால் இன்றைய நிலையில் பல ஊர்களின் பெயர்கள் அவ்வாறு அழைக்கப்படுவதில்லை. எழும்பூர் – Egmore எனவும், திருச்சி–Trichy எனவும்,  குற்றாலம் –  Courtallam எனவும் இன்னும் பல ஊர்கள் பலவாறு அழைக்கப்படுகின்றன. இதன் காரணங்களை சற்று ஆழமாக பார்ப்போமா?

 எழும்பூர்:  நமது தமிழ் மொழியின் அழகே "ழ" தான். இதைதான் வைரமுத்து ஒரு பாடலில் "தமிழுக்கு அழகு" என்று எழுதினார். ஆனால் இந்த பாழாய்ப்போன வெள்ளைக்காரனுக்கு "ழ"கரம்  சொல்ல வரவில்லை. நாக்கு நன்று மடங்கினால்தானே தமிழ் பழகும். நுனி நாக்கினால் மட்டுமே பேசிப் பழகியவனால் எழும்பூர் என்று சொல்ல வரவில்லை. அதனால் அவனது  சவுகரியத்திற்கு ஏற்ப எழும்பூரை Egmore ஆக்கிவிட்டான். நாமும் பழக்கத்திலும், ஆங்கில மோகத்திலும் "Egmore" கூறி வருகிறோம்.

திருச்சிராப்பள்ளி: இது தென்னாட்டுக் கைலை மலை என்றும் புகழப்படுவது. திருச்சி மலைக்கோட்டையில் காணப்படும் குகையில் 'சிரா' என்னும் பெயருடைய சமணத் துறவி தங்கியிருந்து தவமிருந்ததாக அக்குகையில் உள்ள பதினோராம் நூற்றாண்டுக் கல்வெட்டு கூறுகிறது. சிரா துறவியின் பள்ளி, சிராப்பள்ளி என்றாகி அதுவே இவ்வூருக்குப் பெயராகி உள்ளது என்றும் கருதப்படுகிறது (Source : Wikipedia). சோழர்கள் தங்கள் நாட்டையிழந்து, பல்லவர்களின் ஆட்சி தஞ்சை வரை விரிந்திருந்த  காலம் (ஏறக்குறைய 12ம் நூற்றாண்டு). குறுநில மன்னனாகிவிட்டிருந்த சோழன் தனது பலத்தைக் காட்ட சிராப்பள்ளி மலையில் புலிக்கொடி ஏற்றி தனது பலத்தைக் காட்ட முனைந்தான் என்பது வரலாறு. (பார்த்திபன் கனவு - கல்கி). இத்தகைய பெருமை கொண்ட சிராப்பள்ளி, பின்பு மரியாதை (விஜயகாந்தின் மரியாதை அல்ல) சேர்க்கும் விதமாக திருச்சிராப்பள்ளி என்றானது. அதுவும் வழக்கு மொழிக்காக சுருங்கி திருச்சி ஆனது. இதுவரை சரி. ஆனால் நாக்கு மடங்காதவன் Trichy என்று சொல்லி வைத்துப் போனால் நாமும் அதையே தொடர வேண்டுமா???

குற்றாலம்: பெயரை சொன்னாலே சில்லென்ற காற்றையும், முகத்தில் சாரலையும் உணர  வைக்கும் பெயர். இன்று நமது சொல்வழக்கில் இல்லையென்றாலும் அந்த ஊர் முழுக்க பெயர் பலகைகளில் Courtallam என்று இருப்பது ஏன்?

இவைபோல இன்னும் பல ஊர்கள், வேறு வேறு வடிவங்களில் , பெயர்களில் அழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும். இவற்றில் நமது பேச்சு வழக்கில் மருவி வந்தவற்றை விட்டுவிடுவோம். ஏனென்றால் அவை நமது மக்களின் அன்றாட வாழ்வு முறையுடனும், உணர்வுடனும் இரண்டற கலந்தவை.

இவ்வாறு நமது ஊர் பெயர்கள் இருக்கிறதே. இவை மீண்டும் நமது தமிழ் பெயர்கள் வழக்கிற்கு வர என்ன செய்யலாம். ரொம்ப சுலபம். நாம் அந்தந்த ஊரின் உண்மையான தமிழ் பெயர்களை அடையாளம் கண்டு அவற்றை நமது பேச்சு வழக்கில் கொண்டுவரவேண்டும். வாய்பேச்சில் பரவாத செய்தியும் உண்டோ நமது தமிழகத்தில்?? அவ்வாறு பயன்படுத்தினால் நாம் இதுவரை தொலைத்தவற்றை மீண்டும் அன்றாட வாழ்வில் அனைவரது பயன்பாட்டுக்கு வந்துவிடும்.       இனி Egmore என்று குறிப்பிடாமல் எழும்பூர் என்றே அனைவரும் சொன்னால், காலப்போக்கில் Egmore மறைந்து எழும்பூர் நிலைத்துவிடும். அதுவே அரசுப் பதிவேட்டில் நிரந்தர பதிவாகிவிடும்.

செய்வோமா???

 

No comments:

Post a Comment

நல்லவங்க...

ShareThis