July 03, 2011

குட்டிம்மா...

[எனது, பெண்ணே! பேசு... என்ற முதல் சிறுகதையை பாராட்டி ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி. எனது அடுத்த முயற்சியாக குட்டிம்மாவை அழைத்து வந்திருக்கிறேன். அந்த செல்லத்தைக் கொஞ்ச உங்களை அன்போடு அழைக்கிறேன்… அப்புறம்... உங்க கருத்தை சொல்ல மறந்துடாதீங்க…]

கார்த்திக் சற்று பதட்டமான மனநிலையில் இருந்தான். கார் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது.
“நாம கிளம்பும்போதுகூட நல்லாதான இருந்தாள். திடீர்ன்னு ஏன் இப்படி ஆகனும்?” – நினைக்கும்போதே ஒரு இனம் புரியாத பயம் அவன் வயிற்றில் பாய்ந்தது. ஏன்தான் இந்த வெளியூர் பயணத்தை ஒத்துக் கொண்டோமோ என்று தன்னைத்தானே நொந்துக்கொண்டான். மனம் கண்டதையும் கற்பனைக் பண்ணி அலைபாய, அவன் தலையை உதறினான்.

“கொஞ்சம் வேகமாப் போங்களேன்!” – ஓட்டுனரை துரிதப்படுத்தினான். கார்த்திக் நிலையறிந்த ஓட்டுனர், “கவலைப்படாதீங்க தம்பி!! உங்களை சீக்கிரமாகவும், பத்திரமாகவும் கொண்டுப்போய் சேர்க்க வேண்டியது என் பொறுப்பு.” என்றார். அவரது வார்த்தை அவன் மனதுக்கு சற்று நிம்மதியை தந்தது. பின்சீட்டில் மெல்ல தலை சாய்த்தான்.

ஒரு மணி நேரத்துக்கு முன் அவன் மாமனார் போனில் சொன்னது இன்னும் காதில் ஒலித்தது.
------
 “மாப்பிள்ளை! உமாவுக்கு திடீர்ன்னு உடம்புக்கு முடியலை. இப்போ ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போறோம்” போனில் கலக்கத்துடன் மாமனார் பேசினார்.

“திடீர்ன்னு என்ன மாமா ஆச்சு?”

“சரியா தெரியல மாப்பிள்ளை! வயிறு வலிக்குதுன்னு சொன்னா.. நிறைமாசம் வேற… அதான் உடனே ஆஸ்பத்திரிக்கு கிளம்பிட்டோம்.”

“உமாவுக்கு இப்போ எப்படி மாமா இருக்கு?”

“இப்போ கொஞ்சம் வலி குறைஞ்சிருக்குன்னு சொன்னா.. அவ அம்மா மடியில படுத்திருக்கா மாப்பிள்ளை!!”

“நீங்க போய் டாக்டர்கிட்ட காட்டிட்டிருங்க.. நான் இப்போ கிளம்பிடறேன்!!”

“சீக்கிரம் வாங்க மாப்பிள்ளை!! நீங்க பக்கத்துல இருந்தீங்கன்னா உமாவுக்கு கொஞ்சம் தெம்பா இருக்கும்.”

“இதோ இப்போ கிளம்பிட்டேன் மாமா. இன்னும் மூணு மணி நேரத்தில் வந்துடுவேன். உமா கண் முழிச்சதும் நான் வந்துக்கிட்டு இருக்கேன்னு சொல்லுங்க..”

“சரிங்க மாப்பிள்ளை. சீக்கிரம் வந்துடுங்க.”

வந்த வேலையை பிறகு வந்து பார்ப்பதாகக் கூறி, உடனே கிளம்பிவிட்டான். அந்த நேரத்துக்கு ரயில், பேருந்து எதுவும் கிடைக்காததால் ஒரு வாடகைக் காரில் கிளம்பிவிட்டான். அவசியம் உணர்ந்த ஓட்டுனரும் வேகமாகவே வண்டியை செலுத்தினார்.
------
கார்த்திக்கின் செல்போன் சினுங்க, அவன் நினைவு கலைந்து போனை எடுத்தான். அவன் அப்பா பேசினார் “கார்த்திக்! எங்கப்பா இருக்க?”

“வந்துக்கிட்டே இருக்கேன்ப்பா.. உமாவுக்கு எப்படி இருக்கு?”

“டாக்டர்கிட்ட காட்டினோம்ப்பா!!” என்றபடி அப்பா அமைதியானார்.

“சொல்லுங்கப்பா!! டாக்டர் என்ன சொன்னாங்க?”

“அது வந்து… குழந்தை இருக்குற அமைப்பு ஏதோ மாறியிருக்காம்ப்பா!! இங்கிலீஷ்ல ஏதேதோ சொல்றாங்க… ஒண்ணுமே புரியல… இப்போ ஆபரேஷன் பண்ணா ரெண்டு பேரையும் காப்பாத்திடலாம்ன்னு சொல்றாங்கப்பா!!”

“அப்பா! உண்மையை சொல்லுங்க. உமா உயிருக்கு ஒண்ணும் ஆபத்து இல்லையே?”

“அதெல்லாம் எதுவும் இல்லைன்னு சொல்றாங்க!!”

“உமாக்கிட்ட நான் பேசனும்ப்பா!!”

“உமா இப்போ மயக்கத்தில் இருக்கா. டாக்டர் உடனே ஆபரேஷன் பண்ணனும்னு சொல்றாங்க” என்று தயங்கியபடியே அப்பா மீண்டும் சொன்னார்.
“சரிப்பா! உமாவுக்கு எதுவும் ஆகாம பாத்துக்குங்க…. அப்புறம்…”
‘டிங்’ – பேட்டரி காலி ஆனதால் செல்போன் தானாக அணைந்தது. வெறுப்பில் செல்போனை சீட்டில் கடாசினான்.
“டிரைவர், உங்கக்கிட்ட போன் இருக்கா?”
“சாரி சார். எங்கிட்டயும் போன் இல்ல. இன்னும் அரை மணியில் அடுத்த டவுன் வந்துடும். ஏதாவது பூத்லயிருந்து பேசிக்கலாம் சார்.”
“இல்லீங்க. வண்டியை எங்கேயும் நிறுத்த வேண்டாம். சீக்கிரம் ஊருக்குப் போங்க..”
சரி என்றபடி ஓட்டுனர் வண்டியின் வேகத்தைக் கூட்டினார்.
------
கார்த்திக்கு, உமாவை கைபிடித்த நாள் முதல், அவளுடன் வாழ்ந்த இந்த ஒன்றரை வருட வாழ்க்கை கலவையாக நினைவில் வந்து போயிற்று. இதுவரை அவளை எதற்கும் கண் கலங்க விட்டதில்லை. வேண்டியதுக்கு அதிகமாகவே அவளுக்கு அன்பைக் கொடுத்தான். அப்படிப்பட்டவள் இன்று வலியில் துடித்துக் கொண்டிருக்கிறாள்.

“கவலைப்படாதீங்க சார். உங்க மனைவிக்கு ஒண்ணும் ஆகாது. நல்லவங்களுக்கு ஆண்டவன் எப்போதும் துணையிருப்பான்.” என்று டிரைவர் ஆறுதல் கூறினார்.

கார்த்திக் மெல்ல சிரித்தான்.
ஆண்டவன்.
அவனாலதான இத்தனை தொல்லையும். “ஆண்டவனே!! நீ நிஜமாவே இருக்கியா? அப்படி இருக்கிறது நிஜம்னா என் கேள்விக்கு பதில் சொல்லு. உன் படைப்பில் எல்லோரும் சமம்னு சொல்றாங்க. அப்படி எல்லோரும் ஒண்ணுன்னா ஏன் உன் பெயரில் இந்த உலகமே அடிச்சிக்குது? சரி! அதை விடு… ஆண், பெண் படைப்பில் ஏன் உனக்கு இத்தனை ஓரவஞ்சனை? பெண்கள் மட்டும் ஏன் எல்லா வலிகளையும் அனுபவிக்கனும். சுகம் மட்டும் ஆணுக்கு, வலி எல்லாம் பெண்களுக்குன்னா அப்புறம் ஏன் இந்த படைப்பு?”
இந்த நேரத்திலும் பகுத்தறிவா என்று எண்ணியபடி உமாவின் நினவுகளில் ஆழ்ந்தான்.
------
ஓட்டுனரின் குரல் அவனை நினைவுகளில் இருந்து மீட்டது.

“சார்.. ஊருக்கு வந்தாச்சு.. ஆஸ்பத்திரிக்கு எப்படி சார் போகனும்?” ஓட்டுனர் கேக்க கார்த்திக் வழி சொன்னான்.

அங்கே….

ஆஸ்பத்திரி வாசலிலேயே அப்பாவும், மாமனாரும் காத்துக்கொண்டிருந்தனர். கார்த்திக் முகத்தைப் பார்த்தவுடன்தான் அவர்கள் முகத்தில் நிம்மதி வந்தது.
அவர்கள் பேசும் முன்பே இவனே கூறினான், “போன்ல சார்ஜ் இல்ல. அதான் உங்களை மறுபடியும் கூப்பிடல.. இப்போ உமாவுக்கு எப்படி இருக்கு?”
அப்பாவும், மாமனாரும் அவர்களுக்குள் சிரித்துக்கொண்டார்கள்.

“அப்பா, என்னன்னு சொல்லுங்கப்பா!! மாமா! நீங்களாவது சொல்லுங்க. எதுக்கு சிரிக்கிறீங்க?”

“மாப்ள! பதட்டப்படாதீங்க!! இளவரசி பொறந்திருக்கா மாப்ள!! போய் பாருங்க…”

கார்த்திக்கு சந்தோஷத்தில் கண்ணில் நீர் கோர்த்துக்கொண்டது. கால் தரையில் நிலைகொள்ளாமல் தவித்தது. “உமாவுக்கு எப்படி இருக்கு மாமா?”

“அவளும் நல்லாதான் இருக்கா மாப்ள!! என்ன ஆபரேஷன் பண்ண வேண்டியதாயிடுச்சி..” என்று வருத்தப்பட்டார்.

“அட.. விடுங்க சம்பந்தி! இன்னும் அதையே நினைச்சிக்கிட்டு.. அதான் மகளும், பேத்தியும் நல்லா இருக்காங்கள்ல… சந்தோஷமா இருங்க.. கார்த்திக், நீ போய் உமாவை பாருப்பா!! ரூம் நெம்பர் 201ல இருக்காங்க”.
சரிப்பா என்றபடி இரண்டாவது மாடிக்கு ஓடினான். எதிர்பட்டவர்களிடம் எல்லாம் 201-க்கு வழி கேட்டபடியே சென்றான்.

201. அறைக்கதவைப் பார்த்ததும் சந்தோஷமும், பதட்டமும் ஒரு பந்தாய் மாறி அவனை உந்தியது. மெல்ல கதவை திறந்தபடி உள்ளே நுழைந்தான். அவன் அம்மாவும், மாமியாரும் உமா கையில் இருந்த குட்டி ரோஜாவுக்கு யார் ஜாடை என்று ஆராய்ச்சி செய்துக்கொண்டிருந்தார்கள். கதவு திறக்கும் சத்தம் கேட்டு அனைவரும் திரும்பிப் பார்த்தார்கள். 

கார்த்திக் மெல்ல அவர்களை நெருங்கினான். “என்னடா? இவ்ளோ நேரம் ஆகிடுச்சி? நீ பக்கத்துல இல்லாம உமா ரொம்ப துடிச்சிட்டாடா!!”. அம்மா சொல்ல, கார்த்திக் உமாவிடம் திரும்பினான். இருவரும் மௌனமாக பார்த்துக்கொண்டார்கள்.

“சரி வாங்க சம்பந்தி! அவங்க ரெண்டு பேரும் கீழே இருக்காங்க.. நாம போய் சாப்பிட்டு இவங்களுக்கும் ஏதாவது வாங்கிட்டு வந்திடலாம். நீ இங்க இருப்பா! நாங்க இப்போ வந்திடறோம்.” என்று அம்மா கூற, இருவரும் கிளம்பினார்கள்.
கார்த்திக் கதவை சாத்திவிட்டு வந்து உமா அருகில் அமர்ந்தான். மெல்ல அவள் தலையில் வருடிக்கொடுத்தான். அவள் கண்களில் கண்ணீர் ஒரு மெல்லிய கோடாக வழிந்தது.

“அட! இப்போ என்னடா ஆச்சு? எதுக்கு அழற?”

“உங்களை பாக்குறதுக்கு முன்னாடி எனக்கு ஏதாவது ஆகிடுமோன்னு பயந்துட்டேங்க..”

“அட! என்ன இப்படிலாம் பேசிக்கிட்டு? நான் இருக்குற வரை உனக்கு எதுவும் ஆகாது. புரியுதா?” என்றபடி அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

ங்ங்ங்ங்கா… என்று மெல்ல குழந்தை சினுங்கியது.

“உன்னை மட்டும் விசாரிக்கறேன்னு நம்ம ரோஜாவுக்கு கோபத்தைப் பாரேன்.” என்று சொல்லியபடி குழந்தையை உமா கையிலிருந்து வாங்கினான்.

குழந்தை ஒரு ரோஜா மொட்டைப் போல கை, காலை உதைத்தபடி அவனைப் பார்த்தது. அவன் குழந்தை முகத்தைப் பார்த்தபடியே இருந்தான்.

“என்னங்க? அவ முகத்தை அப்படி பாக்கறீங்க? என்று உமா கேட்டாள்.

“உமா.. இங்க பாரேன். குழந்தை அப்படியே உன்னை மாதிரியே இருக்கா!!. இன்னைலருந்து இவ எனக்கு குட்டி உமா…”

“குட்டிம்மா….”



4 comments:

  1. என் கருத்துக்களை இங்கே பதிவு செய்ய என்னிடம் வார்த்தைகள் இல்லை.... இரு துளி கண்ணீரே இச்சிறுகதைக்கு அர்ப்பணம்....

    இந்த அருமையான படைப்புக்கு உங்களுக்கு எனது கோடான கோடி நன்றிகள்.... :)

    ReplyDelete
  2. WOW NICE ONE GOOD KEP IT UP

    ReplyDelete

நல்லவங்க...

ShareThis