November 24, 2011

நான் தென்றல்!! - சிறுகதை

“ஏண்டி வாணி!! இதையெல்லாம் வீட்டிலேயே சரி பண்ணிக்கிட்டு வந்திருக்கலாம்ல. இங்க வந்துட்டு இப்படி கடைசி நேரத்துல டென்ஷன் பண்ணிக்கிறியே” என்று உமா கேட்டாள்.

“எல்லாம் சரியாத்தாண்டி கொண்டு வந்தேன். இங்க பாரு!! அப்ளிகேஷன்ல ஒட்டின போட்டோ தனியா வந்திடிச்சி. இதை மட்டு ஒட்டிட்டா வேலை முடிஞ்சது. இதோ ரெண்டே நிமிஷம்.” என்று உமாவிடம் கூறியபடியே போட்டோவை ஒட்டினேன்.

சென்னை பல்கலைக் கழகத்தின் தொலைதூரக் கல்விக்கான வளாகம். பல ஆயிரம் மாணவர்களை குறைந்த செலவில் பட்டதாரியாக்கும் வல்லமை பெற்ற இடம். அதுவும் இன்று கல்வி விற்கும் விலையில் எல்லோரும் கல்லூரிகளுக்கு சென்று வாங்க முடியுமா? ஆனால் இங்கு அனைத்து ரக படிப்புகளும் சகாய விலையில் கிடைக்கும். சமூகத்தில் அங்கீகாரம் பெறவும், கல்யாணச் சந்தையில் நன்றாக விலை போக பட்டதாரியாக இருப்பது மிகவும் அவசியம். இதற்கும் இன்னும் பல காரணங்களுக்காகவும் பலர் அந்த வளாகத்தில் அங்கும் இங்கும் அலைந்தபடி இருந்தனர்.

நானும் உமாவும் முதுகலை கணிப்பொறியியல் சேர்வதற்க்காக வந்திருந்தோம். கடைசி தேதி முடிய இன்னும் நாள் இருக்கிறது. ஆனால் இவ்வளவு தூரம் வந்துவிட்டு, அப்புறம் ஏதேனும் சிறு தவறினால் நாளை வரும்படி ஆகிவிடக் கூடாதே என்றுதான் உமாவுக்கு கவலை. அதனாலேயே என்னை அவசரப்படுத்திக் கொண்டிருந்தாள்.

“ம்!! முடிஞ்சது. போகலாமா?” என்றபடி உமாவை பார்த்தேன்.

வெளியே வைத்திருந்த பொருள்கள் அனைத்தையும் பையில் அள்ளிப்போட்டுக்கொண்டு வேகமாக அலுவலகக் கட்டிடத்தை நோக்கி நடந்தோம். அந்த நொடியில் ஒரு குரல் எங்களை தடுத்து நிறுத்தியது. ஆண்மையும், பெண்மையும் கலந்த கரகரப்பான குரல்.

“Excuse me!! கொஞ்சம் gum கிடைக்குமா? application-ல போட்டோ ஒட்டனும்.” என்று புன்னகைத்தபடி கேட்டார்.

நான் சற்று நிதானித்து பின்பு கைப்பையில் துழாவினேன். அவசரமாக அனைத்தையும் அள்ளிப் போட்டதில் gum மட்டும் எங்கோ ஒளிந்துக் கொண்டு கண்ணாமூச்சி ஆடியது.

உமா வேறு அவசரப்படுத்தினாள்.

“டீ.. வாணி!! சீக்கிரம் வா!! நேரம் ஆகிடுச்சின்னா அப்புறம் நாளைக்கு வரச் சொல்லிடுவாங்க!!”

நானும், “கொஞ்சம் இரு!” என்றபடி gum-ஐ எடுத்து அவரிடம் கொடுத்தேன்.

“ரொம்ப நன்றிங்க!” என்று அவர் கூறி முடிப்பதற்குள் உமா என் கையை பிடித்து, “சீக்கிரம் வாடி!!! நேரமாச்சு” என்று என்னை இழுத்து சென்றாள்.

“இருடி!! Gum-ஐ வாங்கிட்டுப் போயிடலாம்” என்று நான் சொன்னதை அவள் சட்டை செய்யவேயில்லை. “gum தானே? வேற வாங்கிக்கலாம்” என்றாள்.

நாங்கள் application கொடுக்க வேண்டிய இடத்தை தேடி அங்கிருந்த நீண்ட வரிசையில் நின்றோம். Certificate verification அப்புறம் இன்ன பிற சடங்குகள் முடிந்து application கொடுத்த பின்பு வெளியே வர ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டது. மனம் முழுதும் ஒரு இனம் புரியாத நிம்மதி பரவியிருந்தது. ஏதோ சாதித்தது போன்ற உணர்வு மேலோங்கியிருந்தது. ஒரு வெற்றிப் பார்வையை அற்றவர் மீது வீசியபடி வாயிலை நோக்கி நடை போட்டோம்.

“Excuse me!!”..

மீண்டும் அதே குரல். திரும்பிப் பார்த்தேன். மாறாத புன்னகையுடன் அவர் நின்றுக் கொண்டிருந்தார்.

“ரொம்ப நன்றிங்க!! அப்பவே ஒட்டிட்டேன்.. உங்கக்கிட்ட கொடுக்குறதுக்குள்ள நீங்க வேகமா போய்ட்டீங்க!” என்று கூறியபடி gum-ஐ நீட்டினார்.

“பரவாயில்லைங்க!! Application கொடுக்க நேரம் ஆகிடுச்சின்னா நாளைக்கு வரச் சொல்லிடுவாங்க!! அதான் போய்ட்டோம்” என்று கூறிவிட்டு அவரிடம் விடை பெற்றோம்.

சில வாரங்கள் கழித்து...

புத்தகம் வாங்குவதற்காக நானும் உமாவும் பல்கலைக்கழகம் வந்திருந்தோம். உள்ளே நுழைந்ததிலிருந்து என் கண்கள் அன்று சந்தித்த நபரைத் தேடியது. அன்று அவரை சில நிமிடங்கள் பார்த்திருப்பேன். சில வார்த்தைகள்தான் பேசினேன். ஆனால் அவரை மீண்டும் பார்த்துவிட என் மனம் துடித்தது. காரணம் கேட்டால் எனக்கு சொல்லத் தெரியலை. ஒரு சிலரை பார்த்த கணத்தில் பிடித்துவிடும். அதைப்போலத்தான் இவரும். அதனால் அந்தக் கூட்டத்தில் அவர் எங்கேனும் கண்களில் தட்டுப்படுகின்றாரா என்று தேடியபடி புத்தகம் வாங்கும் இடத்திற்குச் சென்றோம். கூட்டம் குறைவாக இருந்ததால் வந்த வேலை சுலபமாக முடிந்தது. புத்தகம் வாங்கிக்கொண்டு திரும்பினால் பக்கத்து வரிசையில் புத்தகம் வாங்குவதற்காக அவர் நின்றுக் கொண்டிருந்தார்.

நான் அவரை பார்த்த அதே வேளையில் அவரும் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். உமா “போலாமா?” என்று கேட்டாள்.

“கொஞ்சம் இருடி!! அதான் புத்தகம் எல்லாம் வாங்கியாச்சுல்ல!! அப்புறம் எதுக்கு அவசரப்படற?” என்று அவளிடம் கூறினேன்.

“புத்தகம் வாங்க வந்தோம். வாங்கியாச்சு. அப்புறம் என்னடி இங்க வேலை? வா! போலாம்” என்றாள்.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே அவர் புத்தகங்களை வாங்கிக்கொண்டு எங்களை நோக்கி வந்தார். அவரை குழப்பமாகப் பார்த்த உமா, அடையாளம் தெரிந்துக் கொண்டு புன்னகைத்தாள். அவர் அருகில் வந்ததும் எங்களைப் பார்த்து, “நல்லாயிருக்கீங்களா?” என்றார்.

நாங்கள் பதில் கூறும் விதமாக தலையசைத்தோம். பின்பு பொதுவாக நாங்கள் எடுத்திருக்கும் பாடங்களைப் பற்றி பேசிக்கொண்டே வாயிலை நோக்கி நடந்தோம். நாங்கள் என்பதை விட உமாதான் அவருடன் பேசிக்கொண்டு வந்தாள். எனக்கும் அவருடன் பேச வேண்டும்போல இருந்தது. ஆனால் அது இப்போதுபோல் வெட்டி அரட்டையாக அல்லாமல், ஏதேனும் பயனுள்ள வகையில் இருக்க வேண்டுமென மனம் விரும்பியது.

வெளியே வந்தவுடன் நான் அவரிடம், “நாங்க ரெண்டு பெரும் கடற்கரைக்குப் போறோம். நீங்களும் வர்றீங்களா?” என்றேன்.

உமா இந்த திடீர் மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை. என் முகத்தை புரியாமல் பார்த்தாள். “இது என்ன? திடீர்னு?” என்று அவள் கண்கள் என்னை வினவியது. அவளை அமைதியாக இருக்கும்படி கண் ஜாடை காட்டிவிட்டு அவரைப் பார்த்தேன். அவர் சற்று தயங்கியவாறே, “இல்ல. நீங்க friends போறீங்க. இடைல நான் எதுக்கு? நீங்க போயிட்டு வாங்க. நான் கிளம்பறேன்” என்றார்.

“இப்போ எங்களுக்கு கிடைச்சிருக்குற புது friend நீங்க. அதனால அவ்வளவு easy-யா கழண்டுக்க முடியாது.” என்று நான் கூறியதும் வழக்கம் போல ஒரு புன்னகையை சிந்தியவாறே ஒத்துக்கொண்டார்.

அந்தி தொடங்கும் வேலை. கடலலை சிறு குழந்தைபோல கரையை தொட்டுவிட்டு மீண்டும் கடலுக்குள் சென்று ஒளிந்துக்கொண்டிருந்தது. காற்றிலும், கடற்கரை மணலிலும் இன்னும் சூரியனின் தாக்கம் தெரிந்தது. மக்கள் ஒவ்வொருவராக வரத்துவங்கியிருந்தனர். நாங்கள் மணலில் கால்கள் புதைந்தவாறு கடலை நோக்கி மெல்ல நடை போட்டோம்.

பேசலாம் என்று எண்ணி அவரை அழைத்து வந்தாயிற்று. ஆனால் திடீர் என்று அறிமுகம் ஆனவரிடம் என்ன பேசுவது?

குழப்பத்தை சற்று ஒத்தி வைத்துவிட்டு மெல்ல பேச்சை துவங்கினேன்.

“பொதுவா பேச கொஞ்சம் சங்கடமா இருக்கு. நான் உங்களை அக்கான்னு கூப்பிடலாமா?” என்று கேட்டேன்.

இந்தக் கேள்வியை அவர் எதிர்பார்க்கவில்லை போல. என் கண்களை ஆழமாக ஊடுருவி பார்த்தார். பின்பு மெல்ல புன்னகைத்து சரியென்று தலையாட்டினார்.

“இந்த புன்னகைதான் எனக்கு உங்கக்கிட்ட ரொம்ப பிடிச்சது. அன்னைக்கு உங்களை பார்த்த பின்னால் ஏனோ அன்னைக்கு முழுக்க உங்க முகம்தான் என் ஞாபகத்தில் அடிக்கடி வந்தது. மறுபடியும் உங்களை பாக்கணும், பேசனும்போல இருந்தது. அதான் இன்னைக்கு உங்களை பாத்தவுடன் இங்க கூட்டிக்கிட்டு வந்துட்டேன். உங்களுக்கு சங்கடம் ஒண்ணும் இல்லையே?”

அவர் முகம் ஒரு பலமான மலர்ச்சிக்கு போயிற்று. “உண்மையை சொல்லனும்னா எனக்கும் அதே உணர்வுதான். நீ அந்த tension-ஆன நேரத்திலும் சிரிச்சிக்கிட்டே இருந்தது எனக்கு ரொம்பவும் பிடிச்சது. அதனால நீ இன்னைக்கு கேட்டதும் சரின்னு சொல்லிட்டேன்.” என்றார்.

இருவரும் ஒரே அலைவரிசையில் இருப்பது தெரிந்ததும் மனம் சற்று லேசானது போலிருந்தது. கடற்கரையில் ஒரு இடம் பார்த்து மூவரும் அமர்ந்தோம்.

பரஸ்பரமாக எங்கள் இருவருக்குள் ஒரு புரிதல் வந்தாலும் நான் நினைத்ததை கேட்க சற்று தயக்கமாகவே இருந்தது. நேரமும் கடந்துக் கொண்டிருந்தது. தயக்கத்தை மீண்டும் தள்ளி வைத்துவிட்டு அவரிடம் கேட்டேன்.

“அக்கா! தப்பா எடுத்துக்காதீங்க. எனக்கு உங்களைப் பத்தி தெரிஞ்சிக்கணும்னு ஆர்வம். சொல்றீங்களா? சங்கடமா இருந்தா வேண்டாம்.” என்றேன்.

“இதில் தப்பா எடுத்துக்க என்ன இருக்கு? சொல்லப்போனா இந்தமாதிரி சகஜமா பேசுறதுக்கு ஆள் இல்லாம இத்தனை நாளா ரொம்ப கஷ்டமா இருந்தது. பேச்சுத்துணைக்கூட ஆள் இல்லாம தனிமைல இருக்குறது ரொம்ப கொடுமைம்மா!!”

சொல்லும்போதே அவர் குரல் கம்மியது.

“அப்போ உங்களைப் பத்தி சொல்லலாமே!!!” அவரை சமநிலைக்குக் கொண்டு வர பேச்சில் கொஞ்சம் உற்சாகத்தைக் கலந்து அவரிடம் கூறினேன்.

ஒரு சின்ன மௌனத்திற்குப் பிறகு அவர் பேச ஆரம்பித்தார்.

“என்னோட ஊர் தர்மபுரி மாவட்டத்துல மூக்கனூர்னு ஒரு கிராமம். வீட்ல எனக்கு வெச்ச பேரு சீனிவாசன். அப்பா, அம்மா, அக்கா, தம்பின்னு எல்லோரும் சந்தோஷமாதான் இருந்தோம். ஊர்ல பசங்களோட சேந்துக்கிட்டு நான் பண்ணின சேட்டைகளை பொறுக்க முடியாம அப்பாக்கிட்ட வந்து எல்லோரும் புகார் சொல்லுவாங்க. ஆனா அப்பாவோட அடி என் மேல விழாம பாத்துக்கிட்டது என் அக்காதான். தம்பிங்க எங்க மேல அக்கா அவ்வளவு பாசமா இருந்தா. நாங்க அவ்வளவு சந்தோஷமா இருந்தது அந்த கடவுளுக்கே பொறுக்கல போல.”

“இதுவரைக்கும் நான் செய்த சேட்டைகளை மட்டுமே கேட்டு பொறுத்துக்கிட்ட என் அப்பா, நண்பர்கள் சொந்தக்காரங்க சொன்ன வார்த்தைகளை பொறுத்துக்க முடியல. இயற்கை செய்த கோளாறுல என் உடல்ல பெண்தன்மை அதிகமாகிடுச்சி. இதுவரை சராசரி ஆணாக இருந்த நான் கொஞ்ச நாளா பொம்பளை மாதிரி நடந்துக்குறேன்னு அப்பாக்கிட்ட சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.”

“அப்பாவுக்கு இது இயற்கைன்னு புரியல. எனக்கும் புரியல. எல்லோரும் திரும்பத் திரும்ப என்னைப்பத்தி சொல்லவும் அப்பாவுக்கு என் மேல வெறுப்பு அதிகமாகி என்னை அடிக்க ஆரம்பிச்சிட்டார். தடுக்க வந்த அம்மாவையும், அக்காவையும் சேர்த்து அடிச்சார். அவங்களால எனக்காக அழ மட்டுமே முடிஞ்சது. இப்படியே அடியும், அழுகையுமா போய்க்கிட்டிருந்தது. அப்பா என்னை சுத்தமாவே வெறுத்துட்டார். தம்பி கிட்ட வரவே பயந்தான்.”

“சரி!! இனிமேல் யாருக்கும் பாரமா இருக்க வேண்டாம்னு சொல்லி வீட்டை விட்டு வெளியே வந்துட்டேன். அங்க இங்க சுத்தி கடைசியா சென்னை வந்து சேர்ந்தேன்.”

“கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்குக்கா!! ஆனா உங்களை மாதிரி இருக்குறவங்க பெரும்பாலும் பிச்சை எடுத்துதான் பாத்துருக்கேன். ஆனா நீங்க degree படிக்கிற அளவுக்கு வந்துருக்கீங்க. இது எப்படிக்கா உங்களுக்கு சாத்தியமாச்சு?” என்று கேட்டேன்.

“அதுக்கு காரணம் சென்னைல இருக்குற நல்லவங்கள்ல ஒருத்தர். சென்னை வந்த புதுசுல என்ன பண்றதுன்னு ஒண்ணும் புரியல. ரெண்டு நாளா ரோடு ரோடா சுத்தினேன். சாப்பிடக்கூட வழி இல்ல. வெறும் தண்ணிய குடிச்சே பொழுது ஓட்டினேன். பல பேர்கிட்ட உதவி கேட்டேன். எல்லோரும் என்னை இளக்காரமாதான் பாத்தாங்களே தவிர யாரும் உதவி செய்யலை. அப்படி நான் உதவி கேட்டவங்கள்ல ஒருத்தர்தான் தணிகாசலம் அய்யா. என் முதலாளி.”

“அய்யா!!” சாப்பிட்டு ரெண்டு நாளாச்சுங்க. ஏதாவது வேலை இருந்தா கொடுங்கய்யா செய்றேன்.”

“நீங்கல்லாம் காசுதானே கேப்பீங்க? இப்போ என்ன வேலை கேக்குறீங்க?” என்று சாதாரணமா என்னிடம் கேட்டார்.

“அய்யா! காசு வாங்கினா ஒரு நாள்தான் சாப்பிடலாம். தினமும் சாப்பிடணும்னா ஏதாவது வேலை செய்தால்தானே முடியும்.”

“என் பதில் அவருக்கு ரொம்ப பிடிச்சுடிச்சு போல. என் நிலையை கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு அவரோட கடைலேயே வேலை போட்டுக் கொடுத்தார். இன்னி வரைக்கும் அவர் கடைலதான் வேலை செய்றேன். அவர் தந்த தைரியத்துலதான் பத்தாவது, +2 எல்லாம் private-ஆ எழுதி பாஸ் பண்ணிட்டேன். அடுத்து degree ஒண்ணு படிக்கலாம்னு இங்க apply பண்ண வந்தேன். வந்த இடத்துல எனக்கு 2 தோழிகள் கிடைச்சிருக்காங்க.”

சொல்லி முடிக்கும்போது அவர் முகத்தில் அவ்வளவு சந்தோஷம். 
 

நானும் உமாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.

நான் மெல்ல அவரிடம் கேட்டேன், “அக்கா! மறுபடியும் உங்க ஊருக்கு போனீங்களா?”

“இல்லம்மா! என்னைப்பத்தி தெரிஞ்சதுனால அக்காவுக்கு இன்னமும் கல்யாணம் ஆகலை. எங்கே அவங்க சந்ததியும் பாதிக்கப்படுமோன்னு மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கு பயம். அதனால நாம அங்க போயி இன்னமும் ஏன் பிரச்சினையை அதிகமாக்கணும்னு இதுவரைக்கும் போகல. ஆனா.. கண்டிப்பா ஒருநாள் போகணும். அம்மா, அக்கா, தம்பியை பாக்கணும். நான் இப்படி இருக்குறது என் தப்பில்லைன்னு அப்பாவுக்கு புரிய வைக்கணும். அதுக்காகவாச்சும் கண்டிப்பா போவேன்.” அவர் குரலில் அவ்வளவு உறுதி தெரிந்தது.

நேரம் கடந்து, அந்தி சாய்ந்து இருட்ட தொடங்கியது.

“சரிம்மா! எனக்கு நேரம் ஆகுது. நான் கிளம்பறேன். கடை பக்கம் வந்தீங்கன்னா கண்டிப்பா வாங்க.” என்று கூறியபடி கிளம்பினார்.

“அக்கா! ஒரு நிமிஷம். இப்போ உங்க பேர் என்னன்னு தெரிஞ்சிக்கலாமா?” என்று கேட்டேன்.

“நான் தென்றல்!!” என்று புன்னகையுடன் கூறியபடி நடக்கலானார்.

No comments:

Post a Comment

நல்லவங்க...

ShareThis