November 26, 2011

பாலை – சங்க காலத்திற்கு ஒரு பயணம்

 
இதுவரை நாம் நமது வரலாறு என்று அறிந்து வைத்திருப்பது என்ன? சேர, சோழ, பாண்டியர்கள், உறையூர் ஒற்றர்கள், பொன்னியின் செல்வன், போர், வெற்றிவேல் வீரவேல், மன்னர்களின் அரண்மனை, சைவ-வைணவ சண்டைகள். இதுதான் நமது வரலாறு என்று எண்ணினால் நீங்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம் ‘பாலை’. மன்னர்கள் வரலாறுக்கு முன்னால், ஆரியர்-திராவிடர் தோற்றத்திற்கு முன்னால், நமக்குள் எந்த பிரிவினை எண்ணமும் தோன்றாமல் இயற்கையை ஒட்டி வாழ்ந்த காலம் ஒன்று உண்டு. அந்தக் காலத்தை சிறிதளவில் நம் கண்முன்னே காட்சிப்படுத்தியிருக்கும் முயற்சிதான் ‘பாலை’.

படம் காயாம்பூ என்ற பெண்ணின் பார்வையில் தொடங்குகிறது. ஆயக்குடி என்ற இடத்தில் மகிழ்வுடன் வாழ்ந்து வருகின்றார்கள் அவ்வூர் மக்கள். வடக்கிலிருந்து வரும் வந்தேறிகள் அந்த மக்களை தாக்கிவிட்டு அவர்கள் இடத்தை அபகரித்துக்கொள்ள, ஆயக்குடி மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள். வந்தேறிகளின் மொழியும் புரியாமல் அவர்களின் தாக்குதலால் அனைத்தையும் இழந்து வேறு வாழ்விடம் தேடி செல்கிறார்கள். அப்படி அவர்கள் சென்று அடையும் இடம்தான் பாலை. எப்போதாவது மழையை பார்க்கும் பூமி. அந்த இடத்திற்கு முல்லைக்கொடி என்று பெயரிட்டு அங்கேயே வசிக்க ஆரம்பிக்கிறார்கள். ஆனாலும் அவர்களது ஆயக்குடியை மீட்கும் வேட்கை அனைவரிடமும் இருக்கிறது.

 

இப்படி 2000 வருடங்களுக்கு முன் நமது வாழ்வுமுறை எப்படி இருந்தது, அந்த மக்கள் தங்கள் நிலத்தை மீட்டர்களா என்று அறிந்துக்கொள்ள வெண்திரையில் காணுங்கள்.

கண்டிப்பாக இந்தப்படத்துக்கு நிறை குறைகளைக் கூறி இதையும் மற்ற மசாலாக்களோடு சேர்க்க விரும்பவில்லை. காரணம் இது நாம் இதுவரை அறிந்திராத நமது முன்னோர்களின் வாழ்வியல் பற்றிய பதிவு. இப்படித்தான் இருந்தார்களா என்று நம் யாருக்கும் தெரியாது. ஆனால் இதுபோன்ற முயற்சிகள் மிகுந்த ஆராய்ச்சிக்குபின்தான் முழுதாக செயல்வடிவம் கொடுக்க முடியும்.

என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் நமது பழங்காலப் பதிவுகள் என்பது நமது சங்கப் பாடல்கள்தான். அதிலும் பெரும்பாலும் மன்னர்களைப் போற்றும் பாடல்களாகத்தான் இருக்கும். அதில் நமது வாழ்வியல் அடையாளங்களைத் தேடி, வேறு பல சான்றுகளையும் கண்டு அனைத்தையும் ஒன்று திரட்டி அதற்கு காட்சி வடிவம் கொடுப்பது என்பது மிகப்பெரிய சவால். அந்த சவாலை ஏற்று அதை முடிந்தவரை வெற்றிகரமாக செயல்வடிவம் கொடுத்திருக்கும் இயக்குனர் செந்தமிழனுக்கும் அவரது குழுவினருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.


படத்தில் மிகப்பெரிய ஆறுதலான விஷயம் ‘தமிழ்’. முழுக்க முழுக்க தமிழில் வேறு மொழி கலப்பில்லாமல் அனைத்து வசனங்களையும் கேட்கும்போது ‘இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே’. இன்றைக்கெல்லாம் நாம் கேட்டறியாத வார்த்தைகள், ஆமைகளை வைத்து காலத்தை கணிப்பது,  மழை வரும் நேரத்தை துல்லியமாகக் கணிப்பது, ஆனந்த நடனம், திருமண முறை, அடிமைகள் முறை என்று நாம் அறிந்துக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கிறது.

அப்போ படத்துல குறைகளே இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். இது போன்ற அறிய முயற்சிக்கு குறைகளைப் பாராமல் அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்பது எண்ணம்.

புதிதாக நம்மைப் பற்றிய செய்திகளைத் தெரிந்துக்கொள்ள, நமக்கே தெரியாத நமது வரலாறை அறிந்துகொள்ள ‘பாலை’ திரைப்படம் ஓடும் அரங்கிற்கு ஒருமுறை சென்று வாருங்கள்.

அரங்கம் பக்கம்:

சென்னை சாய் சாந்தியில் இப்படத்தைப் பார்த்தேன். ஏற்கனவே அந்த அரங்கம் சிறியது. அதிலும் கால்வாசி அளவே அரங்கம் நிரம்பியிருந்தது. படம் பார்க்கும்போது இரண்டு அரைவேக்காடுகளின் தொல்லைதான் தாங்க முடியவில்லை. படம் தொடங்கி 45 நிமிடங்கள் கழித்துதான் அவர்கள் வந்தார்கள். வந்ததிலிருந்து சத்தமாகப் பேசியபடி அனைவரையும் இம்சைப்படுத்தினார்கள். சிறிது நேரம் கழித்து, “டேய்! இது காட்டுவாசிப் படமாடா?” என்று அவர்களுக்குள் கேட்டுக்கொண்டார்கள். “அடத் தறுதலைகளா!!!! என்னப் படம்னே தெரியாம உள்ள வந்து இம்சை செய்யும் இவர்களை என்னவென்று சொல்வது?? " என்று அந்த நேரத்தில் நொந்துக்கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

இவர்களையும் மீறி இந்தப் படம் அனைவரையும் சென்றடைய வாழ்த்துகள்.

2 comments:

  1. இது போன்ற அறிய முயற்சிக்கு அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும் .

    ReplyDelete

நல்லவங்க...

ShareThis