September 14, 2011

அஜித்தும்.. ரசிகர் மன்றங்களும்....

அஜீத் சமீபத்தில் அளித்த பேட்டியும்... அந்த பேட்டி தொடர்பான எனது கருத்துகளும்....


‘மங்காத்தா’ படத்தைப் பற்றி.....

அஜீத்: “வாலி' படத்திற்கு பிறகு நான் வில்லன் வேடத்தில் நடித்தது இல்லை. இயக்குனர் வெங்கட்பிரபுவிடம் வில்லன் வேட கதைகள் இருந்தால் சொல்லுமாறு கூறினேன். அவரும் 'மங்காத்தா' படத்தின் ஒன்லைன் சொன்னார். எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.

இன்றைய இளைஞர்களுக்கு எந்த மாதிரி படம் பிடிக்கும் என வெங்கட்பிரபுவிற்கு தெரியும். அவரது வசனங்களும் இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையில் இருக்கும். 'மங்காத்தா' படத்தின் வரவேற்பிற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது. ஒன்று 5 நாட்கள் தொடர்ந்து விடுமுறை மற்றொன்று இப்படம் முழுவது பணத்தை மையப்படுத்தியே இருக்கும். பணம் தான் இன்றைய உலகத்தில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.”


என் கருத்து: தமிழ் சினிமாவில் கதாநாயகனுக்கென்று ஒரு Super Personality உருவாக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரில் தொடங்கி, ரஜினி மூலம் பிரபலமடைந்து பின்னர் இன்றைய அறிமுக நாயகன் வரை பரவிவிட்ட வியாதி அது. [சர்க்கரை இனிப்புதான்... அதற்காக அதையே உணவாகக் கொள்ள முடியுமா? வியாதிதான் வரும்]. அப்படிபட்ட ஒரு வியாதி வந்த நிலையில்தான் இன்றைய தமிழ் சினிமா சூழல் உள்ளது. இந்தச் சூழலில் அஜீத், வில்லன் வேடம், தனது உண்மையான வயது என சினிமாவின் சில பொதுவான விதிமுறைகளை மீறிய படத்தைக் கொடுத்துள்ளார். அதுவும் தனித்த அடையாளம் பெரும் 50-வது படத்தில். வாழ்த்துகள்.

அடுத்து, படத்தின் வெற்றிக்கு இவர் கூறிய காரணங்கள். ‘உயிரினும் மேலான ரசிகர்கள், கண்ணைப் போன்ற ரசிகர்கள், மண்ணைப் போன்ற ரசிகர்கள்’ என சப்பைக்கட்டு காட்டாமல் படம் வெளியான சூழல்தான் படத்தின் வரவேற்பிற்கு காரணம் எனக் கூறியது [கவனிக்கவும்: படம் வெற்றி எனக் கூறவில்லை].

இனி வரும் படங்களைப் பற்றி....

அஜீத்: 'மங்காத்தா' படத்தில் என்னுடைய லுக் வரவேற்பை பெற்று இருக்கிறது. 'பில்லா 2' படத்திற்கு பிறகு என்னுடைய வயதிற்கு ஏற்றவாறு படங்களை தேர்வு செய்யலாம் என்று இருக்கிறேன். 'எனது பெண் அனோஷ்கா முதன் முதலில் என்னை திரையில் பார்த்த படம் 'மங்காத்தா'.

என் கருத்து: பில்லா 2 படத்தில் உடலைக் குறைத்து இளம் வயது தோற்றத்தில் நடிப்பதாக செய்திகள் மூலம் தெரிய வருகிறது. பின் வரும் படங்களில் வயதிற்கு ஏற்ற கதாபாத்திரங்கள் தேர்வு செய்வதாக கூறியது மிகவும் கவனிக்கத்தக்கது. [ரஜினி, கமல் கவனிக்க...]



கமல் இந்த முடிவு எடுக்க இன்னும் சில வருடங்கள் ஆகலாம் எனத்தோன்றுகிறது. ஆனால் ரஜினி இனியும் டூயட் பாட ஆசைப்பட்டால், அது ரஜினி என்ற பிம்பத்தை ரசிக்க மட்டுமே பயன்படுமே தவிர வேறெதுவுக்கும் உதவாது. பின்னாளில் மிகவும் அதிகளவில் பகடி செய்யவும் இவர் படங்கள் பயன்படக்கூடும். ரஜினியின் நிலையை பல நிலைகளில் உயர்த்திய படமான அண்ணாமலையில் எனக்கு பிடித்தது, ரஜினி தன் மகளுக்கு அறிவுரை சொல்லும் காட்சி. ரஜினி என்ற பிம்பத்தையும் மீறி ஒரு தந்தையின் நிலையை உணர்த்திய காட்சி அது.

நிற்க: அஜீதிடம் ஆரம்பித்து ரஜினிக்கு போய்விட்டேன்.... இதோ வந்துட்டேன்...


அநேகமாக தன் மகளை மனதில் வைத்துதான் இந்த முடிவை இவர் எடுத்திருக்க வேண்டும். தன்னை தன் மகள் கவனிக்க ஆரம்பித்துவிட்டாள் என்றதும், இனி எப்படி மற்ற பெண்களுடன் சேர்ந்து பாடி ஆட முடியும்? அது தன் மகள் மனதில் தன்னைப் பற்றி எப்படிப்பட்ட பிம்பத்தை வளர்க்கும் என யோசித்திருக்க வேண்டும். இதுதான் காரணமாக இருந்தால், Weldone AJITH…. ஒரு தந்தையாக நீங்கள் எடுத்த பொறுப்பான முடிவுக்கு வாழ்த்துகள்.

ரசிகர் மன்றங்களை கலைத்தது பற்றி...

அஜீத்: சினிமாவுக்கும் அரசியலுக்கும் உள்ள பந்தம் இறுகி வருகிறது. எனது ரசிகர்கள் நலன் எனக்கு மிகவும் முக்கியம். சினிமாவை தவிர்த்து அவர்களுக்கு வேறொரு வாழ்க்கை இருக்கிறது. சினிமா என்பது அவர்களது பொழுதுபோக்கு மட்டுமே.

ஒவ்வொருவருக்கும் அரசியல் கருத்துக்களை வெளியிட உரிமை இருக்கிறது. என் ரசிகர்களை பொறுத்தவரை அவர்கள் என் படங்களை பார்த்து ரசிக்க வேண்டும். இவைகளையெல்லாம் கருத்தில் கொண்டுதான் ரசிகர்மன்றத்தை கலைத்தேன். 


என் கருத்து: எனக்கு ஆரம்பம் முதலே இந்த ரசிகர் மன்றங்களில் உடன்பாடு இல்லை. அதுவும் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியீட்டின் முதல் நாள் அன்று இவர்கள் செய்யும் அக்கப்போர்களுக்கு அளவே இல்லை. அன்றைய தினத்தில் இவர்கள் செய்யும் காரியங்கள் [படப்பெட்டிக்கு ஊர்வலம், பாலாபிஷேகம், பீர் அபிஷேகம்] மிகவும் அருவருக்கத்தக்கவை. பாபா, சந்திரமுகி, சிவாஜி, அசல் என நான் நேரில் கண்ட அனுபவங்கள் பல உண்டு.

இந்த நிலையில் அஜீத் தனது ரசிகர் மன்றங்களை கலைத்தார் என்ற செய்தியை கேட்டவுடன் என்னால் நம்ப முடியவில்லை. அஜீத் அபிமானிகளான எனது நண்பர்களிடம் கேட்டேன். அடிக்க வந்துவிட்டார்கள். பின்னர் இணையம் மூலமே இந்த செய்தியை உறுதிபடுத்திக்கொண்டேன். இந்த கணத்தில்தான் அஜீத் மீது பொதுவான ஒரு மதிப்பு வந்தது. அதன் பின்னர் அவரை கவனித்து வன்ததின் விளைவே இந்த பதிவு. அதுவும் அஜீத் போன்ற பிரபல முகங்களுக்கு சமூக பொறுப்பு மிகவும் அதிகம் இருக்க வேண்டும். தனது ரசிகர்களை விசிலடிச்சான் குஞ்சுகளாக மட்டுமே பார்க்காமல் சமூக அக்கறையுடன் பார்க்க வேண்டும். அஜித்தும் அப்படி பார்த்திருப்பார் என்றே நம்புகிறேன். 

 
அஜித்தின் ரசிகர் மன்றங்கள் கலைப்பு அறிக்கை படித்தவுடன் என் நினைவுக்கு உடனே தேவர் மகன் வசனம்தான் ஞாபகத்துக்கு வந்தது.

“போங்கடா!! புள்ளகுட்டிகள படிக்க வைங்கடா...”

அஜீத் சொல்லாமல் சொன்ன செய்தியும் அதுதான்.

பின்குறிப்பு: 
இந்தப் பதிவை படித்தவுடன் நான் ஒரு தீவிர அஜீத் விசிறி என உங்களுக்குத் தோன்றலாம். உங்களுக்காகவே இந்த விளக்கம். நான் ஆரம்பம் முதலே ரஜினி மற்றும் விஜய்யின் தீவிர ரசிகன். விஜயை பிடித்த காரணத்தாலேயே அஜித்தை வெறுத்தவன். ஆனால் கமலின் ‘மகாநதி’ பார்த்த பின்னர் திரைப்படங்களைப் பற்றிய எனது பார்வை மாறியது. சினிமா என்பது பலம் வாய்ந்த ஊடகம் என்பது எம்.ஜி.ஆர் விஷயத்தில் உறுதியான ஒன்று. ஆனால் அவர் வழியைப் பின்பற்றி இன்று சினிமாவில் தத்துவப் பாட்டு பாடும் அனைவரும் அரசியலுக்கு படையெடுப்பதைப் பார்த்தால் சிரிப்பாகவும், அயர்ச்சியாகவும் இருந்தது. கொஞ்சம், கொஞ்சமாக தெளிவு பெற்று தனி மனித ஆராதனையிலிருந்து விலகி நல்ல கதைகள், மற்றும் கொண்டாட்ட மனநிலையை கொடுக்கும் படங்களைப் பார்க்க ஆரம்பித்தேன்.
[நல்ல படம் என 'காஞ்சீவரம்' படத்தை நண்பர்களுக்கு சிபாரிசு செய்து அவர்களின் ஏளனப் பார்வையையும் சம்பாதித்தேன். இதைப்போன்ற  அனுபவம் எனக்கு பலமுறை ஏற்பட்டுள்ளது.]

நான் வெறுத்த விஷயங்களை சினிமாவிலிருக்கும் ஒருவரே உரக்க சொல்லும்போது கொஞ்சம் என் கவனம் அவர் பக்கம் திரும்பியது. தொடர்ந்து கவனித்ததில் அவர் வார்த்தைகள் இன்றைய இளம் சமூகத்துக்கு மிகவும் அவசியமானது எனத் தோன்றியது. நானும் இதைப் பத்தி சொல்லணும்னு இருந்தேன். சொல்லிட்டேன்....

பின்குறிப்புன்னு சொல்லி பெரிய குறிப்பாகவே ஆகிடுச்சி....

பொறுமையாகப் படித்ததற்கு நன்றி….. 

10 comments:

  1. என் கருத்தும் இதேதான்...

    ReplyDelete
  2. அருமையான பதிவு. ஒரு விஜய் ரசிகராக இருந்துகொண்டு அஜித்தை இவ்வளவு ஆழமாக புரிந்து வைத்திருப்பதை பார்க்கும்போது, அஜித் பல தரப்பட்ட ரசிகர்களையும் தன் நல்ல உள்ளத்தாலும், சிறந்த எண்ணத்தாலும் அவரை ஏற்றுக்கொள்ளச் செய்திருக்கிறார் என்பதை உங்கள் பதிவின் மூலமாக தெளிவாகத் தெரிகிறது. அஜித் ரசிகர்களாகிய எங்களுக்கே தோன்றாத சில விஷயங்களை மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. Ajith is an excellent gentleman, beyond the Cinema.

    ReplyDelete
  4. உங்கள் கருத்தும் அருமையாக உள்ளது. ரசித்துப் படித்தேன். நன்றி...

    ReplyDelete
  5. நல்ல விளக்கம், நன்றி நண்பா...!

    ReplyDelete
  6. அஜித் என்ற நடிகரை விட அஜீத் என்ற ஒரு தனிமனிதனை நான் மிகவும் நேசிக்கிறேன், அஜீத்திடம் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம் இருக்கிறது, சிறுவயதில் ஸ்டைல் மற்றும் டான்ஸ் இல்லாத அஜீத்தை வெறுத்த அதே மனம், இன்று அவை இரண்டுமே இல்லாமல் எப்படி சினிமாவில் தன்னை நிலைநிறுத்தி கொண்டார் என்று வியக்கிறது, அஜீத்தின் தன்னம்பிக்கையும், தன்னடக்கமும் அவரிடம் பிடித்த விஷயம்...

    நான் ஒரு அஜீத் ரசிகன் என்று கூறிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன், வேறெந்த நடிகருக்கும் இல்லாத தனித்துவம் அஜீத்திடம் இருக்கிறது...

    அஜீத்தை பற்றி இவ்வளவு ஆழமாகவும் இவ்வளவு தெளிவாகவும் எழுதிய விஜய் ரசிகரான உங்களின் பெருந்தன்மையை பாராட்டியே தீரவேண்டும், பதிவிற்கு நன்றி..

    ReplyDelete
  7. I am a vijay fan ... but proud to be a fan of thala too ...

    congrats thala ... keep rocking ...

    ReplyDelete

நல்லவங்க...

ShareThis